Friday, February 27, 2015

இந்தியாவின் தீரா மர்மங்கள்.

இந்தியாவின் தீரா மர்மங்கள்.


இதற்கு முன் எழுதிய உலகின் தீரா மர்மங்கள் பதிவை காண இங்கே <<கிளிக்>> செயுங்கள்.. 


எப்படி உலகம் முழுக்க இன்னமும் தீர்க்கப்படாத பல மர்மங்கள் விடையில்லா கேள்விகளுடன் உறங்குகிறதோ... அதேப்போல நம் இந்தியாவிலும் பல மர்மங்கள் உண்டு. எண்ணிலடங்கா மர்மங்கள் இருந்தாலும் இந்தத்தொகுப்பு டாப் லிஸ்ட் மட்டுமே...


இது முழுக்க முழுக்க தொகுக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமேயொழிய எனது தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் இதிலில்லை.


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
எப்போதுமே மிதவாதத்துக்கும் தீவிரவாதத்துக்குமான ஆதரவில் இளைய சமுதாயம் இரண்டாவதில்தான் அதீத ஆர்வமும் ஆதரவும் கொண்டிருக்கும். நேதாஜி என்ற பேரைக்கேட்டாலே இன்றளவும் இளைஞர் கூட்டம் எழுச்சியடைவதற்கான வரலாறு மிகப்பெரியது. பிரிட்டிஷார் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்தபோது காந்தி ஒரு பக்கம் அஹிம்சைப்  போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார். அதேப்போல நாடு முழுவதும் பலவிதமான குழுக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர்.


இந்தியாவில் முதன் முதலாக ஆங்கிலேயருக்கு எதிரான தீவிரவாதப்போராட்டத்தை இராணுவப்போராட்டமாக மாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்தான். இன்றைய இந்திய இராணுவத்திற்கு அடித்தளமிட்டவரும் இவர்தான். (அவருடைய வரலாற்றைப்பற்றி எழுதுவதனால் அதற்கு தனியே ஒரு பதிவு தேவைப்படும் என்பதால் இந்தப்பதிவின் தலைப்பிற்கான சமாச்சாரத்தை பற்றி மட்டும் இதில் பார்க்கலாம்.


சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்கவேண்டிய நேதாஜி... உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டதுதான் இன்று வரையிலும் சுதந்திர இந்தியாவின் தீராத மர்மங்களில் நேதாஜிக்கு முதலிடம் வழங்கியிருக்கிறது.


1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு இறக்கவில்லை. உண்மையில் அப்படியொரு விமான விபத்தே நடக்கவில்லை என்று அப்போதே செய்திகள் கசிந்திருக்கின்றன. 1945ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருந்த போரில் ஜப்பான் சரணடையும் முடிவை எடுத்த மூன்றாவது நாளில் நேதாஜி விமானவிபத்தில் இறந்ததாக வெளியிடப்பட்ட செய்தியே, ஆங்கிலோ-அமெரிக்க படைகளிடம் போர்க்கைதியாக சிக்காமலிருக்க நேதாஜியால் நடத்தப்பட்ட நாடகம்தான் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. நேதாஜி இறந்ததாக தகவல் வெளியான சமயத்தில் உண்மையில் அவர் ஜப்பானின் டோக்யோ நகரத்தின் வழியாக சோவியத் யூனியனுக்கு சென்று விட்டதாக தகவல் உண்டு.


இன்று வரையிலும் நேதாஜி விஷயத்தில் இந்திய மக்களுக்கு தெரியாமல் போன மர்மமாய் நீடிப்பதில் கீழ்க்காணும் விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை... 


1)   தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து நடந்ததாக எந்தவித ரெக்கார்டுகளும் இல்லை என்று மறுத்திருப்பது இந்திய அரசாங்கத்தால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டிருக்கிறது.


2)   பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று முடிவெடுத்ததாக பதியப்பட்டிருக்கிறது. இது நடந்தது அக்டோபர் 1945ல். அப்படியென்றால் ஆகஸ்ட் 1945ல் போஸ் இறந்ததாகக் கூறப்பட்டது பொய்தானா?... 


