Friday, July 12, 2019

இரண்டாம் இராஜராஜ சோழனும் ராணி மங்கம்மாவும் காவிரியை மீட்ட வரலாறு

இரண்டாம் இராஜராஜ சோழனும்  ராணி மங்கம்மாவும் காவிரியை மீட்ட வரலாறு



"சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காண வாரீர்"
         -இராச ராசா சோழனுலா

அது கிபி 1141 ஆம் ஆண்டு.

இன்றைய கர்நாடகா எனும் மேலைச் சாளுக்கிய நாட்டை முதலாம் நரசிம்மன் என்ற மன்னன் ஆண்ட காலம்.

தமிழ்நாடு சோழநாடாக இரண்டாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் இருந்த காலகட்டம்.

மேலைச் சாளுக்கியர்களுக்கும் சோழர்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற அளவில் தான் உறவு இருந்தது.அந்த சூழ்நிலையில் சோழ நாட்டின் வளத்திற்குக் காரணமான காவிரியை இனி சோழ தேசம் சொந்தம் கொண்டாடக் கூடாது என்கிற நோக்கத்தில் முதலாம் நரசிம்மன் காவிரியைத் தடுத்து அதன் போக்கில் அணையைக் கட்டினான்.

செய்தி இராஜேந்திரனை எட்டியது.

கங்கையையும் கடாரத்தையும் வென்று கீழ்த்திசை நாடுகள் முழுவதும் புலிக்கொடியைப் பறக்கவிட்ட இராஜேந்திரன் தோள்கள் தினவெடுத்தன.பெரும் படை திரட்டிக் கொண்டு மேலைச்சாளுக்கியம் சென்றவன் அந்த நாட்டை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தான்.காவிரியின் குறுக்கே இருந்த அணையை உடைத்து நொறுக்கி காவிரியை விடுவித்தான்.

இனி காவிரியைத் தடுக்கும் எண்ணம் எவனுக்கும் எக்காலத்திலும் கனவிலும் கூட வரக்கூடாது.அப்படி தடுத்தால் நான் மீண்டும் வருவேன்..என சூளுரைத்து விட்டு வந்தான்.

தமிழ்நாடு புலிக்கொடியின் ஆளுகையில் இருந்த வரையில் காவிரி சுதந்திரமாக தமிழ்நாட்டிற்குள் வந்தது.

சோழர்கள் காலம் முடிந்து...பாண்டியர்கள் காலம் வந்து...பின் அதுவும் பலவீனமாகி, சுல்தான்களின் ஆட்சிக்கு தமிழகம் சென்றது. அதன் பின்னர் 1251 ல் தொடங்கி நாயக்க மன்னர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.

முந்நூறு ஆண்டுகள் கழிந்தன.

இடைப்பட்டக் காலத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற சிந்தனை கூட மேலைச்சாளுக்கியத்தை ஆண்ட எவருக்கும் எழவில்லை.

16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருச்சியைத் தலைநகராகக் கொண்டு தமிழ்நாட்டை ஆண்ட நாயக்க வம்சத்தில் சொக்கநாத நாயக்கர் போரில் மரணமடைய அவருக்குப் பின் அரியணை ஏறுவது யார் என்ற பெருக்குழப்பம் நிலவியது. காரணம் சொக்கநாத நாயக்கர் இறக்கையில் அவரது மகன் விஜயரெங்க சொக்கநாதனுக்கு மூன்று வயது.

எனவே ஆட்சிப் பொறுப்பு சொக்கநாத நாயக்கரின் மனைவி வசம் சென்றது.

அதுவரையில் காவிரியைத் தடுக்கும் எண்ணம் கனவிலும் வராத மேலைச் சாளுக்கிய நாட்டிற்கு,இப்போது தமிழ்நாட்டை ஆள்வது ஒரு பெண் தானே... அவள் வந்தா நம்மைத் தடுக்கப் போகிறாள் என்ற எண்ணம் வந்தது.

அப்போது காவிரி உற்பத்தி ஆகும் குடகு மலைநாட்டை உள்ளடக்கிய மைசூர் பகுதிகளை சிக்கதேவராயர் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.

அவனுக்கு காவிரி நதிநீர் தமிழ்நாட்டின் எல்கைக்குள் செல்வது பிடிக்கவில்லை. தன் முன்னோர்கள் செய்தது போல காவிரியைத் தடுத்து அணைகட்ட நினைத்தான். அணையைக் கட்டியும் விட்டான்.

இந்த செய்தி திருச்சியில் இருந்த சொக்கநாத நாயக்கரின் மனைவியும் அரசியுமான அந்தப் பெண்ணிற்கு எட்டியது.

போயும் போயும் ஒரு பெண் நம்மைத் தடுப்பதா என்ற சிக்கதேவராயனின் ஏளனம் அவளுக்கு ஆத்திரத்தைத் தூண்டியது.

உடனே படைகளுக்கு ஆணையிட்டாள்.

பெரும் படையைத் திரட்டிக் கொண்டு மைசூர் நோக்கி சென்றாள்.

காவிரியின் கரையைக் கடந்து மைசூர் சமஸ்தானத்தை அடைந்து, அதன் எல்லையில் தன் படைகளை நிறுத்தி,

ஒரு பட்டத்து யானை மீது அமர்ந்தபடி,

"சிக்கதேவராயா உன்னை போர்க்களத்தில் சந்திக்கத் தயார்... துணிவிருந்தால் வா..  " என்று செய்தி அனுப்பினாள்.

மதுரை ராணி வந்திருக்கும் போர்க் கோலத்தை ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட சிக்கதேவராயர் வெலவெலத்துப் போனான்.

நேரடியாக ஓடிவந்து ராணியிடம் சரணடைந்தான்... காவிரியைத் தடுத்தது தவறு என மன்னிப்புக் கோரினான்.

மதுரை ராணியின் அந்த சேனை சென்று காவிரியின் குறுக்கே இருந்த அந்த அணையை உடைத்து நொறுக்கியது.

"காவிரியைத் தடுக்கும் எண்ணம் இனி எவனுக்கும் எக்காலத்திலும் கனவில் கூட வரக்கூடாது..." என ஆணையிட்டுவிட்டு நகர்ந்தாள்.

அந்த ராணி தான்,

"ராணி மங்கம்மா...."

அவர் தான்,

மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையில் செல்லும் தமிழ்நாட்டின் முதல் நெடுஞ்சாலையை அமைத்தவர்.

அந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்களை நட்டுவைத்தவர்.

தன் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் மங்கம்மா சத்திரம் என்ற பெயரில் அன்னதான கூடங்களை நிறுவியவர்.

குளங்களை, கிணறுகளை வெட்டி நீர் வசதி ஏற்படுத்தி தந்தவர்.

ஏகப்பட்ட கோவில்களைப் புணரமைத்து குடமுழுக்கு செய்து தந்தவர்.

இன்றும் கூட தென்மாவட்டங்களில் பல பகுதிகளில் மங்கம்மா சத்திரம்... மங்கம்மா சாலை... மங்கம்மா கிணறு... மங்கம்மா குளம் என ஏகப்பட்டவைகளைக் காணலாம்...

இன்று ராணி மங்கம்மாவின் 370 வது பிறந்தநாள்...