Friday, July 31, 2015

அணு குண்டு சோதனையும் ஒரு முழு வரலாறு .5 (கடைசி பாகம்)!


இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நிறைவேறும்போது நமது அணு ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்கள் IAEAவின் கண்காணிப்பின் கீழ் வரப் போவது என்னமோ நிச்சயம் தான் என்றாலும் அதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பில்லை என்பது இந்தத் துறையில் மூழ்கி முத்தெடுத்த விஞ்ஞானிகளின் கருத்து. 

(இந்தியாவில் உள்ள 22 அணு ஆராய்ச்சி மையங்களில் 14 மட்டுமே IAEA கண்காணிப்புக்கு விடப்படும்.. மிச்சமெல்லமாம் ராணுவ உலைகள். அங்கே அவர்களுக்கு வேலையே இல்லை, உள்ளே அனுமதியும் இல்லை என்கின்றனர்.) 

Hyde Act-டை (இது ஒப்பந்தத்துக்குள் வருமா வராதா என்ற சந்தேகங்கள் தீராவிட்டாலும்..) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த ஒப்பந்தம் நமக்குக் கிடைத்த பெரிய வரப் பிரசாதம் என்கி்ன்றனர் பாதுகாப்பு நிபுணர்கள். நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூட இந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். இந்த ஒப்பந்ததின்படி, நாம் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை முறியடிக்க, தாக்குதலை முன் கூட்டியே தடுக்க (deterrent) இந்த சோதனையை நடத்தலாம். அதற்கான சலுகை ஒப்பந்தத்தின் உள் பிரிவுகளில் தரப்பட்டுள்ளது. நாம் அணு ஆயுத நாடே இல்லை என்று சொன்னவர்கள், NPT-ல் (Non proliferation treaty) கையெழுத்து போட்டே ஆக வேண்டும் என்றவர்கள், 

அணு ஆயுதமே வைத்திருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று நாம் கையெழுத்தெல்லாம் போட வேண்டாம், அணு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம்... கூடவே உங்கள் அணு உலைகளுக்கு எரிபொருளைத் தருகிறோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் விட இந்திய அணு விஞ்ஞானிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் 'Dual use'. இதன்படி நாம் வாங்கும் யுரேனியத்தை வெறும் மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல் அதை ரீ-புராஸஸ் செய்து அப்படியே புளுட்டோனியமாக்கி அதை வைத்து அணு குண்டுகளையும் தயாரித்துக் கொள்ளலாம். 

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மாதிரி, நாம் இத்தனை காலம் தவம் கிடந்ததும் இப்படி ஒரு ஒப்பந்ததுக்குத் தானே என்பது இந்திய அணு விஞ்ஞானிகளின் நிலை. நமது இம்மீடியேட் பிரச்சனை யுரேனியமும் புளுட்டோனியமும்தான். நம் நாட்டில் தோரியம் ரிசர்வ் ஏகத்துக்கும் இருக்கிறது. ஆனால், தோரிய அணு உலைகளை உருவாக்குவதில் நாம் இன்னும் பெரிய அளவில் முன்னேறவில்லை. யுரேனியத்தைக் கொண்டு இயங்குவது Pressurized Heavy Water Reactors. நம்முடைய பெரும்பாலான அணு உலைகள் இந்த ரகம் தான். இதை விட கொஞ்சம் முன்னேறிய டெக்னாலஜி Fast Breeder Reactors. 

இதில் எரிபொருள் புளுட்டோனியம். மூன்றாவதான லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தான் தோரியம் மூலம் இயங்கும் அணு உலைகள். இந்த அணு உலைகளை டிசைன் செய்வதில் தான் இப்போது இந்தியா முழு மூச்சோடு இறங்கியிருக்கிறது. தோரியம் அணு உலைகளை கட்டுவதில், செயலாக்குவதில் நாம் மாஸ்டர் ஆகிவிட்டால், நாமே ஒரு வருட நோட்டீஸ் தந்துவிட்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிடலாம். 

அவ்வளவு தோரியம் இருக்கிறது நம்மிடம். ஆனால், அதுவரை... யுரேனியம், புளுட்டோனியம் தான் ஒரே வழி. அதைப் பெற வேண்டுமானால் Nuclear Supply Group (NSG)ன் கடைக் கண் பார்வை வேண்டும். அந்தப் பார்வையையை வாங்கித் தரப் போகிறது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம். 

மேலும் அணு உலைகள் தொடர்பாக லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை நமக்கு அமெரிக்கா தரும். தோரியம் அணு உலைகளை உருவாக்குதில் நாம் சந்தித்து வரும் சிரமங்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொழில்நுட்பம் தந்து உதவும். அதே போல நமது யுரேனியம் அணு உலைகளுக்குத் தேவையான சப்ளையை தங்கு தடை இல்லாமல் அமெரிக்கா வழங்கும். நாம் தேவையான அளவை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வாங்கிக் குவித்து ரிசர்வ் கூட வைத்துக் கொள்ளலாம் (stockpile). சரி.. அமெரிக்கா ஏன் இப்படி ஓடி வந்து நமக்கு உதவ வேண்டும். 

ஒன்று நான் முன்பே சொன்ன strategic காரணங்கள். எதிர்கால உலக அமைதி, பாதுகாப்பு, மற்றும் தனது பாதுகாப்பில் இந்தியாவி்ன் பங்கு நிச்சயம் இருக்கும் என அமெரிக்கா நம்புவது. 

இரண்டாவது 'பிஸினஸ்'. இன்றைய நிலையில் உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சியைக் காட்டி வரும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 'டபுள் டிஜிட்' பணவீக்கம் நமது வண்டியின் டயர்களை பஞ்சர் பார்த்தாலும் என்ஜின் கெட்டி... நாம் நம்புகிறோமோ இல்லையோ (குறிப்பாக இடதுசாரிகள்..), அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா எங்கேயோ போய்விடும் என உலக நாடுகள் நம்புகின்றன. 

பொருளாதாரரீதியில் முன்னேறிய நாடு என்றால் என்ன அர்த்தம், மிகப் பெரிய வர்த்தக சந்தை என்பது தானே. அந்த சந்தையை தன் கையை விட்டு நழுவி விடாமல் இருக்க அமெரிக்கா போட்டுள்ள மாஸ்டர் பிளான்களில் ஒன்று தான் இந்த ஒப்பந்தம். 

நான் முதல் கட்டுரையில் சொன்னது தான்... இதே அளவி்ல் நமது வளர்ச்சியை தொடர்ந்து நிலை நிறுத்த அல்லது மேலும் அதிகரிக்க முதலில் நம் முதலில் மின்சார உற்பத்தி அதிகரிக்க வேண்டும். (2020ம் ஆண்டில் நமது மின் உற்பத்தி 20,000 மெகாவாட்டாக உயர்ந்தாக வேண்டும்). 

அதற்கான ஒரே வழி அணு மின்சாரம் தான். அதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வழி செய்வது மட்டும் தான் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம். உண்மையில் அதை வழங்கப் போவது அமெரிக்காவி்ன் GE, Westinghouse போன்ற அணு மின் தயாரிப்பில் கரை கண்ட முன்னணி நிறுவனங்கள். 

அவர்களுக்கு இந்தியாவுடனான அணு தொழில்நுட்ப வர்த்தகம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிஸினஸ்களில் ஒன்றாக இருக்கப் போகிறது.

 அவ்வளவு தூரத்துக்கு வியாபாரம் நடக்கப் போகிறது. கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் பிஸினஸ் இது என இப்போதே அமெரிக்க வர்த்தக சபை (United States chamber of commerce) கணக்குப் போட்டு வைத்துக் கொண்டு ஒப்பந்தம் வேகமாக நிறைவேறாதா என காத்திருக்கிறது. 

