'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-2
இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...
மேலே உள்ள படத்தில் இருக்கும் இந்த மாயா இன மனிதன் என்ன செய்துகொண்டிருக்கிறார்? இந்தப் படத்தைப் பார்க்கும் போது, ஏதோ வித்தியாசமாகவும்,ஆச்சரியமாகவும் உங்களுக்கு இருக்கும். அது என்னவாக இருக்கும் என்னும்பிரச்சினையை உங்களிடமே விட்டுவிட்டு நான் தொடர்கிறேன்.......!
கடந்த தொடரில் கொடுத்திருந்த படங்களில் இருப்பவை பறவைகளா? பூச்சிகளா?மீன்களா? இல்லை விமானங்களா? என்னும் சந்தேகத்துடன் கடந்த பதிவில் உங்களிடமிருந்து விடைபெற்றிருந்தேன். அந்த உருவங்கள் ஏற்படுத்திய பாதிப்பு உங்களை விட்டு அகலச் சிறிது காலமாகும், அந்த அளவுக்கு உருவங்கள் இருந்தது என்னவோ நிஜம்தான். இல்லையா?
இதுவரை, 'ரைட் சகோதரர்கள்' விமானத்தைக் கண்டுபிடித்தார்கள்என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றைப் புறம் தள்ளும் பலஇரகசியங்கள் எங்கோ ஒரு மூலையில், மத்திய அமெரிக்காவில்,எப்போதோ மறைந்திருக்கின்றது என்பது ஆச்சரியம்தானே! அதைவிட ஆச்சரியம்,இந்தச் சிறிய விமானங்கள் போலுள்ளவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது,அவை விமானப் பறப்புச் சக்திக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டுகொண்டார்கள். ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் கூட மிகப் பழமைவாய்ந்தது. ஆனால், இந்த உருவங்கள் நவீன விமானங்கள்போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
இதுவெல்லாம் எப்படிச் சாத்தியம்? விஞ்ஞான அறிவையும், விண்வெளிஅறிவையும் மாயா இனத்தவர் பெற்றது எப்படி? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்காட்டுவாசிகள் போல வாழ்ந்த மக்கள், எப்படி இவ்வளவு அறிவைக் கொண்டிருக்கமுடியும்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக, நாம் உடன் புரிந்துகொள்ளக்கூடியது, விண்ணிலிருந்து மாயன் இனத்தவரை நோக்கியாராவது வந்திருக்க வேண்டும் என்பதும், அவர்கள் மூலமாக மாயாஇனத்தவர்களுக்கு இந்தளவுக்கு அறிவு கிடைத்திருக்க வேண்டும் என்பதும்தான்.அப்படி இல்லையெனில், ஒன்றுமே இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு ‘பில்டப்‘பை நான் கொடுப்பதாகவும் இருக்கலாம்.
ஒருவேளை விண்வெளியில் இருந்து அயல்கிரகவாசிகள் வந்திருந்தால், அவர்களை மாயாக்கள் பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அப்படியானால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? 'ஏலியன்' என்று அழைக்கப்படும் அயல்கிரகவாசியின் வினோத தலையுடன் உள்ள உருவங்களை எத்தனை படங்களில்தான் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட உருவங்களை மாயன்களும் பார்த்திருப்பார்களோ?
ஆம்! அதற்கு சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுவது போல மாயன்உருவாக்கிய வடிவங்கள் சில உள்ளன. அவற்றை நீங்களே பாருங்கள்.......!
இந்த உருவங்களைப் பார்த்தீர்கள் அல்லவா? இவை அயல்கிரகவாசிகளின் உருவம்தான் என்றால், அவர்கள் மாயன்களிடம் மட்டும்தான் வந்திருக்க வேண்டுமா...? இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் மாயன் இனத்தவருக்கு மட்டும்தான் ஏற்பட்டதா அல்லது வேறு யாருக்காவது ஏற்பட்டதா? அப்படி வேறுஇனத்தவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதா எனப் பார்க்கும் போது, அங்கும்எமக்கு ஆச்சரியங்களே காத்திருந்ததன.
