Monday, July 6, 2020

"உலகின் வினோதமான மரங்களை இங்கே காணலாம்"

"உலகின் வினோதமான மரங்களை இங்கே காணலாம்"
"மரங்களின் வித்தையரங்கம்"

 1884-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ல் ஸ்வீடனிலுள்ள (Sweden) ஹாலேண்ட் (Halland) நகரில் ஆல்ஃப்ரெட் எர்லாண்ட்சன் (Alfred Erlandson) மற்றும் கிறிஸ்டினா லார்சன் (Kristina Larsson) தம்பதியினருக்கு லுட்விக் (Ludwig), ஆந்தன் (Anthon) என்கிற இரு புதல்வருக்குப் பின்னரும், எம்மா ஸ்வான்சன் (Emma Swanson) என்கிற புதல்விக்கு முன்னரும் மூன்றாவதாய்ப் பிறந்தவர்தான் ஆக்செல். அடிப்படையில் விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட குடும்பம், சுண்ணாம்பு, சாந்து போன்ற கட்டுமானப் பொருட்கள் உருவாக்கும் சுண்ணாம்புக் காளவாசலையும் நடத்திவந்தது. 1886-களின் துவக்கத்தில் அமெரிக்காவின் மின்னசோட்டா (Minnesota) மாகாணத்திற்குக் குடிபெயர்ந்தது ஆக்செலின் குடும்பம். சிறுவயதிலிருந்தே (விவசாயக் குடும்பம் என்பதால்) தாவரங்களோடு புழங்கிய ஆக்செல், மரங்களின் மீதிருந்த அளவற்ற அன்பினால், தான் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்தபின், 1925-ல் தனது தோட்டத்தில் மரங்களைத் தனக்குப் பிடித்த வடிவங்களில் வளர்க்கத் தொடங்கினார். வடிவங்கள் என்றால், அசாதாரணமானவைகள் அவை. உதாரணத்திற்கு, கூடை, நாற்காலி, நுழைவாயில், நடனமாடும் ஜோடி, ஏணி, பாம்பு, இதயம், கோபுரம் என அவரது மனத்திரையில் கண்ட/விரும்பிய அனைத்துமாய் வளர்ந்து நின்றன மரங்கள். அதுமட்டுமல்லாது, வளர்ந்துகொண்டே இருக்கும் தனது பொதுவான பண்பினை மரங்கள் ஆக்செலுக்காக நிறுத்தியிருந்தன. ஆம், ஆக்செல் வளர்த்த மரங்கள் சில குறிப்பிட்ட (அவர் விரும்பிய) அளவிற்கு மேல் வளரவே இல்லை. உதாரணத்திற்கு, ஒரு நாற்காலி வடிவில் ஒரு மரத்தை வடிவமைத்து வளர்த்தால், அது சரியாக ஒரு நாற்காலியின் உயரம் மட்டுமே வளர்ந்திருந்தது; அதற்கு மேல் வளரவில்லை.





          இவ்விநோதத்தை மக்கள் ரசிக்கின்றனர் என்பதைத் தாமதமாகத்தான் அறிந்துகொண்டார் ஆக்செல். உடனடியாக கலிபோர்னியா (California)-வில் ஒரு இடத்தை வாங்கி, அங்கும் தனது இஷ்டம்போல மரங்களை வளர்த்துவிட்டார். "உலகின் வினோதமான மரங்களை இங்கே காணலாம்" என்று விளம்பரப்படுத்தியதோடு, "மரங்களின் வித்தையரங்கம்" (The Tree Circus) என அத்தோட்டத்திற்குப் பெயரும் இட்டார். மரங்கள் விதவிதமான வடிவங்களில் கிளைகளைப் பரப்ப உலகெங்கும் ஆக்செலின் புகழ் பரவத் தொடங்கியது. "ரிப்லீயின், நம்பினால் நம்புங்கள்" (Ripley's Believe It or Not!) என்கிற உலகப்புகழ்பெற்ற விநோதங்களின் தொகுப்புகளடங்கிய புத்தகத்தில் ஆக்செலும், அவரது மரங்களும் பன்னிரண்டு முறை இடம்பெற்றிருந்தன. இதில் இவருக்குக் கிடைத்த சிறப்பு என்னவெனில், ரிப்லீயின் புத்தகத்தில் ஒருமுறை இடம்பெற்ற வினோதம் மீண்டும் இடம்பெறும் சாத்தியக்கூறுகள் குறைவு; காரணம், ஆண்டுக்கொருமுறை வெளியாகும் அப்புத்தகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் நிகழும் விநோதங்களும், இந்த ஆண்டிலும் மக்களை வியப்புறச் செய்யும் சென்ற ஆண்டின் விநோதங்களும் மட்டுமே இடம்பெறும்.





