நரகமான ஒரு நகரம்.... மறக்க முடியுமா போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை?
கலப்படமில்லாத உணவு என்று தாய்ப்பாலை சொல்வார்கள். இயற்கையின் அந்தக் கொடையையும் விஷமாக்கிய அந்தக் கொடூரம் இந்தியாவில் அரங்கேறி, சரியாக 35 ஆண்டுகள் முன் இதே நாளில். ஆம், உலகின் சுற்றுச்சூழல் சீர்கேடு அழிவிற்கு மிகப்பெரும் மரண சாட்சியான போபால் விஷவாயு விபத்துதான் அது.
இருபதாம் நூற்றாண்டின் கொடும் விபத்தான போபால் விஷவாயு கசிவு, உலகின் மோசமான பேரழிவு நிகழ்வுகளில் இன்றளவும் முதலிடத்தில் இருக்கிறது. 1984 டிசம்பர் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபால் நகரத்தின் வீதி விளக்குகள் மின்னத்துவங்க, மக்கள் தங்கள் வீடுகளின் விளக்குகளை அணைத்துவிட்டு உறங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். 900,000 மக்கள் வசித்துவரும் அந்த நகரம், சிறப்பானதொரு தொழிற் நகரமும் கூட.
அதற்கு 4 வருடங்களுக்கு முன்புதான், அமெரிக்காவை சேர்ந்த யூனியன் கார்பைடு கழகத்தின் உதவியால் பூச்சிக்கொல்லி தயாரிக்கும் [Pesticide] ரசாயனக் கூடம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இரவின் உறக்கத்தினிடையே அந்த நிறுவனம் வழக்கமான தனது இரவுப்பணியை துவக்கியிருந்தது. இரவு 9:30 மணிக்கு இரண்டாம் ஷிப்ட் அதிகாரியின் உத்தரவுப்படி, பணிகள் நடந்துகொண்டிருந்தன.
போபால் கூடத்தில் 15,000 காலன் கொள்ளளவு கொண்ட E610, E611, E619 என்ற மூன்று மிக் கலன்களில் இரண்டில்தான் எப்போதும் மிக் திரவம் இருக்க வேண்டும். ஒரு கலன் அவசியம் காலியாய் இருக்க வேண்டும்.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று மூன்று கலன்களிலும் மிக் நிரப்பப்பட்டிருந்தது. பணியாளர் ஒருவர் E610 அடையாளமிட்ட மிக் கலனை இணைக்கும் வால்வை மட்டும் மூடி, நீரைச் செலுத்தினார். பராமரிப்புப் பணியில் வாடிக்கையாகப் பைப்பைக் கழுவப் பயன் படுத்திய நீர் எதிர்பாராதவாறு, 13000 காலன் மிக் நிரப்பப்பட்ட E610 கலனில் தெறித்து கொட்டியது. மிகச்சிறிய கவனக்குறைவு, உலகையே அச்சுறுத்திய பேரழிவாக மாறித்தொடங்கியது அந்த நிமிடத்திலிருந்துதான்.
மிக் ரசாயனம் மிகவும் வீரியமானது. கொடிய நச்சுத்தன்மைகொண்ட இது நீருடன் கலந்தால் தீவிர வெப்பத்தை வெளியாக்கும் தன்மை கொண்டது. மொத்தத்தில் மிக், 'மரண மூட்டும் விஷ ரசாயனம் ' என்கிறது வேதியியல் நூல் ஒன்று. எப்போதாவது இப்படி வால்வுகளில் கசிவு நிகழும்போது பாதுகாப்பு நடவடிக்கையாக வட்டத் தட்டை இடையில் நுழைத்து [Isolation with Blind Flange] கலன் தனித்து விடப்பட வேண்டும். ஊழியருக்கு அது நன்கு பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்று பணியாளர் கவனக்குறைவாக தட்டை அமைத்துக் கலனைத் தனித்து விடவில்லை. கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கும் இது வரவில்லை. பைப்பைக் கழுவ நீர் திறக்கப்பட்டு செலுத்தப்பட்டது.