3)   CIA எனப்படும் சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி 1950 வரையிலும் நேதாஜிக்கான தேடுதல் வேட்டையை தொடர்ந்திருக்கிறது. உண்மையிலேயே 1945லேயே நேதாஜி இறந்திருந்தால் 1950 வரையிலும் அவரைத்தேடியிருக்க வேண்டிய அவசியமென்ன?...


4)   1946ல் கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த கேலாச்சர் என்பவர் ஒரு பொதுமேடையிலேயே அப்போதைய இரீஷ் பிரசிடெண்ட் டி’வலேராவை டப்ளின் நகரில் நேதாஜியை வரவேற்றதாக விமர்சித்திருக்கிறார். டி’வலேராவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது கவனித்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம். அத்தோடு மட்டுமில்லாமல் 1946க்கு பிறகு இந்தியாவிற்கு வந்திருந்த டி’வலேரா பத்திரிக்கையாளர்களிடம் ‘’நான் இங்கே போஸை சந்திப்பேன் என்று எதிர்பார்த்து வந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்! 


5)   பிரிட்டிஷ் இண்டெலிஜென்சின் ஒரு ரிப்போர்ட்டில் நேதாஜி எங்கிருக்கிறார் என்பது நேருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான் அவர் வெளியுறவுத்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விஜயலெட்சுமி பண்டிட்டை ரஷ்யாவுக்கான இந்தியத்தூதராக நியமித்திருக்கிறார் என்று குறிப்பெழுதப்பட்டிருப்பதாக ஒரு தகவலும் உண்டு.


6)   ரஷ்யன் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் புரட்சியாளர் அபானி முகர்ஜீ என்பவரின் மகன் கோகா என்பவரை இந்தியத்தூதர் டாக்டர்.சத்யநாராயணா சின்ஹா சந்தித்தபோது, அவரிடத்தில் கோகா தனது தந்தையும் நேதாஜியும் சைபீரியாவில் சிறைக்கைதிகளாக பக்கத்து பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கே நேதாஜிக்கு சிறை ரெக்கார்டுகளில் ‘கிளாசி மாலங்’ என்று பெயரிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதைவிட அதிர்ச்சிகரத்தகவல் என்னவென்றால் சிறையிலிருந்து நேதாஜி பலமுறை நேருவுக்கு தான் இந்தியாவுக்கு திரும்ப விரும்புவதாகவும், தன்னை மீட்பதற்கான ஏற்பாடுகளைச்செய்யுமாறும் கடிதம் எழுதியிருக்கிறார் என்பதுதான்!!! 


7)   1946ல்தான், அதாவது நேதாஜி இறந்ததாகக் கூறப்பட்ட ஒரு வருடம் கழித்துதான் இந்திய அரசாங்கம் நேதாஜி இறந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை செய்திருக்கிறது. 


8)   நேதாஜியின் இறப்பு மர்மம் குறித்த விசாரணைக்கு இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி முகர்ஜி கமிஷனில் நிசாமுதீன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட விமானத்தில் கேப்டன் ஏக்ரம், லால்சிங் மற்றும் சில பெங்காளி வீரர்களும், மூன்று ஜப்பானியர்களும் மட்டுமே அதில் பயணித்ததாகவும், நேதாஜி அதிலில்லை என்றும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.


9)   விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட தேதியிலும், அதற்கு முன்னர் மற்றும் பின்னர் இருக்கும் பத்து நாட்களிலும் தாய்பேயில் அப்படி எந்தவொரு விமான விபத்தும் நடக்கவில்லை என்று கூறப்பட்டிருந்த நீதிபதி முகர்ஜி கமிஷனின் அறிக்கையை இந்திய அரசாங்கம் ஏன் நிராகரித்தது?...


10) நேதாஜி விமான விபத்தில் இறந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இதுவரையிலும் அந்த விமான விபத்து பற்றிய புகைப்படங்களோ... இல்லை… அந்த விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்களைப்பற்றிய தகவல்களோ ஏனில்லை?... 