பிரபலமான எகிப்திய பிரமிட்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பல மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கிய உலக அதிசயமாகப் பார்க்கப்படுவது இந்தப் பிரமிட்கள். இந்தப் பிரமிட்கள் என்றாலே எமக்குத் தோன்றுவது பிரமிப்புத்தான்.
எகிப்தியப் பிரமிட்களில் இருந்த சித்திர வடிவ எழுத்துகளை ஆராய்ந்த போது அங்கு கிடைத்ததும் அதிர்ச்சிதான்.
அப்படி என்னதான் இருந்தது?
கொஞ்சம் மூச்சை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்............!
இப்போ இவற்றைப் பாருங்கள்..........!!
என்ன உங்களால் நம்பமுடியவில்லையல்லவா? சினிமாப் படங்களில் வருவதுபோன்று, அதே வடிவிலான உருவம். ஆச்சரியமாக இல்லை அல்லது சினிமாப் படங்களில் இவற்றைப் பார்த்துதான் ஏலியன் உருவங்களை உருவாக்கினார்களா?
சரி, இதுக்கே அசந்தால் எப்படி? இன்னும் இருக்கிறது பாருங்கள்.
மேலே காட்டப்படிருக்கும் இரண்டு படங்களிலும் உள்ள வித்தியாசமான தலைகளுடன்கூடிய மனிதர்களைக் கவனியுங்கள். அப்படி உருவத்துடன் ஒப்பிடக்கூடிய எந்த ஒருஎகிப்தியரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம். மனித இனத்தின்தலையானது அன்று முதல் இன்று வரை சில குறிப்பிட்ட பரிமாணங்களைக்கொண்டதாகவே கூர்ப்படைந்து வந்திருக்கிறது. அது தாண்டிய எதையும் மனிதனாகஎம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
இப்போது நான் தரும் இந்த உருவத்தைப் பாருங்கள்.........!
எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவி இவள்.மகாராணி. இவள் வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர்‘நெபர்டிடி‘ (Nefertiti). இவளைப் பற்றி இங்கு ஏன் நான் சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள். காரணம் உண்டு.
இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில்இருக்கிறது. அது இதுதான்.
இவளது தலை ஏன் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்? எகிப்திய வரலாற்றில் நெபர்டிடியின் சரித்திரம் மர்மம் வாய்ந்ததாகவே இருக்கிறது. இவள் அயல்கிரகத்தில் இருந்து வந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா...?
சரி, நெபர்டிடியின் தலை கொஞ்சம் பெரிதென்றே நாம் வைத்துக் கொள்ளலாம்.இவளுக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் இல்லையென்றே எடுத்துக் கொள்வோம்.ஆனால் நெபர்டிடியும் அவளது கணவனும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் இந்தச் சித்திரத்தைப் பார்த்ததும் அந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்துவிடுகிறதல்லவா?
இவை எல்லாவற்றையும் விட்டுவிடலாம். எதுவுமே இல்லாததை நாங்கள்என்னென்னவோ சொல்லி மாற்றிவிடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம்.அப்படி என்றால் இந்தப் படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா..?
இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். சரி, கொஞ்சம்பெரிதாக்கிப் பார்க்கலாம்.
விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் படத்தில் தெரிகிறதா...? அதன் அளவு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அதன் அருகே இருக்கும்மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அடப் போங்கப்பு....! சும்மா கூராக இருப்பதெல்லாம் உங்களுக்கு ராக்கெட்டா என்று கேட்கத் தோன்றுகிறதா?
சரி, அப்போ, இதையும் பாருங்கள்........!
இந்தக் காலத்தில் இருக்கும் அனைத்து விதமான விமானங்களும் அடங்கிய ஓவியம்இது. தலையே சுற்றுகிறதா..?
