Wednesday, January 19, 2022

நத்தம் கணவாய் யுத்தம்

நத்தம் கணவாய் யுத்தம் 



சென்னை: ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வீரத்தாய் வேலுநாச்சியார், மாமன்னர்கள் மருது சகோதரர்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது மிகப் பெரும் அதிர்ச்சி. இதற்கு பதிலடியாக டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி. ஆகியோர் உருவங்களுடன் இடம்பெற வேண்டிய அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் சமகாலத்தில் நிகழ்ந்த ஒரு மாபெரும் வரலாற்றுச் சமர் இன்னமும் தமிழர்களிடம் சென்றடையாமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய படை தளபதிகளின் புத்தகங்களில் மட்டுமே புதைந்து போய் கிடக்கிறது.

தமிழர்கள் நடத்திய வீரஞ்செறிந்த நத்தம் கணவாய் யுத்தம் தமிழர்களிடம் சென்று சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது முன்னோர்களின் வீர வரலாறு ஆழப் பதிவாகும். தமிழக அரசின் பாடப் புத்தகங்களில் நத்தம் கணவாய் யுத்தம் சிலாகிக்கப்பட வேண்டும்.

970 ஆங்கிலேய படையை வெட்டி சாய்த்து குருதி வெள்ளத்தில் மிதக்க விட்ட நத்தம் கணவாய் யுத்தத்தின் வரலாறு:

இந்திய நிலத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வித்திட்டது கி.பி. 1757-ல் நடைபெற்ற பிளாசிப் போர்.. கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கும் வங்காளத்தில் சிராஜ் உத்தவ்லா படையினருக்கும் நடந்த இந்த மோதல் மூலமே வங்கத்தை கைப்பற்றி அதிகாரம் செலுத்தினர் ஆங்கிலேயர்கள். இப்படி ஒருவரலாறு நமது பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருக்கிறது.


சிராஜ் உத்தவ்லாபடிக்க <<இங்கே>> சுட்டவும்...




இதற்கு முன்னரே மிக மோசமான பேரழிவை தமிழர் நிலத்தில் கிழக்கிந்திய படைகள் சந்தித்திருக்கின்றன. அவைகள் எல்லாம் நமது வரலாற்று பாடப் புத்தகங்களில் இடம்பெறாமல் போய்விட்டது. ஆற்காடு நவாப்புக்கா வரி வசூலிக்கும் உரிமையை பெற்ற கிழக்கிந்திய படை தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாளையக்காரர்களுடன் மோதியது.


அப்படியான மோதலில் கி.பி. 1755-ல் கட்டாலங்குளத்து மன்னர் வீரன் அழகுமுத்துகோனும் அவரது 200 தளபதிகளும் பீரங்கிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தனர். அப்படி வீரன் அழகுமுத்துகோனை வீழ்த்திவிட்டு திருச்சிக்கு திரும்புவதற்காக கர்னல் ஹரான் தலைமையிலான படை மதுரையில் முகாமிட்டிருந்தது. அப்போது ஹரானுக்கு கிடைத்த உளவுத் தகவல்.. நீங்கள் கோவில்குடியில் கள்ளர் சமூகத்தினரின் குலதெய்வ சிலைகளை கொள்ளையடித்திருக்கிறீர்கள். இப்போது நத்தம் கணவாய் பகுதியில் உங்களைத் தாக்குவதற்கு கள்ளர் சமூகத்தினர் காத்திருக்கின்றனர் என்பதுதான் அந்த தகவல்.


மதுரையை ஆண்ட மியான் என்பவரை தேடியது ஹரான் படை. அப்போது மியான் தப்பி ஓடி தலைமறைவானர். அவர் மதுரை அருகே உள்ள கோவில்குடியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்க ஹரானும் அவரது படை தளபதியுமான கான்சாகிப் யூசுப் கானும் ( மருதநாயகம்) கோவில்குடி கோவிலில் சோதனையிட்டு பார்க்கின்றனர். ஒன்றும் கிடைக்கவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் கோவில் கதவுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. கோவில் சிலைகளை ஹரான் கொள்ளையடிக்கிறார். அதனால்தான் கள்ளர் சமூகத்தினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

ஹரான் தன்னுடைய வரலாற்று பதிவு நூலில் Kallans என்றே எழுதி வைத்திருக்கிரார். இதனால் கர்னல் ஹரான் தமது ஆயிரக்கணக்கான படையினரை குழு குழுவாக பிரித்து நத்தம் கணவாய் பகுதியை கடந்து நத்தம் நகரை சென்றடையலாம் என வியூகம் வகுத்தார். அப்படியே ஹரானின் ஆங்கிலேய படையும் ஜமால் சாகிப் தலைமையில் நத்தம் கணவாய்க்குள் நுழைந்தது. அன்றைய நாள் கி.பி. 1755 மே 28.