இத்தனை விவகாரங்களையும் அலசி-ஆராய்ந்து பார்த்தால் ஹைட் ஆக்ட் அல்லாத இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நமக்கு கொடுக்கப் போவதெல்லாம் நிறைய நன்மைகளைத் தான். ஆனால், இதே போன்ற ஒப்பந்தத்தை சீனாவுடன் அமெரிக்கா செய்து கொண்டபோது வாய் திறக்காத இடதுசாரிகள் இப்போது மட்டும் கூச்சல் போடுவதற்குக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், 

அவர்களை அவர்களது சித்தாந்த கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியம். இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் பிரான்ஸ்சுடனோ, ரஷ்யாவுடனோ செய்யப்பட்டால் அமைதியாக இருந்திருப்பார்கள். அவர்களது முதல் எதிரியான அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் அவர்களால் தாங்க முடியவில்லை. அதுவும், தங்களது தயவில் ஆட்சியில் இருக்கும்போதே அரசு இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வது என்பது தங்களது சிவப்பு கொடியில் விழும் அழியாத கறையாகிவிடும் என்று நினைக்கின்றனர். அடுத்ததாக அணு தொழில்நுட்ப வியாபாரம் முலம் இந்தியாவை விட அமெரிக்கா தான் அதிகமான பலன்களை அடையப் போகிறது என நினைக்கின்றனர் இடதுசாரிகள். ஆனால், இடதுசாரிகளை எதிர்ப்போர் சொல்வது.. இவர்கள் சீனாவின் ஜால்ராக்கள். தங்களுக்கு இணையாக இந்தியாவும் வளர்ந்துவிடுமோ என்ற அஞ்சும் சீனா தான் இவர்களைத் தூண்டி விடுகிறது. அணு ஒப்பந்தத்தை தடுக்கப் பார்க்கிறது... இதையெல்லாம் விட அதிர்ச்சியான சில கட்டுரைகள் எல்லாம் பாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவி்ட்டன. இந்த ஒப்பந்தத்தை ஏற்க வைப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான பணம் கைமாறிவிட்டது.... என்றரீதியில் அந் நாட்டு பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன. ஆனால், இப்படிப்பட்ட கட்டுரைகளை பத்திரிக்கைகளில் திணிப்பதே பாகிஸ்தானின் உளவு அமைபபான ஐ.எஸ்.ஐ தான் என்கின்றனர் இன்னொரு தரப்பினர். நமக்கு கிடைக்காத ஒரு ஒப்பந்தம் இந்தியாவுக்கு கிடைக்கிறதே என்ற வேதனையில், இப்படி தகவல்களை பரப்புகிறது ஐஎஸ்ஐ என்கின்றனர். இப்படி இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் டெக்னாலஜி விவகாரங்கள், ஹைட் ஆக்ட் போன்ற சட்ட சிக்கல்கள், சீனா-பாகிஸ்தானி்ன் 'உள்' வேலைகள், சித்தாந்த மோதல்கள், பிஸினஸ் முதலைகள், அரசியல் சர்க்கஸ்கள், IAEA போன்ற சம்பிரதாயங்களைத் தாண்டித்தான் வென்றாக வேண்டும்... இதையெல்லாம் பார்க்க இன்று புத்தர் இருந்திருந்தால், நி்ச்சயம் சிரித்திருக்க மாட்டார்... அதே நேரத்தில் இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்டு காங்கிரஸ் படும் பாட்டைப் பார்த்தால் நாடே சிரி்ப்பாய் சிரிக்கிறது!

 (கொஞ்சம் கடுமையான டெக்னாலஜி சப்ஜெக்ட். முடிந்தவரை எளிமைப்படுத்தி தர முயன்றேன். உங்களில் பலரின் ஆதரவும், சிலரின் வசவுகளும் கூட, ஊக்கம் தந்தன. அன்புடன், ஆசிரியர்)

அப்துல் கலாமின் போக்ரான் அணு குண்டு சோதனையும் ஒரு முழு வரலாறு .4

அப்துல் கலாமின்  போக்ரான் அணு குண்டு சோதனையும்  ஒரு முழு வரலாறு .4


இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்ததுக்கு ஒரு பக்கம் தயாராகிக் கொண்டே இன்னொரு பக்கம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத் திருத்தம் தான் ஹைட் ஆக்ட் (Hyde Act). Henry J. Hyde உருவாக்கிய இந்த சட்டம் ஒப்பந்தத்தில் திணிக்கப்பட்டால் (திணிக்கப்பட்டாகிவிட்டது என்கின்றனர் இடதுசாரிகள்), 
Henry J. Hyde

இதன் 109வது பிரிவு, அணு ஆயுத பரவலை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவையும் தேவையில்லாமல் இழத்துவிடும். உதாரணத்துக்கு ஒன்று: அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதாக வைத்துக் கொள்வோம். 

ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்துவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் நாமும் ஒரு 'பார்ட்டி' ஆகி விடுவோம. அதாவது, இந்தியாவின் ஒப்புதலோடு நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது என அமெரிக்கா சொல்லலாம். 

அமெரிக்காவுக்கு அவ்வளவு இடம் தருகிறது இந்த சட்டம். ஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது, அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு. இதை விளக்க மீண்டும் ஈரானையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். எங்கள் போர் விமானங்களுடன் இந்திய விமானங்களும் வந்து குண்டு போட வேண்டும் என அமெரிக்கா சொன்னால், அதை நாம் கேட்க வேண்டும். அதெல்லாம் முடியாது என்று நாம் சொன்னால், இந்தியா ஒப்பந்தத்தை மீறுகிறது.. என அமெரிக்கா வம்பிழுக்க முடியும். மேலும் Proliferation Security Initiative (PSI) என்று ஒரு விஷயம் உண்டு. இதன்படி ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதத்தைத் தருவதாகத் தெரிந்தால் அதை வழியிலேயே தடுத்து நிறுத்தலாம்.. அழிக்கலாம். பாகிஸ்தானுக்கு வட கொரியா கப்பல் மூலம் அணு ஆயுதத்தை அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அ

தி்ல் PSI ஒப்பந்த நாடுகள் இடைமறித்து பறிக்கலாம். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் கையொப்பமிடவில்லை. ஆனால், அமெரிக்காவின் ஹைட் ஆக்ட் நம்மையும் PSIக்குள் இழுத்து விட்டுவிடும். அப்புறம் Wassenaar Arrangement என்று இன்னொரு ஆயுத (அணு ஆயுதம் அல்லாத) ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒப்பந்தம். இதிலும் நாம் இதுவரை கையெழுத்துடவி்ல்லை. ஆனால், இதிலும் நம்மை நாம் கேட்காமலேயே நுழைத்து விடுகிறது ஹைட் ஆக்ட். இது போக Australia Group. இது ரசாயன-உயிரியல் ஆயுத உற்பத்தி-பரவலை தடுக்கும் ஒரு ஒப்பந்தம். இதிலும் நாம் சேரவில்லை. ஆனால், இங்கேயும் போய் நம்மை மாட்டி விடுகிறது ஹைட் ஆக்ட். இதன் மூலம் சர்வதேச விவகாரங்களில் நமக்கென்று உள்ள தனித்தன்மை, சுதந்திரம், உரிமையில் அமெரிக்கா முழு அளவில் தலையிடுவதற்கு வழி செய்து தருகிறது ஹைட ஆக்ட். இதெல்லாம் அணு ஒப்பந்தம் தொடர்பாக நம்மிடம் முதலில் பேசியபோது அமெரிக்கா சொல்லாத விஷயங்கள்.. 

மேலும் இந்த ஆக்ட் சொல்வது எல்லாமே IAEAவின் ரூல்ஸ்களிலும் அடங்காத விஷயங்கள். முழுக்க முழுக்க அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள். இதைத் தான் இடதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். இப்படி நம்மிடம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று அமெரிக்கா இருக்கிறதே.. இவர்களை நம்பியா ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என கோபத்துடன் கேட்கின்றனர் காம்ரேடுகள். மேலும் அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் கையெழுத்து போடும் முன் நமது அணு உலைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து IAEAவுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். IAEAவுடன் என்ன பேசப் போகிறீர்கள். அதன் விவரங்கள் என்ன என்று இடதுசாரிகள் கேட்கின்றனர். ஆனால், அது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான 'பரம ரகசியம்'.. இதனால் அதைப் பற்றியெல்லாம் வெளியில் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர். ஆனால், IAEA கூறும் பாதுகாப்பு யோசனைகளை இந்தியா ஏற்றால், பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தில் இருந்து அணு ஆயுதத்துக்குத் தேவையான புளுட்டோனியம் தயாரிக்க ஒரு தனி பிரிவை (dedicated facility) இந்தியா உருவாக்க வேண்டும். அதை IAEA ஆய்வாளர்கள் பார்வையிடவும் நாம் அனுமதித்தாக வேண்டும். இதன்மூலம் நமது அணு ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியில் போகலாம். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் நமது அணு ஆராய்ச்சிகள் தொடர்பான சுதந்திரத்தை IAEAவிடம் இழக்கப் போகிறீர்களா.. என்று கேட்கின்றனர் இடதுசாரிகள். மேலும் ஒப்பந்தம் என்று வந்த பிறகு இந்தியாவுக்கு அணு தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை அமெரிக்கா வழங்குவது தொடர்பான எல்லா விவரங்களும் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் தானே வர வேண்டும். ஆனால், அவை எல்லாம் அமெரிக்க சட்டங்களின் கீழ் வரப் போகின்றன. இதுவும் இடதுசாரிகளை எரிச்சல்படுத்தியுள்ள இன்னொரு அம்சம். ஆனால், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மத்திய அரசு ஏன் ஒப்பந்ததுக்கு தயாராக உள்ளது? என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு அவர்கள் சொல்லும் பதில். இடதுசாரிகள் சொல்வதைப் போல ஹைட் ஆக்ட் நம்மை கட்டுப்படுத்தவே கட்டுப்படுத்தாது. 