கொஞ்ச நேரத்தில் மிக் கலனின் அழுத்தம் 2 psi ஐ தொட்டுநின்றது. 11 மணிக்கு இரவு ஷிப்ட் குழு வந்தபோது அழுத்தம் 10 psi ஆகக் கலனில் ஏறியிருந்தது. அழுத்தமானியின் எச்சரிக்கையைக்கூட இரவுப்பணி அதிகாரி அலட்டிக்கொள்ளவில்லை. இன்னும் சில மணித்துளிகளில் உலகை உலுக்கிப்போடப்போகும் விபத்தை தடுத்து நிறுத்த கிடைத்த கடைசி சந்தர்ப்பத்தை அந்த கணத்தில் தவறவிட்டார் அந்த அதிகாரி. 12:40 நள்ளிரவில் அழுத்தம் 40 psi என உச்ச நிலையை அடைந்திருந்தது. தாங்கமுடியாத அழுத்தத்தால் கலன் உப்பி உடைய ஆரம்பித்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது சரியாக இரவு மணி 12:45.
கலனின் உஷ்ணம் கூடியிருந்ததை கண்ட அவர், நடக்கவிருக்கும் விபரீதத்தை ஓரளவு யூகித்துக்கொண்டார். விடுவிடுவென முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மற்ற பணியாளர்களை ஆயத்தப்படுத்துவங்கினார். ஆனால் எல்லோரும் கண்களை கசக்கியபடி ஏதும் செய்யமுடியாதவர்களாக இருந்தனர். அதற்குள் விஷ வாயு கட்டுப்படுத்த முடியாத நிலையில் காட்டுத் தீ போல் பரவியது. அங்கிருந்த 120 அடி உயரப் புகைபோக்கியில் மேல் மட்டத்தில் வாயு பிதுங்கி வெளியேறியது. யோசிக்க நேரமின்றி அதிகாரிகள் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காட்டு வெள்ளமாய் கட்டுப்படுத்தமுடியாமல் கிளம்பிய அதன் மீது நீரை பீய்ச்சி அடித்தும், மீறிக் கொண்டு வானில் மிதந்தது மிக் வாயு. காற்றைவிடக் கனமானது என்பதால் கொஞ்சநேரத்தில் காற்றின் தாக்கத்தினால் தாழ்ந்து தரை மட்டத்தில் பரவ ஆரம்பித்தது வாயு. 1:30 மணிக்கு அபாய சங்கு இயக்கப்பட்டது. சில நிமிடங்களில் போபால் மரண நகரமானது. ஆயிரக்கணக்கானோர் உறக்கத்திலேயே உயிர் துறந்தனர். விழித்துக்கொண்ட சிலரும் கண்ணெரிச்சல், நெஞ்செரிச்சல் என உடல் உபாதைகளுடன் கொஞ்சநேரத்தில் தெருவிலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். மருத்துமனைகள் நிரம்பி, விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் தெருவில் கிடத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.
தங்களுக்கு நேர்ந்தது என்னவென்று அறியாமலேயே ஆயிரக் கணக்கானோர் மாண்டனர். உலகின் மோசமான ரசாயன விபத்து என வரலாற்றில் இடம்பெற்றது போபால் சம்பவம். போபால் சம்பவம் நடந்து கிட்டதட்ட 32 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் ஏற்பட்ட பாதிப்பின் பின்விளைவுகளும் சோகமும் இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விசாரணையில், போபால் நிறுவனத்திலிருந்து வெளியேறி மக்களைக் கொன்றது 40 டன் மிக் விஷ வாயு என கணக்கிடப்பட்டது.
பாதிப்பின் சோகம் தொடர்ந்ததற்கு காரணம் மண்ணிலும் காற்றிலும் தேங்கிய மிக் விஷவாயு. மிக் வாயு நாம் சுவாசிக்கும் காற்றை விடக் கனமானதால், அது மேல்நோக்கி செல்லாமல் முழுவதும் தளப்பரப்பை நோக்கியே வழிந்து தேங்கியதாலேயே அது மனிதர்களுக்கு பெரும் நாசத்தை விளைவிக்க காரணமானது. வாயு வெளியேறிய நான்கு மணி நேரத்தில், தன் கொடூரத்தை அரங்கேற்றி முடித்தது மிக் வாயு.
