பிரபலமான 10 சைக்கோ கொலையாளிகள்
எட்வர்ட் கெயின்
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், தான் உண்டு தன் பண்ணை வீடு உண்டு என்று வசித்து வந்தார் எட்வர்ட் கெயின். ஒருநாள் உள்ளூர் ஹார்ட்வேர்ஸ் கடையில் ஒரு திருட்டு. பொருளோடு, கடையின் உரிமையாளரான ‘பெர்னிஸ் வோர்டன்’ என்ற பெண்ணும் மிஸ்ஸிங். இந்த வழக்கில் துப்பு துலக்கி வந்த போலீசார், எதற்கும் சும்மா விசாரித்து வைப்போமே என எட்வர்ட்கெயின் பண்ணை வீட்டிற்குச் சென்றனர். அங்கு கண்ட காட்சி, அவர்களை குலை நடுங்க வைத்துவிட்டது. காணாமல் போயிருந்த பெண் தலையில்லாமல் தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்தாள். இது நடந்தது 1957–ம் ஆண்டு நவம்பர் 16–ந் தேதி.
திக்.. திக்.. அத்துடன் தீரவில்லை. அந்த வீட்டை போலீசார் சோதனையிட்டனர். வித்தியாசமாய் தெரிந்த அவன் சாப்பிடும் தட்டு ஒரு மண்டை ஓடு! உட்காரும் ஷோபாவின் லெதர் மனித தோல்! குப்பைத் தொட்டியில் போட்டிருந்த கவரும் மனித தோல்! பக்கத்தில் தொங்கிய பெல்ட்டில், நான்கு மனித
மூக்குகள்!
ரசிக்க ரசிக்க மனிதர்களை கொன்று குவித்திருக்கிறான் அந்த சைக்கோ. மனநல மருத்துவ மனையில் போடப்பட்ட அவன், 1984 ஜூலை 26–ல் இறந்தான். இவன்தான் ஹாலிவுட்டின் சைக்கோ படங்களுக்கான இன்ஸ்பரேஷன்!
டெட் பண்டி
பார்வைக்கு செம ஸ்மார்ட்டான இவனும் ஒரு சைக்கோ கில்லர்தான். இவனது டார்கெட் முழுக்க முழுக்க பெண்கள். இளம் பெண்களை வசீகரமாகப் பேசி மயக்குவான். மயங்கியவர் களை காரில் தூக்கிப் போட்டு தலையில் அடித்துக் கொன்று, பின்னர் பலாத்காரம் செய்வான். பெண் சைக்காலஜியில் இவன் கெட்டிக் காரன். சிலரிடம் ரொமாண்டிக்காக பேசுவான், சிலரிடம் அப்பாவியாக பேசுவான், சிலரிடம் உதவி கேட்பான், சிலரிடம் போலீஸ் என்பான்! இப்படி ஏகப்பட்ட ஐடியாக்கள் வைத்திருந்தான். 1974–க்கும் 78–க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் இவன் கொன்று குவித்த பெண்களின் எண்ணிக்கை முப்பது!
சின்ன வயதில் இவனை வளர்த்த தாத்தாவும் சைக்கோ டைப் தான். மிருகங்களை துன்புறுத்துவது, தவறான படங்களை ரசிப்பது என அவரது பழக்கம் இவனையும் பற்றிக்கொண்டது. 1984 ஜனவரி 24–ல் மின்சார நாற்காலியில் வைத்து சாகடிக்கப்பட்டான். ஹாலிவுட்டில் வெளியான ‘டெட் பண்டி’ எனும் படம் இவனைப் பற்றியது தான்!
ஆல்பர்ட் பிஷ்
குழந்தைகளைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ இவன். குழந்தைகளைத் துன்புறுத்தி அவர்களோடு பாலியல் உறவு கொள்வது இவனது ஹாபி. முதலிலெல்லாம் கொலை செய்யவில்லை. குழந்தைகளைக் கடத்தி அவர்களை படாத பாடுபடுத்தி பின்னர் விட்டு விடுவான். நாளாக ஆக அதில் அவனுக்கு ‘கிக்’ கிடைக்கவில்லை. பிறகு கொலை செய்தால் தான் பாலியலில் திருப்தி எனும் நிலைக்கும் வந்து விட்டான்.
