Tuesday, December 3, 2013

ராக்கெட் உருவான வரலாறு (பாகம் - 2)


ராக்கெட் உருவான வரலாறு (பாகம் - 2), 


இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...



வெர்னர் வான் பிரவுன் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ராக்கெட் விஞ்ஞானி;


அனைவருக்கும் வணக்கம், வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 1799 ஆம் ஆண்டு ஸ்ரீ ரெங்கப்பட்டினத்தில் (Srirangapatna, Karnataka) நடந்த நான்காவது ஆங்கிலோ – மைசூர் யுத்தத்தில் (Forth Anglo – Mysore War, 1798 – 1799) திப்பு சுல்தான் வீழ்த்தப்பட்டதும் அவரது அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயப்படைகள் அங்கு எரிந்த மற்றும் எரியாத ராக்கெட்டுகள் என்று எதையும் விட்டுவைக்காமல் ஒட்டு மொத்தமாக 9700 - க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை கைப்பற்றியது. திப்புவின் அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓரியண்டல் லைப்ரரி (Oriental Library) என்ற நூலகத்தையும் விட்டுவைக்காத ஆங்கிலப்படைகள் அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் ராக்கெட் தயாரிப்பு சம்மந்தமான ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு நூல்கள் ஆகியவற்றை ஒன்றுவிடாமல் அள்ளிச் சென்றது.
 
இங்கிலாந்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் திப்புவின் அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவைதான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். என்னைப் பொருத்தவரை ஆங்கிலேயர்கள் இந்தியாவிலிருந்து கொள்ளையடித்துச் சென்ற விலைமதிக்க முடியாத பொக்கிஷம் என்னவென்றால் கோகினூர் வைரம் இல்லை. திப்புவின் நூலகங்களில் இருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்கள் தான் என்பேன். திப்புவின் ராக்கெட் தயாரிப்பு சம்பந்தமான ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு தனது ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க விரும்பிய இங்கிலாந்து அரசு அதற்காக அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய கண்டுபிடிப்பாளர் (Inventor) மற்றும் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சர் வில்லியம் காங்கிரிவ் (Sir William Congreve, 1772 – 1828) என்பவரை பணியமர்த்தியது.

தொடர்ச்சியாக சில ஆய்வுகளை மேற்கொண்ட வில்லியம் காங்கிரிவ், திப்பு சுல்தானின் தயாரிப்பு முறைகளில் இருந்த சில அடிப்படை தவறுகளை களைந்து, திப்புவின் ராக்கெட்டை மேம்படுத்தி 1804 ஆம் ஆண்டு காங்கிரிவ் என்ற ராக்கெட்டை (Congreve Rocket) வடிவமைத்தார். பதினாறு அடி நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டி ஏவப்பட்ட காங்கிரிவ் ராக்கெட்டுகள் கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருந்தது. தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே 1800 – களில் தொடர்ச்சியாக நடந்த பல யுத்தங்களில் (War of 1812, battle of Bladensburg – 1814, battle of Baltimore – 1814) இங்கிலாந்து ராணுவத்தினரால் அமெரிக்க படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.

 


