Tuesday, January 12, 2016

ஓரியன் விண்தொகுப்பும் மாயன்களும் .

ஓரியன் விண்தொகுப்பும் மாயன்களும் .


ரேடியோ மற்றும் ரேடார் வானியல் குறித்தெல்லாம் கி. பி. 1945 க்குப் பிறகுதான் விஞ்ஞான உலகம் தெரிந்துகொண்டது. அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மாயர்கள் எப்படிப் பால்வழி விண்கூட்டம் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள்?  விடை தெரியாத ஆச்சரியம் இது!

ஓரியன் விண்தொகுப்பு (Orion Constellation) என்பது மிகப் பிரகாசமான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்று. தமிழில் ஓரியனைப் பிரஜாபதி என்று சொல்கிறார்கள். இது வேடன் வடிவம் கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது. அவன் கையில்  வாள்போல் ஒரு பகுதி தெரியும். இந்தப் பகுதியின் பெயர் ஓரியன் நெபுலா.


பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான், ஓரியன் நெபுலா வானியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் புகைப்படமே 1880ல் தான் முதன் முதலாக எடுக்கப்பட்டது.

ஆனால், மாய நாகரிகப் பழங்கதைகளில் ஓரியன் விண்தொகுப்பு, நெபுலா ஆகியவற்றின் வர்ணனைகள் காணப்படுகின்றன. இவை புகைப்படம் காட்டும் தோற்றங்களோடு ஒத்தும் போகின்றன. விடை இல்லாத இன்னொரு ஆச்சரியம்!


மாயர்கள் நாகரிக வரளாற்றின் மைல்கற்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் இவைதாம்:

*    கி. மு. 11000
மாயப் பகுதிகளில் மக்கள் முதன் முதலாகக் குடியேறத் தொடங்கினார்கள். இவர்கள் அக்கம் பக்க நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை வேட்டையாடி, அவற்றைச் சமைக்காமல், பச்சையாகச் சாப்பிட்டு  வாழ்ந்தார்கள்.
*    கி. மு. 2000
மாய நாகரிகம் தொடங்குகிறது. மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.
*    கி. மு. 700
மாயர்களின் எழுத்துக்கள் தொடங்குகின்றன. இவை சித்திர எழுத்து வகையைச் சேர்ந்தவை. அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல், பட அமைப்புடைய எழுதுதல் முறை.
*    கி. மு. 400
கி. மு. 400- ன் கல்வெட்டுகளில் மாயர்கள் கண்டுபிடித்த நாள்காட்டிகள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தக் காலகட்டத்திலோ அல்லது இதற்கு முன்பாகவோ, காலண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்.
* கி. மு. 300
மன்னர்கள், பிரபுக்கள், பூசாரிகள் என ஆட்சிமுறை சீராக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிகளுக்குமான பொறுப்புகள், அதிகாரங்கள் ஆகியவை வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
*    கி. மு. 100
டேயோட்டிவாக்கான் (Teotihuacan) என்ற நகரம் மாயர்களால் உருவாக்கப்படுகிறது.
இந்த நகரம் இன்றும் இருக்கிறது. கலை, மதம், வாணிபம் ஆகிய செயல்பாடுகள் இங்கே செழித்து வளர்ந்தன. பிரமிட்டுகள், கோயில்கள், அரண்மனைகள், பொதுச் சதுக்கங்கள் பிரம்மாண்டமாக இருந்த ஊர் இது.
*    கி. மு. 50
ஸெர்ரோஸ் (Cerros) என்ற நகரம் உருவாகிறது. கோயில்கள், மண்டபங்கள் ஆகியவை நிறைந்த நகரம் இது.
* கி. பி. 100
பல உள் நாட்டுக் கலவரங்கள் தொடங்குகின்றன. மாய நாகரிகம் சரிவுப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது.
*    கி. பி. 900
மேற்குப் பகுதிகளில் நகரங்கள் மெள்ள மெள்ள மறைகின்றன. அழிவின் ஆரம்பம்!
* கி. பி. 1511
கோன்ஸலோ குரேரோ (Gonzalo Guerrero) என்ற ஸ்பெயின் நாட்டுக்காரரின் கப்பல் புயலில் சிக்கி மாயர் பகுதியில் கரை தட்டுகிறது. அவர் அங்கு வாழும் உள்ளூர்ப் பெண்ணைத்  திருமணம் செய்துகொள்கிறார்.
*    கி. பி. 1517
ஸ்பெயின் நாடு மாயர்கள்மேல் போர் தொடுக்கிறது. 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாயர்கள் ஸ்பெயின் வீரர்களால் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல,  மாயர்களின் கலாசாரமும் மறைகிறது.
கி. மு. 11000 தொடங்கி, கி. பி. 1517- இல் மறைந்த இந்த வரலாற்றில்
கி. மு. 2600 – கி. பி. 900 வரையான காலம் மாயன் நாகரிக காலம் என்று வரையறைக்கப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காலகட்டங்களை எப்படி முடிவு செய்தார்கள்? அவர்கள் முடிவுகள் எடுக்க எந்த ஆதாரங்கள் உதவின? எங்கிருந்து இவற்றைக் கண்டு பிடித்தார்கள்?
மாய நாகரிகத்தின் பெருமைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் கண்டறியப்பட்டன.   கண்டுபிடித்த பெருமை ஃப்ரெடெரிக் காதெர்வுட் (Frederick Catherwood), ஜான் லாய்ட் ஸ்டீஃபென்ஸ் (John Lloyd Stephens) என்ற இருவருக்குமே உரியது.
காதெர்வுட்  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர், கட்டடக் கலைஞர். பழங்கால  நாகரிகங்களை ஓவியங்களாக வரைவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து தான் பார்த்த காட்சிகளை, சிதிலமான கட்டடங்களை, பிரமிட்களை வரைந்து தள்ளினார். இவை புத்தகங்களாக வெளியாகின.
ஸ்டீஃபென்ஸ் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். தொழிலால் வழக்கறிஞர். அவருக்கு உடல் நலத்தில் பிரச்னை ஏற்பட்டது. அவருடைய வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னார்கள்.