அந்த மலைக்காடுகள் முழுவதும் கள்ளர் சமூகத்தின் பெரும் படையினர் மறைந்திருந்து ஹரான் படையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். முதல் அணியாக கேப்டன் லின் தலைமையில் ஒரு படை சென்றது. அவர்கள் தாக்குதல்களை எதிர்கொள்ளாமல் நத்தம் நகரை அடைந்துவிட்டனர். இதனால் ஹரான் நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார்.

ஆம் கர்னல் ஹெரான் எதிர்பார்த்தபடி எந்த ஒரு தாக்குதலும் கள்ளர்கள் தரப்பில் இருந்து நடத்தப்படவில்லை.

ஆனால் கணவாயின் இருபக்கமும் பதுங்கி இருந்த கள்ளர் சேனையோ பாய காத்துக் கொண்டிருந்தது. 2-வது அணியாக கேப்டன் போலியர் தலைமையிலான படை புறப்பட்டது.

3-வது அணிக்கு கேப்டன் ஸ்மித் தலைமை தாங்கினார். இதே பாதையில் கள்ளர் சேனை மரங்களை வெட்டி பாதையை சுருக்கிக் கொண்டே வருகிறது.. புதைகுழிகளையும் வெட்டி வைக்கிறது.



ஆங்கிலேய படை ஒவ்வொன்றையும் 2 மைல்கள் தொலைவு முன்னேறவிட்டு பின்னால் வந்த படையை வழிமறித்து தாக்குகின்றனர். உடனே ஆங்கிலேயப் படை தாக்குதல் நடத்துகிறது.

கள்ளர் சேனை காடுகளுக்குள் பதுங்கி இருந்து மீண்டும் நிலைகுலைய வைக்கும் பெருந்தாக்குதலை நடத்துகிறது.

தமிழர் நிலத்தின் ஆகப் பெரும் ஆயுதங்களான வளரி, வில், 18 அடி ஈட்டி என அத்தனையையும் அன்று கள்ளர்களால் பயன்படுத்தப்பட்டன. இதை குறிப்பிடும் ஹரான், கள்ளர்கள் ராக்கெட்டுகளையும் பயன்படுத்தியதாக பதிவும் செய்து வைத்திருக்கிறார்.



ஆங்கிலேய படை மீதான இந்த உக்கிரமான தாக்குதல் ஈரக்குலையை நடுநடுங்க வைக்கும் வகையிலானது என்பதை ஹரான் தாம் எழுதிய வரலாற்று நூலிலேயே பதிவு செய்திருக்கிறார்.

கள்ளர் சேனையின் நோக்கமான கோவில்குடி குலதெய்வ சிலைகள் ஹெரானின் படையிடம் இருந்து மீட்கப்பட்டன. ஆனாலும் பல மணிநேரம் இந்த யுத்தம் நீடித்தது. 1000 பேருடன் கணவாயை கடக்க முயன்றவர்களில் 970 பேர் வீழ்த்தப்பட்டு அந்த கணவாய் பகுதியே ரத்த வெள்ளமாகிப் போனது சரித்திரம்.



தம்மிடம் வெறும் 30 பேர்தான் எஞ்சியிருந்ததாகவும் ஹரான் எழுதி வைத்திருக்கிறார். இதனை அன்றைய ஆங்கிலேய தளபதிகள் தங்களது வரலாற்று நூல்களில் பதைபதைப்புடன் மறக்காமல் பதிவு செய்திருக்கின்றனர்.

பின்னாளில் இந்த கொள்ளை சம்பவம், படை இழப்பு ஆகியவற்றுக்காக ஹரான் மீது விசாரணையும் நடத்தப்பட்டது வரலாறு. ஹரான் படை தளபதியான கான்சாகிப் யூசுப்கான் (மருதநாயகம்) மதுரையில் இருந்தார். இந்த கான்சாகிப்தான் கோவில்குடி கள்ளர் குலதெய்வ கோவில் கதவுகளை தீ வைத்து எரித்தவர். பின்னர் மதுரையின் ஆளுநராக பொறுப்பேற்ற போது நத்தம் கணவாய் யுத்தத்துக்கு பழிவாங்க 500 கள்ளர்களை மதுரையில் தூக்கிலிட்டார். இந்த வரலாற்றையும் ஆங்கிலேயர்களும் கான்சாகிப் யூசுப் கான் வரலாற்றை எழுதியவர்களும் பதிவு செய்துள்ளனர்.

இந்திய நிலத்தில் ஆங்கிலேயப் படை எதிர்கொண்ட முதலாவது பேரிழப்பு நத்தம் கணவாய் யுத்தம்தான். இதற்குப் பின்னர்தான் பிளாசிப் போர் நடந்தது. இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது இத்தகைய வரலாறுகளை நாம் நினைவு கூறுவது கடமையும் கூட. அதனால்தான் இந்த வரலாறு தமிழ்நாட்டு அரசின் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.



No comments:

Post a Comment

welcome ur comment,