|
The Piltdown Man
|
பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் (The Piltdown Man Forgery):
பில்ட்டவுன் மனிதன்,
- அறிவியல் உலகால் மறக்க முடியா பெயர்.
- இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் மோசடியாக, பித்தலாட்டமாக (The Biggest Scientific Hoax of 20th century) அறியப்படும் நிகழ்வு.
- குரங்கு போன்ற ஒரு உயிரினத்திலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டுமென்ற பரிணாம கோட்பாட்டிற்கு ஆதாரமாக (The Missing link) காட்டப்பட்ட ஒன்று.
- நாற்பது ஆண்டு காலங்கள் உலக மக்களை முட்டாளாக்கிய பரிணாம ஆதாரம்.
இந்த மோசடியைப் பற்றி பேசினாலே பரிணாமவியலாளர்கள் வாயிலிருந்து வரக்கூடிய வசனம்,
"இது மோசடித்தான், ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள்? நாங்கள் தானே..."
ஆம், அவர்களது கருத்து உண்மைதான். ஆனால், அவர்களுக்கு அதை விட்டால் வேறு வழியும் இல்லை என்பது தான் உண்மை.
பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் எதைப் பற்றியது, எப்படி பித்தலாட்டம் நடந்தது என்பதைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்....இன்ஷா அல்லாஹ்....
பில்ட்டவுன் மனிதனைப் பற்றி.....
இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள கிராமம் பில்ட்டவுன். 1911 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் இங்கு உள்ள ஒரு கல்சுரங்கத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தார் தொல்லுயிரியலாளரான சார்லஸ் டாசன் (Charles Dawson, Amateur palaeontologist).
அங்கு ஒரு மனித எலும்பு படிமத்தை கண்டெடுத்தார் அவர். பலவித படிமங்கள் அங்கு கிடைக்கலாம் என்று யூகித்த அவர், 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி தன் நண்பரான ஆர்தர் கீத் வுட்வர்ட் (Arthur Keith Woodward) அவர்களுக்கு தன் கண்டுபிடிப்புகளை பற்றி தெரிவித்தார்.
ஆர்தர் கீத் அவர்களும் தொல்லுயிரியலாளர் தான். பிரிட்டிஷ் இயற்கை வரலாறு அருங்காட்சியக (British Natural History Museum) பணியில் இருந்தவர்.
பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த இடத்தில் ஆய்வுகளை அதிகப்படுத்தினர். இவர்களுடன் தே சார்டின் (Teilhard de Chardin, priest and amateur geologist) என்பவரும் சேர்ந்து கொண்டார்.
இந்த குழு அந்த இடத்தில் பல்வேறு படிமங்களை கண்டெடுத்தது. அவை,
- மனிதக் குரங்கு போன்ற ஒன்றின் கோரைப்பல் நீங்கலான தாடைப்பகுதி (ape-like lower jaw missing the canine).
- மனித மண்டை ஓடு பகுதிகள் (human-like skull).
- மற்றும் சில விலங்குகளின் மிச்சங்கள்.
கண்டெடுத்த இந்த படிமங்களை புவியியல் கழகத்திடம் ஒப்படைத்தனர் கீத்தும் டாசனும்.
(மண்டை ஓடு மற்றும் தாடையின் சில பகுதிகள் தான் கிடைத்தன என்றாலும் அவற்றை உதவியாக வைத்து மண்டை ஓட்டை பின்னர் சில ஆண்டுகள் கழித்து புனரமைப்பு செய்தனர் (Re-construction))
(காலப்போக்கில் அதற்கு முகமும் உருவானது)
மனித மண்டை ஓடும், குரங்கின் தாடையும் ஒரே இடத்தில் கிடைத்திருப்பதால் இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் படிமங்கள் தான் என்பது போன்ற கூற்று உருவானது. அதுமட்டுமல்லாமல், தாடைப் பகுதியில் இருந்த பற்கள் மனித பற்களைப் போன்று இருந்தன. இந்த படிமங்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்ற பரிணாம கருத்துக்கு ஆதரவாக இருந்ததால், மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைப்பட்ட உயிரினம் (Missing Link) கிடைத்து விட்டதாக நம்பப்பட்டது.
