Wednesday, November 18, 2015

நிஜமானஹீரோ (ஆட்டோ ஓட்டுனர்) காஸம்ஃபர் அலி.

நிஜமானஹீரோ (ஆட்டோ ஓட்டுனர்) காஸம்ஃபர் அலி.



ஒவ்வொரு ஆண்மகனும் கண்டிப்பாக படிக்கவும்....
சில மாதங்களுக்கு முன்னால், பெங்களூருவைச் சேர்ந்த காஸம்ஃபர் அலி என்னும் ஆட்டோவில், இரவு எட்டரை மணியளவில் ஒரு பெண் பெங்களூருவில் இருந்து கானக்புரா வரை பயணித்தார். அடுத்த நாள் காலை வரையிலும், காஸம்ஃபர் அலிக்கு வழக்கமான தினசரி பயணமாகத்தான் இருந்தது.


என்ன நடந்ததெனத் தெரியவில்லை. அடுத்த சில மணிநேரங்களில் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார் காஸம்ஃபர் அலி. அதே வாரத்தில், தெருவில் உள்ளவர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கினர். வார இறுதியில், முதல் நாளன்று தன் ஆட்டோவில் பயணித்த பெண், எதிர்பாராத விதமாக நேரில் வந்து காஸம்ஃபர் அலிக்கு நன்றி சொல்லி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
என்ன நடந்தது?

மார்க்கெட்டிங் ஆலோசகர் மற்றும் இசைக்கலைஞரான ரஞ்சனி சங்கர்தான் அந்த ஆட்டோ பயணி. அலுவல் காரணமாக ரஞ்சனி, பெங்களூருவுக்கு செல்ல நேர்ந்திருக்கிறது. நகரத்தில் வேலை காரணமாக, இருப்பிடத்துக்கு இரவில் தனியாகச் செல்ல வேண்டிய சூழல். அந்த இடத்திலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கானக்புரா சாலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இரவு மற்றும் அதிக தூரம் காரணமாக அவருக்கு டாக்ஸி கிடைக்கவில்லை.

கடைசியாக ஓலா ஆட்டோ செயலி மூலம் ஓர் ஆட்டோவை பதிவு செய்தார் ரஞ்சனி. ஓலா அனுப்பி வைத்தது, ஓட்டுநர் காஸம்ஃபர் அலியை.
செல்ல வேண்டிய இடத்தைக் கவனமுடன் கேட்டுக்கொண்ட காஸம்ஃபர் அலி, செல்லப்போகும் பாதை மிகவும் கடினமானது என்று தெரிவித்திருக்கிறார். விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே காணப்படும்; வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கும் என்று கூறியவர், ரஞ்சனியை பயப்பட வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். பதற்றமாகவும், பயமாகவும் இருந்தது ரஞ்சனிக்கு. ஆனாலும் அந்த நேரத்தில் வேறு வழியில்லை. துணிந்து ஆட்டோவில் ஏறினார்.

தன் செல்பேசி வழியாக 'கூகிள் மேப்ஸ்' மூலம் வழிசொல்லி, அது காட்டும் வழியில் ஆட்டோவைச் செலுத்தச் சொன்னார், ரஞ்சனி. 15 நிமிடங்கள் கழிந்திருந்தன. நிமிர்ந்து பார்த்தால் சாலை முழுவதும் கும்மிருட்டாகக் காட்சியளித்தது. பயந்திருந்த ரஞ்சனியிடம், பயப்பட வேண்டாம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார் காஸம்ஃபர் அலி. கானக்புராவை அடைந்தது ஆட்டோ. அங்கே தனக்காக நண்பர் காத்திருப்பார் என்ற எண்ணத்தில் கொஞ்சம் நிம்மதியானார் ரஞ்சனி.

போக்குவரத்து நெரிசல் காரணமாக, உரிய நேரத்துக்கு ரஞ்சனியின் நண்பரால் வரமுடியவில்லை. இன்னும் வந்து சேராத நண்பருக்காக, சில தேநீர்க்கடைகள் மட்டுமே இருந்த இடத்தில், ரஞ்சனி காத்திருக்க நேர்ந்தது. சற்றும் யோசிக்காமல் காஸம்ஃபர் அலி, நண்பர் வரும்வரை ரஞ்சனியுடன் காத்திருப்பதாக நம்பிக்கையளித்தார். நண்பர் வர சுமார் 20 நிமிடங்கள் ஆனது. அந்த நேரத்தில்தான் அந்த ஃபேஸ்புக் பதிவை எழுதினார் ரஞ்சனி.

அதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவிட்டு, ஹோட்டல் அறைக்குத் திரும்பினார் ரஞ்சனி. ஒரு மணி நேரத்தில் 400 லைக்குகள், அடுத்த நாள் காலையில் 2,000 லைக்குகள். 4000, 5000 என அதிகரித்த அந்தப்பதிவுக்கு இப்போது (நீங்கள் இதைப் படிக்கும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்) கிடைத்திருக்கும் லைக்குகளின் எண்ணிக்கை 17,700. ஷேர்கள் மொத்தம் 2828. அது மட்டுமல்ல. பல்வேறு ஆன்லைன் ஊடகங்களிலும் இது வைரலாகி இருக்கிறது.

அப்படி அந்தப்பதிவில் என்னதான் இருந்தது? ஒரு சாதாரணப் பயணம், தனக்கு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான மக்களிடையே என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது?

ரஞ்சனியே சொல்கிறார்:
"நாம் பெரும்பாலும் எதிர்மறையான செய்திகளையே கேட்க பார்க்க நேரிடுகிறது. முக்கியமாக டாக்ஸி பயணங்களைப் பற்றியும், டாக்ஸி ஓட்டுநர்களைப் பற்றியும்.

நேர்மறையான விஷயங்கள் யாருடைய கவனத்துக்கும் எட்டப்படுவதே இல்லை. முரட்டுத்தனமான, ஆபத்தான ஓட்டுநர்களைப் பற்றி மட்டுமே பேசி வரும் நாம் ஏன் ஒரு நல்லவரை, உழைப்பாளியைப் பற்றிப் பேசக்கூடாது என்று தோன்றியது. அதன் விளைவுதான் அந்தப் பதிவு. இருட்டு, தனிமை, பயமுறுத்தும் சாலையில் ஒரு பெண் தனியாகப் பயணிக்க நேர்ந்த நிலைமையை அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்தது. அப்போது உதிர்க்கப்பட்ட ஓட்டுநரின் தைரியமூட்டும் வார்த்தைகள், அப்பெண்ணுக்கு எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும் என்பதையும் உணர முடிந்தது. அதனால்தான் அப்பதிவு வைரலானது!".

மற்றொரு பக்கம், அர்ப்பணிப்புடன் வேலை பார்த்த காஸம்ஃபர் அலிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தான் வசிக்கும் பகுதியின் ஹீரோவாகவே ஆகிவிட்டார் காஸம்ஃபர். வானொலி, ஊடகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் இதை செய்தியாக்கி இருக்கின்றன. 



உள்ளூர் காவல்துறை ஆணையாளர் இவரை அழைத்துப் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதை அறிந்த ஓலா நிறுவனம், அவரின் ஆட்டோரிக்‌ஷாக் கடனைத் தாங்களே செலுத்தி விடுவதாகக் கூறிவிட்டது. அத்தோடு ரஞ்சனியை அழைத்த ஓலா, காஸம்ஃபரைச் சந்திக்க முடியுமா எனவும் கேட்டது.

தேவைப்பட்ட நேரத்தில், தைரியம் அளித்து, தன்னைப் பத்திரமாய் இருப்பிடம் அழைத்துச் சென்ற காஸம்ஃபரை மீண்டும் பார்க்க உடனே ஒப்புதல் அளித்தார். ஓலாவும் ரஞ்சனியை ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்குப் பறந்தது. ரஞ்சனி, தன் வீட்டுக்குள் நுழைந்ததும், வியப்பின் உச்சத்துக்கே போனார் காஸம்ஃபர் அலி. தன் மனைவியையும், ஐந்து வயது மகனையும் ரஞ்சனிக்கு அறிமுகம் செய்து வைத்தார். 




மரியாதையளிக்கும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ரஞ்சனி, அவருக்கு கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்தார். ஒன்றாக அமர்ந்து எல்லோரும் தேநீர் அருந்தினர்.
சில நிமிட அமைதிக்குப் பின்னர், காஸம்ஃபர் அலி ரஞ்சனியிடம் கேட்டிருக்கிறார்.

"மேடம், நான் ஏன் இத்தனை பிரபலமானேன் என்று எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் ஃபேஸ்புக்தான் அதற்குக் காரணம் என்கிறார்கள். ஃபேஸ்புக் என்றால் என்னவென்று தெரியும். ஆனால் அது என்ன 'லைக்'கு?"

SOURCE
http://www.thehindu.com/features/metroplus/society/bangalore-ola-auto-driver-is-social-media-sensation/article7443777.ece
THANKS TO
'கொல்லாபுரம்' MOHAMED ALI.

1 comment:

welcome ur comment,