Saturday, October 6, 2018

பிரபலமான 10 சைக்கோ கொலையாளிகள்

பிரபலமான 10 சைக்கோ கொலையாளிகள்


மனிதத்தின் சுவடே இல்லாத சிலரும் இந்த உலகில் உலவத்தான் செய்கின்றனர். சமூகத்தின் சாபக்கேடான அத்தகைய மனிதர்களில் சிலர் இதோ.

எட்வர்ட் கெயின்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், தான் உண்டு தன் பண்ணை வீடு உண்டு என்று வசித்து வந்தார் எட்வர்ட் கெயின். ஒருநாள் உள்ளூர் ஹார்ட்வேர்ஸ் கடையில் ஒரு திருட்டு. பொருளோடு, கடையின் உரிமையாளரான ‘பெர்னிஸ் வோர்டன்’ என்ற பெண்ணும் மிஸ்ஸிங். இந்த வழக்கில் துப்பு துலக்கி வந்த போலீசார், எதற்கும் சும்மா விசாரித்து வைப்போமே என எட்வர்ட்கெயின் பண்ணை வீட்டிற்குச் சென்றனர். அங்கு கண்ட காட்சி, அவர்களை குலை நடுங்க வைத்துவிட்டது. காணாமல் போயிருந்த பெண் தலையில்லாமல் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்தாள். இது நடந்தது 1957–ம் ஆண்டு நவம்பர் 16–ந் தேதி.  

திக்.. திக்.. அத்துடன் தீரவில்லை. அந்த வீட்டை போலீசார் சோதனையிட்டனர். வித்தியாசமாய் தெரிந்த அவன் சாப்பிடும் தட்டு ஒரு மண்டை ஓடு!  உட்காரும் ஷோபாவின் லெதர் மனித தோல்! குப்பைத் தொட்டியில் போட்டிருந்த கவரும் மனித தோல்!  பக்கத்தில் தொங்கிய பெல்ட்டில், நான்கு மனித 
மூக்குகள்! 

ரசிக்க ரசிக்க மனிதர்களை கொன்று குவித்திருக்கிறான் அந்த சைக்கோ. மனநல மருத்துவ மனையில் போடப்பட்ட அவன், 1984 ஜூலை 26–ல் இறந்தான். இவன்தான் ஹாலிவுட்டின் சைக்கோ படங்களுக்கான இன்ஸ்பரேஷன்!

டெட் பண்டி  

பார்வைக்கு செம ஸ்மார்ட்டான இவனும் ஒரு சைக்கோ கில்லர்தான். இவனது டார்கெட் முழுக்க முழுக்க பெண்கள். இளம் பெண்களை வசீகரமாகப் பேசி மயக்குவான். மயங்கியவர் களை காரில் தூக்கிப் போட்டு தலையில் அடித்துக் கொன்று, பின்னர் பலாத்காரம் செய்வான். பெண் சைக்காலஜியில் இவன் கெட்டிக் காரன். சிலரிடம் ரொமாண்டிக்காக பேசுவான், சிலரிடம் அப்பாவியாக பேசுவான், சிலரிடம் உதவி கேட்பான், சிலரிடம் போலீஸ் என்பான்! இப்படி ஏகப்பட்ட ஐடியாக்கள் வைத்திருந்தான். 1974–க்கும் 78–க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் இவன் கொன்று குவித்த பெண்களின் எண்ணிக்கை முப்பது! 

சின்ன வயதில் இவனை வளர்த்த தாத்தாவும் சைக்கோ டைப் தான். மிருகங்களை துன்புறுத்துவது, தவறான படங்களை ரசிப்பது என அவரது பழக்கம் இவனையும் பற்றிக்கொண்டது. 1984 ஜனவரி 24–ல் மின்சார நாற்காலியில் வைத்து சாகடிக்கப்பட்டான். ஹாலிவுட்டில் வெளியான ‘டெட் பண்டி’ எனும் படம் இவனைப் பற்றியது தான்!  

ஆல்பர்ட் பிஷ் 

குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ இவன். குழந்தைகளைத் துன்புறுத்தி அவர்களோடு பாலியல் உறவு கொள்வது இவனது ஹாபி. முதலிலெல்லாம் கொலை செய்யவில்லை. குழந்தைகளைக் கடத்தி அவர்களை படாத பாடுபடுத்தி பின்னர் விட்டு விடுவான். நாளாக ஆக அதில் அவனுக்கு ‘கிக்’ கிடைக்கவில்லை. பிறகு கொலை செய்தால் தான் பாலியலில் திருப்தி எனும் நிலைக்கும் வந்து விட்டான். 

அறிவியல் இவனது மனநோயை, ‘சேடோமேசோசிஸ்ட்’ என்று அழைக்கிறது. அதாவது வலி இருந்தால் தான் இவனுக்குத் ‘திருப்தி’ கிடைக்கும். ஆள் கிடைக்காத போது ஊசியால் தனது உடலையே குத்திக் கொள்வான், தீயால் சுட்டுக் கொள்வான். இதுவும் கூட அவனுக்கு இன்பம் தருமாம்.  

டேவிட் ரே பார்க்கர்

அணு அணுவாக சித்திரவதை செய்து ரசிக்கும் மாபெரும் சைக்கோ இவன். குறைந்தபட்சம் 60 பேரையாவது கொன்றிருப்பான் என்பது போலீஸ் கணக்கு. ஆனால் அதெல்லாம் ஜுஜூபி என்கின்றனர். விளையாட்டுப் பெட்டி என்று ஒரு பெட்டி வைத்திருந்தான். அது ஒரு மரணப் பெட்டி. அதில் ஆணி, சங்கிலி, வாள், கம்பி போன்ற ஆயுதங்கள் இருக்கும். 

ஆட்களைப் பிடித்து வந்து, அவர்களைக் கட்டி வைத்து சித்திரவதை செய்வான். உடலைப் பிய்த்தும், கிழித்தும் நடத்தும் சித்திரவதையை, நேரடி ஒளிபரப்பு செய்வான். ‘யாருக்கு?’ என்கிறீர்களா... சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருப்பவருக்கு. புதிது புதிதாய் ஆயுதங்களை உருவாக்கி, ஏதோ முட்டைகோஸ் வெட்டுவது போல மனிதனை 
வெட்டுவான். மாரடைப்பால் இறந்து போனான், இந்த இதயமே இல்லாதவன். 

கில்லீஸ் டே ரெய்ஸ்

1405 செப்டம்பரில் பிறந்த இவன்.. படுபாதகன் எனும் பெயரைச் சம்பாதித்தவன். பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து உயர் பதவியை அடைந்தான். சின்னப் பிள்ளைகளைப் பிடித்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, சற்றும் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்தவன்.