அறிவியல் இவனது மனநோயை, ‘சேடோமேசோசிஸ்ட்’ என்று அழைக்கிறது. அதாவது வலி இருந்தால் தான் இவனுக்குத் ‘திருப்தி’ கிடைக்கும். ஆள் கிடைக்காத போது ஊசியால் தனது உடலையே குத்திக் கொள்வான், தீயால் சுட்டுக் கொள்வான். இதுவும் கூட அவனுக்கு இன்பம் தருமாம்.
டேவிட் ரே பார்க்கர்
அணு அணுவாக சித்திரவதை செய்து ரசிக்கும் மாபெரும் சைக்கோ இவன். குறைந்தபட்சம் 60 பேரையாவது கொன்றிருப்பான் என்பது போலீஸ் கணக்கு. ஆனால் அதெல்லாம் ஜுஜூபி என்கின்றனர். விளையாட்டுப் பெட்டி என்று ஒரு பெட்டி வைத்திருந்தான். அது ஒரு மரணப் பெட்டி. அதில் ஆணி, சங்கிலி, வாள், கம்பி போன்ற ஆயுதங்கள் இருக்கும்.
ஆட்களைப் பிடித்து வந்து, அவர்களைக் கட்டி வைத்து சித்திரவதை செய்வான். உடலைப் பிய்த்தும், கிழித்தும் நடத்தும் சித்திரவதையை, நேரடி ஒளிபரப்பு செய்வான். ‘யாருக்கு?’ என்கிறீர்களா... சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருப்பவருக்கு. புதிது புதிதாய் ஆயுதங்களை உருவாக்கி, ஏதோ முட்டைகோஸ் வெட்டுவது போல மனிதனை
வெட்டுவான். மாரடைப்பால் இறந்து போனான், இந்த இதயமே இல்லாதவன்.
கில்லீஸ் டே ரெய்ஸ்
1405 செப்டம்பரில் பிறந்த இவன்.. படுபாதகன் எனும் பெயரைச் சம்பாதித்தவன். பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து உயர் பதவியை அடைந்தான். சின்னப் பிள்ளைகளைப் பிடித்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, சற்றும் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்தவன்.
இவன் கொன்ற சிறுவர், சிறுமியரின் எண்ணிக்கை எவ்வளவு என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு இடத்தில் கிடைத்த எலும்புக் கூடுகள் மட்டும் 40 என்பது பதைபதைக்க வைக்கிறது. சிறுவர்களை ஏமாற்றி அழகிய உடை கொடுத்து, உணவு கொடுத்து பின் சொல்ல முடியாத கொடுமைகள் செய்து அவர்களைக் கொன்று விடுவான். இவனது சில வேலைக்காரர்களும் இந்த படுபாதகத்துக்கு உடந்தை. 35–வது வயதில் அவனை பிடித்து, மரண தண்டனை விதித்தார்கள்.
ஏமி ஆர்ச்சர் கிலிகன்
சீரியல் கில்லர் வரலாற்றில் ஏகப்பட்ட பெண்களும் இடம்பிடித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் ஆர்ச்சர். 1868–ல் அமெரிக்காவில் பிறந்தவர். வயதானவர்களைப் பராமரிக்கிறேன் என ஒரு இல்லத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார். இவரது முதல் இரண்டு கணவர்களும் இறந்து போயிருந்தனர்.
இவருடைய முதியோர் இல்லத்தில் வருபவர்கள் கொஞ்ச நாட்கள் நன்றாக இருந்து விட்டு சட்டென இறந்து விடுவார்கள். சில ஆண்டுகளில் மக்களுக்கு இந்த இல்லத்தின் மீது சந்தேகம் வர, புகார்கள் பறந்தன. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் பல வந்தன. சுமார் 50 பேர் வரை இவரால் கொல்லப்பட்டிருக்கலாம் என அந்த புலன் விசாரணை சொன்னது. அவர்களில் இவருடைய கணவர்களும் அடக்கம். எல்லோருக்கும் விஷம் கொடுத்து சமாதியாக்கியிருந்தார் ஆர்ச்சர்.
வரும் பணக்கார முதியவர்களிடம் ஒரு பெரும் தொகையை கடனாக வாங்க வேண்டியது, விஷம் கொடுத்து அவர்களைத் தீர்த்துக் கட்டவேண்டியது. இது தான் அவருடைய பதறடிக்கும் ஃபார்முலா!
