தர்மம் தலை காக்கும், தலைக்கவசம் உயிர்காக்கும்
தர்மம் தலை காக்கும் என்பது பழமொழி... இன்று தலைக்கவசம் உயிர்காக்கும் என்பது புதுமொழியாகிவிட்டது. கட்டுமானத் துறை, உற்பத்தி துறைகளில் மட்டுமின்றி, இன்று இருசக்கர வாகன ஓட்டிகளின் அதி அவசியமான உயிர்காக்கும் கவசமாக மாறியுள்ளது ஹெல்மெட் எனும் தலைக்கவசம்.
ஆனால், முதல்முறையாக ஹெல்மெட் பயன்படுத்தப்பட்டது எப்போது, எப்படி இந்த ஐடியா வந்தது, வடிவமைத்தது எப்படி போன்ற விஷயங்கள் நம் மனதில் எழுகிறதல்லவா? அதுபற்றிய ஒரு சுவாரஸ்ய அதே சமயம் ஒரு பயனுள்ள செய்தித் தொகுப்பாக இது அமைகிறது.
01. ஹெல்மெட்
விபத்தில் சிக்கும்போது தலையில் ஏற்படும் காயங்கள்தான் உயிரை எடுக்கும் விஷயமாக அமைகிறது. அதில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும்போது தலையில் அதிகம் காயம் ஏற்படும் ஆபத்தை இந்த ஹெல்மெட் குறைக்கிறது அல்லது போக்குகிறது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தலையில் ஏற்படும் பெரிய அளவிலான காயங்களை 69 சதவீதமும், மரணத்தை 42 சதவீதமும் குறைப்பதாக தெரிவிக்கிறது.02. ஹெல்மெட் பிறந்த கதை
ஹெல்மெட் வரலாறு சரியாக ஒரு நூற்றாண்டை கடந்து விட்டது. கடந்த 1914ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் வேகமாக செல்லும்போது வீரர்கள் பலர் கீழே விழுந்து அடிபடுவது தொடர்கதையாக இருந்தது. அப்படி அடிபடும் வீரர்களில் பலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிக மோசமான பாதிப்புகளை ஏற்பட்டுள்ளது. இதனை டாக்டர் எரிக் கார்னர் என்ற மருத்துவர் கவனித்து வந்ததுடன், இதற்கு தீர்வு காண்பதற்காக, தலைக்கவசம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, மோஸ் என்ற டிசைனரை அணுகி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, அந்த கவசமானது தலையில் அடிபடாதவாறு உறுதியாக இருக்க வேண்டும்; அதேநேரத்தில் தலைக்கு அதிக உறுத்தல் இல்லாமல் இலகு எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினர்.
03 புறந்தள்ளிய வீரர்கள்
எந்த கண்டுபிடிப்பும் முதல்முறை தோல்வி கண்டது சரித்திரம் கண்ட உண்மை. அதே கதிதான் டாக்டர் கார்னர் வடிவமைத்த தலைக்கவசத்துக்கும் நேர்ந்தது. டாக்டர் கார்னரின் தலைக்கவசத்தை ஆட்டோ சைக்கிள் யூனியன் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில், ஐலே ஆஃப் மேன் டிடி மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அதனை பல வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், தலைக்கவசம் அணிந்து விழுந்து தலையில் அடிபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பரவலாக ஹெல்மெட் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அதன் மகத்துவத்துமும் புரியத்துவங்கியது.
04. மோட்டார்ஸ்போர்ட்ஸும், ஹெல்மெட்டும்
1950களில் முகத்தை முழுவதுமாக மூடக்கூடிய அளவிலான ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட் மாடல்கள் அறிமுகமானது. அத்துடன், அனைத்துவிதமான மோட்டார் பந்தயங்களிலும் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 1954ல் பெல் நிறுவனம் அதிக உற்பத்தி இலக்கை வைத்து ஹெல்மெட் மாடல்களை வெளியிட்டது.
05.. விழிப்புணர்வு
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொல்பொருள் ஆய்வாளரும், ராணுவ அதிகாரியுமான லாரன்ஸ் ஆஃப் அராபியாவின் மரணமும் ஹெல்மெட் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது. சைக்கிளில் சென்றவர்கள் மீது மோதாமல் இருக்க மோட்டார்சைக்கிளை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கினார் லாரன்ஸ். மேலும், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சில நாட்கள் கோமாவில் இருந்து அவர் மரணத்தை தழுவினார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இருசக்கர வாகனங்களில் செல்வோர்க்கு ஹெல்மெட் அவசியம் என்பதை உணர்ந்து அனைவரிடம் தெரிவிக்கத் துவங்கினார்.
No comments:
Post a Comment
welcome ur comment,