Saturday, May 19, 2012

திப்பு சுல்தான்-ஒரு முழு வரலாறு

திப்பு சுல்தான்-ஒரு முழு வரலாறு 


திப்பு சுல்தான் 

1799
மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையதுஎன்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில்ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company’ - The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பல யுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.
திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

tipu sultan
1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.


கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர் போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரியத் தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர் புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டனர். சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்து கொண்டு தரிசிக்கத்தான் முடிந்ததுஎன்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து கொண்டதால் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்தும்வரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடி கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம், கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர். குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம்அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்வாயை மூடுஎன்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர்த் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.


திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி


ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனதுஅக்னி சிறகுகள்என்ற நூலில் தான் அமெரிக்காவின்நாசாவிண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளனஎன்று கூறியிருந்தார்.
 click the link= <<
உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட் உருவான வரலாறு >> 

 நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்


அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரைக் கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியைத் தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடை செய்தார்.


அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு


எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாதுஎன ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக நாயர் சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திரப் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணைக் கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகைய கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாக திப்பு கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.”

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.


திப்புவின் மத நல்லிணக்கம்


திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டு தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த .இலக்குமிநாராயணன் தமதுதிப்புவின் சமயக் கொள்கைஎன்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வு கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர்திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பார்ப்பனர்கள் தற்கொலைச் செய்து் கொண்டனர்என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, .பி., .பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்குக் காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார்.


போர்களத்தில் நேர்மை

தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்என்று தன் இராணுவத்துக்கு எழுத்துப் பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”


மக்கள் சக்தியை திரட்டியவர்


ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமா வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும். தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி ்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிச்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றைகற்பனைக்கதைஎன்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றைகற்பனைக் கதைஎனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.

அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும் . அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.



2 comments:

  1. “ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்புதான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:

    “சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை.. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”

    1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:

    “இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள்…”, “தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.”

    – இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்

    மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.

    தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.

    “நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

    வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

    ReplyDelete

  2. திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள். ‘சதக்’ என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.

    காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.

    ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

    இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.””மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

    திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது. அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:

    “நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.”

    “மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா”

    இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.

    – புதிய கலாச்சாரம் – நவம்பர், 2006

    ReplyDelete

welcome ur comment,