அத்துடன், நான் குறிப்பிடும் சம்பவங்களும், படங்களும் அறிவியலுக்கு ஒத்து வராத,மூட நம்பிக்கைகளைச் சொல்லுவதாக நீங்கள் கருதலாம். ஆனால், உலகத்தில் பல விடுவிக்கப்படாத மர்ம முடிச்சுகள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றிற்குக் காரணமாக, திடமான ஒரு முடிவை எம்மால் எடுக்க முடிவதில்லை. ஆனாலும், அந்த மர்மங்களை நாம் தெரிந்து கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லை. உலகத்தில் இப்படி எல்லாம் இருக்கின்றன என்பதே தெரியாமல் எம்மில் பலர் இருக்கிறோம். அதனால் அவற்றை முதலில் பார்த்துவிடுவோம்.
நவீன விஞ்ஞானம் இன்றிலிருந்து கிட்டத்தட்ட 400 ஆண்டுகளிலிருந்துதான் ஆரம்பித்தது. அது கடந்த 100 வருடங்களில் மிகவும் அசுரத்தனமான வேகத்தில் பிராயாணித்து, இன்று எல்லையில்லாமல் விரிவடைந்து காணப்படுகிறது. பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கண்டுபிடிக்கப்பட்டது இந்தக் காலப் பகுதிகளில்தான்.
தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) என்னும் விஞ்ஞானி 1879ம் ஆண்டுகளில் மின் விளக்கைக் கண்டுபிடித்தார் என்று எமக்குத் தெரியும். அதைத்தான் உண்மையென்றும் நாம் இன்றுவரை நம்பியும் வருகின்றோம். ஆனால், எகிப்தில் உள்ள டெண்டெரா (Temple of Hathor, Dendera) என்னுமிடத்தில், உள்ள நாலாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சுவர்களில் உள்ள சில சித்திரங்கள் எம்மை வாயடைக்கப் பண்ணியிருக்கின்றது (அந்தக் கோவிலின் படமே மேலே ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது).
அந்தக் கோவிலின் சுவரில் என்ன சித்திரம் இருந்தது என்று பார்க்கலாமா?
இவற்றைப் பார்த்தவுடனேயே, இவை இரண்டும் மின் விளக்குகள் வடிவத்தில் இருக்கின்றன என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும். அவற்றைச் சரியாகப் பாருங்கள். அந்த மின் விளக்குகளின் கீழ்ப்பகுதியில் உள்ள குமிழும், அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீண்ட இழையும் (wire), மின் விளக்கின் உள்ளே இருக்கும் எரியிழையும், எமக்கு வேறு எதையும் ஞாபகப்படுத்த முடியாது. அந்தச் சித்திரத்தை கொஞ்சம் பெரிதாகவும், அது இருக்கும் அந்தக் கோவிலின் சுவரையும் இந்தப் படங்களில் பாருங்கள்.
"என்ன விளையாடுகிறீர்களா? அது ஏதோ கத்தரிக்காய் போல ஒரு உருவத்தில் இருக்கிறது" என நீங்கள் அலறுவது புரிகிறது. கத்தரிக்காய் ஒரு மனிதன் பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இருக்காது. அத்துடன் எந்த ஒரு காயுக்கும் அடியில் உள்ள தண்டு இவ்வளவு நீளத்தில் இருக்காது. அத்துடன் அதன் நடுவே உள்ள மின்னிழை போன்ற அமைப்பும் வேறு எதிலும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த ஒரு சித்திரத்தை வைத்து இப்படிப்பட்ட முடிவுக்கு நாம் வரமுடியாது என்பது நிஜம்தான். இது போன்ற பல அமைப்புகளுடன் கூடிய சித்திரங்கள் எகிப்து பிரமிட்களில் காணப்பட்டாலும், எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்து வெறுப்பேற்ற முடியாததாகையால், குறிப்பாக நான் தரும் இந்தப் படத்தைப் பாருங்கள். உங்கள் சந்தேகம் குறைவதற்கு சாத்தியம் அதிகமாகும்.
இந்தப் படத்தில் உள்ளவையும் மின்விளக்குகள்தானா? இல்லையா? என்கிற முடிவுக்கு நீங்கள் வருவதற்கு முன்னர், அவை வெளிச்சம் தந்தால் இப்படிக் காட்சியளிக்குமா என்னும் படத்தையும் தருகிறேன் பாருங்கள்.