இதைப்போன்ற விடையில்லா கேள்விகள் போலவே நேதாஜியின் விஷயத்தில் நீடித்திருக்கும் மர்மத்திற்கு காரணம் நேருவே என்றும் ஒரு தகவல் உண்டு. சுதந்திரத்திற்கு பிறகான ஆட்சிக்கு குறிவைத்த நேருவுக்கு அக்காலத்தில் மிகப்பெரிய தலைவலியாய் தெரிந்தவர் அமோக மக்கள் ஆதரவு கொண்ட நேதாஜி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நேதாஜியை நேருவே கடைசிவரை ரஷ்யாவிலேயே வீட்டுச்சிறையில் வைத்திருந்ததாகவும் சில தகவல்கள் உலவுகின்றன. நேதாஜி இந்தியாவுக்குள் 1985 வரையிலும் ‘’பகவான்ஜி’’ என்ற பெயரில் உத்திரப்பிரதேசத்தில் ஒரு ஆன்மீகவாதியாய் வாழ்ந்ததாகவும் தகவலுண்டு.


எது எப்படியோ?... நேதாஜியின் இறப்பு இன்று வரையிலும் சர்ச்சைகள் விலகாத இந்தியாவின் டாப் மர்மமாகவே நீடித்திருக்கிறது. 


லால் பகதூர் சாஸ்திரி
இந்தியாவின் தீராத மர்மங்களில் இரண்டாவது இடத்தை லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்தான் பிடித்திருக்கிறது. லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமர் என்பதைத்தவிர பெரும்பாலான விஷயங்கள் பலருக்குத் தெரியாது.


அக்டோபர்-2, 1904ல் பிறந்த லால் பகதூர் சாஸ்திரி இந்திய சுதந்திரப் போராட்டக் காலங்களில் இண்டியன் நேஷனல் காங்கிரசின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர். சுதந்திர இந்தியாவின் நேருவின் அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகித்த போதும், பெரிதாய் பரபரப்பாய் வெளியில் தெரியாத அமைதியான அரசியல்வாதியாகவே இருந்தவர்.


மே-27, 1964ல் நிகழ்ந்த நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்திராகாந்தியை பிரதமராக்குவதற்கு முன்னிலைப்படுத்திய நிகழ்வுகளை இந்திரா மறுத்ததால் லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் ஜீன், 1964ல் பொறுப்பேற்றார்.


இவரது நிர்வாகத்திறமைகளில் முக்கியமானது... இவரின் வெண்மைப்புரட்சி... பால் உற்பத்திக்கு முதலிடம் அளித்து இவரால் உருவாக்கப்பட்டதுதான் ‘’நேஷனல் டெய்ரி டெவலெப்மெண்ட் போர்டு’’ என்பது நம்மில் பலர் அறியாத ஆச்சர்யச்செய்தி. நாடு முழுவதும் உணவுப்பஞ்சம் நிலவியபோது சாஸ்திரி நாட்டு மக்களை தலைக்கு ஒரு உணவை அரசாங்கத்திடம் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு பெறப்படும் உணவை பதப்படுத்தி பஞ்சம் நிலவும் ஏரியாக்களில் விநியோகிக்க திட்டமிட்டார். பசுமைப்புரட்சியை உருவாக்கியதிலும் சாஸ்திரி முதன்மையானவரே. இந்தோ-பாக் 2ம் யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையில் சாஸ்திரியால் முழக்கமிடப்பட்ட கோஷமே ‘’ஜெய் ஜவான், ஜெய் கிசான்’’...


தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும் சாஸ்திரியின் பங்கு மிக முக்கியமானது. இந்தித்திணிப்பை விரும்பாத மாநிலங்களில் ஆங்கிலமே தொடர்ந்து மத்திய அரசு மொழியாக நீடிக்கும் என்று சாஸ்திரி வழங்கிய உத்திரவாதத்திற்குப் பிறகே மொழிப்போர் போராட்டங்கள் அமைதியடைந்திருக்கின்றன.