அது அமெரிக்காவின் Domestc Law. அது அவர்களைத் தான் கட்டுப்படுத்தும், நம்மை அல்ல. மேலும் இந்திய-அமெரிக்க ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட் இருக்கவே இருக்காது. இதனால் இந்த ஆக்ட் குறித்து நம்மிடம் அமெரிக்கா பேசவும் இல்லை, நாம் ஹைட் ஆக்டை ஏற்கப் போவதும் இல்லை. நாம் ஏற்காத ஒன்றை அமெரிக்கா நிச்சயம் நம் மீது திணிக்கவே முடியாது. ஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது செய்யும் அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு. ஆனால், ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட்டை தவிர்க்க முடியாது. 

அதை அமெரிக்கா நிச்சயமாக இந்தியா மீது திணிக்த்தான் போகிறது என்கின்றனர் இடதுசாரிகள். இத்தனை விவகாரங்கள் இருந்தாலும் இதை அணு விஞ்ஞானிகளும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களும் ஆதரிப்பது ஏன்?.. காரணம் இந்த ஒப்பந்தம் நமக்கு அளிக்கப் போகும் பலன்கள் அப்படி.. 

தொடரும்..

போக்ரான் அணு குண்டு சோதனையும் ஒரு முழு வரலாறு .3

அப்துல் கலாமின் போக்ரான் அணு குண்டு சோதனையும் ஒரு முழு வரலாறு .3

இனியும் நாம் காலாகாலத்துக்கு தடைகளை சந்தித்துக் கொண்டு, அதனால் வளர்ச்சியை விட்டுவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த மன்மோகன் சி்ங் அணு சக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் சீரியஸ் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார். 

இந்தியாவின் தொடர் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது. ஒரு 'நல்ல நாளில்' இந்தியா மீதான தடைகளை நீக்குவதாக அறிவித்தார் ஜார்ஜ் புஷ். (கூடவே பாகிஸ்தான் மீதான தடைகளும் நீங்கின). இந்த அறிவிப்புக்கான காரணமே, இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்தது தான். 

இதைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கியது தான் High Technology Cooperation Group (HTCG). இது அதி உயர் தொழில்நுட்பத்தை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள வகை செய்வதற்காக உருவாக்கப்பட்ட மிக உயர் மட்டக் குழு. இந்தக் குழுவின் முக்கிய 'டிஸ்கசன் அஜெண்டாவே' அணு சக்தி தொழில்நுட்பம் தான். இந்த விஷயத்தில் தொய்வே கூடாது என முடிவெடுத்த பிரதமர், தனது 'Man Firday'வான (வலது கரம் என்பார்களே.. அது) திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையே நேரடியாகக் களத்தில் இறக்கிவிட்டார். இந்தியா-அமெரிக்கா எரிசக்தி பேச்சுவார்த்தை (அணு சக்தி என்று படிக்கலாம்..) என்ற பெயரில் இரு நாடுகளும் 5 உயர் மட்டக் குழுக்களை உருவாக்கின. இந்த 5 குழுக்களையும் ஒருங்கிணைத்தார் மாண்டேக் சிங். இந்தக் குழுக்களில் அமெரிக்காவின் சார்பில் U.S. Department of Energy (DOE) பிரிவின் அதிகாரிகளும், அதில் பெரும்பாலானவர்கள் அணு சக்திப் பிரிவினர், இந்தியாவின் சார்பில் Nuclear Regulatory Commission (NRC) அதிகாரிகளும் பங்கேற்றனர். இவர்கள் பேசியது இந்தியாவின் அணு சக்தித் துறைக்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவலாம் என்பது தான். மாண்டேக் சிங்கின் பொருளாதார மூளை தனது டெக்னாலஜி வாதத் திறமையையும், இந்த குழு உறுப்பினர்கள் மூலமாக, சேர்த்துக் காட்ட பேச்சுவார்த்தைகளில் புலிப் பாய்ச்சல். அப்போது தான் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்கள் மெல்ல வெளியில் வர ஆரம்பி்க்க, இடதுசாரிகளுக்கு 'பி.பி' எகிறியது. என்னமோ நடக்குது என்று என அவர்கள் விழித்துக் கொள்வதற்குள் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்துக்கு, அதாவது அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு, என்ற அளவுக்கு கொண்டு வந்திருந்தார் மாண்டேக் சிங். 

ஈராக் பெட்ரோலிய (ஹை.. பெட்ரோல்!) ஊழலில் சிக்கி நட்வர் சிங் கழற்றிவிடப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி வெளியுறவு அமைச்சரான புதிது. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த அணு சக்தி பேச்சுவார்த்தைகள் குறித்த முழு விவரத்தையும் உள் வாங்கியிருந்த முகர்ஜியும் பிரதமர் உத்தரவால் வேகம் காட்டினார். மாண்டேக் தலைமையிலான குழுவினர் தந்த யோசனைகளின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரை பிரணாப் முகர்ஜியும் சந்தித்து அணு ஒப்பந்தம் குறித்து இருவரும் ஒரு அவுட்-லைனை உருவாக்கினர். 

இந்த ஒப்பந்த ஷரத்துகள் குறித்து முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளுடன் பேச்சு நடத்தினார் பிரதமர் மன்மோகன். அப்போது வி்ஞ்ஞானிகள் சொன்ன யோசனைகள் மிக முக்கியமானவை. இந்த ஒப்பந்தத்தின்படி நமது அணு ஆராய்ச்சி மையங்களை சர்வதேச அணு சக்தி கழகத்தின் (IAEA-International atomic energy agency) கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், அதை கடுமையாய் எதிர்த்தனர் விஞ்ஞானிகள். இதனால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தேக்கம் ஏற்பட, விஞ்ஞானிகளே ஒரு தீர்வையும் கூறினர். 

நமது அணு ஆராய்ச்சி மையங்களை சிவிலியன், மிலிட்டரி என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் சிவிலியன்-அதாவது மி்ன் உற்பத்திக்கு பயன்படும் அணு நிலையங்களை மட்டும் IAEA பார்வையிட அனுமதி தரலாம். மிலிட்டரி- அதாவது அணு ஆயுத தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களை தயாரிக்கும் அணு நிலையங்களில் இருந்து அவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள் என்றனர். இது நல்ல யோசனையாகப் படவே அது குறித்து IAEAவுடன் பேச்சு நடத்துவது என்று முடிவெடுத்தது மத்திய அரசு. 

இது civil nuclear deal தான். இந்த ஒப்பந்தப்படி ராணுவ ஆராய்ச்சி தொடர்பான அணு உலைகளை பார்வையிட வேண்டிய அவசியமோ தேவையோ IAEAவுக்கு இல்லை. இதை இந்தியா வந்த IAEA டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல் பாரடாயிடம் பிரதமர் விளக்க, அவரும் ஒப்புக் கொண்டார். ஆனாலும் இது குறித்து மேலும் விளக்கமாக பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறிவிட்டுச் சென்றார். இந்தச் சந்திப்பு மிக 'இன்பார்மலாக' நடத்தப்பட்டது. காரணம், '

'அதுக்குள்ள IAEA கூட பேசுற அளவுக்கு போயாச்சா, அமெரிக்கா கூட எல்லா டீலிங்கும் ஆயிருச்சா'' என இடதுசாரிகள் பிடித்துக் கொள்வார்களே.... இதனால் எல்லா வேலையையும் 'நல்லபடியாக' முடித்துவிட்டு அப்புறமாக இடதுசாரிகளிடம் வருவோம் என்ற கணக்கில் இந்த விஷயத்தை கையாண்டது மத்திய அரசு. ஆனால், முகம்மத் அல் பாரடாய் வந்துவிட்டுப் போனது இடதுசாரிகளுக்கு பி.பி.யோடு கூடவே 'நெஞ்சு வலியையும்' தந்துவிட்டது. 

இன்னொரு பக்கம் அமெரி்க்காவிடமும் இந்திய ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களில் எக்காரணம் கொண்டும் மூக்கை நுழைக்கக் கூடாது என எடுத்துச் சொல்ல, முதலில் யோசித்த அமெரிக்கா, பின்னர் தலையாட்டியது. இப்படி எல்லா அம்சங்களும் கூடி வரவே, ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் தரும் முடிவோடு 2005- ஜூலை மாதம் அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மன்மோகன் சிங். 

புஷ்சுடன் பல மணி நேரப் பேச்சு.. உருவானது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம். ஏற்கனவே பிபி, நெஞ்சு வலியோடு தவித்த இடதுசாரிகளுக்கு கடும் டென்சன், காய்ச்சலே வந்துவிட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அணு சக்தி தொடர்பான தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றைத் தர அமெரிக்கா ஒப்புக் கொள்கிறது.. அதாவது '123' சட்டத்தின்படி. இது என்னாது?. எந்த ஒரு நாட்டுடனும் அமெரிக்கா அணு ஒப்பந்தம் (Civil nuclear deal) செய்ய வேண்டுமானால், அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் 123வது பிரிவின் கீழ், ஒரு தனி ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது தான் '123 Agreement'. 