'இவற்றை எல்லாம் எம்மால் நம்ப முடியாது. இவையெல்லாம் வேறு ஏதோசித்திரங்கள்' என்று சொல்லி நானும், நீங்களும் இதிலிருந்து நகர்ந்து விடலாம்.ஆனால் பாக்தாத் (Baghdad) நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள், 'இல்லை, இவை எல்லாம் மின்சாரம் சம்பந்தமானவையே' என்ற முடிவுக்கு நாம் வரவேண்டிய சூழலில், எம்மை வைத்துவிட்டது.
கி.மு.250 காலங்களில் இந்தப் பொருள் வழக்கில் இருந்திருக்கிறது. அதைத் தற்சமயம் கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்களே அதைக் கண்டு கொஞ்சம் அசந்தது என்னமோ உண்மைதான். அந்தப் பொருள் என்ன தெரியுமா? பாட்டரிகள்.
"என்ன பாட்டரிகளா? கி.மு.250 வருடத்திலா?" என்றுதானே கேட்கிறீர்கள். நீங்களே பாருங்கள்.
எல்லாமே நாம் இப்போதான் கண்டுபிடித்தோம் என மார்தட்டும் எங்களுக்கு,இவையெல்லாம் மறைமுகமாக சாட்டையடிகளைக் கொடுக்கின்றன. இவை பற்றிபல மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், இவை எம்மை யோசிக்க வைக்கின்றன.உங்களையும் இப்போது யோசிக்க வைத்திருக்கும்.
சரி, இவையெல்லாம் உண்மையில் மின்சாரம் சம்பந்தமானவை என்றால், இந்த அறிவை அந்தப் பழமையான மக்கள் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள்? இந்த மாபெரும் கேள்வியுடன் நாம் எகிப்தைவிட்டு மாயனை நோக்கி நகரலாம்.
அதற்கு முன்னர் நீங்கள் வாழ்நாளில் நம்பவே முடியாத ஒரு வரலாற்றுஅடையாளம் ஒன்றை சுட்டிக் காட்டிவிட்டுச் செல்கிறேன். அதைப் பார்த்தால் என்னசொல்வதென்றே தெரியாமல் இருந்து விடுவீர்கள். ஸ்பெயினில் கி.பி.1200ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரு சர்ச்சில் உள்ள சிலையின் இந்தப் படத்தைப் பாருங்கள்.
என்ன சரியாகத் தெரியாவிட்டால் கொஞ்சம் பெரிதாகப் பார்க்கலாம்.
நவீன விண்வெளி மனிதன் ஒருவன், அதே உடைகள், காலணிகள்,தலையணிகளுடன் கி.பி.1200 ஆண்டில் கட்டப்பட்ட சர்ச்சில் இருப்பது ஆச்சரியத்தின்உச்சமல்லவா?
அந்தக் கிருஸ்தவதேவாலயம் ஸ்பெயின் நாட்டில் உள்ள 'சலமன்கா' (Salamanca) என்னும் ஊரில்இருக்கிறது. அந்தத் தேவாலயம் கட்டப்பட்டது எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர்.அதாவது கி.பி.1200 களில் கட்டப்பட்டது. அதில் எப்படி ஒரு நாசா விண்வெளிப்பயணியின் உருவம் வரமுடியும்? அதற்குச் சாத்தியம் உண்டா? எனச் சிந்தித்தால்,சாத்தியமே இல்லை எனத்தான் சொல்ல வேண்டும். அந்த உருவத்தில் இருக்கும்காலணி முதல் ஜாக்கெட் வரை எல்லாமே, தத்ரூபமாக இன்றைய நவீன விண்வெளிப் பயணி போல இருப்பது என்னவோ நெருடலான விசயம். மாயாக்களோஅல்லது எகிப்திய பிரமிட்களோ இப்படிச் சித்திரங்களைக் கொடுத்தாலும், இவ்வளவுதத்ரூபமாக கொடுக்கவில்லை.