இந்த உயிரினத்துக்கு "பில்ட்டவுன் மனிதன்" என்று பெயர் சூட்டினர். இவன் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன் என்றும் கூறினர்.
ஆனால் இதனை சில அறிவியலாளர்கள் நம்ப மறுத்தனர். இந்த இரண்டு படிமங்களும் வெவ்வேறு உயிரினத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என்று கூறினர். ஆனால் அவர்களது கருத்து எடுபடவில்லை.
21-11-1912 அன்று இது குறித்த செய்தியை கார்டியன் பத்திரிக்கை வெளியிட விஷயம் படுவேகமாக பரவியது. மிக முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதாக புகழப்பட்டது.
1913 ஆம் ஆண்டு பில்ட்டவுன் மனிதன் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டான். அதே ஆண்டு, தாடைப் படிமம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்தில் இருந்து ஒரு கோரைப்பல் கண்டெடுக்கப்பட்டது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அந்த கோரைப்பல் குரங்கின் பல்லை விட மனிதனின் பல் போன்று இருப்பதாக கீத் தெரிவித்தார். இது விடுபட்டு போன கோரைப்பல் தான் என நம்பப்பட்டது.
இது, பில்ட்டவுன் மனிதன், குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினம் தான் என்ற கூற்றை மேலும் வலுப்படுத்தியது.
இரண்டு ஆண்டுகள் கழித்து, படிமங்கள் முதலில் எடுக்கப்பட்ட கல்சுரங்கத்திற்கு இரண்டு மைல்களுக்கு அப்பால் இரண்டாவது பில்ட்டவுன் மனிதனின் மிச்சங்களாக சில மூளைப்பகுதி ஓடுகள், ஒரு கடவாய்ப்பல் (molar tooth) போன்றவை கண்டெடுக்கப்பட்டன.
இப்போது முன்னர் சந்தேகம் தெரிவித்த அறிவியலாளர்களில் பலர் பில்ட்டவுன் மனிதனை நம்ப ஆரம்பித்தனர்.
(இங்கு ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களும் வெவ்வேறாக இருந்தன. உதாரணத்துக்கு, முதல் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்களில் தாடை இருந்தது. இரண்டாம் இடத்தில் அது இல்லை. முதல் இடத்தில் கோரைப்பல் கிடைத்தது, இரண்டாம் இடத்தில் கடவாய்ப்பல் கிடைத்தது)
மற்றொரு சுவாரசிய தகவல் என்னவென்றால், இந்த இரண்டாம் இடத்தை பற்றி அறிந்தவர் சார்லஸ் டாசன் மட்டுமே, வேறு யாருக்கும் இந்த இரண்டாம் பில்ட்டவுன் மனித மிச்சங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்று தெரியாது. அவர்கள் அறிந்திருந்ததெல்லாம் இந்த இடம் முதல் இடத்திலிருந்து இரண்டு மைல் தூரத்தில் உள்ளது என்பது மட்டும்தான். இதற்கு காரணம், இரண்டாம் இடத்திலிருந்து மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில காலங்களில் டாசன் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார் (1916). அதனால், இன்று வரை அந்த இரண்டாம் இடம் எது என்று அறிவியலாளர்களுக்கு தெரியாது.
டாசனின் வாழ்வு முடிந்தது, ஆனால் பில்ட்டவுன் மனிதன் குறித்த சர்ச்சைகள் லேசாக வெளியில் வர ஆரம்பித்தன. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, டாசன் மறைவிற்கு பின்னர் அந்த கல்சுரங்கத்தில் இருந்து வேறு எந்த மனித படிமங்களும் கிடைக்கவில்லை. இந்த ஒரு படிமம் மட்டும் தான். இது சந்தேகத்தை அதிகப்படுத்த போதுமானதாக இருந்தது.
எப்போது பில்ட்டவுன் மனிதன் பித்தலாட்டம் அம்பலமானது?
