Tuesday, February 17, 2015

அதிர வைக்கும் அற்புத அறிவியலும் அறியாத உயிர்களும், - படங்களுடன்! PART 2

அதிர வைக்கும் அற்புத அறிவியலும் அறியாத உயிர்களும், - படங்களுடன்! PART 2


இதே தலைப்பிலான முதல் பாகத்தை  படங்கள் பார்க்க  படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...


பாப்பிட் வார்ம்...


கிராவல், களிமண், கோரல் போன்ற கடலின் தரைப்பகுதியில் வாழும் இந்த வார்ம் 3 அடி நீளத்திலிருந்து 10 அடி நீளம் வரையிலும் வளரக்கூடியவை என்பது பயப்பட வைக்கும் தகவல். அத்தோடு இது வெறும் புழுவாக இல்லாமல் விஷத்தன்மையும், கொடிய கூரிய பற்களையும் உடையது என்பதுவும் கூடுதல் தகவல்...  கடலுக்கடியில் தரைப்பகுதியில் தலையை மட்டும் நீட்டி இரை வந்ததும் அதிவேகமாக தாக்கும்போது பல நேரங்களில் இரை இரண்டு துண்டாகிப்போவதிலிருந்து இதனுடைய வேகத்தையும், பற்களின் கூர்மையையும் தெரிந்து கொள்ளலாம் என்றாலும் இதன் பார்வை மங்கலானதுதான் என்பது ஆறுதல் தரும் விஷயம்.


மார்ச் 2009ம் ஆண்டுதான் முதன் முதலில் இது இங்கிலாந்தின் கார்ன்வால் என்ற மாகாணத்திலிருந்த ஒரு அக்குவேரியம்ல் கண்டறியப்பட்டது. அடிக்கடி பல மீன்கள் காணாமல் போவதையும், சில நேரங்களில் இரண்டு துண்டுகளாக மிதப்பதையும் பார்த்த அக்குவேரியம் ஊழியர்கள் அதை சுத்தப்படுத்தும்போதுதான் தானே உருவாகி ஒளிந்திருந்த இந்த பாப்பிட் வார்ம் முதன் முதலில் உலகுக்கு அறிமுகமாகியிருக்கிறது.

கடல் தக்காளி...


பியூரா சிலென்சிஸ் என்பதுதான் இதன் அறிவியல் பெயர் என்றாலும் இதன் உருவத்தின் மூலம் இது சீ டொமெட்டோஸ் என்றும் அழைக்கப்படுகிறது. பெரு மற்றும் சிலியின் கரைப்பகுதி கடலில் காணப்படும் இவை வெளிப்புறத்தோற்றத்தில் பாறை போல இருந்தாலும் உள்ளே செக்கச்சேவேல் என சதைப்பகுதிகளை கொண்டிருக்கிறது.


இது தனித்திருக்கும்போது தனக்குத்தானே இனப்பெருக்கம் செய்து கொள்ளும் திறன் கொண்டது. இதை கடல் உணவாக உண்பவர்கள் பச்சையாகவும், வேகவைத்தும் உண்ணுகிறார்கள். 2007ம் ஆண்டு நிலவரப்படி இது ஜப்பானுக்கு 24.2 சதவீதமும், ஸ்வீடனுக்கு 32.5 சதவீதமும் ஏற்றுமதி ஆகும் கடல் உணவாகும்.

கடல் வெள்ளரிக்காய்...
என்னடா இது?... கடல் தக்காளி, கடல் வெள்ளரிக்காய்னு இப்படியெல்லாமா பேரு இருக்கும்னு நீங்க யோசிக்கலாம். ஆனா இந்தப்படத்தை பாருங்கள்... இப்போ இந்தப்பெயர் ஓகேதானே?...



ஆசிய பசிபிக் கடலில் வாழும் இந்த நீர்வாழ் உயிரினத்தில் கிட்டத்தட்ட 1250 வகைகள் இதுவரையிலும் கண்டறியப்பட்டிருக்கிறது. கடல் வெள்ளரிக்காய் என்றழைக்கப்படும் இந்த உயிரினங்கள் தண்ணீரில் ஹார்மோன் சிக்னலை அனுப்புவதன் மூலம் ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்பவை. 




அத்தோடு இல்லாமல் இதன் உடலமைப்பு மிகச்சிறிய இடைவெளியில்கூட இவைகள் நுழையும் நேரத்தில் ஃப்ளெக்சிபிளாகவும், பின்னர் கடினமானதாகவும் மாறிக்கொள்ளும் தன்மை கொண்டது. ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை நீளமும் சராசரியாக 2இன்ச் வரை விட்டமும் வளரக்கூடியன இந்த கடல் வெள்ளரிக்காய்கள்...!


மிகச்சிறந்த உணவாக மட்டுமின்றி இது மிகச்சிறந்த மருந்தாகவும் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பது கூடுதல் தகவல்...!

பாம்புத்தலை மீன்...


