மீத்தேன் எரிவாயுத் திட்ட அபாயம்.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு பழமொழிச் சொல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அது இப்போது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை விஷயத்தில் உண்மையாகி இருக்கிறது.
தேவையில்லாத பாதுகாப்புத்துறை செலவீனங்கள் , இமயம் அளவு ஊழல்கள், இந்தியாவுக்குப் பொருந்தாத சந்தைப் பொருளாதாரம் என சூறையாடப்பட்ட இந்தியாவின் பொருளாதாரம் இப்போது அதல பாதாளத்திற்குப் போய் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதில் இருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா தனது மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க முடிவு செய்து விட்டது. “என்னடா சிக்கும்” என அது தேடும் போது அதற்கு சிக்கி இருப்பது தான் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் "மீத்தேன்" எனப்படும் இயற்கை எரிவாயு.
இந்தப் பகுதியில் மக்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள் என்ற உணர்வும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்பது குறித்த அக்கறையும், தமிழகத்தின் நீர் ஆதாரம் அடியோடு சீர்குலையும் என்ற கவலையும் இல்லாமல் மத்திய அரசு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் முழுக்க ஆழ்கிணறுகளைத் தோண்டி மீத்தேன் எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும் அனுமதி மூன்று நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பெயர்கள்:
1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் - Oil and Natural Gas Corporation Ltd. (ONGC)
2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் - Gas Authority of India Ltd (GAIL)
3.கிழக்கத்திய எரிசக்தி நிறுவனம் - Great Eastern Energy Corporation Ltd (GEECL)
இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. எந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும், அந்த நிலப் பரப்பில் எத்தனை மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அங்கு கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.
இந்தத் திட்டம் ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கும். சில முக்கியப் பிரச்சினைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
1. நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக உறிஞ்சப்படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச நீரும் கிடைக்காது. குடிநீர் தட்டுப்பாடும் தலை விரித்து ஆடும்.
2. மீத்தேன் எடுப்பதற்காக ஆழ்குழாய் மூலம் உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விட பலமடங்கு உப்புத் தன்மையுடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும் , குளங்களிலும் கலக்கும் போது விவசாய நிலம் உப்பளமாக மாறும்.
3. மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில் எற்படும் மாற்றங்களால் குடிநீரோடு இந்த மீத்தேன் எரிவாயு கலக்கும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணைக் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் குழாய்களில் வந்த நீர் தீப்பற்றி எரிந்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. அது ஒரு சிறிய எண்ணைக் கசிவால் ஏற்பட்ட விளைவு. மாவட்டங்கள் முழுக்க எண்ணைக் குழாய்கள் அமைக்கப்பட்டால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள். மீத்தேன் எடுக்கும் பணியில் குழாயில் கசிவு ஏற்பட்டு மீத்தேன் வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது. (மீத்தேன் என்பது எளிதில் தீ பற்றக் கூடிய வாயு)
4. அதன் பண்பு நிலையானது மிகக் குறைந்த வெப்பத்திலேயே, தானே தீ பற்றிக்கொள்ளும் தன்மை உடையது. அதுவுமில்லாமல், இது காற்றில் கலந்தால் நாம் சுவாசிக்கும் காற்று முழுக்க நஞ்சாக மாறும். அதனால்,தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஒட்டு மொத்த மக்களின் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும்.
5. நிலத்தின் அடியே குறுக்கும் நெடுக்குமாக தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை , திருவாரூர் மாவட்டம் முழுவதும் பூகம்பம் ஏற்படும் ஆபத்தும் உருவாகும்.(நிலத்தின் வழமையான நீரோட்டம் பாதிக்கப் படுவதால்)
6. மீத்தேன் எடுக்கும் நிறுவனங்கள் உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுப்பதாகச் சொன்னாலும் அவர்கள் இந்த எரிவாயு எடுக்கும் அனுபவம் உள்ளவர்களையே பணியில் அமர்த்த முடியும்.இதன் மூலம் தஞ்சை , திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு வெளிமாநில மக்கள் குடியேற்றப்படுவார்கள்.
7. தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படும்.