1924 ஆம் ஆண்டிலிருந்து காட்சிகள் வேகமாக மாற ஆரம்பித்தன. அதிர்ச்சிகள் பல காத்திருந்தன. 1946 ஆம் ஆண்டு வரையிலான இந்த காலக்கட்டத்தில், உலகின் பல்வேறு இடங்களில் இருந்து "ஆதி" மனிதனின் படிமங்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. (உதாரணத்துக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து, ஜாவாவில் இருந்து). இவை அனைத்தும் பில்ட்டவுன் மனித படிமங்களோடு ஒப்பிடுகையில் வேறுபட்டன (பில்ட்டவுன் மனிதனின் குரங்கு தாடை போல எதுவும் இல்லை).
சுருக்கமாக கூறவேண்டுமென்றால், ஒரு கையில் பில்ட்டவுன் மனித படிமங்கள் மற்றொரு கையில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்கள். இவற்றில் எது மனித பரிணாமத்தை விளக்குகிறது என்று புரியாமல் பரிணாமவியலாளர்கள் குழம்பி போயினர்.
1924 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழங்கால மனித படிமம் (Australopithecus), பில்ட்டவுன் மனித படிமங்களோடு ஒப்பிடுகையில் ஒத்துபோகவில்லை என்று கூறி அந்த படிமத்தை நிராகரித்திருக்கின்றனர் என்றால் பில்ட்டவுன் மனிதன் பரிணாம உலகில் ஏற்படுத்திய தாக்கத்தை புரிந்து கொள்ளலாம்.
உலகின் பல்வேறு இடங்களில் மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட, இந்த இரண்டு படிமங்களுக்குமான வேறுபாடு பரிணாமவியலாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த இரண்டில் எது சரி? பில்ட்டவுன் மனித படிமமா? அல்லது உலகின் மற்ற இடங்களில் சேகரிக்கப்பட்ட படிமங்களா?
பரிணாமவியலாளர்கள் மற்ற படிமங்களை கைவிட்டு விட்டு பில்ட்டவுன் படிமத்தை விடாப்பிடியாக பிடித்திருக்க முக்கிய காரணம், அது, மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்கலாம் என்ற அவர்களது நம்பிக்கையை மெருகூட்டியதால் தான். உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட மற்ற படிமங்களை வைத்து மனிதன் குரங்கு போன்ற ஒரு உயிரினத்தில் இருந்து தான் வந்திருக்கின்றான் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது. ஆனால் பில்ட்டவுன் மனிதனை வைத்து அப்படி கூற முடியும், அது மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கான நேரடி ஆதாரம். அதனால் அவர்கள் பில்ட்டவுன் மனிதனை கைவிட விரும்பவில்லை.
ஆனால், காலம் செல்ல செல்ல, மற்ற இடங்களில் படிமங்கள் அதிகமாக கிடைக்கப்பட, பில்ட்டவுன் மனிதனுக்கு எதிரான கருத்துக்கள் அதிக அளவில் வெளிவர ஆரம்பித்தன. அது எப்படி பில்ட்டவுன் மனித படிமம் மட்டும் உலகின் மற்ற படிமங்களோடு ஒப்பிடும் போது வித்தியாசமாக இருக்கும்?
இந்த கேள்வி மிக அதிக அளவில் எழ ஆரம்பித்தது. இப்போது பரிணாமவியலாளர்களுக்கு வேறு வழி இல்லை. பில்ட்டவுன் மனித படிமத்தை தெளிவாக ஆராய வேண்டிய சூழ்நிலை.
1940களில் படிமங்களின் வயதை கண்டிபிடிக்கப் பயன்படுத்தப்படும் ப்லூரின் சோதனை (Fluorine Test) புழுக்கத்திற்கு வந்த நேரம். இந்த புதிய யுக்தியை கொண்டு பில்ட்டவுன் மனிதனை ஆய்வு செய்ய ஆரம்பித்தார் கென்னத் ஓக்லி என்ற தொல்லுயிரியலாளர்.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொண்டு வந்தன ஆய்வு முடிவுகள்.
முதல் ஷாக் என்னவென்றால், பில்ட்டவுன் மனித படிமம் ஐந்து லட்ச ஆண்டுகளுக்கு முந்தையதெல்லாம் கிடையாது, வெறும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதுதான் என்பது.
இது பரிணாமவியலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனென்றால், இன்றைய மனிதன் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தற்போதைய நிலையை அடைந்து விட்டான் என்பது அவர்களது புரிதல்.