“ஒய்வு வேண்டாம், உலகின் பல பாகங்களுக்கு சுற்றுப் பயணம் போய் வரலாம்” என அவர் முடிவெடுத்தார். இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ரஷ்யா, போலந்து, பிரான்ஸ் ஆகிய பல நாடுகளுக்கு இந்த உலகம் சுற்றும் வாலிபர் போனார். தன் அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார்.
இங்கிலாந்தில் ஸ்டீஃபென்ஸ், காதெர்வுட் இருவரும் தற்செயலாகச் சந்தித்தார்கள். தம் சுற்றுப் பயண அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். எழுத்துத் திறமை கொண்ட ஸ்டீஃபென்ஸும், ஓவியக் கலைஞர் காதெர்வுட்டும் தகுந்த வாய்ப்பு வரும்போது தங்கள் திறமைகளை ஒருங்கிணைத்து பணியாற்ற முடிவு செய்தார்கள்.
அந்த வாய்ப்பு விரைவில் வந்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஸ்டீஃபென்ஸை மத்திய அமெரிக்க நாடுகளுக்குத் தூதுவராக நியமித்தார். ஸ்டீஃபென்ஸ் அந்த நாட்டின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். மாய நாகரிகம் பற்றி அப்போது உலகம் அதிகமாக அறிந்திருக்கவில்லை. அப்படி ஒரு நாகரிகம் இருந்தது என்று தெரியுமே தவிர ஆதாரங்களோ, சிதிலமான கட்டங்களோ யார் கண்களிலும் படவில்லை. ஆதாரங்களைத் தேடி அலைந்தார் ஸ்டீஃபென்ஸ்.
மாயன்கள் பல புத்தகங்கள் எழுதினார்கள் என்று அவர் கண்டுபிடித்தார். ஆழமான மத நம்பிக்கை கொண்ட மாயன்களின் புத்தகங்கள் அவர்களுடைய நூற்றுக்கணக்கான கடவுள்களை மையமாக வைத்து எழுதப்பட்டவை என்பது சில குறிப்புகளிலிருந்து அவருக்குத் தெரிந்தது. அந்தப் புத்தகங்கள் கிடைத்தால் தன் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று உணர்ந்தார்.
முயற்சியைத் தொடர்ந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் மாயப் பகுதிகளை ஸ்பெயின் நாடு ஆக்கிரமித்தது. அவர்களுடைய கிறிஸ்தவ மத நம்பிக்கைகளோடு மாய மதக் கதைகள் ஒத்துப் போகவில்லை. சில ஸ்பெயின் மத வெறியர்கள் மாயர்களின் புத்தகங்களைத் தீயிட்டு எரித்தார்கள். எரிந்தவை புத்தகங்கள் மட்டுமில்லை, அளவிட முடியாத மதிப்புக் கொண்ட நாகரிக வரலாற்று ஆதாரங்களும்தான்.
அடுக்கடுக்காகத் தோல்விகளை சந்தித்தபோதும், மனம் தளராமல் ஸ்டீஃபென்ஸ் ஆதாரங்களைத் தேடினார். இந்த உழைப்பும் நம்பிக்கையும் பலன் கொடுத்தன.  போப்பல் வூ (Popol Vuh) என்ற பழங்காலக் கதைகளின் தொகுப்புப் புத்தகம் ஸ்டீஃபென்ஸ் கையில் கிடைத்தது.
மாய நாகரிகத்தின் மாஜிக் அவரை மயக்கத் தொடங்கியது. தான் போகும் இடங்களில் எல்லாம் பழங்கால மாய நாகரிக அடையாளைங்களை அவர் தேடத் தொடங்கினார்.
பழைய நாகரிகங்கள் பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்க அகழ்வு ஆராய்ச்சி பயன்படுகிறது. எந்த இடங்களைத் தோண்டினால்,. பழங்கால நாகரிகம் பற்றிய “புதையல்கள்” கிடைக்கலாம் என்று முதலில் அனுமானம் செய்யவேண்டும். அங்கே ஆழமாக, ஆழமாகத் தோண்ட வேண்டும்.
இது லாட்டரி மாதிரி. பல இடங்களில் தேட வேண்டும், தேடிக் கொண்டேயிருக்க வேண்டும். பழங்காலச் சான்றுகள் கிடைத்தால் உங்கள் முயற்சி வெற்றி. பணம், புகழ், தேடி வரும். சான்றுகள் கிடைக்காவிட்டால் உங்கள் வாழ்க்கையும் செலவிடும் பணமும்   வீண்.
எங்கே “புதையல்” கிடைக்கும் என்று அனுமானிப்பதுதான் முயற்சியின் முதல் படி.
எப்படி அனுமானிப்பார்கள்? புத்தகங்கள். ஓவியங்கள் ஆகியவை வழி காட்டும். இவற்றைவிட முக்கியமானவை சிதிலமான கட்டடங்கள், ஓவியங்கள் சிற்பங்கள் ஆகியவை.
இந்தச் சிதிலங்கள் பெரும்பாலான நாகரிகங்களில் தரைக்கு மேல் இருக்கும். அல்லது  சிதிலங்களின் அடையாளங்கள் தரைக்கு மேல் தெரியும். மாய நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சியில் புதிய பிரச்னை வந்தது. மாய நாகரிகம் நிலவிய இடம் மழை அதிகமாகப் பெய்யும் இடம், அடர்த்தியான காடுகள் நிறைந்த இடம். ஸ்பெயின் நாட்டவரின் ஆதிக்கத்தால், மாயன்கள் தங்கள் உறைவிடங்களை விட்டுப் புதிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த பழைய இடங்களில்தானே நாகரிக அடையாளங்கள் கிடைக்கும்? ஆட்கள் வாழாத அந்த இடங்களை, கட்டடங்களை மரங்கள், காடுகள் மூடின.
