Friday, October 18, 2019

மித்தி பாகிஸ்தானில் இப்படி ஒரு ஊரா?

மித்தி பாகிஸ்தானில் இப்படி ஒரு ஊரா?


ஒரு இந்து பெண்ணா இப்படி சொல்வது ?

அந்த  இஸ்லாமிய பெரியவர்களால் அதை நம்பவே முடியவில்லை :
"அம்மா, நீங்கள்
நிஜமாகத்தான்
சொல்கிறீர்களா ?"

அந்தப் பெண் உறுதியான குரலில் சொன்னார்:
"ஆமாங்க பாய் , நமது ஊரில் உள்ள  மசூதியை இன்னும்  பெரியதாக கட்டுவதற்கு ,   நீங்கள் திட்டம் போட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன்.
என் இடம் அதற்கு  பக்கத்தில்தானே இருக்கிறது. அதையும் உங்கள் இடத்துடன் சேர்த்து பெரிதாக கட்டுங்கள் . இது என்னுடைய நன்கொடையாக இருக்கட்டும். "

இதை சொல்லி விட்டு அந்தப் பெண்மணி  அங்கிருந்து போய் விட்டார்.

அந்த இடத்தில் கூடி இருந்த முஸ்லிம் பெரியவர்கள் அனைவரும் கண்களில் நீர் மல்க, அருகில் இருந்த மசூதிக்கு சென்று , மண்டியிட்டு  மனம் உருகி , அந்த  இந்து சகோதரிக்காக
தொழ ஆரம்பித்தார்கள்.

இது நடந்தது நம் பக்கத்து நாடான பாகிஸ்தானில் !

கராச்சியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் மித்தி.

அங்குதான் இந்துக்களும் , இஸ்லாமியர்களும் இப்படி  பல ஆண்டு காலமாக ஒற்றுமையுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சுமார் 80 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த ஊரில் 70 சதவீதத்திற்கு மேல் இந்துக்கள்தான் வசிக்கிறார்கள்.

கோவிலில் பூஜை நடக்கும்போது , மசூதியில் ஒலிபெருக்கி வைப்பதில்லை.
அது போல மசூதியில் தொழுகை  நடக்கும்போது  கோவிலில் மணி அடிப்பதில்லை.

அந்த ஊரிலுள்ள  இஸ்லாமிய பெரியவர்  ஹாஜி முகம்மது இப்படிச் சொல்கிறார் :

"இந்துக்கள் தீபாவளி கொண்டாடும் போது எங்களை அழைப்பார்கள். நாங்கள் ஈகைத்திருநாளை கொண்டாடும் போது அவர்களை அழைக்கிறோம்.

ரம்ஜான் நோன்பு காலங்களில் , எங்கள் கண்களில் படும்படியாக இந்து சகோதரர்கள் சாப்பிடுவதில்லை.
சொல்லப்போனால் எங்களோடு சேர்ந்து அவர்களில் சிலரும் நோன்பு இருப்பார்கள்."

எல்லாம் சரி ! அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் எப்படி ?

ஒரு சிலர் அவ்வப்போது மதபேத வம்பு வழக்குகளை   ஆரம்பிப்பது  உண்டாம்;
ஆனால்  இரு தரப்பு பெரியவர்களும் அதை ஆரம்ப கட்டத்திலேயே
அடக்கி விடுவார்களாம்.

மித்தி.

பாகிஸ்தானில் இப்படி ஒரு ஊர் இருப்பது , இன்றுதான் எனக்கு தெரியும் .

மித்தியில் உள்ள இந்து கோவிலின் படத்தையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன் !

அரசியல்வாதிகளிடமிருந்தும் , மதவாதிகளிடமிருந்தும் இந்த ஊரை காப்பாற்றி வரும் இந்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி !

John Durai Asir Chelliah

No comments:

Post a Comment

welcome ur comment,