தொடர்ந்து இங்கிலாந்திற்கும் பிரான்ஸுக்கும் இடையே, 1815 ஆம் ஆண்டு நடந்த வரலாற்று சிறப்புமிக்க வாட்டர்லூ (Battle of Waterloo, 1815) என்ற யுத்தத்தில் இங்கிலாந்து ராணுவத்தால் பயன்படுத்தப்பட காங்கிரிவ் ராக்கெட்டுகள், அப்போது பிரான்ஸ்சை ஆட்சி செய்து வந்த நெப்போலியனை (Napoleon, 1769 – 1821) சரணடையச் செய்யும் அளவிற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகுதான் காங்கிரிவ் ராக்கெட்டுகளின் புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. தொடர்ந்து மற்றுமொறு இங்கிலாந்து கண்டுபிடிப்பாலரான வில்லியம் ஹாலே (William Hale British Inventor, 1797 – 1870) என்பவர் குச்சிகளின்றி இயங்கும் அதாவது தற்போது தாக்குதல் விமானங்களில் (Fighter Aircraft) பயன்படுத்தப்படும் தோற்றத்தை ஒத்த ராக்கெட்டுகளை 1844 ஆம் ஆண்டு வடிவமைத்தார். ஹாலே வடிவமைத்த ராக்கெட்டுகள் அமெரிக்க ராணுவத்தினரால் மெக்ஸிகோ படைகளுக்கு எதிராக அமெரிக்க – மெக்ஸிகோ போரில் (American – Mexican War, 1846 – 1848) பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாடுகளிடையே புகழ்பெற்று விளங்கிய ராக்கெட் தொழில்நுட்பம் ரஷ்ய விஞ்ஞானிகளை தீவிரமாக சிந்திக்க வைத்தது. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் தாக்குதல் ராக்கெட்டுகளை மேம்படுத்துவதில் தங்களது சிந்தனையை செலுத்திக் கொண்டிருக்க, ரஷ்ய விஞ்ஞானிகள் அவர்களிடமிருந்து வேறுபட்டு விண்வெளிப்பயணம் மேற்கொள்ள தேவையான ராக்கெட்டுகளை வடிவமைப்பதில் தங்களது சிந்தனையை செலுத்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் விண்வெளியின் தந்தை என்றழைக்கப்படும் ரஷ்ய விஞ்ஞானியான கோன்ஸ்டன்டின் சியோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky, 1857 – 1935) என்பவர் 1903 ஆம் ஆண்டு “The Exploration of Cosmic Space by Means of Reaction Devices”” என்ற தலைப்பில் விண்வெளி வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.

 


அந்த கட்டுரையில் சியோல்கோவ்ஸ்கி, திட எரிபொருளை (Solid Fuel) விட திரவ எரிபொருள் (Liquid Fuel) தான் ஒரு ராக்கெட்டுக்கு அதிகப்படியான உந்துசக்தியை தரும் என்றும் அப்படிப்பட ராக்கெட்டுகள் மூலமாகத்தான் நாம் விண்வெளிப்பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். மேலும் ராக்கெட்டின் உட்சபச்சவேகம் என்பது ஒரு வினாடியில் ராக்கெட் எரிபொருள் எரிந்து வெளியேற்றும் வாயுக்களின் திசைவேகம் மற்றும் ராக்கெட்டின் எடை ஆகியவற்றை சார்ந்து இருக்கும் என்பதையும் தெரிவித்தார். இதுதான் பிற்காலத்தில் ராக்கெட் சமன்பாடு (Rocket Equation, known as Tsiolkovsky Rocket Equation) என்று அழைக்கப்பட்டது. இதன் பிறகுதான் வளிமண்டலத்தை தாண்டி செல்லும் ராக்கெட் தயாரிப்பு பற்றிய ஆய்வுகள் சுறுசுறுப்படைய ஆரம்பித்தது.

ராக்கெட்டுகளில் 1926 ஆம் ஆண்டு வரை திட எரிபொருள் (Solid Fuel which is oxidation Gunpowder or charcoal, coal, wood pellets, grains) தான் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சியோல்கோவ்ஸ்கியின் ஆய்வுகளை அடிப்படையாகக்கொண்டு ராபர்ட் கோட்டர்ட் (Robert Goddard, 1882 – 1945) என்ற அமெரிக்கர் உலகிலேயே முதன் முதலாக திரவ எரிபொருளில் (Robert used Gasoline as fuel) இயங்கும் வகையிலான ராக்கெட்டுகளை 1926 ஆம் ஆண்டு தயாரித்து பரிசோதித்து வெற்றியும் பெற்றார். கிட்டத்தட்ட 34 நான்கிற்கும் மேற்பட்ட சோதனைகளில் ராபர்ட் கோட்டர்ட்டின் ராக்கெட் அதிகபட்சமாக 2.6 கிலோமீட்டர் உயரம் வரை மணிக்கு 885 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்து உலகெங்கும் இருந்த ராக்கெட் விஞ்ஞானிகளை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