ஆனால், இந்த ஒப்பந்தம் செய்யும் முன் முதலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) அதிபர் அனுமதி பெற வேண்டும். இந்தியா விஷயத்தில் அதையும் பெற்றுவிட்டார் புஷ். இதுவரை 25 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது அமெரிக்கா. இதில் சீனாவும் அடக்கம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், அணு ஆயுதத்தையோ தொழில்நுட்பத்தை அடுத்த நாட்டுக்கு தரக் கூடாது. தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியையோ அல்லது ஆயுதத்துக்கான உதிரி பாகத்தையோ கூட தரக் கூடாது. 

இந்த ஒப்பந்தம் 40 ஆண்டுகள் அமலில் இருக்கும். பின்னர் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், அதையடுத்து காலாவதியாகிவிடும். புது ஒப்பந்தம் தான் போட வேண்டும். இந்த ஒப்பந்தப்படி இந்திய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை, தொழில்நுட்பத்தை தங்கு தடையின்றி அமெரிக்கா வழங்கும். மேலும் இந்திய அணு உலைகளை சர்வதேச அணு சக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாடுகளை (safeguards) அமல்படுத்த வேண்டும். இதற்காக IAEAவுடன் பேச்சு நடத்த வேண்டும். அவர்கள் ஓ.கே. சொல்லிவிட்டால் போதும், ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிடலாம். 

(இங்கு தான் ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களை IAEA-வுக்கு திறந்துவிட முடியாது என இந்தியா கூறிவிட்டது) இடையில் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால், சோதனை நடத்தப்பட்ட ஓராண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். அமெரிக்க எரிபொருள் சப்ளை (யுரேனியம்-தோரியம்) நின்றுவிடும். ஆனால், அதற்கான நஷ்டஈட்டை அமெரிக்கா பணமாகத் தந்துவிடும். மேலும் Nuclear supply group-ல் உள்ள தனது நட்பு நாடுகளிடம் இருந்து இந்தியா எரிபொருளை தொடர்ந்து பெறலாம். அதற்கு தடையில்லை. அதே போல இந்தியா நினைத்தால்,

 ஓராண்டு நோட்டீஸ் தந்துவிட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம். எல்லாமே நல்லா தானே இருக்கு... 

அப்புறம் என்ன, எதற்காக இடதுசாரிகளுக்கு 'காய்ச்சல்' வந்தது? காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் சுட்டிக் காட்டுவது 'ஹைட் ஆக்ட்'.. 

இது என்ன என்று தெரிந்தால் நமக்கும் காய்ச்சல் வருகிறதோ இல்லையோ, அட்லீஸ்ட் கோபத்தில் காதில் புகையாவது வரும்... 

தொடரும்.. 

அப்துல் கலாமின் போக்ரான் அணு குண்டு சோதனையும் ஒரு முழு வரலாறு .2

அப்துல் கலாமின்  போக்ரான் அணு குண்டு சோதனையும்  ஒரு முழு வரலாறு .2

பார்ட் 1

போக்ரான்... 
அப்துல் கலாம் தனது விஞ்ஞானிகள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்திக் கழகத்தி்ன் தலைவர் டாக்டர் ஆர். சிதம்பரம். 'கலோனல் பிருத்விராஜ்'... என சிதம்ரம் அழைக்க, கலாம் திரும்பிப் பார்க்கவி்ல்லை.. யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்து தனது 'ஸ்கெட்களில்' ஆழ்ந்திருக்கிறார். மீண்டும் 'கலோனல் பிருத்விராஜ்' என சிதம்பரம் அழைக்க, கலாம் சட்டென திரும்பி ''ஆமா.. அது நான் தான் இல்ல, சொல்லுங்க கலோனல் நட்ராஜ்'' என்கிறார் சிதம்பரத்திடம். அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது 

இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான். இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர். அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர். 

பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர். இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும். கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம். மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர். 

ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான். சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர். ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான். 

அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார். இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்.. அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம். கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். 

இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்.. மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'.. வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, 

மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது. உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...!. இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம். இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு. 

அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''. 

இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது. 
1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம். 
2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான். 
3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும். (அணுக்கள் இணைப்பு மூலமாக செயல்படும் அணு குண்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது tritium. இது ஒரு isotope.. அதற்குள் ரொம்ப போக வேண்டாம்.. அப்புறம் Element, Mass, Nuclei, Neutron என நாம் 'சண்டை' போட வேண்டி வரும்) 

இந்த குண்டு, அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது.. தடைகள் போட்டு என்ன சாதித்தோம்.. இந்தத் தடைகளால் என்ன பயன் ஏற்பட்டுவிட்டது? என விவாதத்தி்ல் இறங்கின நாடுகள்.. குறிப்பாக அமெரிக்கா! ஆனால், அந்த விவாதங்களாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை. மேலும் தடைகளைத் தான் போட்டார்களே தவிர உருப்படியாய் ஏதும் நடக்கவில்லை. இந் நிலையில் தான் வந்தது செப்டம்பர் 11 தாக்குதல். உலக நாடுகள் குறித்த அமெரிக்காவின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிய தினம் அது. 

நம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என அமெரிக்காவை சிந்திக்க வைத்த தினம். தீவிரவாதம் குறித்த அதன் பார்வை மாறிய தினம். அதுவரையில் தீவிரவாதம் என்றால், தாக்குதல் நடந்த நாட்டில் உள்ள தனது தூதரகம் மூலம் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிடுவதே அமெரிக்காவின் ஸ்டைல் ஆக இருந்தது. தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா, அது குறித்து கொடுத்த அபாயக் குரல் அதுவரை அமெரிக்காவின் காதுகளை எட்டியதே இல்லை. இந் நிலையில் நியூயார்க் தாக்குதல், அந் நாட்டின் 'strategic planners'-களை சில குறிப்பிட்ட நாடுகள் பக்கமாய் திருப்பியது.

 எதிர்கால உலகின் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கப் போகும் நாடாக, இந்தியாவைப் பார்த்தது அமெரிக்கா. இந்தியாவை நாம் ஏன் இத்தனை காலம் புறக்கணித்தோம் என அமெரிக்காவை வருத்தத்திலும் ஆழ்த்தியது. அடுத்து வந்தது தான் 'சடசட' மாற்றங்கள். இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள், இந்திய விமானப் படையுடன் கூட்டு பயிற்சி என நெருங்கி வந்தது அமெரிக்கா. இந்தியாவுக்கு எப்-16 ரக விமானங்களைத் தரவும் முன் வந்தது. 

இந்திய-அமெரிக்க உறவில் இப்படியோடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்-அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் டால்போட் ஆகியோர் நடத்திய 'மாராதான்' பேச்சுவார்த்தைகள் தான். இருவரும் மாறி மாறி அமெரிக்கா, இந்தியாவுக்கு பயணித்து பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை (ஓரளவுக்காவது) போக்கிக் கொண்டதும் அந்த சந்தர்ப்பங்களில் தான். ஜஸ்வந்த் சிங்கை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து காலை 'ஜாகிங்' செய்ய கூட்டிச் செல்லும் அளவுக்கு நெருக்கமானார் 

டால்போட். கிட்டத்தட்ட 9 முறை இருவரும் அதிகாரிகள் மட்டத்திலும் தனியாகவும் பேச்சு நடத்தி பல துறைகளிலும் இரு நாடுகளை பிரித்து 'சுவர்களை' படிப்படியாக இடித்தனர். இதற்கு அதிபர் கிளின்டன்- பிரதமர் வாஜ்பாயின் முழு ஆதரவும் கிடைக்கவே, நிஜமாகவே நல்லுறவு பிறந்தது. அணு சக்தி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்ற விஷயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதும் அப்போது தான். Comprehensive test ban treaty (CTBT)-ல் (இனிமேல் அணு குண்டு சோதனை நடத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில்) மட்டும் கையெழுத்து போடு்ங்கள், நாங்களும் உங்களை NPT-ல் (Nuclear Non-Proliferation Treaty- அணு ஆயுத பரவல் தடை சட்டம்) கையெழுத்து போடுமாறு இனியும் நிர்பந்திக்க மாட்டோம் என இறங்கி வந்தது அமெரிக்கா. 

NPT விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனை மாற்றத்தின் மூலம் இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிலை மாறியது. ஆனாலும், CTBTயில் கையெழுத்திட முடியாது என இந்தியா மறுத்துவிட்டது. எங்கள் நாடு எப்போதும் அநாவசியமான அணு குண்டு சோதனைகள் நடத்தியதில்லை. எனவே, அதில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது இந்தியா. அதே போல அணு ஆயுத பரவல் தடை சட்டம் (NPT) இந்தியாவுக்கு பொறுந்தவே பொறுந்தாது. நாங்கள் ஒரு பொறுப்பான தேசம் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறோம்.. யாருக்கும் எங்கள் தொழில்நுட்பத்தை விற்றதில்லை, எனவே எங்களை அதில் கையெழுத்திடச் சொல்வது சரியல்ல என விளக்கியது இந்தியா. 