இவன் கொன்ற சிறுவர், சிறுமியரின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு இடத்தில் கிடைத்த எலும்புக் கூடுகள் மட்டும் 40 என்பது பதைபதைக்க வைக்கிறது. சிறுவர்களை ஏமாற்றி அழகிய உடை கொடுத்து, உணவு கொடுத்து பின் சொல்ல முடியாத கொடுமைகள் செய்து அவர்களைக் கொன்று விடுவான். இவனது சில வேலைக்காரர்களும் இந்த படுபாதகத்துக்கு உடந்தை. 35–வது வயதில் அவனை பிடித்து, மரண தண்டனை விதித்தார்கள். 

ஏமி ஆர்ச்சர் கிலிகன்

சீரியல் கில்லர் வரலாற்றில் ஏகப்பட்ட பெண்களும் இடம்பிடித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் ஆர்ச்சர். 1868–ல் அமெரிக்காவில் பிறந்தவர். வயதானவர்களைப் பராமரிக்கிறேன் என ஒரு இல்லத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவரது முதல் இரண்டு கணவர்களும் இறந்து போயிருந்தனர்.

இவருடைய முதியோர் இல்லத்தில் வருபவர்கள் கொஞ்ச நாட்கள் நன்றாக இருந்து விட்டு சட்டென இறந்து விடுவார்கள். சில ஆண்டுகளில் மக்களுக்கு இந்த இல்லத்தின் மீது சந்தேகம் வர, புகார்கள் பறந்தன. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வந்தன. சுமார் 50 பேர் வரை இவரால் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த புலன் விசாரணை சொன்னது. அவர்களில் இவருடைய கணவர்களும் அடக்கம். எல்லோருக்கும் விஷம் கொடுத்து சமாதியாக்கியிருந்தார் ஆர்ச்சர்.

வரும் பணக்கார முதியவர்களிடம் ஒரு பெரும் தொகையை கடனாக வாங்க வேண்டியது, விஷம் கொடுத்து அவர்களைத் தீர்த்துக் கட்டவேண்டியது. இது தான் அவருடைய பதறடிக்கும் ஃபார்முலா!

ஜெஃப்ரி டாமர்

இந்தப் பூனையும் பால் குடிக்குமா ரேஞ்சுக்கு அப்பாவி முகம். இவனுடைய டார்கெட் பெண்களல்ல, ஆண்கள். ஓரினச் சேர்க்கை கொலையாளி இவன். ஆண்களை வீட்டுக்கு வரவழைத்து அவர்களைக் கொல்வான். பின் அவர்களுடைய உறுப்புகளை வெட்டி எடுத்து உணவுக்காக பத்திரப்படுத்துவான். நரமாமிச சைக்கோ இவன். 

18 வயதில் முதல் கொலையை அரங்கேற்றியவன்,அதன் பிறகு நிப்பாட்டவே  இல்லை. குறைந்தது 17 பேரைக் கொன்றிருக்கலாம் என்று கணக்கிட்டாலும், அதை விட மிக அதிகம் என்பது போலீஸ் தரப்பு நம்பிக்கை. இவனுடைய வீட்டில் சோதனையிட்டபோது வீட்டில் இருந்த மனித உறுப்புகளைப் பார்த்து மிரண்டு போய்விட்டனர் காவல் துறையினர். 

1994 நவம்பர் 28–ந் தேதி ஜெயிலில் நடந்த ஒரு சண்டையில் இறந்து போனான்.  

பேலா கிஸ்

ஹங்கேரியாவின் சீரியல் கில்லர் இவன். வீட்டைச் சுற்றி நிறைய உலோக டிரம்ஸ் வைத்திருப்பது இவனுடைய வழக்கம். ‘இது என்ன இவ்வளவு பெரிய பாத்திரங்கள்?’ என யாராவது கேட்டால், ‘எரிபொருள் நிரப்பி வைக்கிறேன்’ எனச் சொல்வான். மக்களுக்கு இவனுடைய பாத்திரங்கள் மேல் ஏதோ ஒரு சந்தேகம்.

கடைசியில் போலீஸ் வந்தது. உலோக டிரம் ஒன்றை திறந்து பார்த்தபோது, உள்ளே பதப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் உடல் இருந்தது. மொத்தம் 24 உடல்கள் அன்று கண்டுபிடிக்கப்பட்டன. 74 பெண்கள் வரை இவன் கொன்றிருக்கலாம் என விசாரணை சொன்னது. போலீஸ் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தப்பி ஓடிய இவன், கடைசிவரை பிடிபடவே இல்லை. 

அந்தேரி சிக்காட்டிலோ

ரஷிய நாட்டைச் சேர்ந்த தொடர் கொலையாளி. 1936–ம் ஆண்டு பிறந்தவன். ரெட் ரிப்பர் என்பது இவனுடைய பிரபலமான பெயர்களில் ஒன்று. 1978–க்கும் 1990–க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவன் கொன்று குவித்த பெண்கள் மற்றும்  குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 55. 

நல்ல மனநிலையில் இவன் படுகொலைகளை அரங்கேற்றியதாக டாக்டர் சான்றிதழ் கொடுத்தார். அரசு இவனுக்கு மரண தண்டனை விதித்தது. கருணையே இன்றி மக்களைக் கொன்று குவித்த இவன் ரஷிய சுப்ரீம் கோர்ட்டில் கருணை மனு அளித்தான். அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி போரிஸ் எல்ஸ்டினிடம் கருணை மனு அளித்தான். அதுவும் நிராகரிக்கப்பட 1994–ல் கொல்லப்பட்டான்.

ஹார்ப்   சகோதரர்கள்

மிக்காயா ஹார்ப், ஜாஸ்வா ஹார்ப் இருவரும் சகோதரர்கள். 1770 –களில் வாழ்ந்த அமெரிக்காவின் முதல் சீரியல் கில்லர்கள். பல படுகொலைகளை செய்தவர்கள் கடைசியில் பிடிபட்டார்கள். 39 பேரை கொலை செய்ததாக ஹார்ப் ஒத்துக் கொண்டான். ஆனால் குறைந்த பட்சம் 50 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்கிறது காவல்துறை.

கொடூரமாகக் கொலை செய்து தண்ணீரில் போட்டு விடுவது இவர்கள் வழக்கம். இவர்களில் மூத்தவன், தனது பச்சைக் குழந்தை அழுகிறது என எரிச்சல்பட்டு அதை மரத்தில் தூக்கி அடித்துக் கொன்றவன். இவனுடைய கொடூரத்தை விளக்க இது ஒன்றே போதும்.

Friday, September 28, 2018

650 கன்னி பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த பெண்

உலக வரலாற்றில் கொடுங்கோலர்களுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. நமக்கு தெரிந்த்தவர்கள் எல்லாம் ஹிட்லர், இடியமின், முசோலினி, செங்கிஸ்க்கான் போன்ற சிலர் மட்டுமே. ஆனால் இவர்களை விடவும் அவர்களை விட அதிக கொடுமைகள் புரிந்த பல கொடுங்கோலர்களும் வரலாற்றில் இருக்கத்தான் செய்கின்றனர். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இதுபோன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். 


ராஜகுடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்களும் பல கொடுஞ்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பணம் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது இப்பொழுது மட்டுமல்ல கடந்த காலத்திலும் இருந்திருக்கிறது. 650 இளம் பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த ஒரு அரக்க பெண்ணை பற்றித்தான் இந்த பதிவில் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். 

எலிசபெத் பத்தோரி 16 ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் ஹங்கேரியில் வாழ்ந்தவர்தான் இந்த எலிசபெத் பத்தோரி. கின்னஸ் புத்தகத்தின் படி இன்றுவரை உலகின் அதிக கொலை செய்த பெண் என்னும் பெயர் இவருக்குத்தான் உள்ளது. இவர் கிட்டத்தட்ட 650 பெண்களை கொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது. ட்ராகுலா என்னும் கற்பனை கதாபாத்திரத்தை போல பெண்களின் இரத்தத்தில் குளித்தால் இளமையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கலாமென நினைத்து பெண்களை சித்திரவதை செய்து அதில் மகிழ்ச்சி அடைந்த அரக்கிதான் எலிசபெத் பத்தோரி . 

குழந்தை பருவம் 
குழந்தை பருவம் முதலே எலிசபெத் கொடூரமான காட்சிகளை பார்த்தபடியே வளர்ந்தார். அவரும் பல கொடூர சம்பவங்களில் ஈடுபட்டார். ஆனால் அதற்காக அவர் என்றும் தண்டிக்கப்பட்டதே இல்லை. மேலும் சிறுவயதிலேயே பல கொடுமைகளையும் அனுபவித்தார் எலிசபெத். ஒரு குதிரையின் வயிற்றை கிழித்து அதற்குள் ஒரு குற்றவாளியை வைத்து தைத்து குதிரையும், குற்றவாளியும் இறக்கும் வரை அந்த காட்சிகளை அனைவரும் பார்ப்பார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் எலிசபெத்தின் குழந்தைப்பருவத்தில் நடந்தது. 13 வயதில் குழந்தை தன் காதலன் மூலம் 

13 வயதிலேயே 

குழந்தை பெற்றுக்கொண்ட எலிசபெத் 15 வயதை அடைவதற்கு முன்பே பெரேக் நடாஸ்டி என்னும் இளவரசனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். தன் மனைவியின் கடந்த காலத்தை அறிந்து கொண்ட பெரேக் அவரை கொடுமைப்படுத்தினார். மேலும் தன்னிடம் இருந்த கைதிகளையும் சித்திரவதை செய்தார். அவர்களின் விரல்களுக்கு இடையே காகிதத்தை வைத்து அதில் நெருப்புவைத்து அதை பார்த்து மகிழ்ச்சி அடையும் கொடூரனாக பேரெக் இருந்தான். 


கன்னி பெண்களின் இரத்தத்தில் குளியல் 

கொலைகள் செய்ய ஆர்மபித்த காலத்தில் எலிசபெத் தன்னிடம் சிக்கும் பெண்களை கடித்து அவர்களின் இரத்தத்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவருக்கு மிகவும் பிடித்த டிராகுலா கதாபாத்திரம்தான். கொலைகார வாழ்க்கை தொடங்கிய பின் கன்னி பெண்களை சித்திரவதை செய்து அதை கண்டு மகிழ்ச்சி அடையவும், அவர்களின் இரத்தத்தில் குளிக்கும் பழக்கத்தையும் கொண்டார் எலிசபெத். இதனால் தான் எப்பொழுதும் இளமையாக இருக்கலாம் என்று நம்பினார். இது உண்மையா என்ற சந்தேகம் பலருக்கும் இன்றும் இருக்கிறது.   

பெண்களை உறைய வைத்தல், நெருப்பு மூட்டுதல் 

கொடூரமான ஒருவனை திருமணம் செய்துகொண்ட பின் எலிசபெத் சித்திரவதை செய்வதில் பல புதிய முறைகளை அறிந்துகொண்டார். பெண்களை கூண்டில் அடைத்து அவர்களை பனிக்கட்டியில் வீசி அவர்கள் உறைந்து இறக்கும் வரை பார்த்து ரசித்தார். அதேபோல தன் பணிப்பெண்கள் கைகளில் நெருப்பு வைத்தல், அவர்களின் முகத்தில் நெருப்பு பந்தை எறிதல் போன்ற கொடூர செயல்களின் மூலம் எல்லையற்ற ஆனந்தம் அடைந்ததாக வரலாறு கூறுகிறது. 

தேனீக்களை வைத்து சித்திரவதை 

தன் கணவரின் அறிவுரைப்படி பெண்களின் மீது தேனை ஊற்றி அவர்களை தேனீக்கள் மற்றும் மற்ற பூச்சிகளை விட்டு கடிக்கவைத்தார். இரண்டு கொடூரர்களும் இணைந்து பல கொடுமைகளை செய்தனர். போர் முனையில் இருக்கும்போது கூட பேரெக் தவிர்ந்த தன் மனைவிக்கு எப்படி கொடுமை செய்வது என்று கடிதம் எழுதுவானாம் . 

நரமாமிசம் 

எலிசபெத் செய்த் கொடுமைகள் மற்றும் சித்திரவதைகளை முழுமையாக கூற இயலாது. ஏனெனில் அதில் அவ்வளவு கொடூரமும், வக்கிரமும் இருந்தது. அவரின் சித்தர்வதைகளில் முக்கியமான ஒன்று நரமாமிசம் தின்னும்படி கைதிகளை கொடுமை செய்தது. 

கணவரின் மறைவு 

தன் கணவரின் அறிவுரைகளையும் தாண்டி எலிசபெத் தானாகவே பல சித்திரவதை முறைகளை கண்டறிந்தார். அவற்றையெல்லாம் தன் பணிப்பெண்கள் மீது பரிசோதிப்பார். அவரின் பணியாட்கள் யாரும் கோட்டையிலிருந்து தம்பிக்காத வண்ணம் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. மேலும் இரவு நேரத்தில் அவர்கள் அனைவரும் கட்டிவைக்கப்படுவார்கள். 1604 ஆம் ஆண்டு கணவரின் மரணத்திற்கு பிறகு எலிசபெத் மிகவும் மோசமாக மாறினார். பெண்களை ஊசியை வைத்து குத்துவது, அவர்களின் மார்பங்களை வெட்டுவது போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட தொடங்கினார். 

பிளட் கவுன்டஸ் 

எலிசபெத் ' பிளட் கவுன்டஸ் ' என்ற புனைபெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். பெயருக்கேற்றாற்போல் எலிசபெத்திற்கு காமத்திலும் அதிக நாட்டம் இருந்தது. தன் காதலன், கணவன் மட்டுமின்றி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார். படுக்கையில் ஆண்களை வெற்றிகொள்வதே பெருமை என்ற நினைப்பில் வாழ்ந்து வந்தார். 