மரங்கள் மூடிய இந்தப் புதையல் உலகத்துக்குத் தெரியாமலே போயிருக்கும்.  காடுகளுக்குள் போகும்போது, சில அடையாளங்களைப் பார்க்கும்போது, இங்கே ஒரு வரலாறு ஒளிந்திருக்கிறது என்று ஸ்டீஃபென்ஸூக்குப் பொறி தட்டியது. தன் கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் படித்தார். பொறி ஆர்வ நெருப்பானது.
ஸ்டீஃபென்ஸின் ஆரம்ப ஆராய்ச்சிகள் நாகரிகப் புதையல் கிடக்கும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக ஆரூடம் கூறின. தானும் ஓவியர் காதெர்வுட்டும் சேர்ந்து பணியாற்ற இது நல்ல வாய்ப்பு என்று ஸ்டீஃபென்ஸ் நினைத்தார். காதெர்வுட்டை இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, தான் வாழும் மத்திய அமெரிக்கப் பகுதிக்கு வரச் சொன்னார்.
1839 – இல் இருவரும் சேர்ந்து தங்கள் அகழ்வாராய்ச்சிகளைத் தொடங்கினார்கள். தோண்டத் தோண்ட வியப்பான கட்டடங்கள், கோயில்கள், கல்லறைகள், பிரமிட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், புத்தகங்கள் ஆகியவை கிடைத்தன.
இருவர் திறமைக்கும் இவை அபாரத் தீனி போட்டன. 1841 ல் தங்கள் கண்டுபிடிப்புகளைப் புத்தகமாக இவர்கள் வெளியிட்டார்கள்.
“கணிதம், வானியல் போன்ற துறைகளில் மாயர்கள் இத்தனை சாதித்திருக்கிறார்களா?” என்று உலகம் வியந்தது.
இந்த வியப்பு உலகின் இன்னும் பல ஆராய்ச்சியாளர்களைத் தூண்டியது. இவர்கள் மத்திய அமெரிக்காவில் பல இடங்களைத் தோண்டினார்கள், விலை மதிப்பற்ற ஆதாரங்களைக்கண்டு பிடித்தார்கள்.
இவர்களுள் மிக முக்கியமானவர்கள் எரிக் தாம்ஸன் (Eric Thompson) ஸில்வானஸ் மோர்லி (Sylvanus Morley) என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். மாய விவசாயம், ஆட்சி முறை போன்ற துறைகள் பற்றிய இவர்களின் கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானவை.
மாயன் நாகரிகம் 2000 ஆண்டுகள் செழித்து ஓங்கியது. கி. பி. 1517 வரை, அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் வரை இருந்த நாகரிகம். இன்றும் சுமார் அறுபது லட்சம் மாயன்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெரு நாட்டில் வசிக்கிறார்கள். மற்றவர்கள் மெக்ஸிகொ, கவுதமாலா, பெலிஸே ஆகிய நாடுகளிலும் வசிக்கிறார்கள். இந்த “ஒரிஜினல்” மாயர்கள் அனைவரும் பண்டைய விவசாய, கலை நுணுக்க வேலைப்பாடுகள் ஆகியவற்றை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்.
இத்தனை சிறப்புகள் கொண்ட மாய நாகரிகம் ஏன் மறைந்தது?
ஆராய்ச்சியாளர்கள் பல காரணங்கள் சொல்கிறார்கள்.
மாயன்கள் தங்கள் இயற்கைச் சூழ்நிலையைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் காட்டவில்லை. காடுகள் நிறைந்த தங்கள் பகுதிகளின் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள். மரங்கள் விழுந்தன, மழை குறைந்தது. பஞ்சம், பசி, பட்டினி, நோய்கள் பெருகின. மாய சமுதாயம் இவற்றுக்கு பலியானது.
இன்னொரு முக்கிய காரணம் ஸ்பெயின் நாடு. பதினைந்தாம் நூற்றாண்டில் படையெடுத்த ஸ்பெயின் சுமார் 90% மாயன் மக்களைக் கொன்று குவித்தது. மீதம் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பெரு போன்ற நாடுகளுக்கு ஓடிப் போனார்கள்.
இன்று ஏகதேசம் மறைந்து போனாலும், தங்கள் பொற்காலத்தில் மாயர்கள் செய்த சாதனைகள், தொட்ட சிகரங்கள் மிக மிக முக்கியமானவை. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்,

No comments:

Post a Comment

welcome ur comment,