இந்தியாவின் நியாயங்கள் அமெரிக்காவுக்கு புரிய ஆரம்பித்த நிலையில் ஆட்சி மாற்றம். வந்தார் மன்மோகன் சி்ங். அமெரிக்கா-மேலைநாடுகளின் 'மார்க்கெட் எகானமி' மாடல் தான் நம் நாட்டை வறுமையிலிருந்து மீட்க உதவும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சிங். சோசலிஷ-கம்யூனிஸ பொருளாதார கொள்கைகளால் பயனில்லை என்பவர். 1990களில் அவர் ஆரம்பித்த economic restructuring எனப்படும் பொருளாதார சீ்ர்திருத்தங்களின் பலனைத்தான் இந்தியா இப்போது அனுபவித்து வருகிறது (கடந்த 4 மாத 'சோகக் கதையை' மறந்துவிட்டுப் பார்த்தால்). சந்திரசேகர் பிரதமராக இருந்தோது பெட்ரோலியம் (ஆஹா, பெட்ரோலா!!) வாங்க அன்னிய செலாவணி கூட இல்லாமல் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்து அங்கு வங்கியில் அடமானம் வைத்தவர்கள் தான் நாம். 

ஆனால், இன்று நம்மிடம் 312.5 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு. இன்று நாம் பார்க்கும் தகவல் தொடர்பு புரட்சி, தகவல் தொழில்நுட்ப சாதனைகள், தனியார் பங்களிப்புடன் 8 லேன் நெடுஞ்சாலைகள்.. என எல்லாம் சாத்தியமானது இந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளால் தான். 'ரெட் டேப்' சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து நம்மை 'மீட்டு' (இடதுசாரிகள் 'மாட்டி' விட்டது என்பார்கள்) மார்க்கெட் பொருளாதாரம் பக்கமாய் திருப்பிவிட்டது மன்மோகன் சிங் தான். 

இதனால் இயல்பாகவே அமெரிக்காவுக்கு சிங் மீது அதீத மரியாதை உண்டு. தன் மீதான அமெரிக்காவின் இந்த நம்பிக்கையை அப்படியே நாட்டின் நலனுக்காக முழுமையாய் பயன்படுத்த நினைத்த மன்மோகன், அணு சக்தி விவகாரத்தில் கையை விட்டார்... 

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...


தொடரும்..

Thursday, July 30, 2015

அப்துல் கலாமின் போக்ரான் அணு குண்டு சோதனையும் ஒரு முழு வரலாறு .1


அப்துல் கலாமின்  போக்ரான் அணு குண்டு சோதனையும்  ஒரு முழு வரலாறு .1


(இது இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை. சில பாகங்களாக வெளி வரும்) 

நாள்: 1974ம் ஆண்டு மே 18ம் தேதி காலை 7 மணி... இடம்: ராஜஸ்தானின் ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி. எல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், 'அந்த இடத்திலிருந்து' வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற்றுகின்றனர். 

இடம்: டெல்லி. காலை 8 மணி. பிரதமர் இந்திரா காந்தி தனது அலுவலகத்தில் மகா டென்சனுடன் தொலைபேசி அருகிலேயே காத்திருக்கிறார். இன்னும் 'தகவல்' வரவில்லையே என்ற கவலை ரேகைகள் அவர் நெற்றியில்.. மணி 8.05.. தொலைபேசி ஒலிக்கிறது.. அவசரமாய் எடுக்கிறார் இந்திரா. மறுமுனையில் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா, Madam, 'Buddha has finally smiled'. மகிழ்ச்சியில் இந்திரா கண்கலங்க, 'இந்தியா அணு குண்டு சோதனை' என்ற செய்தி உலகெங்கும் பரவுகிறது. அந்த நாளி்ல் புத்தர் சிரித்திருக்கலாம்.. 

ஆனால், உலகம் அதிர்ந்தது. இந்தியாவா..? அணு குண்டா..? நம்ப முடியாமல் உறைகின்றன நாடுகள். குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும். சீனப் போரில் ஏற்பட்ட தோல்வியின் வலியில் உருவானது தான் நமது முதல் அணு குண்டு. ஹோமி பாபாவின் முயற்சியால் இந்தியாவில் 1940களிலேயே அணு ஆராய்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஆனால், மர்மமான விமான விபத்தில் அவர் பலியாக, ஆராய்ச்சிப் பணிகளை பின் தங்கின. வந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். நமது அப்துல் கலாமின் குரு. மீண்டும் சூடு பிடித்தது ஆராய்ச்சி. அவரும் இடையிலேயே திடீரென மரணமடைய டாக்டர் ஹோமி சேத்னா-டாக்டர் ராஜா ராமண்ணா ஆகியோர் இணைந்து நடத்தியது தான் போக்ரானின் முதல் அணு குண்டு சோதனை. 

இந்த மொத்த புராஜெக்டும் மகா ரகசியமாக வைக்கப்பட்டது. மொத்தமே 75 விஞ்ஞானிகள்-பொறியாளர்களுக்கு மட்டுமே இந்த பரம ரகசியம் தெரியும். மத்திய அரசின் கேபினட் செக்ரடரிக்கே கூட தகவலை சொல்லவில்லை இந்திரா. அத்தனை ரகசியம் காத்தார் பிரதமர். சீனா 1964ல் அணு குண்டு சோதனையை நடத்தியிருந்த நிலையில் 1974ல் குண்டைப் போட்டது இந்தியா. 

அன்று முதல் ஆரம்பமாகின தடைகள்.. குறிப்பாக அணு உலைகளை கட்ட, அணு சக்தி தொழில்நுட்பம் தர, அணு உலைகளுக்கு எரிபொருளான யுரேனியத்தைத் தர இந்தியாவுடன் கையெழுத்திட்டிருந்த பல நாடுகளும் 'ஜகா' வாங்கின. அந்த தொழில்நுட்பத் தடைகளால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். இன்று பெட்ரோலுக்கும் (ஐயோ.. மீண்டும் பெட்ரோலோ என ஓடாதீர்கள்..), எரிசக்திக்கும் நாடு நாடாய் ஓடிக் கொண்டிருக்கிறோமே.. இதற்கு முக்கியக் காரணம் அணு சக்தி தொடர்பான தடைகள் தான். 

அசுர வளர்ச்சியில் இந்தியா காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதை 'sustain' செய்ய, 2050ம் ஆண்டுக்குள் நமது மின்சார உற்பத்தியை இப்போது இருப்பதை மாதிரி மேலும் சில மடங்காக உயர்த்த வேண்டியது மிக அவசியம். நீர் மின்சாரம், நிலக்கரி என நம்மிடம் உள்ள இயற்கை வளத்தைக் கொண்டு அந்த இலக்கை எல்லாம் எட்டுவது இயலாத காரியம். மழையை நம்பி, அணைகளைக் கட்டி, புதிய அனல் மின் நிலையங்கள் கட்டி, நிலக்கரி தோண்டுவதை அதிகரித்து.. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்குள் 2050ம் ஆண்டு வந்துவிட்டு போயிருக்கும். நம்மிடம் உள்ள ஒரே அஸ்திரம் அணு சக்தி தான். ஆனால், அணு சக்தியை முழுமையாக பயன்படுத்த தேவையான தொழில்நுட்பம், எரிபொருள்களான யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற இந்தியா மீதான தடைகள் பெரும் சிக்கலாக உள்ளன. 

1974க்கு முன் வரை நமக்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் அணு ஆராய்ச்சியி்ல் மிக உதவிகரமாக இருந்தன. ஆனால், அணு குண்டு சோதனைக்குப் பின் ஒவ்வொரு நாடாக கழன்று கொள்ள அவர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் அணு சக்தித் திட்டங்களும் பாதியிலேயே நின்று போயின. சோவியத் யூனியன் மட்டும் தான் நமக்கு துணை நின்றது. மிக ரகசியமாக ராஜஸ்தான் அணு மின் நிலையத்துக்குத் தேவையான 'ஹெவி வாட்டரை' வழங்கியது. இது அணுக்களை பிளக்கும்போது அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும் திரவம். இது பத்திரிக்கைகளில் கசிய சோவியத் யூனியன் உலக கண்டனத்துக்கு ஆளானது. 

அதே போல பிரான்சும் ஓரளவுக்கு இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. தாராபூர் அணு மின் நிலையத்துக்கு அமெரிக்கா யுரேனியத்தை திடீரென நிறுத்த இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந் நிலையில் அதைத் தர பிரான்ஸ் முன் வந்தது. இதனால் தான் அமெரிக்காவை நம்பி நாம் மீண்டும் காலை விட வேண்டுமா என்ற கேள்விகளை இடதுசாரிகள் எழுப்புகின்றனர். 1968ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை சட்டம் என்ற ஒரு ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் கொண்டு வந்தன. அதன்படி அவர்களைத் தவிர யாரும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற ரூல் போடப்பட்டது. இதில் எல்லாம் கையெழுத்து போட முடியாது என இந்தியா மறுக்கவே.. மேலும் பல தடைகள் வந்தன, இதனால் அணு ஆராய்ச்சியிலும் மின் உற்பத்தியிலும் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும் இன்று வரையிலும் இந்தியா அதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந் நிலையில் 1989ல் சோவியத் யூனியன் சிதைந்து போக இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. கல்பாக்கம் உள்பட சோவியத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேங்கிப் போயின. பின்னர் ரஷ்யா கையை ஊன்றி எழுந்து, நமக்கு மீண்டும் உதவ முன் வருவதற்குள் 10, 15 ஆண்டுகள் கரைந்தோடிவிட்டன. இப்போது தான் ரஷ்ய உதவியோடு கல்பாக்கம் திட்டம் முழு வேகத்தைப் பிடித்துள்ளது. ஆனால், ரஷ்யாவை மட்டுமே நம்பி நாம் இனியும் காலம் தள்ள முடியாது. காரணம், அவர்களாலும் ஓரளவுக்கு மேல் உதவ முடியாது. காரணம், அவர்களையும் கட்டுப்படுத்தும் உலக ஒப்பந்தங்கள் தான். 