தூக்கத்தில் இறந்தவர்கள் 4000 பேர், Fibrosis, Brochial Asthma, Chronic Obstructive Airways Disease, Emphysema, Recurrent Chest Infections, Pulmonary Tuberculosis என இன்று வரை உடல் உறுப்புகளை இழந்து தவிப்பவர்கள் மற்றும் நிரந்தர நோயாளிகள் 400,000 பேர் என்கிறது இந்த விபத்து குறித்த ஒரு அறிக்கை. நாளாக நாளாக தங்கள் பார்வையை இழந்தவர்கள் பெரும்பாலோனோர். வாயு தாக்கத்தினால் அப்பகுதியில் இருந்த கர்ப்பிணிகளுக்கு குழந்தை இறந்து பிறந்தது. பலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்தடுத்த வருடங்கள் உடல்குறைபாடுகளுடனேயே பிறந்தன குழந்தைகள்.
உலகின் மாசற்ற உணவு என்கிற தாய்ப்பாலையும் மிக் வாயு விட்டுவைக்கவில்லை. ரசாயனக் கூடத்தின் அருகில் வாழ்ந்த பெண்களின் தாய்ப்பாலில் பாதரசம், ஈயம், ஆர்கனோ குளோரின் (Mercury, Lead, Organo-Chlorines] இருந்ததாக, 2002 பிப்ரவரி கிரீன்பீஸ் அறிக்கை [Greepeace Report] ஒன்று அதிர்ச்சி தகவலை கூறியது. போபால் விபத்து சுற்றுச்சூழல் பேரழிவை மட்டுல்ல, அரசு இயந்திரத்தின் அவலட்சணத்தையும் உலகிற்கு சொன்னது அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் மூலம். போதிய மருத்துவமனைகள் இன்றி, மருத்துவக் கண்காணிப்புகள் இன்றி, பாதிக்கப்பட்டோர் நஷ்ட ஈடு பெற வழிகாட்டுதல்கள் இன்றி, நிதி உதவி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியாக பெற்றுத்தரவேண்டிய நீதியைக்கூட அரசு அலட்சியம் செய்தது. இந்தியா நெருக்கடி நிலையில் தத்தளித்த ஒருநாளில்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு (அக்டோபர் 31, 1975) அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் தலையீடு மற்றும் அரசு இயந்திரம் ஸ்தம்பித்த ஒருநாளில், விதிகளை மீறி வழங்கப்பட்ட இந்த அனுமதி லட்சக்கணக்கான உயிர்களின் விதியோடு விளையாடி முடிந்தது.
போபால் விஷ வாயுக் கசிவு மாபெரும் மனிதத் தவறுகளாலும், முக்கிய பாதுகாப்பு இயந்திரங்கள் இயங்காமல் பராமரிப்பில் முடங்கியதாலும் ஏற்பட்டதென பின்னாளில் விசாரணையில் தெரியவந்தது.
செய்யும் பணி குறித்த அறிவற்ற பணியாள் ஒருவனின் அஜாக்கிரதை, முடங்கிக் கிடந்த இயந்திரங்கள், பணிகளை முறைப்படுத்தவேண்டிய கண்காணிப்பாளரின் அசட்டை, ஆபத்து கால தீவிர அபாய சங்கு ஒலி வழக்கமாக முறையிலேயே ஒலித்ததால் மக்கள் காட்டிய அலட்சியம், படிப்பறிவற்ற வேலையாட்கள் போதிய பாதுகாப்பு அம்சங்களை தெரிந்துகொள்ளாதிருந்தது போன்றவை போபால் விபத்துக்கு காரணமானது. போபால் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் முழுப் பொறுப்பையும் யூனியன் கார்பைடு நிறுவனம் ஏற்றுக் கொண்டது.