சித்திரவதை தொடர்ச்சி 

தன் கணவர் இறந்த பல ஆண்டுகளுக்கு பின்னரும் எலிசபெத் தன் சித்ரவதைகளை தொடர்ந்தார். தன் அரண்மனைக்கு வேலைக்கு வரும் பெண்களை தொடர்ந்து சித்திரவதை செய்து கொன்றுகொண்டிருந்தார். இதனை அறிந்த ஊர்மக்கள் தங்கள் மகள்களை கோட்டைக்கு அனுப்புவதை நிறுத்தினர். மேலும் மக்கள் எலிசபெத்திற்கு எதிராக போராட்டம் செய்யவும் தொடங்கினர். தன்னை புகழ்ந்து பாடாத ஒரு புகழ்பெற்ற பாடகியை எலிசபெத் கோட்டைக்கு வரவைத்து கொன்றுவிட்டார். இந்த செய்து காட்டுத்தீ போல பரவியது. 

மன்னருக்கு தெரிய வருதல் 

மக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து எலிசபெத்தின் கொலைகள் குறித்து ஹங்கேரியின் மன்னருக்கு தெரிய வந்தது. இருப்பினும் அவரின் பணபலத்தை நினைத்து அஞ்சிய அரசர் எலிசபெத்தை விசாரிக்க ஒருவரை அரசாங்கம் சார்பாக நியமித்தார். எலிசபெத் இப்பொழுது ஒரு விதவையாக இருப்பதால் இப்பொழுது அவருக்கு மரண தண்டனை வழங்கினால் அவரின் செல்வம் யாவும் அரசாங்கத்திற்கு வந்துவிடும், அதை வைத்து அரசாங்கத்தின் கடன்களை அடைந்துவிடலாம் என்று எண்ணினார்கள். துர்சோ பத்தோரி என்பவர் எலிசபெத்தை காப்பாற்ற எண்ணினார். அதன் விளைவாக எலிசபெத் விசாரணையிலிருந்து தப்பினார் ஆனால் அவரின் கூட்டாளிகள் மாட்டிக்கொண்டனர்.


எலிசபெத்தின் மறைவு 

1610 ல் துர்சோ எலிசபெத்திற்கு எதிரான ஆதாரங்களை திரட்ட தொடங்கினார். அவரின் கோட்டைக்குள் இருந்து பல அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டறியப்பட்டது. அதன்பின் விசாரணை வேகமாக தொடங்கியது. எலிசபெத் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, அதற்கு பதிலாக அவரின் கூட்டாளிகள் குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி சித்திரவதை செய்யப்பட்டனர். எலிசபெத்தின் குற்றங்கள் மறுக்கப்பட்டது. இறுதியாக எலிசபெத்திற்கு மரண தண்டனை வழங்காமல் ஸ்லோவாக்கியாவில் இருந்த அவரது குடும்ப அரண்மனையில் சிறைவைக்கப்பட்டார். அதன்பின் மூன்று ஆண்டுகள் மட்டுமே எலிசபெத் உயிர்வாழ்ந்தார். 1614ல் அவர் உயிர் பிரிந்தது. 

கோட்டை 

எலிசபெத் மொத்தம் எத்தனை பேரை கொன்றார் என்பது இன்றும் பலருக்கும் தெரியாத ஒன்று. அவர் வாழ்ந்த, மணம் முடித்த, மற்றும் சிறைவைக்கப்ட்டு இறந்த கோட்டை இன்றும் ஸ்லோவாக்கியாவில் இருக்கிறது. வரலாற்றின் மிகப்பெரிய தொடர் கொலைகாரியான எலிசபெத் பத்தோரியின் வாழ்க்கை அனைவரையும் மிரளவைக்கும் ஒன்றாகும்.

Thursday, September 27, 2018

தேனிலவுக்கு சென்று வரும் நண்டுகள்

தேனிலவுக்கு சென்று வரும் நண்டுகள்


கிறிஸ்மஸ் தீவு  (Christmas island)  என்பது இந்துச் சமுத்திரத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு குட்டித் தீவாகும். இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்பவர்களைத் தடுத்துவைப்பது இந்த கிறிஸ்மஸ் தீவில்தான் என்பதால் ஈழ தமிழர்களுக்கு  இத்தீவு அறிமுகமாகியிருக்கும். சுமார்  135 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட  இத்தீவின் சனத்தொகை 2000 இற்கும் குறைவு. மொத்த நிலப்பரப்பில் 88 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை கிறிஸ்மஸ் தீவு, தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தியுள்ளது. இத்தீவின் மிகப் பிரதானமான அம்சம் அங்குவாழும் ஒரு வகை கோடிக்கணக்கான சிவப்பு நண்டுகள்தான். இதனால் இன்று இத்தீவு சிறந்ததொரு சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது.

கிறிஸ்மஸ் தீவில் 45 கோடி சிவப்பு நண்டுகள் இருப்பதாகவும் அதிலும் 14 வேறுபட்ட இனங்கள் இருப்பதாகவும் அவுஸ்ரேலிய தேசியப் பூங்காப் பாதுகாப்பு மையம் மதிப்பிட்டு தகவல் வெளியிட்டுள்ளது. இவை தோற்றத்தில் சிவப்பு நிறத்தில் உள்ளதால் ஏனைய நண்டுகளை விடவும் மிக அழகாகக் காட்சியளிக்கின்றன. அழகுறக் காட்சியளித்தாலும் அவற்றின் உடலமைப்பு  கொஞ்சம் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.

 பொதுவாகவே நண்டுகளுக்கு தலை, கழுத்து எல்லாம் வட்ட வடிவிலான ஒரு உடல் பகுதியில்தான் இருக்கும். நண்டுகள் எப்போதும் இடம் வலமாகவே பயணிக்கும். ஆனால் அவற்றின் பார்வை முன்னோக்கி இருந்தாலும் 180 பாகையில் அவை தம் கண்களை சுழற்றிப் பார்க்கும்.

இத்தீவில் உள்ள சிவப்பு நண்டுகளை ஏனைய காலங்களில் பார்ப்பது அரிதாகவே இருக்கும். ஆனால் அக்டோபர் நவம்பர் மாதம் ஆகும் பொழுது கோடிக்கணக்கான நண்டுகள் திடீரென அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இருந்து கடற்கரையை நோக்கி வெளியேற ஆரம்பிக்கின்றன. இது ஒவ்வொரு வருடமும் தொடராக நடைபெற்று வரும் ஒரு விடயம். சிவப்பு நண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது இனப்பெருக்க காலத்தில் காடுகளில் இருந்து கடற்கரை நோக்கி புலம் பெயர்கின்றன.  பாதைகள், நகரங்கள், வீடுகள், கட்டிடங்கள் என எல்லாப் பகுதிகளுடாகவும் இவை நுழைந்து கடற்கரைக்கு விரைகின்றன. இக்காலங்களில் எங்குபார்த்தாலும் சிவப்பு நண்டுகளைக் காணலாம். மிக அழகாக இவற்றின் பயணம் இருக்கும்.