1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group. எந்த நாடும் இந்தியாவுக்கு யுரேனியம் தந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அங்கம். நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள்களான யுரேனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற நாம் இந்த 'குரூப்' நாடுகளை சார்ந்து தான் இருக்க வேண்டிய நிலை. வெறும் 15 நாடுகளுடன் ஆரம்பித்த இந்க குரூப்பில் இப்போது 44 நாடுகள் உள்ளன. ஆக, இங்கேயும் நமக்கு 'ஆப்பு' வைத்தது அமெரிக்கா தானே.. இப்போது அவர்களுடன் கைகோர்க்க வேண்டுமா என்பது இடதுசாரிகளின் இன்னொரு கேள்வி. இத்தனை தடைகள் இருந்தாலும் கூட கிடைத்த யுரேனியத்தை 'ரீ-புராஸஸ்' செய்து அதிலிருந்து அணு குண்டு தயாரிப்பதற்கான புளுடோனியத்தை உருவாக்குவது, அணு பிளப்புக்கு (Nuclear fission) பதிலாக அணு இணைப்பைக் கொண்டு (Nuclear Fusion) டிரிடியம் (tritium) உள்ளிட்ட அணு ஆயுதங்களுக்குத் தேவையான கதிரியக்க தனிமங்களை பிரித்து எடுப்பது என இந்தியாவும் விடாமல் தனது முயற்சிகளை தொடர்ந்தது. 

மேலும் கனடா பாதியில் கழன்று கொண்டாலும் அவர்கள் கொடுத்துவிட்டுப் போன 'டிசைனை' மட்டுமே வைத்து ஒரு அணு உலையை வெற்றிகரமாக அமைத்தும் காட்டியது இந்தியா. அதே போல ஜெர்மனியிடமும் ரகசியமாகப் பேசி 95 கிலோ பெரிலியம் (beryllium) என்ற தனிமத்தை வாங்கியது. இது அணு குண்டுகளில் நியூட்ரானை வேகப்படுத்த உதவும் பொருள். இந்த beryllium அமெரிக்காவில் தயாரானது. இதை விற்றதற்காக ஜெர்மன் நிறுவனத்துக்கு அமெரிக்கா 800,000 டாலர் அபராதம் விதித்தது. அதே போல ருமேனியாவிலிருந்து ஹெவி வாட்டர், சுவீடனில் இருந்து flash x-ray (இது அணுப் பிளவின் வேகத்தை படம் பிடிக்க உதவும் கருவி) என அமெரிக்கா தலைமையிலான தடைகளை இந்தியா வேறு வழிகளில் உடைத்துக் கொண்டே வந்தது. ஆனால், இவையெல்லாம் இந்தியாவுக்கு நியாயப்படி நேரடியாக கிடைத்திருக்க வேண்டிய உதவிகள் தான். இதைப் பெற பல்வேறு வழிகளை இந்தியா பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் இந்தியாவுக்கு பெரும் கால நஷ்டம் ஏற்பட்டது. 

இந் நிலையில் இந்தியாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தர முடியாது என சீனியர் ஜார்ஜ் புஷ் மறுத்தார். இதை இந்தியா அணு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என குற்றம் சாட்டினார். இந்தியா அளவுக்கு மீறி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய இந்திய பாதுகாப்பு நிபுணர்களும், அணு விஞ்ஞானிகளும் மீண்டும் ஒரு முறை அணு குண்டு சோதனை நடத்தினால் தான் நமது பலத்தை உண்மையாகவே புரிந்து கொள்வார்கள். இவர்களது தடைகளால் நாம் ஒன்றும் முடங்கிப் போய்விடவில்லை என்பதை உலக்குக்கு காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் எடுத்துக் கூற, அவரும் தலையை ஆட்டினார். ஆனால்.... 1996ம் ஆண்டு.. மார்ச் மாதத்தில் ஒரு நாள்.. மீண்டும் போக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளுக்கான வேலைகளில் இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவு தீவிரமாக இருக்க.. மேலே பல நூறு கிமீ தூரத்தில் பறந்தபடி அதை அப்படியே 'லைவ்' ஆக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பின அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள். 

அப்போது அதிபராக இருந்த பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை பிடித்தார்.. மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என ஆரம்பித்து கிளின்டன் கொடுத்த நிர்பந்ததால் அப்போதைக்கு அணு குண்டு சோதனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார் ராவ். நிறுத்திய பின்னராவது தடைகள் நீங்கினவா.. இல்லை. பொறுத்தது போதும் என 1998ம் ஆண்டு மே மாதம் வாஜ்பாய் கண் அசைக்க, டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது. இம்முறை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றிக் காட்டினார் அப்துல் கலாம். அப்துல் கலாமுக்குள் இருந்த 'அணு விஞ்ஞானி' குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்சை போட்டு ராணுவ என்ஜினியர்களிடம் கொடுத்தார். கலாமுக்குள் இருந்த 'ராக்கெட்-சேட்டிலைட்' விஞ்ஞானி அமெரிக்க செயற்கைக் கோள்களி்ன் சுழற்சியை 'கால்குலேட்' செய்து கொண்டிருந்தார்.... 

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...


தொடரும்.. 

பார்ட் 2 நன்றி 
கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்


Wednesday, July 29, 2015

இன்னுமா பழைய போனை வச்சிருக்கீங்க..?

இன்னுமா பழைய போனை வச்சிருக்கீங்க..? 


வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் இல்லை என்ற நிலையில் ஸ்மார்ட்போன் மட்டும் விதி விலக்கா என்ன.. சாதாரண பொருட்களே கொஞ்ச நாட்களுக்கு பின் தேய்ந்து போகும் போது, மின்சாதன பொருளான ஸ்மார்ட்போன் மட்டும் எத்தனை நாட்கள் தான் தாங்கும். 

இதுவே பழைய நோக்கியா என்றால் நிலைமை வேறு தான், என்றாலும் காலத்திற்கு ஏற்ப நம்மை மாற்றி கொள்வதும் அவசியம் தானே. அந்த மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாதவர்கள் சந்திக்கும் சில நிகழ்வுகளை தான் கீழ் தொகுத்திருக்கின்றோம்..


நக்கல் 



உங்களது நண்பர்கள் கலாய்த்து கொண்டே இருப்பார்கள்.

முதியோர் 


உங்களது போன் கிட்டத்தட்ட வயதான கருவி போன்று இருக்கும்.

ஆண்ட்ராய்டு



 நீங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தினாலும் லாலிபாப் இயங்குதளம் குறித்த ஏக்கம் இருக்க செய்யும்.

ஆப்பிள் 



பழைய ஆப்பிள் கருவிகள் குறித்து ஏதும் சொல்ல வேண்டாம்.

செல்பீ 



செல்பீ எடுக்க தோதாக கேமரா இல்லாதது உங்களை அதிகம் வெறுப்பேற்றும்.

4ஜி 



உங்களது கருவியில் 4ஜி இருக்காது.

சிம் கார்டு 



உங்களது சிம்கார்டு இப்படி தான் காட்சியளிக்கும்.

டேப் 


பழைய போன் ஆயிரம் முறை கீறல் விழுந்து டேப் போட்டிருக்கீங்களா

நண்பர் 


இவ்வளவு நடந்து முடிந்த பின் நண்பரின் ஸ்மார்ட்போனை கேட்பீர்கள்.

Tuesday, July 28, 2015

அன்று, இன்று. அப்துல் கலாம்

அன்று, இன்று. அப்துல் கலாம்


இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக பணியாற்றியவர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். இவரது முழுப்பெயர் அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

ஏழ்மையில் முளைத்த விடிவெள்ளி 

அப்துல் கலாம் அவர்கள் மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். படிப்பு எட்டாக்கனியாக கனியாக இருந்த போதும் கூட, தனது விடா முயற்சியால் எட்டிப்பிடித்தவர். தனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு சிறுவயதிலேயே வேலைக்கும் சென்றவர். வீடு வீடாய் சென்று நாளிதழ் போட்டு வருமானம் ஈட்டி, தனது குடும்பத்திற்கு பணம் சம்பாதித்து கொடுத்தவர் அப்துல் கலாம்.