ஈழத்தமிழர் விவகாரத்திலும் சாஸ்திரியின் பங்களிப்பு இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்?...


1964ல் சாஸ்திரி அப்போதைய சிறிலங்கன் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கேவுடன் ஒரு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளார். சிறிமாவோ-சாஸ்திரி அல்லது பண்டாரநாயக்கே-சாஸ்திரி என்றழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துகளின்படி ஆறு இலட்சம் இந்தியத் தமிழர்கள் இந்தியாவில் மீள் குடியமர்த்தப்படவேண்டும். மூன்று இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் தமிழர்களுக்கு சிறிலங்க குடியுரிமை வழங்கப்படவேண்டும். இவையனைத்தும் அக்டோபர்-31,1981க்குள் நிறைவேற்றப்படவேண்டும். சாஸ்திரியின் மறைவுக்குப்பின்னர் 1981 நிலவரப்படி இந்தியா மூன்று இலட்சம் தமிழர்களை இந்தியாவில் மீள்குடியமர்த்தியிருக்கிறது. சிறிலங்கா 1,85,000 தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது. அதன்பிறகு இந்தியாவாலேயே இந்த ஒப்பந்தம் காலாவதியானதாக சொல்லப்பட்டு நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பது காலத்தின் கொடுமையே. 


பாகிஸ்தான் அதிபர் முகம்மது அயூப்கான் இந்தியாவில் வலுவில்லாத தலைமை அமைந்திருப்பதாகக் கருதி இந்தியா மீதான போர் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். செப்டம்பர்,1965ல் இந்தோ-பாக் இரண்டாம் யுத்தம் தொடங்கியது. இந்திய மக்களிடையே லால் பகதூர் சாஸ்திரி மிகப்பெரிய ஹீரோவாக உருவெடுத்தது இந்தப்போரினால்தான். அதற்கு முந்தையை இந்தோ-சைனா போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவின் தவறான முடிவே காரணமென்பதால் சாஸ்திரி பல திறமையான முடிவுகளை எடுத்து இந்தோ-பாக் இரண்டாம் யுத்தத்தில் இந்தியாவின் முன்னிலைக்கு வழிவகுத்தவர்.


இந்தப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷ்யா ஏற்படுத்திய சமாதானப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு ஜனவரி-10,1966ல் பிரபலமான தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுடன் கையெழுத்திட்டார் சாஸ்திரி. அதுதான் இந்திய நாட்டிற்காக அவர் போட்ட கடைசி கெயெழுத்து என்பது நமது துரதிர்ஷ்டமே.


ஜனவரி-11, 1966ல் அதாவது தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளே சாஸ்திரி ரஷ்யாவில் தான் தங்கியிருந்த அறையில் அதிகாலை 1.32க்கு மாரடைப்பால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.


சாஸ்திரியின் இந்தத் திடீர் மரணமும் நேதாஜியின் மரணத்தைப் போலவே பல மர்மங்களுடன் இந்தியாவின் தீரா மர்மங்களின் வரிசையில் கலந்து போனதற்கான காரணங்கள்...


1)   இறப்பிற்கு பின்னர் சாஸ்திரியின் உடல் நீல நிறமாக மாறியதால் சாஸ்திரியின் குடும்பமும், எதிர்க்கட்சிகளும், பெரும்பாலான நாட்டு மக்களும் சாஸ்திரியின் மரணம் இயற்கையானதல்ல என்று எதிர்ப்பு தெரிவித்தும், கடைசி வரையிலும் அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை


2)   கடைசியாக சாஸ்திரிக்கு குடிக்க தண்ணீர் வழங்கிய வேலையாள் ரஷ்ய அரசால் கைது செய்யப்பட்டு பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறான். சாஸ்திரியின் மரணம் ஹார்ட் அட்டாக்தான் என்றால் எதற்காக அந்த உடனடி கைது நடவடிக்கை நிகழ்ந்திருக்கிறது?...