25 செ.மீ முதல் 1மீட்டர் வரையிலும் நீளம் வளரக்கூடிய இவை நன்னீர் மீன்களாகும். இதன் கூறிய பற்களுடன் கூடிய வாய் மற்றும் பாம்பு போன்ற உடலமைப்பு ஆகியன அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும், இதன் உணவுகள் சில வகை நீர்ப்பூச்சிகள், தவளைகள், சிறிய வகை மீன்கள் மற்றும் சில சமயத்தில் எலிகள். மற்றபடி இதற்கு பாம்பு போல விஷத்தன்மை எதுவும் இல்லை. இதில் பெண் மீன்கள் ஒருமுறைக்கு 15,000 முட்டைகள் வீதம் இரண்டு வருடத்திற்கு 1,50,000 முட்டைகள் இடும் என்பது ஆச்சர்யமான தகவல்...!


பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு சிலவகை நீர் வாழ் உயிரினங்களிலிருந்துதான் பாம்புகள் தோன்றியிருக்கக்கூடும் என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாய் இந்த வகை மீன்களை உதாரணம் காட்டுபவர்களும் உண்டு. கிட்டத்தட்ட முக்கால் கி.மீ வரையிலும் நீரில்லாத ஈரமான நிலப்பரப்பில் தவழ்ந்து வேறு நீர்நிலைகளை சென்றடையும் திறன் படைத்தவை இவை என்பது கூடுதல் தகவல்...

பேய் பைப் மீன்...

கடலில் வாழும் பல வண்ண தாவரங்கள் மற்றும் பாசிகள் போன்றே தோற்றம் கொண்ட இந்த வகை மீன்கள் நகரும்போதுதான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. 



இவைகள் பைப் மீன்கள் இனத்தைச் சேர்ந்தவை இல்ல என்றபோதிலும் இதன் படங்களைப் பார்க்கும்போது இதன் பெயர்க்காரணம் உங்களுக்கே புரிந்திருக்கும். 10 முதல் 15செ.மீ வரை நீளமுள்ள இவ்வகை மீன்களில் பலவகையும், பல வண்ணமும் இருப்பது கண்கவர் அம்சம்தான்...



கடல் டிராகன்...
டிராகன் போல தோற்றம் கொண்ட இந்த சிறிய வகை கடல் ஜீவராசிகள் தெற்கு மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய டிராபிகல் கரைப்பகுதி கடலில் காணப்படுபவை. கடல் குதிரைகள் வகைப்படுத்தப்பட்டிருக்கும் அதே குடும்பத்தைச்சேர்ந்தவைதான் 20 முதல் 25 செ.மீ வரை வளரும் இந்த கடல் டிராகன்...


இதில் லீஃபி கடல் டிராகன், வீடி கடல் டிராகன் என்ற இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் லீஃபி கடல் டிராகன் தன்னை கடல் செடிபோல தற்காத்துக்கொள்வதில் அதன் உடலமைப்பு பெரிதும் கைகொடுக்கிறது. இவ்விரண்டு வகையிலும் பல வண்ணத்தில் கண்கவர் டிராகன் மீன்களை கண்டு மகிழுங்கள்...






ஒருமுறை 250 முட்டைவரை இடும் பெண் இனம் அதை ஆண் இனத்திடம் கைமாற்றிவிடுவதால், ஆண் இனம்தான் கிட்டத்தட்ட 9வாரங்களுக்கு அதை அடைகாத்து குஞ்சு பொறிக்க வைக்கின்றன என்பது கூடுதல் தகவல்...

ஹேச்சட் மீன்...
வித்தியாசமான உடலமைப்பும், கண்களும் கொண்ட இந்தவகை மீன்கள் வாழ்வது அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்தியப்பெருங்கடல் பகுதிகளில்தான்...



1 இன்ச் முதல் 5 இன்ச் நீளம் வரையிலும் வளரக்கூடிய இந்த மீன்கள், 50 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரையிலான ஆழத்தில் வாழ்கின்றன. மின்மினிப்பூச்சியைப்போன்றே இவைகளுக்கும் கடலுக்குள் ஒளிரும் தன்மை இருப்பது கூடுதல் சுவாரசியம்...!

கடலின் ஆழத்திற்குச் செல்ல செல்ல நம்மால் கரையேறவே முடியாத அளவுக்கு தகவல்களும், நாம் இதுவரையிலும் கண்டிராத அற்புத உயிரினங்களும் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. ஏற்கனவே ஃபில்டர் செய்து பதிவேற்றியிருந்தாலும்கூட இன்னமும் பல அற்புதங்களை மனதேயில்லாமல் ரிஜெக்ட் செய்து எனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு பதிவை முடிக்கிறேன். (முடிந்தால் சில காலங்களுக்குப்பின் மீண்டும் ஒரு பதிவில் இன்னும் பல அற்புத கடல்வாழ் ஜீவன்களைப் பார்க்கலாம்...!)

கடைசிப்பரிசு உங்களுக்காக...

யானைச்சுறா...


மெகா மவுத் சுறா...

நீள மூக்கு ச்சிமேரா...

Rat Fish...

பல அற்புதங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தாலும் இது கடல் சார்ந்த பதிவு போல முடிந்து போனதால் வெகு விரைவிலேயே கடல் தவிர்த்த இன்னமும் பல அற்புத உயிரினங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்...

மீண்டும் சந்திப்போம்...!


நன்றி – 
தொகுத்து வழங்கிய சாய்ரோஸ் அவர்களின் கதம்ப மாலை இணைய தளம் ...

No comments:

Post a Comment

welcome ur comment,