சுஜாதா அப்துல் கலாம்

திரு.அப்துல்கலாம் அவர்கள் இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவாக முக்கிய காரணமாக இருந்த இடம் திருச்சி ஆகும். இந்த மலைக்கோட்டை நகரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் தான் 1952 - 1954 வரையிலான காலகட்டத்தில் இளங்கலை இயற்பியல் பாடத்தை பயின்றிருக்கிறார். மறைந்த எழுத்தாளரான சுஜாதா அப்துல் கலாம் அவர்களுடன் ஒரே வகுப்பில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அப்துல் கலாம் அவர்களை பற்றிய நினைவுகளை முன்பொருமுறை பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொல்கையில் "கல்லூரி காலத்தில் வகுப்பில் பிரபலமான மாணவராக அப்துல் கலாம் இருக்கவில்லை என்றும் மிகவும் அமைதியான கூச்ச சுபாவம் உடையவராகவே இருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இன்று கலாம் அவர்களின் மறைவை ஒட்டி அவர் படித்த கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கல்வி கட்டணம் கட்ட முடியாத நிலையில் இருந்த கலாம் எம்.ஐ.டி-யில் சேர அனுமதி கட்டணம் கட்ட கூட பணம் இன்றி தவித்தார் அப்துல் கலாம். அவரது தந்தையாலும் பணம் தர இயலாத சூழ்நிலை இருந்தது. அப்போது, கலாம் அவர்களது அக்கா தான் தனது வளையல்களை விற்று பணம் கொடுத்து கலாம் படிக்க உதவினார்.

டி.ஆர்.டி.ஓ (DRDO) 

டி.ஆர்.டி.ஓ-வில் (DRDO) விஞ்ஞானியாக இருந்த போது இவரது முதல் சாதனையாக கருதப்பட்டது, இவர் கண்டுபிடித்த சிறிய ரக ஹெலிகாப்டர். இதை இந்திய இராணுவத்திற்காக உருவாக்கினார் அப்துல் கலாம்.

இந்தியாவின் முதல் அணு சோதனையில் பங்கு அப்துல் கலாம் அவர்கள், ராஜ ராமண்ணா என்ற விஞ்ஞானியின் குழு நடத்திய இந்தியாவின் முதல் முறை அணு ஆயுத சோதனையில் பங்கெடுத்திருந்தார்.

உடன் பணிபுரிபவர் மீது அதிக அக்கறை 

தன்னுடன் பணிபுரிபவர்கள் மீது அதிக எப்போதும் அதிக அக்கரை எடுத்துக்கொள்வார் அப்துல் கலாம் அவர்கள். ஒருமுறை, கலாம் உடன் பணிபுரிந்த ஒருவர் தனது குழந்தைகளை ஓர் திருவிழாவிற்கு அழைத்து செல்வதாய் வாக்களித்திருந்தார். ஆனால், வேலை நிமித்தம் காரணமாக அவர் செல்ல மறந்துவிட்டார். கடைசி தருணத்தில் நினைவு வந்து வீட்டிற்கு சென்ற போது தான் தெரிந்தது, முன்னரே சென்ற கலாம், அவரது குழந்தைகளை, திருவிழாவிற்கு கூட்டி சென்று விட்டார் என்று.

விருதுகளும் பெருமைகளும் 


அரசின் சார்பில், பத்மா பூஷன்(1981), பத்மா விபூஷன் (1990) விருதுகளும். அறிவியல் சார்ந்து இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்குவகித்ததன் காரணமாய் பாரத ரத்னா விருதும் (1997)அப்துல் கலாம் அவர்கள் பெற்றிருக்கிறார்.

மாணவர் தலைவர் 


மாணவர்கென்று ஓர் தலைவர் இருக்கிறார் என்றால் அது எப்போதும், அப்துல் கலாம் ஐயா அவர்கள் தான். அவர் மறைந்தாலும், அவர் ஏற்றிய எழுச்சி தீ மாணவர் மனதில் என்றும் எரிந்துக் கொண்டே தான் இருக்கும். கடந்த 2003 மற்றும் 2006 ஆம் ஆண்டு எம். டிவி-யின் யூத் ஐகான் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் கௌரவம் 

நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களை, அவரது அறிவியல் அறிவை போற்றும் வகையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் கௌரவம் செய்துள்ளது. இவர் சுவிட்சர்லாந்து சென்று வந்த நாளை, அவர்கள் அந்நாட்டின் அறிவியல் நாளாக கொண்டாடி வருகிறார்கள்.

வல்லரசு என்னும் விதையை விதைத்தவர் 

இந்தியா 2020-ல் வல்லரசு நாடாக மாறும் என்று, நீண்ட நாள் வெறும் கனவாக எந்த தூண்டுதலும் இன்றி இருந்த ஓர் விஷயத்திற்கு, மாணவர் மற்றும் இளைஞர்கள் மூலம் உயிரோட்டம் அளித்து, பெரும் விதையை ஒவ்வொரு இந்தியனின் மனத்திலும் விதைத்தவர் அப்துல் கலாம் அவர்கள்.

உலக கௌரவங்கள் 

உலகெங்கிலும் இருக்கும் பல பல்கலைக்கழகங்கள் கலாம் ஐயா அவர்களுக்கு டாக்டர் பட்டமளித்து கௌரவித்துள்ளது. இது மட்டுமின்றி, ராமானுஜன் விருது, இந்திரா காந்தி விருது, வீர் சவர்கர் (Veer Savarkar) விருது, கிங் சார்லஸ் II பதக்கம் என பல வகைகளில் கௌரவம் செய்யபட்டுள்ளார் கலாம் ஐயா.


அன்று : 

இந்தியாவின் முதல் ராக்கெட் பாகங்கள் சைக்கிளில் வைத்தும், மாட்டு வண்டியில் வைத்தும் கொண்டு வரப்பட்டன, அதை பெரிய அளவில் கேலி செய்தன பிற நாடுகள்..!

இன்று : 



வளர்ந்த நாடுகள் அனைத்தும் இஸ்ரோவின் வளர்ச்சியை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறது, சில நாடுகல் இஸ்ரோவின் உதவியை நாடுகிறது. இதற்கெல்லாம் பிரதான காரணம் - டாக்டர் அப்துல் கலாம்..!

Saturday, July 25, 2015

"டி பவர் ஹெச்20" ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி செல்லக்கூடிய அற்புதமான மோட்டார் சைக்கிள்

"டி பவர் ஹெச்20"


பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் ஒரு லிட்டர் நீரில் 500 கிலோமீட்டர் ஓடும் அற்புத பைக் ஒன்றினைக் கண்டறிந்துள்ளார். 

ஒரு லிட்டர் வெறும் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் தூரத்துக்கு தங்குதடையின்றி செல்லக்கூடிய அற்புதமான மோட்டார் சைக்கிளை பிரேசில் நாட்டிலுள்ள சாவ் பாலோ நகரை சேர்ந்த ரிக்கேர்டோ ஆஸேவெடோ என்பவர் கண்டுபிடித்துள்ளார். 

இந்த மோட்டார் சைக்கிள் சாதாரண தண்னீரில் ஓடுவதோடு, பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைப்போல் நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு போன்ற வேதிப் பொருட்களை வெளியேற்றுவதில்லை. மாறாக வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றது, என்பது குறிப்பிடத்தக்கது. 

"டி பவர் ஹெச்20" என இந்த புதிய மோட்டார் சைக்கிளுக்கு பெயரிட்டுள்ள ரிக்கேர்டோ ஆஸேவெடோ இதன் செயல்திறன் குறித்த விளக்கத்தையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த மோட்டார் சைக்கிளில் அமைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான பேட்டரியில் இருந்து கொள்கலத்தில் ஊற்றப்பட்ட தண்ணீரில் பாய்ச்சப்படும் மின்சாரமானது, அந்த தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளில் பொதிந்திருக்கும் ஹைட்ரஜன் எனப்படும் நீரியத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. 

இதன்வாயிலாக கிடைக்கும் உந்துசக்தி மூலம் காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் இந்த மோட்டார் சைக்கிள், ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 500 கிலோமீட்டர் வரை செல்லும் அதிசய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகின்றது.

Thursday, July 23, 2015

`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்

`வடக்கு சென்டினல் தீவு' உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம்


வடக்கு சென்டினல் தீவு: உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு. அதுதான் வடக்கு சென்டினல் தீவு. 

இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும். வெளி உலகின் தொடர்பு சுத்தமாக இல்லாமல் இந்த வித்தியாசமான தீவு இந்த உலகத்தில் இருந்து வருகிறது. 

இந்தியாவுக்குச் சொந்தமான தீவு இது. அந்தமான் - நிக்கோபார் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதி. மியான்மருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே வங்கக் கடலில் உள்ளது இந்த சின்னத் தீவு.