அனைத்து பாதிப்புகளுக்குமாக சுமார் 500,000 பேர் நஷ்ட ஈடு பெற தகுதியுடையவர்கள் என கணக்கிடப் பட்டது. 1989 பிப்ரவரி 24 ம் தேதி, யூனியன் கார்பைடு நிர்வாகம் 470 மில்லியன் டாலர்களை இந்திய அரசிடம் ஒப்படைத்தது. இதன்பின்னணியில் இருந்த அரசியல் பின்னாளில்தான் தெரியவந்தது. ஆம் இந்த வழக்கின் குற்றவாளியான வாரண் ஆண்டர்சன் வசதியாக தன் நாட்டுக்கு தப்பிச்செல்ல, அப்போதைய மத்திய அரசு உதவி செய்திருந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, போபால் மக்களை நிரந்தரமாக பராமரித்து சிகிச்சையளிக்க யூனியன் கார்பைடு 1991 அக்டோபரில், 17 மில்லியன் டாலர் செலவில் ஒரு மருத்துவமனையை போபாலில் கட்ட ஒப்புக் கொண்டது. வழக்கு விசாரணை நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. இது தொடர்பாக 1996 ல் நீதிபதி அஹமதி வழங்கி தீர்ப்பு மூலம், போபால் விஷயவாயு வழக்கு கொலைப் பாதகச் செயலுக்கான தண்டனையிலிருந்து சாதாரண கவனக்குறைவால் ஏற்படும் பிரிவின் கீழ் மாற்றப்பட்டது. (304 பி-யிலிருந்து 304 ஏ ) (Culpable Homicide to Criminal Negligence).
வழக்கு விசாரணைக்காக 2002 ஆகஸ்டு மாதம் போபால் நீதிமன்றம், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான வாரன் ஆன்டர்ஸனை குற்ற விசாரணைக்கு ஆஜராக வாரண்ட் பிறப்பித்தது. நீதிமன்றம் ஆண்டர்சனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. தகவலறிந்த வாரன் ஆன்டர்ஸன், தன் அமெரிக்க இல்லத்திலிருந்து தலைமறைவானார். இறுதிவரை வாரன் ஆண்டர்சனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த மத்திய அரசு முன்வரவில்லை. இடையில் ஆண்டர்சன் இருக்கும் இடத்தை உள்துறை மோப்பம் பிடித்த பின்னும் அது கிடப்பில் போடப்பட்டது.
இந்தியாவை உலுக்கிய இந்த கோர படுகொலைக் குற்றத்தை, நிர்வாகப் புறக்கணிப்பு என அறிவித்து மெளனமாய் இருந்து விட்டது. நிவாரண உதவிகளும் அவர்களுக்கு முறையாக சென்று சேரவில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் இன்றளவும் இதன் தாக்கம் அந்த மண்ணில் எதிரொலித்தபடியே இருக்கிறது.
இதற்காக இந்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்திடமும் கோரிக்கை வைத்தது. முதலில் ஒப்புக்கொண்ட குஜராத் அரசு, அம்மாநில மக்களின் போராட்டத்தால் இடம்தர மறுத்து விட்டது. நாக்பூரில் அனுமதி கேட்கப்பட்டு அங்கும் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இன்றுவரை இந்த பிரச்னை தொடர்கிறது.
இந்நிலையில் மிகப்பெரும் படுகொலை நிகழ்த்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ஆண்டர்சன், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையிலேயே தேடப்படும் குற்றவாளியாகவே தன் நாட்டில் மரணமடைந்தார்.
மக்களின் மீதான இந்திய அரசுகளின் அலட்சியம், வளைவு நெளிவுகளோடு உறுதியற்ற இந்திய சட்ட நெறிமுறைகள், ஆளும் வர்க்கம் முதலாளி வர்க்கத்தோடு கைகோர்த்துக்கொண்ட போலி ஜனநாயகம் ஆகிய மூன்றின் சாட்சியாக இந்திய வரைபடத்தில் ரத்தக்கறையுடன் போபால் நகரம் காட்சியளிக்கிறது.
|- எஸ்.கிருபாகரன்