சர்வாதிகாரியாக இருந்தாலும் கூட, முதலாம் உலகப்போரில் வீழ்த்தப்பட்ட ஜெர்மனியின் பொருளாதாரத்தை, ஆட்சி பீடத்தில் அமர்ந்த வெறும் நான்கே ஆண்டுகளில் உலகின் முதன்மையான பொருளாதார சக்தியாக மாற்றிக் காட்டிய மிகச்சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர் அடால்ப் ஹிட்லர் (Adolf Hitler, 1889 – 1945). ஜெர்மனியின் ஆளுகை எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்ற அவரது கனவுதான் உலகில் இரண்டாம் உலகப்போர் (Second World War, 1939 – 1945) ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. மற்ற நாடுகளின் மீது தாக்குதலை துவங்குவதற்கு முன்பு தனது ராணுவத்தை நவீனப்படுத்துவது இன்றியமையாதது என்பதை உணர்ந்த ஹிட்லர் அதற்குரிய பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவற்றில் ஒன்று தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைதிட்டம்.

திட்டத்தை செயல்படுத்த விரும்பிய ஹிட்லர் அதற்காக 1927 ஆம் ஆண்டு பெர்லினுக்கு அருகில் ஒரு தனி ஆராய்ச்சி மையத்தை (Verein Fur Raumschiffahrt, founded in 1927 & dissolved in 1933) ஜோஹன்னஸ் வின்க்ளர் (Johannes Winkler, 1897 – 1947) என்பவரது தலைமையில் ஏற்படுத்தினார். ஜோஹன்னஸால் ராக்கெட் தயாரிக்கும் திட்டத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டவர் தான் வெர்னர் வான் பிரவுன் (Wernher Von Braun, 1912 – 1977).  சிறுவயதில் இருந்தே ராக்கெட்டுகளின் மீது தீராத காதல் கொண்டிருந்த வெர்னர், ராபர்ட் கோட்டர்ட்டின் கண்டுபிடிப்பு மற்றும் சியோல்கோவ்ஸ்கியின் ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு 1932 ஆம் ஆண்டு எழுபது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் “A-4” என்ற ஏவுகணைகளை தயாரிப்பதில் வெற்றிகண்டார். ஆனால் ஹிட்லர் தொலைதூர தாக்குதல் ஏவுகனைகள் மீது அதிக நாட்டம் கொண்டிருந்ததால் A-4 ரக ஏவுகணைகள் சோதனை ஓட்டத்தோடு நிருத்திக்கொள்ளப்பட்டது.

 

வெர்னரின் நேரடிப்பார்வையின் கீழ இயங்கிய வல்லுனர்கள் குழு தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு திரவ எரிபொருளை கொண்டு இயங்கும் (Ethanol + liquid oxygen) விண்ணை பிளந்து செல்லும் உலகின் முதல் பிரம்மாண்டமான ஏவுகணையை தயாரித்து 1942 ஆம் ஆண்டு பால்டிக் கடலுக்கு அருகேயுள்ள பீனேமுண்டே (Peenemunde) என்ற இடத்திலிருந்து ஏவியது. அதுவரையில் விளையாட்டு பொம்மையின் தோற்றத்தை போல் இருந்த ராக்கெட்டுகளின் வடிவம் உருமாறி பிரம்மாண்ட வடிவத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 3.56 மீட்டர் உயரமிருந்த V-2 என்று அழைக்கப்பட்ட இந்த ஏவுகணை 1000 கிலோ வெடிபொருளை சுமந்துகொண்டு மணிக்கு 2880 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி தரைமட்டமாக்கும் திறன் கொண்டதாக இருந்தது.

தொடர்ந்து ஜெர்மனியில் 1943 ஆம் ஆண்டு V-2 ரக ராக்கெட்டுகளின் உற்பத்தி மின்னல் வேகத்தில் துவங்கப்பட்டது. தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் மீதும், பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மீது ஏவி தாக்கப்பட்டது, தாக்குதலில் 7250-க்கும் மேற்பட்ட ராணுவவீரர்கள் உயிரிழந்தார்கள், இதில் இங்கிலாந்தில் மட்டும் கிட்டத்தட்ட 3000 ராணுவவீரர்கள் உயிரிழந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. பாய்ந்து வந்து தாக்கி கனவிலும் அப்போது நினைத்து பார்த்திருக்காத பேரழிவுகளை ஏற்படுத்திய ஜெர்மனியின் பிரம்மாண்ட ராக்கெட்டுகளை உலக நாடுகள் மிரட்ச்சியோடு பார்த்தன.