மர்மத் தீவு 

இந்தத் தீவில் எத்தனை பேர் உள்ளனர், இவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், இவர்களது வாழ்க்கை முறை என்ன என்பது குறித்து யாருக்குமே தெரியாது. இவர்களைப் பற்றிய எந்த ஆவணமும் யாரிடமும் இல்லை. பெரும் மர்மமான முறையில் இந்தத் தீவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

கடைசிக் கற்கால மனிதர்கள் 

இந்தத் தீவில் வசிப்பவர்கள், கடைசிக் கற்காலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆவர். இவர்களை சென்டினலிஸ் என்று அழைக்கிறார்கள். இவர்கள் பேசும் பாஷை, இவர்களது வாழ்க்கை முறை என எதுவுமே யாருக்கும் தெரியாது.

60,000 ஆண்டுகளாக 

இந்தத் தீவில் மனிதர்கள் கடந்த 60,000 வருடங்களாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அடர்ந்த வனங்கள் நிறைந்த தீவாகும் இது. இங்கு வேட்டைதான் முக்கியத் தொழிலாக இருக்கும் என்று தெரிகிறது.

நாகரீகத்தின் காலடி படாத இடம் 

பூமியில் நவீன நாகரீகத்தின் காலடி படாத ஒரே இடம் இதுதான் என்று கூறுகிறார்கள். வெளியுலகவாசிகளை இங்குள்ள மக்கள் தீவில் காலடி எடுத்து வைக்க அனுமதித்ததில்லை. யாரேனும் வந்தால் இவர்களின் ஈட்டி, வில் அம்புக்கு இரையாக வேண்டியதுதான்.

சிறையிலிருந்து தப்பி இங்கு போய் இறந்த கைதி 
கடந்த 1896ம் ஆண்டு வெள்ளையர் அரசால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி, அங்கிருந்து தப்பி இந்தத் தீவுக்குப் போயுள்ளார். ஆனால் அவரது கெட்ட நேரம் இந்தத் தீவு வாசிகளிடம் சிக்கி உயிரிழந்தார். அடுத்த நாள் இவரது உடல் அம்புகள் தாக்கியும், கழுத்து அறுபட்டும் பிணமாகக் கிடந்தது.

தப்பிப் பிழைத்த கப்பல் 
1981ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி பிரிம்ரோஸ் என்ற கப்பல் இந்தத் தீவை ஒட்டியுள்ள பவளப் பாறையில் கரை தட்டி நின்று விட்டது. கப்பலில் நிறைய மாலுமிகள் ஊழியர்கள் இருந்தனர். கப்பலைப் பார்த்த தீவுவாசிகள் வில் அம்புடன் படை திரட்டி கப்பலைத் தாக்க கிளம்பி வந்தனர். கடற்கரையில் இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கேப்டன், உதவி கோரி ரேடியோ மூலம் தகவல் அனுப்பியும் கிடைக்கவில்லை. நல்லவேளையாக அப்போது வீசிய பெரும் அலையில் கப்பல் தானாகவே நகரத் தொடங்கியது. இதனால் அனைவரும் உயிர் பிழைத்தனர்.

யாரும் போகத் தடை 
இந்தத் தீவு மக்கள் மிகவும் உணர்ச்சிகரமாக இருப்பதாலும், வெளியுலக நாகரீகம் தங்களை அண்ட விடாமல் கவனமாக இருப்பதாலும் இவர்களை தொல்லை தராமல் அப்படியே அவர்கள் போக்கில் விட்டு விட இந்திய அரசு முடிவு செய்தது. அந்தமான் நிர்வாகமும் அதே முடிவுக்கு வந்தது. இதனால் இந்தத் தீவுக்கு செல்வது சட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மீறிப் போனால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.


1991ஆம் ஆண்டு பூர்வகுடிகளை சந்திக்க குழு ஒன்று பரிசுப் பொருள்களுடன் சென்றது. குழுவினர் வழங்கிய தேங்காய்களை மட்டும் சென்டினல் பூர்வகுடியினர் பெற்றுக்கொண்டனர். அந்தக் குழுவினரை பூர்வகுடிகள் எதுவும் செய்யவில்லை. 

ஆனால் அதன்பிறகு சென்டினல் தீவுக்குள் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை. 

T.N. Pantit அவர்களின் குழுவை தவிர வேறு எவரும் இத்தீவு வாசிகளிடம் தொடர்பு கொண்டு உயிருடன் திரும்பியது இல்லை, இருபது வருட தொடர்புக்கு பிறகே அவர்களிடம் தொடர்பு கொண்டு இளநீர் பரிசு அளித்தனர்.

தீவு மக்களைக் காப்பாற்ற வேண்டும் 
இதற்கிடையே, இந்தத் தீவில் வசிக்கும் மக்களையும், அவர்களது வாழ்வாதாரம், வாழ்க்கை முறைக்கு மதிப்பு கொடுக்கும் அதே வேளையில் அவர்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சர்வைவல் இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.

இவர்களுக்கு தொற்று நோய் ஏதாவது பரவி விட்டால் அவ்வளவுதான் மொத்தமாக அழிந்து போய் விடும் அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. ஆனால் உண்மையில், வெளியுலக மக்களை விட இவர்கள் மிகவும் ஆரோக்கியமாக, நிம்மதியாக, சந்தோஷமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சுனாமிக்கே தப்பியவர்கள் 

கடந்த 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமித் தாக்குதலுக்குப் பின்னர் சென்டினல் தீவு மக்களின் கதியை அறிய இந்திய அரசு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பியது. அப்போது இந்தத் தீவு மட்டும் பத்திரமாக, பாதிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது. அருகில் உள்ள பல தீவுகள், அந்தமான் தீவு ஆகியவை பாதி்ப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் தீவும், அதில் உள்ள மக்களும் தப்பினர்.

கற்களை வீசித் தாக்கினர் 
இந்திய ஹெலிகாப்டர் தீவை வட்டமடித்து ஆய்வு மேற்கொண்டபோது கீழே இருந்து பழங்குடி மக்கள் கற்களை வீசியும், அம்புகளை எய்தும் இந்திய ஹெலிகாப்டருக்கு எதிர்ப்புகளைக் காட்டினர்.

2 மீனவர்கள் பலி 

கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இப்பகுதிக்கு வந்த 2 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தீவு மக்களிடம் சிக்கி ஈட்டியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்க இந்தியக் கடலோரக் காவல் படை முயன்றது. ஆனால் வில் அம்புத் தாக்குதல் பலமாக இருந்ததால் இந்தியப் படையினரால் கரையைக் கூட நெருங்க முடியவில்லை.

தஞ்சைக் கல்வெட்டில் ஜாரவா ஆதிவாசிகள்


அந்தமானுக்கு உட்பட்ட தீவுகள் குறித்தும், அங்கு வசிக்கும் ஆதி மனிதர்கள் குறித்தும் தஞ்சைக் கல்வெட்டில் நக்காவரம் என குறிப்பிடப்பட்டுள்ளத. நக்காவரம் என்றால் நிர்வாணம் என பொருள். அந்தமான் பகுதியில் முன்பு வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் குறித்தம், தற்போது இந்தத் தீவில் வசிக்கும் ஜாரவா இன மக்களைக் குறித்தும் அன்றே தஞ்சைக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பது வியப்பு.
https://rahmanfayed.blogspot.com/2015/07/blog-post.html?m=1
ஏன் இவ்வளவு எதிர்ப்பு

இந்தத் தீவு மக்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக வெளியுலக மக்களை எதிர்க்கிறார்கள் என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தத் தீவு இதுவரை யாரிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கவில்லை என்பது முக்கியமான ஒன்று. இங்குள்ள மக்கள் வசம்தான் இந்தத் தீவு இதுவரை இருந்து வந்துள்ளது. எனவே வெளியுலக தாக்கங்கள் இந்த மக்களிடம் சுத்தமாக இல்லை.

கலாச்சாரத்தைக் காக்க 
இதன் காரணமாக இந்தத் தீவுக்கு யாரேனும் வந்தால் அவர்களை எதிரியாக மட்டுமே இங்குள்ள மக்கள் பார்க்கிறார்கள். எனவேதான் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள், கொல்கிறார்கள். மேலும் வெளியுலக மக்களால் தங்களது கலாச்சாரம், இனம் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலும், அதைக் காக்கும் வகையிலுமே இவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள்.

எத்தனை பேர் உள்ளனர் 
இந்தத் தீவில் எத்தனை பேர் உள்ளனர் என்பது சரியாகத் தெரியவில்லை. 1930களில் 30 பேர் வரை இங்கு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 400 பேர் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாகரீகம் அண்டாத வரை நல்லதுதான் 
வெளியுலக நாகரீகம் இந்தத் தீவை தீண்டாமல் இருப்பதால்தான் இந்த மக்கள் இவ்வளவு காலமாக இங்கு தாக்குப் பிடித்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. இதுவே தொடரட்டும் என்று இந்திய அரசும் விட்டு விட்டது. இருப்பினும் இந்த பூர்வகுடி மக்கள் இனம் காப்பாற்றப்பட வேண்டும், கற்கால மனிதர்களின் கடைசி சந்ததியான இந்த மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறைக் குரலும் கேட்டபடியே உள்ளது.