ஜெஃப்ரி டாமர்
இந்தப் பூனையும் பால் குடிக்குமா ரேஞ்சுக்கு அப்பாவி முகம். இவனுடைய டார்கெட் பெண்களல்ல, ஆண்கள். ஓரினச் சேர்க்கை கொலையாளி இவன். ஆண்களை வீட்டுக்கு வரவழைத்து அவர்களைக் கொல்வான். பின் அவர்களுடைய உறுப்புகளை வெட்டி எடுத்து உணவுக்காக பத்திரப்படுத்துவான். நரமாமிச சைக்கோ இவன்.
18 வயதில் முதல் கொலையை அரங்கேற்றியவன்,அதன் பிறகு நிப்பாட்டவே இல்லை. குறைந்தது 17 பேரைக் கொன்றிருக்கலாம் என்று கணக்கிட்டாலும், அதை விட மிக அதிகம் என்பது போலீஸ் தரப்பு நம்பிக்கை. இவனுடைய வீட்டில் சோதனையிட்டபோது வீட்டில் இருந்த மனித உறுப்புகளைப் பார்த்து மிரண்டு போய்விட்டனர் காவல் துறையினர்.
1994 நவம்பர் 28–ந் தேதி ஜெயிலில் நடந்த ஒரு சண்டையில் இறந்து போனான்.
பேலா கிஸ்
ஹங்கேரியாவின் சீரியல் கில்லர் இவன். வீட்டைச் சுற்றி நிறைய உலோக டிரம்ஸ் வைத்திருப்பது இவனுடைய வழக்கம். ‘இது என்ன இவ்வளவு பெரிய பாத்திரங்கள்?’ என யாராவது கேட்டால், ‘எரிபொருள் நிரப்பி வைக்கிறேன்’ எனச் சொல்வான். மக்களுக்கு இவனுடைய பாத்திரங்கள் மேல் ஏதோ ஒரு சந்தேகம்.
கடைசியில் போலீஸ் வந்தது. உலோக டிரம் ஒன்றை திறந்து பார்த்தபோது, உள்ளே பதப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் உடல் இருந்தது. மொத்தம் 24 உடல்கள் அன்று கண்டுபிடிக்கப்பட்டன. 74 பெண்கள் வரை இவன் கொன்றிருக்கலாம் என விசாரணை சொன்னது. போலீஸ் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தப்பி ஓடிய இவன், கடைசிவரை பிடிபடவே இல்லை.
அந்தேரி சிக்காட்டிலோ
ரஷிய நாட்டைச் சேர்ந்த தொடர் கொலையாளி. 1936–ம் ஆண்டு பிறந்தவன். ரெட் ரிப்பர் என்பது இவனுடைய பிரபலமான பெயர்களில் ஒன்று. 1978–க்கும் 1990–க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இவன் கொன்று குவித்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 55.
நல்ல மனநிலையில் இவன் படுகொலைகளை அரங்கேற்றியதாக டாக்டர் சான்றிதழ் கொடுத்தார். அரசு இவனுக்கு மரண தண்டனை விதித்தது. கருணையே இன்றி மக்களைக் கொன்று குவித்த இவன் ரஷிய சுப்ரீம் கோர்ட்டில் கருணை மனு அளித்தான். அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி போரிஸ் எல்ஸ்டினிடம் கருணை மனு அளித்தான். அதுவும் நிராகரிக்கப்பட 1994–ல் கொல்லப்பட்டான்.
ஹார்ப் சகோதரர்கள்
மிக்காயா ஹார்ப், ஜாஸ்வா ஹார்ப் இருவரும் சகோதரர்கள். 1770 –களில் வாழ்ந்த அமெரிக்காவின் முதல் சீரியல் கில்லர்கள். பல படுகொலைகளை செய்தவர்கள் கடைசியில் பிடிபட்டார்கள். 39 பேரை கொலை செய்ததாக ஹார்ப் ஒத்துக் கொண்டான். ஆனால் குறைந்த பட்சம் 50 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்கிறது காவல்துறை.
கொடூரமாகக் கொலை செய்து தண்ணீரில் போட்டு விடுவது இவர்கள் வழக்கம். இவர்களில் மூத்தவன், தனது பச்சைக் குழந்தை அழுகிறது என எரிச்சல்பட்டு அதை மரத்தில் தூக்கி அடித்துக் கொன்றவன். இவனுடைய கொடூரத்தை விளக்க இது ஒன்றே போதும்.
No comments:
Post a Comment
welcome ur comment,