Friday, September 13, 2019

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை என்று ஏன் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகிறது தெரியுமா?

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை என்று ஏன் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகிறது தெரியுமா?

 நிலத்துக்கு அடியில் சில முக்கியமான படலங்கள் சந்திக்கும் இடமாக கிரீஸ் இருக்கிறது. ஐரோப்பிய நிலத்தடிப் படலமும், ஆப்ரிக்க நிலத்தடிப் படலமும் சந்திக்கும் இடமாக கிரீஸ் இருப்பதால், அங்கு எரிமலைகளும், நில நடுக்கங்களும் அவ்வப்போது தோன்றுகின்றன. எப்போது எந்தவிதமான இயற்கைப் பேரழிவு நடைபெறுமோ என்ற பயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.


  இதன் காரணமாகவோ என்னவோ அவர்களது மதமும் சில சுவாரசியங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அந்த மதத்தை ஆரகிள்ஸ் என்கிறார்கள். இதன்படி கடவுளர் நேரடியாகவே மக்களுடன் பேசுவார்கள். அப்படிப் பேசும் முறைகளில் ஒன்றுதான் சின்னச் சின்ன நில நடுக்கங்கள். இவற்றின் மூலமாகவும் இவற்றைத் தொடர்ந்தும் கடவுள் மக்களிடம் பேசுவார் என்று நம்பப்படுகிறது.


 கடவுள் இயற்கைச் சீற்றங்களின் மூலம் மறைமுகமாகப் பேசினாரோ என்னவோ, கிரீஸ் நாட்டின் தொடக்க காலத்தில் அங்கு வெடித்த ஓர் எரிமலை அந்த நாட்டின் சரித்திர மாற்றத்தில் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. அந்த நாட்டில் சன்டோரினி என்ற தீவு ஒன்று உண்டு. அங்கு எரிமலை ஒன்று கி.மு.1400ல் வெடித்தது. இது அலைகளை ராட்சத அளவுக்கு உயர்த்தியதுடன், நில நடுக்கத்தையும் ஏற்படுத்தியது. இவற்றின் பயங்கர விளைவால் அதுவரை அங்கு நிலவிய மினோவன் எனப்படும் நாகரீகம் முற்றிலுமாக அழிந்தது.



 கி.மு. 776-ல் முதல் ஒலிம்பிக் விளையாட்டுகள் கிரீஸில் நடைபெற்றன. அவை நடைபெற்ற நகரம் ஒலிம்பியா (அதனால்தான் ஒலிம்பிக்ஸ் என்று பெயர்).



 ஒலிம்பிக்ஸுக்கும், மதத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கி.மு. பத்தாம் நூற்றாண்டில் வழிபாட்டுக்காக மக்கள் கூடிய இடம்தான் ஒலிம்பியா. அங்கு ஜியஸ் என்ற கடவுளின் ஆலயமும் இருந்தது.


 ஒலிம்பியாவில் உள்ள மைதானத்தில் ஒரே சமயத்தில் 40 ஆயிரம் பேர் உட்கார்ந்து போட்டிகளைக் கண்டு ரசிக்கலாம்.

 பண்டைய ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்றவர்களுக்கு பனைமரக் கிளை ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. தலையில் சிகப்பு ரிப்பன் கட்டப்பட்டது. பார்வையாளர்கள் வெற்றியாளர்களை நோக்கி பூக்களை எறிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பந்தயத்தின் இறுதி நாளில் இந்தப் ‘பரிசு வழங்கும் விழா’ ஜியஸ் ஆலயத்தில் உயரமானதொரு மேடையில் நடைபெற்றது.


 இந்த விளையாட்டுப் போட்டிகளில் மெகரா என்ற தளபதியும் பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டார். மாசிடோனியாவின் இளவரசனும், ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கெடுத்துக் கொண்டார். டெமாக்ரிடஸ் என்ற தத்துவ ஞானியும் பங்கெடுத்துக் கொண்டார். பாலினிஸ்டோர் என்ற ஆட்டு இடையனும் பங்கெடுத்துக் கொண்டார்.

 ஆஹா என்னவொரு சமத்துவம் என்று நீங்கள் வியப்படையும்போதே  மற்றொன்றையும் கூறிவிடுவதுதான் நியாயம்.


 பெண்கள் யாருமே ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கெடுத்துக் கொள்ள முடியாது. முழுக்க முழுக்க அது ஆண்களின் களனாகவே விளங்கியது.

 இதைவிடக் கொடுமை திருமணமான பெண்கள் ஒலிம்பிக் பந்தயங்களைப் பார்ப்பதற்கும் தடை விதிக்கப் பட்டிருந்தது. திருமணமாகாத பெண்கள் போட்டிகளைக் காணலாம்.

 பெண்களுக்கு அங்கீகாரம் என்ற கோணத்தில் ஒரே ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. குழந்தைச் செல்வத்தின் கடவுள் என்று கிரேக்கர்களால் வழிபடப்பட்ட பெண் தெய்வம் டெமீடர். அந்த பெண் தெய்வத்தின் கோவிலுக்கு பூசாரியாக ஒரு பெண் மட்டுமே நியமிக்கப்பட முடியும். அந்தப் பெண் பூசாரிக்கு மட்டுமே ஒலிம்பிக் பந்தயங்களின்போது சிறப்பிடம் உண்டு.

 ஆனால் கைநிஸ்கா என்ற பெண்மணிக்கு ஒலிம்பிக் விருது வழங்கப்பட்டது. ஸ்பார்ட்டா என்ற பகுதியின் மன்னனான ஆர்கிடமோஸின் மகள் இவள். போட்டியில் கலந்து கொள்ள இவளரசிக்கும் தடைதான். என்றாலும் அவள் விருது பெறுவதைத் தடுக்க முடியவில்லை. அவர் அரச வம்சத்தைச் சேர்ந்தவள் என்பது காரணமல்ல. இதன் பின்னணியே வேறு.


 குதிரை ஏற்றப் போட்டிகளிலும் (குதிரை களால் இழுக்கப்பட) ரதப் போட்டிகளிலும் வென்றால், அந்தக் குதிரை ஓட்டிகளுக்கோ, ரதத்தை ஓட்டியவர்களுக்கோ பரிசு கிடை யாது. அந்தக் குதிரைகளின் சொந்தக்காரர் களுக்குதான் பரிசு. அந்த விதத்தில்தான் கைநிஸ்கா முதல் ஒலிம்பிக்ஸில் விருது பெற்ற பெண்மணி என்ற சிறப்பை அடைந்தார். இன்னொரு விஷயம் யாருக்கும் தெரியாமலோ, ஆண் உடை அணிந்தோ எந்தத் திருமணமான பெண்மணியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்து விட்டால், அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை எது தெரியுமா? மரண தண்டனைதான்.

 எதற்காகத் தொடக்கத்திலிருந்தே நான்கு வருடங்களுக்கு ஒரு முறை என்று ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுகிறது தெரியுமா? அக்காலத்தில் காலத்தை ஒலிம்பியார்டு என்ற கணக்கில்தான் அளந்தார்கள். இது நான்கு வருட இடைவெளிகளை அடிப்படையாகக் கொண்டது. அவ்வப்போது அண்டை நாடுகளுடனும், உள் நாட்டிலும் போர்கள் நடந்து கொண்டிருந்ததால், நான்கு வருடத்திற்கு ஒரு முறை என்பது வசதியாக இருந்தது.

தகவல்
தமிழ் ஹிந்து.

No comments:

Post a Comment

welcome ur comment,