ஆராய்ந்து பார்த்ததில் அந்த சிலை உண்மையாக 800 ஆண்டுகளுக்கு முன்னர்உருவாக்கப்பட்டதில்லை எனத் தெரிய வந்தது. இந்த தேவாலயம் 1992ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட போது, இந்த விண்வெளிப் பயணியின் சிலை ஒருபோத்துக்கேய சிற்பியால் சேர்க்கப்பட்டிருக்கிறது. எனவே அது உண்மையாக 800வருடப் பழமை வாய்ந்ததல்ல.
இதுவரை மாயாக்கள் வாழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் சுற்றித் திரிந்த நாம் இனி அவர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது நல்லது. இனி தொடர்ச்சியாக மாயாக்களின் மர்மங்களுக்குள் நாம் பிரயாணம் செய்யலாம் வாருங்கள்........!
மாயன் இனத்தவர்கள் பற்றிச் சொல்லும்போது, ஆரம்பமே மாயனின் அதிஉச்சக்கட்ட மர்மத்துடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் நீங்கள் அவற்றிற்கு உங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 'என்னடா, இந்த நபர் இவ்வளவு பில்டப் கொடுக்கிறாரே' என்று நினைக்கலாம். நான் சொல்லப் போகும் விசயம், மாயன் இனத்தின் சரித்திரத்தின் மைல் கல்லாக அமைந்த ஒன்று.உங்களை அதிர வைக்கப் போகும் விசயமும் இதுதான். உலகில் உள்ளஆராய்ச்சியாளர்களும், அறிவியலாளர்களும் இதுவரை உலகத்தில் நடைபெற்றஅனைத்து மர்மங்களின் முடிச்சுகளையும் தங்களால் இயன்ற அளவிற்கு அவிழ்த்துக்கொண்டே சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் கூடத் தோற்ற ஒரு இடம்உண்டென்றால், அது இப்போது நான் சொல்லப் போகும் விசயத்தில்தான்.
அப்படி என்னதான் அந்த விசயம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா?சொல்கிறேன்......!
மாயன் இனத்தவர் வாழ்ந்த பகுதியில் ஆராய்ச்சிக்கென வந்தவர் ஒருவரின் கண்ணில்தற்செயலாகத் தடுப்பட்ட பொருளொன்று, அதைக் கண்டெடுத்தவரை மலைக்க வைத்தது. அந்தப் பொருள் ஒரு மண்டை ஓடு…….!
"அடச் சே…..! ஒரு மண்டை ஓட்டுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தாய்?"என்றுதானே கேட்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள். முழுவதும் சொல்லிவிடுகிறேன்.ஒரு சாதாரண மண்டை ஓட்டுக்காகவா நான் இவ்வளவு பேசுவேன்.
அது ஒரு சாதாரன மண்டை ஓடே அல்ல......! அது ஒரு 'கிறிஸ்டல்' மண்டை ஓடு.
ஆம்! 'கிறிஸ்டல்' (Crystal) என்று சொல்லப்படும் மிகவும் பலம் வாய்ந்த கண்ணாடி போன்ற ஒரு முலப் பொருளினால் உருவாக்கப்பட்ட மண்டை ஓடு அது.
இது பற்றி மேலும் சொல்ல வேண்டும் என்றால் 'கிறிஸ்டல்' என்பது பற்றி நான் முதலில்கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டும். கிறிஸ்டல் என்பது சாதாரண கண்ணாடியைவிட வலிமை வாய்ந்த, கடினமான ஒரு மூலப் பொருள். கண்ணாடியிலும் கிறிஸ்டல்உருவாக்கப்படும் என்றாலும், 'குவார்ட்ஸ்' (Quartz) போன்ற பலம் வாய்ந்த மூலப்பொருள்களினாலும் அது அதிகம் உருவாக்கப்படுகிறது. இந்த வகைக் கிறிஸ்டலைவெட்டுவது என்பது, இன்றைய காலத்திலேயே, மிகக் கடினமானது. வைரம்போன்றவறால்தான் அதை வெட்ட முடியும். அல்லது நவீன 'லேசர்' (Laser) தொழில்நுட்பத்தினால் வெட்டலாம்.