 

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் படைகள் தோற்கடிக்கப்பட்டதும் ஜெர்மனிக்குள் புகுந்த அமெரிக்கப்படை வீரர்களும் ரஷ்யப்படை வீரர்களும் ஹிட்லரை தேடினார்களோ இல்லையோ வெர்னரை ஆளுக்கொரு புறமாக மும்முரமாக தேடினார்கள். அமெரிக்க உளவு நிறுவனமும் அமெரிக்க ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டு வெர்னரை தேடும் பணியில் ஈடுபட்டது. ஆப்பிரேசன் பேப்பர்கிளிப் (Operation Paperclip) என்று பெயரிடப்பட்ட இப்பணி அமெரிக்கர்களுக்கு வெற்றியை தேடித்தந்தது அதாவது வெர்னர் அமெரிக்க வீரர்களிடம் சிக்கினார். உடனிருந்த ரஷ்ய வீரர்களுக்கு கூட தெரியாமல் வெர்னர் மற்றும் சில ராக்கெட் வல்லுனர்களை அப்படியே அலேக்காக அமெரிக்கா கடத்தி வந்தது அமெரிக்க உளவு நிறுவனம். ரஷ்யப்படை வீரர்களிடமும் வெர்னர் குழுவில் பணியாற்றிய சில வல்லுனர்கள் சிக்கினார்கள். அப்படி அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களது நாட்டிற்கு கொண்டுவந்த ஜெர்மானிய ராக்கெட் வல்லுனர்களை கொண்டு தங்களது நாட்டிற்க்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியது.

 

நாம் தாம் வெர்னரையே கொண்டு வந்துவிட்டோமே பிறகென்ன என்று அசால்டாக அமெரிக்கா இருக்க திடீரென்று ரஷ்யா 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4, உலகே அதிரும்படியாய் “ஸ்புட்னிக் – 1 (Sputnik-1)” என்று பெயரிடப்பட்ட உலகின் முதல் செயற்கைகோளை "ஸ்புட்னிக்" என்ற ராக்கெட்டை கொண்டு விண்வெளிக்கு ஏவி நிலைநிறுத்தியது, என்ன நடக்கிறது என்று அமெரிக்கா உணருவதற்கு முன்பு சரியாக முப்பது நாள் இடைவெளியில் அதாவது நவம்பர் 3 - ல் “ஸ்புட்னிக் – 2 (Sputnik-2)” என்ற மற்றொரு செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்தியது ரஷ்யா, ஸ்புட்னிக் – 2 உலகின் முதல் உயிரினம் பரந்த செயற்கைக்கோள் ஆகும். லைகா (Laika) என்ற நாய் அந்த செயற்கைகோளில் பயணித்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து வெர்னர் தலைமையிலான அமெரிக்க விஞ்ஞானிகள் குழு அமெரிக்காவின் முதல் செயற்கை கோளான எக்ஸ்ப்ளோரர் (Explorer-1) 1958 ஜனவரி-1 ஆம் தேதி விண்ணுக்கு ஏவி விண்வெளிப்போட்டியை உறுதிசெய்தது.

 
அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஏற்பட்ட விண்வெளி பயண போட்டிகள் உண்மையில் ஜெர்மனியில் இருந்து இரண்டாக பிரிந்த ஜெர்மானிய விஞ்ஞானிகளுக்கு இடையே நடந்த விண்வெளிப்போட்டிதானே அன்றி அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடந்த போட்டி அல்ல. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதனின் கனவாக இருந்த வளிமண்டலத்தை தாண்டிப்பறக்கும் விண்வெளிப்பயணத்தை நினைவாக்கிய வெர்னர் வான் பிரவுன் இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானி என்றால் மிகையில்லை.

பதிவை பற்றிய உங்களது கருத்துக்களை தவறாமல் பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே, உங்களது கருத்துக்கள் என்னை மென்மேலும் வளர்த்துக்கொள்ள உதவும், விரைவில் மீண்டும் ஒரு பயனுள்ள பதிவின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன், நன்றி, வணக்கம் ..!

No comments:

Post a Comment

welcome ur comment,