Sunday, January 29, 2023

பாலைவன வெட்டுக்கிளிகள் பற்றி பகீர் தகவல்கள்

பாலைவன வெட்டுக்கிளிகள் பற்றி  பகீர் தகவல்கள்


கொரோனா வைரஸ், வட இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை, ஆம்பன் புயல், எல்லையில் சீனாவுடனான போர் பதற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியா பாதிப்பிற்குள்ளாவது பாலைவன வெட்டுக்கிளிகளால் தான்.
இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவு வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பற்றிய சில அதிர வைக்கும் தகவல்கள்;
வழக்கமாக தனிமையில் வாழும் பாலைவன வெட்டுக்கிளிகள், சுற்றுச்சூழல் சிக்கல்களால் பசுமை வெளிகள் குறையும் சமயத்தில் உணவின்றி தவிக்கும் பல வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்துவிடும்.

தனிமை நிலையில் வாழும் பூச்சி திடீரென கூடி வாழும் சிறிய வேட்டை விலங்குகள் போல மாறிவிடும். அதன் பின்னர் உலகிலேயே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் புலம்பெயர் பூச்சியாக உருவெடுக்கும்.
ஆப்பிரிக்கக் காடுகளிலும் பாலைவனங்களிலும் உற்பத்தியாகும் இந்த வெட்டுக்கிளிகள், கடலுக்கு மேலே 2,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தியுள்ளவை. ஆப்பிரிக்காவுக்கும் அரேபியத் தீபகற்பத்துக்கும் இடையே உள்ள செங்கடலை இடைவிடாமல் பறந்து, கடந்து ஆசியாவுக்குள் நுழைகின்றன. இவை ஏமன், ஈரான், சோமாலியா, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் வருகின்றன.
‘லோகஸ்ட்’ என்றழைக்கப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையில் 10 பில்லியன் அதாவது ஆயிரம் கோடி வெட்டுக்கிளிகள் வரை கூட இருக்கலாம். ஒருநாளைக்கு 150 முதல் 200 கிமீ வரை பறந்து செல்லும் திறன் கொண்டவை.

இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ஆயுட்காலம் சராசரியாக 6 மாதங்கள். ஆனால் காலநிலை, சுற்றுசூழல் நிலை ஆகியவற்றை பொறுத்து இது மாறுபடும். பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் மூன்று மாதங்களில் 20 மடங்காகவும், ஆறே மாதங்களில் 400 மடங்காகவும், ஒன்பது மாதங்களில் 8000 மடங்காக குறுகிய காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்து பெரும் படையை உருவாக்கும் திறன் பெற்றது.
வெட்டுக்கிளி வகைகளிலேயே மோசமானது, இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள். ஒருநாளைக்கு தனது எடைக்கு நிகரான எடையை உட்கொள்ளும். அதாவது 2 கிராம் உணவு உட்கொள்ளும்.இவை ஒருநாளைக்கு சராசரியாக 35,000 பேர் சாப்பிடக்கூடிய உணவை உட்கொண்டுவிடும். தோட்டப் பயிர்கள், பூக்கள், பழங்கள் என அனைத்தையும் தின்று தள்ளிவிடும்.
நம் வீட்டருகில் உள்ள சாதாரண வெட்டுக்கிளிகளைப் போல் அல்லாமல் இவை ஒரு சதுர கி.மீ.யில் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் பெற்றவை. ஒரு சதுர கி.மீட்டரில் 4 – 8 கோடி வெட்டுக்கிளிகள் கூட்டம் திரளாக இருக்கும்.

லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் தனியாக இருந்தால் பிரச்சினை இல்லை. கூட்டமாகச் சேர்ந்தால் சிக்கல்தான். நம்மூரில் உற்பத்தியாகும் ஈசல்களைப் போல இந்த வெட்டுக்கிளிகள் பெருகிவிடும்.
வெட்டுக்கிளிகள் கூட்டம் வீடுகளுக்குள் புகுந்துவிட்டால், வீட்டில் உள்ள மரப் பொருட்களையும் விட்டுவைக்காது. இந்த வெட்டுகிளிகளின் தாடைகள் சக்தி வாய்ந்தவை. இவை சாப்பிடும்போது எழும் சத்தத்தைத் தூரத்திலிருந்தே கேட்க முடியும் என்கிறார்கள் பூச்சியியல் வல்லுநர்கள்.
கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறைதான் இந்தியாவுக்குள் வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுத்துள்ளன. இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தாவிடில் விளை நிலங்கள் நாசமாகும். இதனால் உணவு பஞ்சம் ஏற்படும். உலகம் முழுவதும் சுமார் 90 நாடுகள் வெட்டுக்கிளி படையெடுப்பால் பாதிப்புக்குள்ளாகலாம் என்று ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

welcome ur comment,