8. இந்த நிறுவனங்கள் தங்கள் எரிவாயுவை கொண்டு செல்லக் குழாய் பதிப்பது , சாலைஅமைப்பது போன்ற பணிகளைச் செய்யும் போது ஏற்கனவே இருக்கும் ஆறுகள், குளங்கள் போன்றவை இந்த நிறுவனங்களால்அழிக்கப்படும்.
9. இந்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக மாறுவது மட்டுமல்ல , இந்தக் குழாய்களில் ஏற்படும் சேதத்திற்கு நம் மீது வழக்குப் போடவும் வாய்ப்பு இருக்கிறது.
உயிர் வாயுவை எப்படி உற்பத்தி செய் யும் முறை |
அது மட்டுமல்ல நமது நாட்டில் உள்ள கால் நடைகளின் சாணம் என்பது ஏற்கனவே மீத்தேன் எரிவாயுவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவானது திடீரென்று தானே தீப்பற்றி எரிந்ததை அந்த நாட்களில் மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்தேன் என்பர். இன்று ஓரளவு விஞ்ஞானத்தின் வாயிலாக உண்மையை உணர்ந்து கோபார் காஸ் என்று மக்களிடம் விளக்கி அந்த சாணத்தையே தொட்டியில் சேகரித்து அதிலிருந்து கிடைக்கும் மீத்தேன் வாயுவை வீட்டிற்கான சமையல் வாயுவாகப் பயன்படுத்த 1970 -களில் இந்திரா காந்தி அம்மையாரின் அரசாங்கம் முயன்று ஓரளவு வெற்றி பெற்றது. பின்னர் இந்த எளிதில் தீ பற்றும் வாயுவினால் பல விபத்துகள் ஏற்பட்டதால் இத் திட்டம் கைவிடப் பட்டது.
அது மட்டுமல்லாமல், இதற்காக பூமியில் பதிக்கப் படும் பைப்புகள் நம்மூர் மண்ணின் தன்மையால் விரைந்து துருப் பிடிக்கும், பிறகு ஓட்டை விழும்,பின்னர் வாயு கசிவு உண்டாகும். இதெல்லாம் நம் விஞ்ஞானிகளால் 15 நாளில் சரி செய்யப்படும் என்பது நமது அரசு தரும் உத்திரவாதம், இதற்கு நாம் ஒப்புக்கொண்டு என்னதான் நடக்கும் என்று பார்க்க முடிவு செய்தால் அதை விட கொடிய செயல் ஒன்றும் இல்லை.
உடனடிப் பக்க விளைவு என்ன தெரியுமா ? ஒட்டு மொத்த இந்தியாவிலேயே மிகப் பரந்த விளை நிலங்களும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாய் குறுக்கு நெடுக்காய் பாசனக் கால்வாய்களைக் கொண்ட நெற்களஞ்சியம், தொன்று தொட்ட விவசாயப் பண்பாடு என்பதெல்லாம் தமிழ் நாட்டில், குறிப்பாக சோழ மண்டலத்தில்தான். இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மலைகளும் குன்றுகளும் இடைமறிக்காத ஒரு பரந்துபட்ட சமவெளி என்பது காணக்கிடைக்காது.
இன்று எரிவாயு அரக்கர்கள் நிலத்தடி நீரையும்,பாசனக் கால்வாய்களையும் ஒரு சேரச் சுற்றுச் சூழல், நிலத்தடி பாதிப்பினை ஏற்படுத்தப் போகின்றனர். வரும் முன் காப்பதுதான் மனித இயல்பு. வந்த பின்பு ஊரைக் காலி செய்தால் நாம் எல்லாம் வெறும் அகதிகளாகத்தான் அலைய வேண்டி வரும். இன்றையக் காலத்தில் அகதிகளுக்கும் பெரும் சோதனை என்பதனை மறக்க வேண்டாம். நம் பிள்ளைகள் அகதிகளாய்அலைய நாம் காரணமாய் இருக்க வேண்டாம்.
ஒன்று பட்டு நிற்போம்.......நம் மண்ணைக் காப்போம்.
நன்றி
முஹம்மத் இக்பால்