இவற்றால் மனிதர்களுக்கு உயிர் தீங்குகள் ஒன்றும் ஏற்படுவதில்லை. என்றாலும் இவை ஒரேயடியாக மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குப் படையெடுப்பதால் போக்குவரத்து, விவசாயம் என்பன பாதிக்கப்படுகின்றன. வாகனங்களில் பயணிக்கும்போது இவை அதிகமாக இறப்புக்குள்ளாவதால் தேசிய புங்கா அமைப்பினர் சிவப்பு நண்டுகள் அதிகமாகப் பயணிக்கும் பகுதிகளில் வாகனங்கள் ஓட்டுவதை தடைசெய்கின்றது.  சாரைசாரையாக சிவப்பு நண்டுகள் வெள்ளம்போல் வரும் காட்சியைப் பார்க்க இக்காலங்களில் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்கின்றனர்.

இவ்வாறு கடற் கரையைச் சென்றடையும் நண்டுகள் அங்கு 8 அல்லது 10 வாரங்கள் தங்குகின்றன. தமக்கான உணவையும் அங்கு அவை பெற்றுக்கொள்கின்றன. அத்தோடு ஆண் நண்டுகளும் பெண் நண்டுகளும் இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. அதன்பின் சில வாரங்களில் உருவாகும் முட்டைகளை பெண் நண்டுகள் அவற்றின் முன் கைகள் இரண்டையும் மேலே உயர்த்தியவாறு கடலை நோக்கி நின்றுகொண்டு தம்மை வந்து தாக்கும் அலைகளில் முட்டைகளை விட்டுவிடுகின்றன. அவை கடற்கரையில் உள்ள பாறைகளில் ஒட்டிக்கொண்டு சில நாட்களின் பின்னர் குஞ்சு நண்டுகள் வெளியேறுகின்றன

சிவப்பு நண்டுகளின் இணப் பெருக்கத்திற்கும் முட்டையிலிருந்து குஞ்சுகள் வருவதற்கும் ஏதுவான இடம் கடற்கரை என்பதையும் பொருத்தமான காலம் நவம்பர், டிசம்பர் காலங்கள் தான் என்பதையும் சரியாக அறிந்து அவை செயலாற்றுகின்றன.

முட்டை பொறிந்து குஞ்சு நண்டுகள் வெளியே வந்ததும் அவை செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஓரிறு நாட்களில் மீண்டும் குஞ்சுகளுடன் பெரிய நண்டுகளும் டிசம்பர் முடிவு ஜனவரி ஆரம்பப் பகுதிகளில் காட்டுப்பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும். இதற்கிடையில் ஆயிரக் கணக்கான நண்டுகள்  மோட்டார் வாகனங்களில் நசுங்கியும் ஒரு வகை எறும்பு, மற்றும் பறவைகளுக்கு உணவாகியும் இறந்துவிடும். இவ் இறப்பானது சமநிலைத் தன்மையைப் பேணுகின்றது. ஒரு பரம்பரை இறந்து புதிய பரம்பரைக்கு இடமளிக்கும் அற்புத செயல் இங்கு நிகழ்கின்றது.

Wednesday, July 25, 2018

லண்டன் தேம்ஸ் பாலத்தைப் போன்ற கட்டப்பட்ட தாமிரபரணி ஆற்று பாலத்தின் வரலாறு

இந்த 174 வயது பாலத்துக்கு பின்னால்.... மறக்கப்பட்ட தமிழனின் வரலாறு ! 


'உங்கள் ஊரில் ஒரு பாலம் கட்டப்படுகிறது. அதற்கு சில நூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படுகிறது' என வைத்துக்கொள்ளுங்கள். உடனே உங்கள் மனதில் என்ன தோன்றும்?. பாலத்தால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளைப்போலவே, 'இதுல எவ்வளவு கமிஷன் அடிச்சாங்களோ?' என்றும் தோன்றும் இல்லையா?. அது தான் தான் இன்றைய நிலை. இதற்கும் இந்த பாலங்கள் நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் கட்டப்படுபவை. நம் பணத்தில் இருந்து நமக்கு பாலம் கட்ட கமிஷன் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் திருநெல்வேலியில் மக்களிடம் பணம் கேட்கக்கூடாது என நினைத்து, தன் சொத்துக்களை எல்லாம் விற்று பாலம் கட்டி கொடுத்திருக்கிறார் ஒரு மனிதர். 174 ஆண்டுகளாக இன்னும் மக்கள் பயன்பாட்டில் இருந்த அந்த பாலம், திருநெல்வேலிக்கு புகழ் சேர்க்கும் சரித்திரத்தோடு, அந்த மாமனிதர் பெயரையும் சொல்லி வருகிறது. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற பாலங்களில் நிச்சயம் இதற்கு முக்கிய இடம் உண்டும். திருநெல்வேலியில் உள்ள சுலோச்சன முதலியார் பாலம் தான் அது.
பாலமில்லாததால் அவதி...
‘ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்’ என்பார்கள். ஆனால், நெல்லையை சேர்ந்த சுலோச்சன முதலியார் தனது சொத்துக்களை எல்லாம் விற்று தாமிரபரணி ஆற்றில் போட்டு இருக்கிறார். அதன் மூலமாக அங்கே ஒரு பாலத்தை உருவாக்கி மக்களின் போக்குவரத்துக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார் அந்த மனிதர். இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர் செய்த இந்த நற்காரியம், பல தலைமுறைகள் கடந்தும் அவரின் புகழைச் சுமந்து நிற்கிறது. அது தான் ‘சுலோச்சன முதலியார் பாலம்’
இரட்டை நகரங்களான நெல்லையையும், பாளையங்கோட்டையும் பிரித்து இடையில் ஓடுகிறது தாமிரபரணி ஆறு. வற்றாத ஜீவநதி என வர்ணிக்கப்படும் தாமிரபரணியில், முன்பு ஏப்ரல், மே மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பரிசல் மூலமாகவே ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை. பரிசல் பயணத்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால், வசதியானவர்கள் மட்டுமே பத்திரமாக ஆற்றைக் கடக்க முடியும். மற்றவர்கள் நீந்தியே ஆற்றைக் கடந்தனர். வயதானவர்கள், குழந்தைகள் ஆற்றைக் கடக்கும்போது, தண்ணீரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடிக்கடி உயிர்ப்பலிகளும் நிகழ்ந்தன.
நெல்லை டவுனில் மட்டுமே வணிக நிறுவனங்கள் செயல்பட்டதால், படகுத்துறை மூலமாகவே உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதற்காக படகுத்துறையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். படகில் முதலில் இடம் பிடிக்க லஞ்சம் கொடுக்கும் நிலையையும் இது ஏற்படுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தகராறுகள் ஒரு புறமும், மறுபுறம் சமூக விரோதிகளால் கொள்ளை சம்பவங்களும் நடக்க... படகுத்துறை எப்போதும் குழப்பமான சூழலிலேயே காட்சியளித்தது.
பாலம் கட்ட கோரிக்கை : நிராகரித்த ஆங்கிலேய அரசு
"இப்பிரச்னைக்கு தீர்வு காண திருநெல்வேலி, பாளையங்கோட்டையை இணைக்கும் பாலம் கட்ட வேண்டும். அது அவசரமானதும், அவசியமானதும் கூட" என 1836-ம் ஆண்டு அப்போது நாட்டை ஆண்ட ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஆர்.ஈடன் கடிதம் ஒன்றை எழுதினார்.
ஆங்கிலேயர்கள் வளர்ச்சி திட்டங்களை தங்களின் வசதிக்காக மட்டுமே செய்து கொண்டனர். தங்களுக்கு பயன்படாத எந்த திட்டங்களையும் அவர்கள் செய்யவில்லை. அதனால் அந்த திட்டத்தைக் கிடப்பில் போட்டது. இந்நிலையில், நான்கு வருடங்களுக்குப் பிறகு 1840 மார்ச் 5-ம் தேதி நெல்லை ஜில்லா கலெக்டராக பொறுப்பேற்றார் ஈ.பி.தாம்சன். அவர் பொறுப்பேற்ற ஐந்து நாட்களில் குறுக்குத்துறை படகுத்துறையில் பெரிய கலவரம் வெடித்தது. அங்கு நடந்த வன்முறையில் சிலர் கொல்லப்பட்டனர்.
இது கலெக்டர் தாம்சனை பாதித்தது. படகுத்துறை பகுதியில் ஒரு மேம்பாலம் இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது என நினைத்தார். உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் தாசில்தார் அந்தஸ்துக்கு நிகரான சிரஸ்தார் பொறுப்பில் இருந்த சுலோச்சன முதலியாரும் கலந்து கொண்டார். படகுத்துறையில் நடக்கும் கலவரம் மற்றும் குழப்பங்களைக் கட்டுப்படுத்த உடனடியாக பாலம் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
லண்டன் பாலத்தின் தோற்றத்தில் புதிய பாலம்
இதற்கான பொறுப்பு கேப்டன் ஃபேபரிடம் ஒப்படைக்கப்பட்டது.  760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டத்தில் 11 ஆர்ச்சுகள், அவற்றை தாங்க இரட்டை தூண்களுடன்  பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டது. அந்த தூண்கள் ரோமானிய அரண்மனையை நினைவூட்டியது. லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் இந்த வரைபடம் இருந்ததால், கலெக்டர் தாம்சனுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால், அதில் ஒரு சிக்கல்.. இந்த பாலத்துக்கான திட்ட மதிப்பீடு அரை லட்சம்!  அப்போது 50 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.
மக்களுக்காக கட்டப்படும் பாலம் என்பதால் மக்களிடம் வசூலித்து பணத்தை திரட்டலாம் என்றார் கலெக்டர் தாம்சன்.  பணத்தை வசூல் செய்யும் பொறுப்பு சுலோச்சன முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களிடம் பணத்தை பெற்றா இதை செய்வது என யோசித்தார். மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களுக்கு மக்களிடமே பணம் பெறுவதா என்பதாக இருந்தது அவரது சிந்தனை.