3)   சாஸ்திரியின் மரணம் பற்றிய விசாரணைக்காக ராஜ் நரைன் என்கொயரி கமிஷன் என்று ஒன்று நிறுவப்பட்டு அதன் முடிவுகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. (இன்று அந்த என்கொயரி கமிஷனின் ரிப்போர்ட் இந்தியன் பார்லிமெண்ட் லைஃப்ரரியிலும் இல்லாமல் தொலைந்திருக்கிறது). 


4)   2009ம் ஆண்டு பத்திரிக்கையாளர் அனுஜ் தர் என்பவரால் தகவலறியும் உரிமைச்சட்டதின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் சாஸ்திரியின் மரணம் பற்றி கேட்கப்பட்ட தகவல்களுக்கு பிரதமர் அலுவலகம் செக்சன் RTI - 8(I) (a)ன் படி நிராகரித்திருக்கிறது. ( இந்த செக்சன் எதற்கு தெரியுமா?... ஒரு விஷயம் அரசாங்கத்தால் வெளியிடப்படும்போது அது குறிப்பிட்ட சில நாடுகளுடனான நல்லுறவில் விரிசல் உண்டாக்குவதாகவோ… இல்லை உள்நாட்டில் மக்கள் கிளர்ச்சிக்கு வித்திடுவதாகவோ இருக்கும் பட்சத்தில் அரசாங்கம் அதை நிராகரிக்க உரிமையுண்டு!!!)


5)   சாஸ்திரியின் மரணத்திற்கு பின்னால் இந்தியாவின் பிரதமரானவர் யார் தெரியுமா?... இந்திரா காந்தி!!! அவரின் ரஷ்ய ஆதரவு அவரது ஆட்சி வரலாற்றில் நாடறிந்த விஷயம்...


இப்படி இந்தியாவின் இரண்டாவது பிரதமரின் வரலாறே தீரா மர்மங்களுடன் தெளிவான விடையின்றிதான் முடிந்து கிடக்கிறது என்பது மர்மத்திலும் சோகமே…


சஞ்சய் காந்தி
என்னை ஆச்சர்யப்பட வைத்த விஷயங்களில் ஒன்று... இந்தியாவின் தீரா மர்மங்களைப்பற்றி ஆராயும்போது பெரும்பாலும் மரணங்களே அதில் வியாபித்திருப்பதுதான்...


சஞ்சய் காந்தி... இந்திரா காந்தியின் இளைய மகன். அரசியலில் எவ்வித பதவியும் வகிக்காமலேயே அசுர வளர்ச்சியடைந்தவர். இவரது அண்ணன் ராஜீவ் காந்தி எந்தளவுக்கு அமைதியானவரோ அதற்கு நேரெதிர் சஞ்சய் காந்தி! தடாலடிப்பார்ட்டி என்றும் அடாவடிப்பார்ட்டி என்றும் பலவிதமான தகவல்கள் நிலவுகின்றன.


  நமது இன்றைய மாருதி-சுசூகி கம்பெனி இவரால்தான் நிறுவப்பட்டது என்பது நம்மில் பலர் அறிந்திருக்காத ஆச்சர்யச்செய்தி!. இந்திராகாந்தி 1975ல் எமெர்ஜென்சி பிரகடனம் செய்தபோது இந்திராகாந்திக்கு முழுக்க முழுக்க ஆலோசகராக செயல்பட்டவர் சஞ்சய் காந்திதான். அப்போது நாடு முழுவதும் இந்தியாவை ஆள்வது பிரதமர் அலுவலகம் அல்ல... பிரதமரின் வீடுதான் என்றுகூட ஒரு விமர்சனம் கிளம்பியிருக்கிறது. சஞ்சய் காந்தியின் மற்றுமொரு சாதனை நாடு முழுவதும் பரப்பப்பட்ட ‘’குடும்பக்கட்டுப்பாடு’’ திட்டம்!


பெரும்பாலான கருத்துக்களும், தகவல்களும் இந்தியாவின் இரும்புப் பெண்மணியாய் அறியப்பட்ட இந்திரா காந்தியையே அவரது மகன் சஞ்சய் காந்தி பிளாக் மெயில் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக தெரிவிக்கின்றன.