சரி, மீண்டும் எங்கள் கிறிஸ்டல் மண்டையோட்டுக்கு வருவோமா!
'மிச்செல் ஹெட்ஜஸ்' (Mitchell-Hedges) என்பவர் 1940 களில் மிகவும் பிரபலமான ஒருபுதைபொருள் ஆராய்ச்சியாளராக இருந்தவர். அவரது வளர்ப்பு மகளின் பெயர் அன்னாஹெட்ஜெஸ் (Anna Hedges). 1924ம் ஆண்டு மிச்செல், மாயா இனத்தவர் வாழ்ந்தஇடங்களை ஆராய்வதற்காக, லுபாண்டூன் (Lubaantun) என்னுமிடத்தில் அமைந்த மாயன் கோவிலுக்குச் சென்றார் (தற்போது பெலிட்ஸே (Belize) என்னும் நாடாக அது காணப்படுகிறது). அங்கே ஒரு பிரமிட்டின் அருகே அன்னாவின் காலடியில் இந்தக்கிறிஸ்டல் மண்டை ஓடு தட்டுப்பட்டது. அப்போது அன்னாவுக்கு வயது பதினேழு.
அன்னாவினால் கண்டெடுக்கப்பட்ட அந்த மண்டை ஓடுதான் இது……!
அன்னாவால் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு எத்தனை வருசம்பழமையானது தெரியுமா…? 5000 வருசங்களுக்கு மேல். அதாவது மாயன் இனத்தவர் வாழ்ந்த காலங்களுக்கு முந்தையது இந்த மண்டை ஓடு. இந்தக் கிறிஸ்டல்மண்டை ஓடு மிக அழுத்தமாக, அழகாக, வட்டவடிவமாக தேய்க்கப்பட்டு, பளபளப்பாகசெதுக்கப் பட்டிருக்கிறது. அன்றைய காலத்தில், ஒரு மாயன் ஒரு நாள் முழுவதும் இந்த மண்டை ஓட்டைச் செதுக்க ஆரம்பித்திருந்தால், அவனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே இந்த மண்டை ஓட்டைச் செதுக்கி முடிக்க எடுத்திருக்கும்.அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தது அந்த மண்டை ஓடு.
இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த 'ஹூவ்லெட் பக்கார்ட்' (Hewlett Packard)நிறுவனத்தினர், குவார்ட்ஸ் (Quartz) வகைக் கிறிஸ்டலினால் இந்த மண்டை ஓடு செய்யப்பட்டிருப்பதாகவும், நுண்ணிய மைக்ரோஸ்கோப்களினாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி, அது எப்படிச் செய்யப்பட்டது, எந்த ஆயுதத்தினால் செய்யப்பட்டது என்று திணறும் அளவுக்கு, மிக நேர்த்தியாக செய்யப்பட்டும் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர்.
எந்த ஒரு கருவியும் கண்டு பிடிக்கப்படாத காலத்தில், அவ்வளவு வலிமையான ஒருபதார்த்தத்தால் ஒரு மண்டை எப்படி உருவாக்கி இருப்பார்கள் மாயன்கள்? இதுசாத்தியமான ஒன்றுதானா? இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தவர்கள் சிலர், இது லேசர்தொழில்நுட்ப முறையினால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள்.காரணம் அதை உருவாக்கிய அடையாளம் அதில் எப்படிப் பபார்த்தாலும் தெரியவில்லலை. லேசர் தொழில் நுட்பம் 5000 ஆண்டுக்கு முன்னால் இருந்ததுஎன்றால் நீங்களே சிரிப்பீர்கள். அப்படி என்றால் இது எப்படி? இன்றுள்ள மனிதனால் கூட,நவீன கருவிகள் இல்லாமல் இப்படி ஒரு மண்டை ஓட்டைச் சாதாரணமாக உருவாக்கமுடியாது.
இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடுகள் பற்றிய செய்தி இவ்வளவுதானா என்று கேட்டால்,நான் சொல்லும் பதிலால் நீங்கள் அதிர்ந்தே போய் விடுவீர்கள். அவ்வளவு மர்மங்களைஅடக்கிருக்கிறது இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு. இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடுகிடைத்ததற்கு அப்புறம், மாயன் சரித்திரத்தை இந்தத் திசையில் ஆராய்ந்தால்கொட்டுகிற செய்திகள் அனைத்துமே நாம் சிந்திக்க முடியாதவையாக இருக்கின்றன.இது பற்றி மேலும் சொல்வது என்றால் சொல்லிக் கொண்டே போகலாம் என்னும்அளவுக்கு மிகப்பெரிய செய்திகளை அடக்கியது இந்த மண்டை ஓடு.
இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓட்டை அடிப்படையாக வைத்து, 2008ம் ஆண்டு'இன்டியானா ஜோன்ஸ் அன்ட் த கிங்டொம் ஆஃப் த கிறிஸ்டல் ஸ்கல்' (Indiana Jones and the Kingdom of the Crystal Skull) என்னும் படம் வெளியானது. இந்தப் படத்தில் பிரபலஹாலிவுட் நடிகர் ஹரிசன் போர்ட் (Harrision Ford) நடித்திருக்கிறார். அத்துடன் இந்தப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg).
முடிந்தால் இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்தில் வரும் பாத்திரம் என்பதுஉண்மையாகவே இருந்த ஒரு பாத்திரம். அவர்தான் மேலே நான் சொல்லிய மிச்செல் ஹெட்ஜெஸ்.
இவ்வளவு ஆச்சரியம் வாய்ந்த மண்டை ஓடு மாயாக்களால் எப்படிச்சாத்தியமானது….?
குவார்ட்ஸ் என்னும் கனிமத்தை எப்படி மாயாக்கள் எடுத்தார்கள்…..?
அதை எப்படி மண்டை ஓடு போலச் செதுக்கினார்கள்…..?
மாயாக்கள் என்ன, மனிதனாலேயே சாத்தியமில்லாத ஒன்றல்லவா இது!
அப்படிப்பட்ட மண்டை ஓடு ஒன்றே ஒன்றுதானா....?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நடுவில், அன்னாவின் கிறிஸ்டல் மண்டை ஓட்டின் பின்னர், பலர் ஆராய்ச்சிக்குக் கிளம்பினார்கள். மேலதிக ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இது போன்ற மண்டை ஓடுகள் வெவ்வேறு இடங்களில் இருப்பது தெரிந்தது.மொத்தமாக எட்டு கிரிஸ்டல் மண்டை ஓடுகள் அடுத்தடுத்துக் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த எட்டு மண்டையோடுகளில் பெரும்பான்மையானவை, குவார்ட்ஸ் என்னும்கனிமத்தினாலும், சில 'அமெதிஸ்ட்' (Amethyst) என்னும் ஆபரணங்கள் செய்யும் ஒருவகை இரத்தினக் கல்லாலும் செய்யப்பட்டவையுமாகும்.
அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட எட்டு கிறிஸ்டல் மண்டை ஓடுகளும் இவைதான்.
மேலும் மாயன் சரித்திரங்களை ஆராய்ந்தபோது, இப்படிப்பட்ட மண்டை ஓடுகள்மொத்தமாக பதின்மூன்று இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொண்டார்கள். அப்படி என்றால் இந்தப் பதின்மூன்று மண்டை ஓடுகள் இருப்பதற்குஒரு காரணம் இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்தக் காரணம் என்ன….? மிகுதி ஐந்துமண்டை ஓடுகளும் எங்கே போயின? அவை கிடைத்தால் எமக்கு ஏதாவது நன்மைகள்உண்டா?
இந்தக் கேள்விகளின் பதில்களோடும், மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில்சந்திக்கலாம்.
தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...
புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-3
புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-4.
'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-5.
'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-6.
'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்-7.
No comments:
Post a Comment
welcome ur comment,