பொன், பொருளை விற்று பாலம் கட்டினார்
இது தொடர்பாக மனைவி வடிவாம்பாளிடம் ஆலோசித்தார். நாமே இந்த பாலத்தை கட்டிக்கொடுத்தால் என்ன என மனைவியிடம் கேட்டார் சுலோச்சன முதலியார். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல், தன்னிடம் இருந்த நகைகளை எல்லாம் கொடுத்தார். வீட்டில் இருந்த பணம், நகைகளை எல்லாம் கொடுத்து பாலப்பணிகளை துவங்கச் சொன்னார் சுலோச்சனா முதலியார், உடனடியாக பணிகளை தொடங்கச் சொன்னார். மூன்று வருடமாக கட்டப்பட்ட இந்த பாலத்தின் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.
இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பேசினோம். "இந்தப் பாலத்தை கட்ட தனிநபராக உதவிய சுலோச்சன முதலியாரை வெள்ளைய அரசு சிறப்பாக கௌரவித்து உள்ளது. திறப்பு விழாவின்போது யானை முன்னே நடந்து செல்ல அதன் பின்னால் மேளதாளம் முழங்க முதல் ஆளாக சுலோச்சன முதலியார் அந்தப் பாலத்தில் நடந்து சென்றுள்ளார். அவருக்கு பின்னால், பாலத்தை கட்டிய கேப்டன் ஃபேபர், பொறியாளர் டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே ஆகியோர் சென்றுள்ளனர். அதன் பிறகே கலெக்டர் சென்றுள்ளார். அவர்களுக்கு பின்னரே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து சென்று இருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்கள் அளித்த கவுரவம்...
அத்துடன், சுலோச்சன முதலியாரை பாராட்டும் வகையில் அந்த பாலம் தொடங்கும் இடத்தில் 20 அடி உயத்தில் கோபுரம் அமைக்கப்பட்டு அதில் ஒரு மீட்டர் அகலம் கொண்ட கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. ஒரு பக்கத்தில் தமிழும் மறு பக்கத்தில் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது. அந்த பாலத்தை கட்டுவதற்கு சுலோச்சன முதலியார் உதவி செய்ததை குறிப்பிட்டு ஆங்கிலேயர்கள் அந்த கல்வெட்டை பதித்து இருந்தார்கள். 1970 வரையிலும் அந்த கல்வெட்டு இருந்தது.
இடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலம் பழுதடைந்தது. பின்னர், வாகன நெருக்கடி காரணமாக இந்தப் பாலத்தை உடைத்து விட்டு, அருகிலேயே அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் உள்ள தூண்கள் உடைக்கவே முடியாதபடி மிகவும் உறுதியாக இருந்தன. பாலத்தை உடைப்பது இயலாத காரியம் என்பதால் அதே பாலத்தை அகலப்படுத்தினார்கள். அப்படி செய்யும்போது அங்கிருந்த கற்கோபுரத்தை தகர்த்து விட்டார்கள். அதில் இருந்த கல்வெட்டையும் எடுத்து வீசிவிட்டார்கள். ஆங்கிலேய அரசு தமிழனுக்கு செலுத்திய மரியாதையை நாம் மறந்து போனது இப்படித்தான்," என்றார்.
சுலோச்சன முதலியாரின் வாரிசுகள் இப்போதும் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணம் என்ற ஊரில் வசிக்கிறார்கள். தங்கள் மூதாதையர் சேர்த்த சொத்துக்களை பாலத்தில் போட்டு விட்டதாலோ என்னவோ வறுமையில் வாடுகிறார்கள். சுலோச்சன முதலியாரின் 6-ம் தலைமுறை வாரிசான அருணாச்சல முதலியார் என்பவர் அங்கு மருந்துக்கடை நடத்தி வருகிறார். ஆங்கிலேய அரசாங்கம் சுலோச்சன முதலியாரின் தியாகத்தை பாராட்டி வழங்கிய செப்புப் பட்டயம்,  ஆங்கிலேய அரசு அவருக்கு நன்றி தெரிவித்து எழுதப்பட்ட வாழ்த்துப் பத்திரமும் அவரிடம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
யார் இந்த சுலோச்சன முதலியார்?
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமணம் என்கிற குக்கிராமத்தில், செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர், சுலோச்சன முதலியார். அவரது மூதாதையர்கள் ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள். தந்தை ராமலிங்க முதலியார் காலத்தில் குடும்பம் நெல்லைக்கு குடிபெயர்ந்தது. அவரது தந்தை, ஆங்கிலேயரான பானர்மேனிடம் (கட்டபொம்மனின் வழக்கை விசாரித்தவர்) மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர்.
சுலோச்சன முதலியார் செல்வச்செழிப்பில் இருந்ததால் கவுரவத்துக்காகவே கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். கலெக்டருக்கு இணையாக குதிரை பூட்டிய கோட்ச் வண்டியில் தினமும் அவர் அலுவலகத்துக்கு செல்வார். கறுப்பு கோட்டு, தலைப்பாகை, அங்கவஸ்திரம், வைரக்கடுக்கண் அணிந்து அவர் அலுவலகத்துக்கு செல்வார் என்கிறார்கள். தான் மட்டும் அல்லாமல் தனது குடும்பத்தினர் சம்பாதித்த பணம் முழுவதையும் செலவு செய்துதான் இந்த பாலத்தை கட்டினார் சுலோச்சன முதலியார்.
கடந்த சில வருடங்களாக எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் இந்த பாலம் திறக்கப்பட்ட தினத்தை கொண்டாடி வருகிறார்கள். அதன்படி 174 ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது இந்த பாலம். ஒரு ஊருக்காக, மக்களுக்காக நடந்த தியாகத்தை நினைவு கூறும் வகையில், இந்த நாளை அரசு விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