தடாலடிக்கு பேர் போனவராய் விளங்கி இந்திராவின் அரசாங்கத்தையே தனது கைக்குள் வைத்திருந்த சஞ்சய் காந்தி ஜீன்-23,1980ல் டெல்லியில் டெல்லி ஃபிளையிங் கிளப்பைச் சேர்ந்த ஒரு புது ரக விமானத்தை இயக்கிப் பறந்தபோது விபத்துக்குள்ளாகி இறந்திருக்கிறார். அவருடன் இறந்த ஒரே ஆள் அந்த விமானத்தில் இருந்த கேப்டன் சுபாஷ் சக்சேனா.
சஞ்சய் காந்தி இறந்த விமானவிபத்து இதுதான்...


சஞ்சய் காந்தியின் இந்த திடீர் மரணம் பலவித சந்தேகங்களுடனும், தகவல்களுடனும் வரலாற்றில் தீரா மர்மமாகவே இடம்பிடித்ததற்கு சில காரணங்கள் உண்டு...


1)   சஞ்சய் காந்தியின் இறப்புச்செய்தி கேட்டதும் இந்திராகாந்தி எழுப்பிய முதல் கேள்வி சஞ்சய் காந்தியிடமிருந்த ரிஸ்ட் வாட்ச் மற்றும் சாவிக்கொத்தைப்பற்றியதுதான்!


2)   சஞ்சய் காந்தியின் மரணத்திற்கு பிறகு அதை விசாரிப்பதற்காக இந்திராவால் அமைக்கப்பட்ட நீதிபதி எம்.எல்.ஜெயின் தலைமையிலான விசாரனைக்கமிஷன் வெகு விரைவிலேயே இந்திராவால் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏன் இந்திராகாந்தி அந்த விசாரணைக்கமிஷனை தள்ளுபடி செய்தார் என்பது புரியாது புதிர்தான்.


3)   சஞ்சய் காந்தியின் இறப்பிற்கு பிறகு ராஜீவ் காந்தி உடனடியாக அரசியலில் நுழைந்திருக்கிறார்!!!


இன்னமும் கூட சஞ்சய்காந்தியின் மரணத்திற்கு இந்திராதான் காரணம் எனும் எண்ணம் மக்கள் மனதிலிருந்து அகலாமலிருப்பது அவரது மரணத்தில் நீடித்திருக்கும் தீரா மர்மமே...


(ராஜீவ் காந்தியின் மரணமும் தீரா மர்மமே... என்று உங்களில் எவராவது கேள்வி எழுப்பினால் அதற்கு நான் பொறுப்பல்ல!)


நடிகை திவ்யபாரதி
இந்தி நடிகை திவ்யபாரதி... இவரது மரணமும் இன்னமும் புரியாத மர்மமாகவே நீடித்திருக்கிறது.


திரையுலகில் இவரது அசுரவேக வளர்ச்சி எவரும் கணிக்காத ஒரு விஷயம். ஆனால் அதே அசுரவேக வளர்ச்சிதான் அவரது இறப்புக்கு பின்னாலான மர்ம முடிச்சுகளுக்கும் காரணமாகிப்போனது.


ஏப்ரல்-5, 1993ல் இரவு 11.45மணிக்கு திவ்யபாரதி தான் குடியிருந்த அபார்ட்மெண்ட்டின் பால்கனியிலிருந்து தவறி விழுந்து இறந்ததாக வரலாற்றில் பதியப்பட்ட செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது இன்னமும் நீடிக்கும் மர்மம்.





அவர் குடித்திருந்ததாகவும் குடிபோதையில் தவறி விழுந்ததாகவும் செய்திகள் உண்டு. பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றில் மூன்று பெக் அளவுக்கு மொரிஷியன் ரம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஜெ.ஜி.ஜாதவ் என்ற இன்ஸ்பெக்டரின் கூற்றுப்படி திவ்யபாரதியின் வீட்டிலிருந்த மொரிஷியன் ரம் பாட்டில் திறக்கப்படாத புது பாட்டில். ஒரு உயர் ரக விஸ்கி பாட்டில் மட்டும் கொஞ்சம் காலியான நிலையில் இருந்திருக்கிறது.