மனிதன் நன்கு பரிணாமித்து விட்ட காலக்கட்டத்தில், பரிணாமித்து கொண்டிருக்கும் பில்ட்டவுன் மனிதன் எப்படி இருக்க முடியும்?..... இது முதல் கேள்வி.
ஆனால் இதுவெல்லாம் என்ன அதிர்ச்சி என்பது போல இருந்தன அடுத்தடுத்த நிகழ்வுகள். அவை அறிவியல் உலகை ஸ்தம்பிக்க வைத்தன.
1953 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் ஜோசப் வெய்னர், கென்னத் ஓக்ளியுடன் சேர்ந்து இது குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.
இரண்டாவது ஷாக்.....நன்கு முன்னேறிய யுக்திகளை வைத்து மறுபடியும் பில்ட்டவுன் மனித படிமங்களை சோதனை செய்து பார்த்ததில், மண்டை ஓடு மனிதனுடையது என்றும், தாடையோ ஓராங்குட்டான் குரங்கினுடையது என்றும் தெரியவந்தது. வேதிப்பொருட்களை கொண்டு அந்த படிமங்கள் ஒரே வயதானவையாக தெரியவைக்கப்பட்டிருக்கின்றன என்ற தகவலும் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆக இவை இரண்டும் ஒரே உயிரினத்தின் பகுதிகள் அல்ல, இரண்டும் வெவ்வேறு உயிரினங்களின் பகுதிகள் என்ற உண்மை வெளிவந்தது.
அதுமட்டுமல்லாமல், தாடைப்பகுதில் இருந்த பற்கள் ஒராங்குட்டான் குரங்கின் பற்கள் என்றும், மனித பற்களாக தெரிய வைக்க அவை கருவிகளை கொண்டு தீட்டப்பட்டு, மண்டை ஓடு படிமத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. பழங்கால பற்கள் போன்று தோற்றமளிக்க அதனை கறைப்படவும் செய்திருக்கின்றனர்.
நேர்த்தியாக செய்யப்பட்ட இப்படியொரு பித்தலாட்டத்தால் அறிவியல் உலகம் ஸ்தம்பித்து நின்றது. மனிதன் குரங்கிலிருந்து வந்திருக்க வேண்டுமென்பதற்கு தெளிவான ஆதாரமாக காட்டப்பட்ட ஒன்று பரிணாமவியலாளர்கள் கண்முன்னே கரைந்து போனது.
1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி "தி டைம்ஸ்" மற்றும் "தி ஸ்டார்" பத்திரிக்கைகள் இது குறித்து செய்தி வெளியிட்டன. தி டைம்ஸ் நாளிதழ் இதனை "பித்தலாட்டம்"என்றும் "நேர்த்தியான மோசடி" என்றும் தலையங்கத்தில் குறிப்பிட்டது.
லண்டன் ஸ்டார் பத்திரிக்கையின் தலையங்கமோ
"இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் மோசடி" என்று கூறியது.
சுமார் நாற்பது ஆண்டு காலம் மக்களை முட்டாளாக்கி இருக்கின்றான் பில்ட்டவுன் மனிதன்.
ஆனால் காட்சி இதோடு முடியவில்லை. இதற்கு மேல் தான் க்ளைமேக்ஸ்சே இருந்தது.
1959 ஆம் ஆண்டு கார்பன்-14 யுக்தியை கொண்டு ஆராய்ந்து பார்த்ததில், பில்ட்டவுன் மனிதனின் மண்டை ஓடு சுமார் 520-720 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாகவும், தாடையோ சற்று இளையதாகவும் (சுமார் 500 ஆண்டுகள்) தெரியவந்தது. கோரைப்பல்லோ ப்ளீஸ்டோசின் (Pleistocene Age: about 1.8 Million - 10,000 years before current period) கால சிம்பன்சி குரங்கினுடையது என்று தெரிய வந்தது.