Tuesday, July 24, 2018

கர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்?

கர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்?


இந்த 4 அணைகளுக்கெல்லம் அப்பன், நம் அரக்கண் #மேட்டூர்அணை ஒன்றே போதும்.. இவைகளை விழுங்க..

1. கபினி அணையின் கொள்ளளவு 15.67 டிஎம்சி..
கபினி அணை

2. ஹேமாவதி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 35.76 டிஎம்சி..
ஹேமாவதி அணை 

3.ஹேரங்கி அணையின் கொள்ளளவு 8.07 டிஎம்சி...
ஹேரங்கி அணை

4. கிருஷ்ண ராஜசாகர் அணையின் கொள்ளளவு 45.05 டிம்சி..
கிருஷ்ண ராஜசாகர் அணை

-என ஆக மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீர்...

இவ்வளவு தண்ணிரையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டால் கூட (திறக்க வாய்பில்லை என்பது வேறு)

நம்ம மேட்டூர் நீர் தேக்கத்தால் 93.4 டிஎம்சி. நீரை, அதாவது 90 விழுக்காடு தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.

அதாவது ஒரு #TMC தண்ணீர் என்பது 'One Thousand Million Cubic Feet' அதாவது 100,00,00,00. எளிமையாக சொன்னால் 100 கோடி கன அடி நீர்..

ஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2,830 கோடி லிட்டர்.

அதாவது ஒரு #டிஎம்சி தண்ணீரை #பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து, லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றான் என்றால்..

56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை விற்று ஆட்டய போடலாம்..

அடுத்தது அணைகளின் கொள்ளளவை பார்த்தோமெனறால்..

கர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி.
அதன் தண்ணீர் கொள்ளளவு 45.05 டிஎம்சி-மட்டுமே.

#மேட்டூர்_அணை-யின் உயரமோ 120 அடி. ஆனால் அதன் கொள்ளளவோ 93.4 டிஎம்சி..

அதாவது கிருஷ்ண ராஜசாகர் அணையை காட்டிலும், நம்ம மேட்டூர் அணை இரண்டு மடங்கு கொள்ளவு உடையது...

மேட்டூரைப்போலவே 120 அடி உயரம் கொண்டது #பவானிசாகர்_அணை.

ஆனால் இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.. மூன்று பவானி சாகர்களை மேட்டூரில் வைக்கலாம்..

நம்ம #சாத்தனூர்_அணை 119 அடி உயரம். ஆனா கொள்ளளவு வெறும் 7.3 டிஎம்சி.

நிலைமை இப்படியிருக்க,

'இத்தனை அடி தண்ணீர் ஏறியது, அத்தனை அடி ஏறுகிறது'

-என்று அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பத்தில் முழு பொருள் உள்ளதா?

நமது மேட்டூர் அணைக்கே வருவோம்.

அதில் 50' அடிக்கு தண்ணீர் இருந்தால் 18 டிஎம்சி..

75' அடியை தொட்டால் 37 டிஎம்சி..

100' அடி என்று சொல்வார்களே, அதைத்தொட்டாலே 60 டிஎம்சி தான் நீர் இருக்கும்..

ஆனால் அடுத்த 20 அடியை தொட 33 டிஎம்சி தண்ணீர் வேண்டும்.

அதாவது மேட்டூர் அணை 100-லிருந்து முழுமையான 120 அடிக்கு போக, ஒரு பவானி சாகர் அணைக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் தேவை.

அணை குறித்த செய்தி என்றால், எளியோருக்கும் புரிகிற மாதிரி இருக்க வேண்டும் அல்லவா?

'எவ்வளவு நீர் வருகிறது, எவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது' என்பதோடு..

'அணையின் கொள்ளவு, நீர் எத்தனை விழுக்காடு இருக்கிறது' என்று சொன்னால் எளிதில் புரிந்துவிடும்.

இன்று காலை (ஜூலை 17) பத்து மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94'.….

நீர் இருப்பு 54 டிஎம்சி… மொத்த கொள்ளளவில் இது 57-விழுக்காடு...

அதாவது மேட்டூர் அணை பாதிதான் நிரம்பியுள்ளது..

‘’120' அடியில் 100' அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர் மட்டம்’’ என்றால் அது பரபரப்பு..

100' தொட்டாலும் அணை பாதிதான் நிரம்பியுள்ளது என்பது பரபரப்பில்லாத உண்மை.. அவ்வளவே...

#Thats_all_your_honour..

(இந்த பதிவு மூத்த ஊடகவியலாளர் திரு.ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் கட்டுரையில் வெளியான புள்ளி விபரங்களின் அடிப்படையில்
தொகுக்கப்பட்டது. அவருக்கு நமது நன்றி)

Thursday, May 10, 2018

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் A380 பயணிகள் விமானம் பற்றிய தகவல்கள்!

உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் A380 பயணிகள் விமானம் பற்றிய தகவல்கள்!