அவருடைய மரணத்துக்கு பின்னால் பாம்பே நிழலுலகத் தாதாக்களின் கைங்கர்யம் இருப்பதாக ஒரு செய்தியுண்டு. திவ்யபாரதியின் அசுரவேகத்தை பொறுக்க இயலாத எதிர்கோஷ்டியினர் திட்டமிட்டு அவரைத் தீர்த்துக் கட்டியதாக பின்னனிக் கதையுமுண்டு. திவ்யபாரதி தற்கொலை செய்து கொண்டார்... அவருக்கு இது புதிதல்ல... அவ்வப்போது ஷீட்டிங் ஸ்பாட்களில் கூட பிளேடை எடுத்து கையை அறுத்துக்கொள்வதாக மிரட்டுவார் என்று அவரது இறப்புக்கு பின்னால் பேட்டியளித்தவர்களும் உண்டு. திவ்யபாரதி அவரது தாயை எதிர்த்து சாஜித் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திவ்யபாரதியின் மரணத்துக்குப்பின்னால் அவரது கணவரின் கைங்கர்யம் கூட இருக்கலாம் என்றும் ஒரு செய்தியுண்டு.


திவ்யபாரதி இறந்தபோது அவரது வீட்டிலிருந்த அவரது பியூட்டிஷியன் மற்றும் பியூட்டிஷியனின் கணவர் ஆகியோர் மீதும் சந்தேகப்பார்வை உண்டு.


எவ்வளவோ பரபரப்புகள் அவரது இறப்பின் போது இந்தியா முழுவதும் எழுந்தாலும் 1998ம் ஆண்டு விபத்து என்று கூறி ஒரு 19வயது செல்லுலாய்டு தேவதையின் மரணம் தீராத மர்மமாகவே மூடப்பட்டது!!!


தாஜ்மஹால் 
உலக அதிசயங்களில் ஒன்றாக, காதலின் சின்னமாக, வெள்ளைப் பளிங்கு கற்களில் கம்பீரமாக எழுந்து நிற்கும் நமது தாஜ்மஹாலும் நம்மால் ஒரு தீரா மர்மமாகவே பார்க்கப்படுகிறது என்பது நம்மில் பலர் அறியாத அதிர்ச்சிச்செய்தி!


நமக்கெல்லாம் தெரிந்த கதை... தாஜ்மஹால் என்பது மன்னர் ஷாஜகானால் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்ட ஒரு காதல் சின்னம் என்பதுதான். ஆனால் பலர் இதை மறுக்கின்றனர். ஏனென்றால் மும்தாஜ் மரணத்தை தழுவும்போது இருந்த இடம் தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா அல்ல! ஆக்ராவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால்தான் மும்தாஜ் இறந்திருக்கிறார். அவர் இறந்த இடத்திலேயே அவரது உடல் புதைக்கப்பட்டிருக்கிறது. தாஜ்மஹாலில் இருப்பது அவரது பதப்படுத்தப்பட்ட உடலா?... இல்லை... ஏற்கனவே புதைக்கப்பட்ட அவரது உடலின் மீதங்கள் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் தாஜ்மஹாலில் புதைக்கப்பட்டதா என்று பல கேள்விகள் வரலாற்று ஆய்வாளர்களால் எழுப்பப்படுகிறது.


இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் தாஜ்மஹால் என்பது ஷாஜகானால் கட்டப்பட்டதே அல்ல. அது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலேயே கட்டப்பட்டு ஷாஜகானால் ஆக்கிரமிக்கப்பட்ட சிவன்கோயில் என்றும் சில ஆச்சர்யத்தக்க விவாதங்களை எடுத்து வைக்கின்றனர்!