ஆக, மனித மண்டை ஓடு மற்றும் குரங்கின் தாடை என இவ்விரண்டும் மத்திய காலத்தை (Medieval Period) சேர்ந்தவை. இந்த பித்தலாட்டத்தை செய்தவர்/செய்தவர்கள் அவற்றை எடுத்து, அவை பழங்கால உணர்வு கொடுக்க வேண்டுமென்பதற்காக வேதிப்பொருட்களை கொண்டு அவற்றை மாற்றி அந்த கல்சுரங்கத்தில் போட்டிருக்கின்றார்/போட்டிருக்கின்றனர். இந்த அளவுக்கு நேர்த்தியாக மோசடியை செய்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக தொல்லுயிரியல் துறை பற்றி நன்கு அறிந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பது இந்த பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்தவர்களின் கருத்து.
இதனை செய்தவர்கள் யார்?
இதை செய்தது யார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. பலர் மீது சந்தேகப்படுகிறார்கள், அவர்களில் சிலர்,
|
W. J. Sollas
|
|
Grafton Elliot Smith
|
|
Arthur Conan Doyle |
|
Charles Dawson |
|
Tielhard de Chardie |
|
Arthur Conan Doyle
|
போன்றவர்கள் ஆவர். Talk origins தளம் இன்னும் பலரது பெயரை குறிப்பிடுகிறது.பலரின் மீது சந்தேம் இருந்தாலும் இந்த மனிதனை கண்டுபிடித்த டாசன் அவர்கள் மீதே அதிக சந்தேகம் இருக்கின்றது. பிபிசி, டாசனை அதிகமாகவே சந்தேகிக்கின்றது. இதற்கு,
- 1900 களில், டாசன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஹாஸ்டிங்க்ஸ் அருங்காட்சியகத்திலிருந்து இதே போன்ற ஒரு மண்டை ஓடு காணாமல் போனது,
- டாசன் இறந்ததிலிருந்து அந்த பகுதியில் வேறு படிமங்கள் கிடைக்கவில்லை என்பது
போன்ற காரணங்களை கூறுகின்றது.
டாசன் மீது பலரும் சந்தேகப்பட்டாலும் இன்று வரை இதனை செய்தவர் யார் என்பது புரியாதப் புதிராகவே உள்ளது...
"நாங்கள் தானே இதை கண்டுபிடித்தோம்...."
இப்போது பதிவின் துவக்கத்தில் நாம் பார்த்த கேள்வியை இங்கே கொண்டு வந்து பொருத்தி பார்ப்போம்.
இந்த மோசடியைப் பற்றி பேசினாலே பரிணாமவியலாளர்கள் வாயிலிருந்து வரக்கூடிய வசனம்,
"இது மோசடி தான், ஆனால் இதை யார் கண்டுபிடித்தார்கள்? நாங்கள் தானே..."
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.... ஆம், அவர்கள் தான் மோசடியை கண்டுபிடித்தார்கள். நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள் தான் அவர்கள்........
ஆனால் அவர்களுக்கு அதைத் தவிர வேறு வழியும் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு வேலை, உலகின் மற்ற இடங்களில் மனித படிமங்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே.
ஆக, இந்த பித்தலாட்டம், பரிணாமவியலாளகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்பதை காட்டிலும், மனித பரிணாமம் குறித்த இருவேறு குழப்பங்களிருந்து அவர்களை விடுவித்து நிம்மதியடைய செய்தது என்பதே சரி.
சில கேள்விகள்... '
இந்த பித்தலாட்டத்தின் மூலம் எனக்குள் எழும் சில கேள்விகள்,
- இந்த பித்தலாட்டத்தின் நோக்கம் என்ன?
- ஒரு பொய்யை உண்மையாக காட்ட இத்தனை சிரத்தை எடுத்தது ஏன்?
- பரிணாம கோட்பாட்டை உண்மை என்று மோசடி செய்து நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன?
இது மூலமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது...
இது மூலமாக நமக்கு கிடைக்கும் படிப்பினை, பரிணாமவியலாளர்களும் மனிதர்கள் தான், அவர்களும் தவறு செய்வார்கள், தங்கள் கொள்கையை உண்மை என்று காட்ட எந்த நிலைக்கும் அவர்கள் இறங்குவார்கள் என்பது.