ஏர்பஸ் A380 

அதிவேக விமானமாக வலம் வந்த கன்கார்டு விமானத்தை போலவே, உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 விமானத்தின் வரலாறும் ஆகிவிடும் போலிருக்கிறது. இயக்குதல் செலவு மிக அதிகமாக இருப்பதும், இதன் பிரம்மாண்ட உருவம் அனைத்து விமான நிலையங்களிலும் தரையிறக்குவதற்கான நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பதும் இதற்கு பாதகமாக அமைந்துவிட்டன. ஆனாலும், விமான தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய மாடலாகவே கருதப்படுகிறது ஏர்பஸ் ஏ380. இந்த இரண்டடுக்கு விமானத்தில் பறப்பதை பலரும் கனவாக கொண்டுள்ளனர்.

 ஏர்பஸ் ஏ380 விமானம் 72.7 மீட்டர் நீளமும், 80 மீட்டர் அகலமும், 24.1 மீட்டர் உயரமும் கொண்டது. அதாவது, இரண்டு அடுக்குமாடி கட்டடத்திற்கு சக்கரத்தை பூட்டி நகர்த்துவது போலத்தான் இதன் உருவம் மிக பிரம்மாண்டமானது.

இந்த விமானத்தில் அதிகபட்சமாக 525 பயணிகளையும், 3000 சூட்கேஸ்களையும் எடுத்துச் செல்ல முடியும். சாதாரண வகுப்பு இருக்கைகளாகவே அமைத்தால், 850 பயணிகள் செல்ல முடியும். அதாவது, ஒரு பிரம்மாண்ட கல்யாண மண்டபத்தை போல உட்பகுதியில் பயணிகள் அமர்ந்திருப்பர். இரண்டடுக்கு விமானமாக கட்டமைப்பு கொண்டது. மேல் அடுக்கில் பிசினஸ் கிளாஸ் மற்றும் முதல் வகுப்பு அறைகளும், கீழ் அடுக்கில் சாதாரண எக்கனாமி கிளாஸ் இருக்கைகளும் இருக்கின்றன.

பிற விமானங்களை காட்டிலும் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கால் வைப்பதற்கான கூடுதல் இடவசதி கொண்டுள்ளது. நீண்ட தூர பயணங்களை இனிமையாக்கும் விதத்தில் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. முதல் வகுப்பில் எல்சிடி டிவி திரைகளும், சாதாரண வகுப்பில் ஒவ்வொரு இருக்கைக்கும் 10 இன்ச் திரைகளும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த விமானத்திற்கான இறக்கைகள் இங்கிலாந்திலும், உடல்கூடு மற்றும் வால் பகுதிகள் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியிலும் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பிரான்ஸ் கொண்டு வரப்பட்டு, அங்குள்ள ஏர்பஸ் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இந்த பிரம்மாண்ட விமானத்தை இயக்குவதற்கு 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ரோல்ஸ்ரா்ஸ் டிரென்ட் 900 மற்றும் பிராட் அண்ட் ஒயிட்னி அலையன்ஸ் ஜிபி7000 ஆகிய இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களை வாடிக்கை நிறுவனங்கள் தேர்வு செய்து வாங்க முடியும்.

ஒரு எஞ்சின் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் சொகுசு கார் அளவுக்கு நீளமானது. இந்த விமானத்தின் மைலேஜும் சிறப்பானதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு பயணி 100 கிமீ தூரம் பயணிப்பதற்கு 4.05 லிட்டர் எரிபொருள் செலவாகும். அதாவது, 525 பயணிகள் செல்லும் வசதி கொண்ட மாடலில்தான் இந்த கணக்கீடு. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 15,000 கிமீ தூரம் பயணிக்கும். இந்த விமானத்தில் 3.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 எரிபொருள் டேங்க்குகள் உள்ளன. வெறும் 40 நிமிடங்களில் எரிபொருள் நிரப்பி விட முடியும். பெரிய ரக பயணிகள் விமானங்களை ஒப்பிடும்போது இது மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான புகையையும் வெளியிடும்.

இந்த விமானத்தில் 5 உணவகங்கள் உள்ளன. 21 பணியாளர்கள் மூலமாக பயணிகள் சேவை கவனிக்கப்படுகிறது. பணியாளர்களுக்கான படுக்கை வசதியும் இந்த விமானத்தில் உள்ளது. இந்த விமானம் அதிகபட்சமாக 43,000 அடி உயரம் வரை பறக்கும். மணிக்கு 1,029 கிமீ வேகம் வரை செல்லும். சீராக செல்லும்போது 903 கிமீ வேகத்தில் பறக்கும். தரையிறங்கும்போது 240 கிமீ வேகத்தில் ஓடுபாதையில் இறங்கும். நிமிடத்திற்கு 4,500 அடி மேல் எழும்பும் திறன் கொண்டது. இந்த விமானத்தின் மூன்று முக்கிய உடல்பாகங்களை இணைப்பதற்கு 8,000 போல்ட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 4 மில்லியன் உதிரிபாகங்கள் பல்வேறு நாடுகளிலிருந்து சப்ளை பெறப்படுகிறது. ஏர்பஸ் ஏ380 விமானத்தில் 320 மைல் நீளத்திற்கான மின்சார ஒயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருமுறை வெளிப்புறத்தை பெயிண்ட்டிங் செய்ய வேண்டுமானால் 3,600 லிட்டர் பெயிண்ட் தேவைப்படும்.

இந்த விமானத்தின் பின்புறத்தில் தலா 6 சக்கரங்கள் கொண்ட இரண்டு லேண்டிங் கியர்களும், முன்புறத்தில் இரண்டு சக்கரங்கள் கொண்ட லேண்டிங் கியர் அமைப்பும் உள்ளது. பின்புறத்தில் உள்ள லேண்டிங் கியர்கள் தலா 167 டன் எடையை தாங்கும் திறன் கொண்டவை. இந்த விமானத்தை 60 மீட்டர் அகலமுடைய ஓடுபாதைகளில் இயக்க முடியும். மேலும், இந்த ஓடுபாதைகளில் 180 டிகிரி கோணத்தில் திருப்புவதற்கான வசதியும் உண்டு. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-22 ராப்டர், லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35, டஸ்ஸால்ட் ரஃபேல் போன்ற போர் விமானங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதிநவீன ஏவியோனிக்ஸ் எனப்படும் மின்னணு கட்டுப்பாட்டு வசதியை பெற்றிருக்கும் முதல் வர்த்தக விமான மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

இதனால், பைலட்டுகள் மிக எளிதாக விமானத்தை கட்டுப்படுத்த முடியும். மேலும், வழக்கமான ஏர்பஸ் விமானங்களை போலவே காக்பிட் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, விமானிகளுக்கு விசேஷ பயிற்சி தேவையில்லை. ஏற்கனவே, ஏர்பஸ் விமானங்களை இயக்கும் விமானிகள் இந்த விமானத்தை எளிதாக இயக்க முடியும். ஒரு ஏர்பஸ் ஏ380 விமானம் இந்திய மதிப்பில் ரூ.2,800 கோடி விலை மதிப்பு கொண்டது.