இதுபோன்று இறக்கைக் கட்டிப் பறக்கும் தகவல்களுக்கு கூடுதல் பலம் சேர்ப்பதுபோல இந்திய அரசின் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டும் மும்தாஜின் கல்லறை இருப்பதாகக் கூறப்படும் தாஜ்மகாலின் கீழ்த்தளத்தை நிரந்தரமாக மூடி மர்மத்தைக்கூட்டியிருக்கிறது. இதே காரணத்தால்தான் பலர் அந்த கீழ்த்தளத்தில் சிவன் கோயில் இருப்பதாகவும் அது வெளியில் தெரிந்தால் தாஜ்மஹால் இந்துக்களின் வழிபாட்டுத்தலமாக மாறி நாட்டில் தேவையில்லாத மதக்கலவரங்களும், பிரச்சினைகளும் உண்டாகலாம் என்பதால் அரசாங்கம் மூடி மறைப்பதாக மர்மத்தைக்கிளப்புகின்றனர். எப்படியாயினும் சரி... உலகம் போற்றும் காதலின் சின்னமாய் நமது நாட்டில் வீற்றிருக்கும் தாஜ்மஹாலின் கீழ்த்தளத்திலிருப்பது உண்மையிலேயே தீரா மர்மம்தானோ என்னவோ தெரியவில்லை!!!
யேட்டி
யேட்டி என்பது மனிதக்குரங்கு போன்ற தோற்றம் கொண்ட ஒரு உயிரினம் என்றும் இது ஹிமாலயன் மலைப்பிரதேசத்தில் சுற்றுவதாகவும் பலர் அவ்வப்போது இதைப் பார்த்ததாகவும் கதைகள் நிலவுகின்றன. இது மனிதர்கள் கண்ணில் பட்டால் உடனே ஓடி மறைந்து விடுவதாகவும் சொல்லப்படுகிறது. பலர் இதைப்பெரிய உருவம் கொண்ட மனித இனமாகவே நம்புகின்றனர். இதன் கால்தடமும் பல இடங்களில் கண்டறியப்பட்டதாக கதைகள் உலவுகிறது.


என்றாலும் இதுவும் இன்னமும் முழுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படாத மர்மமாகவே நீடிக்கிறது.


கல் மனிதன்
இது இந்தியாவின் தீர்க்கப்படாத வழக்குகளில் பிரசித்தி பெற்றது. இது ஒரு சீரியல் கொலைகாரனைப்பற்றிய தகவல். 1985 முதல் 1987வரை பாம்பேயில் ஒரு டசனுக்கும் அதிகமானோர் இந்தக் கொலைகாரனால் கொல்லப்பட்டிருக்கின்றனர். எல்லா கொலைகளுமே ஒரே மாதிரியான ஸ்டைலில் 30கிலோ எடைகொண்ட கல்லால் அடித்து செய்யப்பட்டிருக்கிறது. இதே ஸ்டைலில் 1989ல் ஆறு மாதத்திற்குள் ஒரு டசனுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.


கல்லை உபயோகித்து சீரியல் கொலைகள் நடந்ததில் கொலைகாரனுக்கு மீடியாக்கள் வைத்த பரபரப்புப் பெயர்தான் ‘’ஸ்டோன் மேன்’’.


இன்று வரையிலும் கொலைகாரன் யார் என்றும், கொலைக்கான காரணம் என்னவென்றும் தெரியாமல் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் இந்தக் கேஸ் ஃபைலும் இந்தியாவின் தீராத மர்மமே என்பதில் சந்தேகமில்லைதான்!


இதே போன்று இன்னும் எவ்வளவோ மர்மங்கள் தீரா மர்மங்களாக நீடித்திருக்கலாம். எனக்குத் தெரிந்தவரையில் நான் தொகுத்திருக்கிறேன். உங்களுக்கும் இதேப்போல ஏதாவது தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்... நானும் தெரிந்து கொள்கிறேன்... ஏனென்றால் வாழ்க்கை எப்போதுமே எவராலுமே முழுவதுமாய் கற்றறிய முடியாத மர்மமே!!!

No comments:

Post a Comment

welcome ur comment,