எது எப்படியோ இந்த பித்தலாட்டம் நமக்கு சொல்லக்கூடிய செய்தி, வரலாற்றில் பரிணாமம் நடந்ததற்கு ஆதரவாக எந்தவொரு ஆதாரத்தை பரிணாமவியலாளர்கள் காட்டினாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் குறைந்தபட்ஷம் நாற்பது ஆண்டுகளாவது பொறுத்திருந்து பார்க்கவேண்டுமென்பது.
நான் ஏற்கனவே பலமுறை கூறியது தான். பரிணாமத்திற்கு ஆதாரம் என்று வரலாற்றில் எதுவும் இல்லை.
நாய் (அல்லது நரி) போன்ற ஒன்றிலிருந்து குதிரை வந்திருக்க வேண்டுமென்று ஆதாரம் காட்டுவார்கள், பார்த்திருக்கின்றீர்களா?.... உயிரினங்களை, உருவத்தின் படி சிறியதிலிருந்து பெரியது வரை வரிசையாக அடுக்கி வைத்து குதிரை பரிணாமத்தை விளக்குவார்கள். இதுவெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தவறு என்று நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இன்றும் சிலர் இதனை பரிணாமத்திற்கு ஆதாரமாக காட்டுவது ஆச்சர்யமளிக்கின்றது.
அதுபோல, மீனுக்கும் நிலநீர்வாழ் உயிரினங்களுக்கும் இடைப்பட்ட உயிரினம் என்று சீலகந்த் என்ற மீனை ஆதாரம் காட்டினார்கள். அது 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்து விட்டது என்றும் கூறினார்கள். ஆனால் அந்த மீனோ 1930களின் பிற்பகுதியில் ஆப்ரிக்க கடல் பகுதியில் தென்பட்டு பரிணாமவியலாளர்களை திக்குமுக்காட செய்தது. அதுமட்டுமல்லாமல், ஆழ்கடல் உயிரினமான அந்த மீன் கடலின் தரைப்பகுதில் இருந்து சுமார் 150 மீட்டர்கள் வரை கூட மேலே வராது என்றும் ஆய்வின் மூலம் தெரிய வந்தது. ஆக, இந்த ஆதாரமும் மறைந்தது.
இப்படியாக இவர்கள் எதையெல்லாம் ஆதாரமாக காட்டினார்களோ அவை ஒவ்வொன்றாக காணாமல் போயின.
இன்ஷா அல்லாஹ் அவற்றை பற்றி எதிர்வரும் பதிவுகளில் விரிவாகப் பார்ப்போம்.
ஆதாரமே இல்லாமல் வெறும் யூகத்தால் அமைந்த ஒரு கோட்பாட்டை அறிவியல் என்று சொல்வது சரியா அல்லது கதை என்று சொல்லுவது சரியா....
இறைவன் இது போன்ற மோசடிகளிலிருந்து நம்மை வழி தவற செய்யாமல் பாதுகாப்பானாக...ஆமின்.
இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைத்திருக்க செய்வானாக...ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
My Sincere Thanks to,
1.Talk Origins Website.
2. Natural History Museum, London.
3. BBC.
References:
1. Piltdown Man, The Bogus Bones Caper - Richard Harter, Talk Origins Website.
2. Creationist Arguments: Piltdown Man, Talk Origins Website.
3. Piltdown Man - Natural History Museum, London.
4. The Unmasking of Piltdown Man - BBC
5. Fossil fools: Return to Piltdown - Paul Rincon, BBC dated 13th November 2003.
6. Piltdown Man: Timeline of deceit - BBC dated 13th November 2003.
7. Charles Dawson: 'The Piltdown faker' - BBC dated 21st November 2003.
8. Piltdown Man Forgery - Times Archive, Times Online Website.
9. Piltdown Man is revealed as fake - PBS
10. Piltdown Man Forgery (The times article extract) - Clark University.
11. Piltdown Man - wikipedia.
12. Piltdown Man - archaeology - famous hoax: Age of the Sage website.
கரைந்து போன பரிணாம ஆதாரங்கள். தொடரும் ......
ஸ்பெஷல் தேங்க்ஸ் மை டியர் சகா ஆஷிக் அஹ்மத்....
உங்கள் தோழன்
ரஹ்மானFAYED ./....