       மரங்களின் தென்றல் காற்றில் வாழ்ந்து கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் காற்று திசைமாறியது. அவரது வாழ்க்கையின் சோதனைக்காலம்; தான் உருவாக்கிய அந்த அற்புதத் தோட்டத்தை விற்கவேண்டிய சூழ்நிலை! 1963-ல் தனது தோட்டத்தை, பன்னிரண்டாயிரம் டாலர்களுக்கு லேரி (Larry) மற்றும் பெக்கி தாம்ப்சன் (Peggy Thompson) தம்பதியருக்கு விற்றார். ஆக்செலுக்கு தான் வளர்த்த மரங்களின் மீதிருந்த அளவுகடந்த பிரியத்தை உணர்ந்த அத்தம்பதியர், ஆக்செல் அவ்விடத்தை விற்றபிறகும் கூட அம்மரங்களைப் பராமரிக்க, பணிக்கு அமர்த்தினர். என்ன இருந்தாலும் இப்போது அவர் மாற்றான் தோட்டத்து மரங்கள். தினமும் அவைகளோடு இருக்கும் வாய்ப்பு கிட்டினாலும், அவைகள் தனது சொந்தமாய் இருந்து தற்போது தான் வேறோருவராய் வந்து பராமரிக்கிறோமே என்கிற வருத்தம் ஆக்செலின் மனதில் அடியாழத்தில் குமுறிக்கொண்டிருந்தது. விளைவு, தான் வளர்த்து உருவாக்கிய மரங்களை அதன் இடத்தோடு சேர்த்து விற்ற ஒரு ஆண்டிற்குள்ளாகவே, அதாவது சரியாக 1964, ஏப்ரல் 28-ல் ஆக்செல் தனது கடைசி மூச்சுக்காற்றை அம்மரங்களிடமிருந்து பெற்று மீண்டும் அம்மரங்களிடமே கொடுத்தனுப்பினார். (அப்போது மரங்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலியும், கதறல்களும் மரங்களுக்கு மட்டுமே கேட்டிருக்கும்!) [பின்குறிப்பு: இவர்தான் ஆக்சல் எர்லாண்ட்சன் என்று ஆணித்தரமாகக் கூறுமளவிற்கு அவரின் ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை.]





          பின்னர், லேரியும், பெக்கியும், அத்தோட்டத்திற்குள் 25, 30 ராட்சத டைனோசர் உருவங்களை வைத்து அதற்கு "தொலைந்த உலகம்" (The Lost World) எனப் பெயரிட்டனர்; ஆக்செலின் மரங்கள் இருந்த தோட்டத்திற்கு "மந்திரக்காடு" (The Enchanted Forest) எனவும் பெயர் மாற்றினர். துரதிஷ்டவசமாக, அவை இரண்டும் திறப்பு விழா காணும் முன்னரே லேரியின் இறப்பு நிகழ்ந்துவிட, தனது மூன்று குழந்தைகளை வளர்க்கும்பொருட்டு நிர்வாகத்தைக் கையிலெடுத்த பெக்கி, சில ஆண்டுகள் வெற்றிகரமாகக் கையாண்டார். பின்னர், அவ்விடத்தை விற்க முடிவெடுத்தபோது முதலில் சம்மதித்த ஒரு சிலர் பின்னர் காரணமேதுமின்றி பின்வாங்கினர். சரி குத்தகைக்கு விடலாம் என்று பார்த்தால், குத்தகைக்கு எடுத்தவர்களின் தொழிலில் எதிர்பாராத நஷ்டம் என இந்த மந்திரக்காடு ஒரு சபிக்கப்பட்ட காடுபோல் சிலரது மத்தியில் பீதியைக் கிளப்பியது. 




          பின்னர் 1977-ல், ராபர்ட் ஹோகன் (Robert Hogan) என்பவர் தொழில் மேம்பாட்டிற்காக அந்நிலத்திலுள்ள மரங்களைப் பெயர்த்தெடுத்து வேறொரு இடத்தில் வரிசையாக நட முடிவெடுத்து, மார்க் ப்ரிமேக் (Mark Primack) எனும் இளம் வடிவமைப்பாளரின் தலைமையில் மரங்களைக்குறித்தத் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டன.  ஜோசப் காஹில் (Joseph Cahill) எனும் நிலவியல் வடிவமைப்பாளர், இவர்களின் திட்டப்படி மரங்களை இடம்பெயர்த்து பத்திரமாகப் பொருத்த பன்னிரண்டாயிரம் டாலர்களையும், இரண்டரை ஆண்டுகள் அவகாசமும் பெற்றார். திடீரென ஜோ குச்சியாரா (Joe Cucchiara) என்பாரின் தலைமையில் கிளம்பிய உள்ளூர் புரட்சிப்படை (Friends of Scotts Valley Tree Circus) ஒன்று, இவர்கள் மரங்களை இடம்பெயர்ப்பதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர். இதன் விளைவால் ப்ரிமேக்கும் அவரது சகாக்களும் கைதுசெய்யப்பட்டனர், காஹிலின் அலுவலகம் மூடப்பட்டது, ஹோகனின் கனவு அம்மரங்களின் காற்றில் கரைந்தே போனது. பிறிதொருநாள் 1985-ஆம் ஆண்டு, மைக்கேல் போன்ஃபான்டே (Michael Bonfante) என்பவர் ஆக்செல் வளர்த்த 24 மரங்களை ஹோகனிடம் விலைக்கு வாங்கி, தற்போது கில்ராய் பூங்கா (Gilroy Gardens) என்றழைக்கப்படும்  தனது கேளிக்கைப் பூங்காவில் நிறுவினார். ஆக்செல் வளர்த்ததில் இறந்துபோன மரங்களை கலிஃபோர்னியா மாகாணத்தின் சாண்டாக்ரூஸ் நகரிலுள்ள கலை-வரலாற்று அருங்காட்சியத்தில் பதப்படுத்திப் பாதுகாக்கின்றனர். ஒரு மரம் ஜப்பானில் 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகளாவிய கண்காட்சி ஒன்றிற்காக வழங்கப்பட்டது. ஆக்செல் வளர்த்த "தொலைபேசிக்கடை மரம்" (Telephone Booth Tree)மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமூர் நகரிலுள்ள அமெரிக்க தொலைநோக்குக் கலை அருங்காட்சியகத்தில் (American Visionary Art Museumநிரந்தரக் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.




          ஆக்செலின் இம்மரங்களால் கவரப்பட்ட பலர் அவரைப்போல மரம்வளர்க்க முயன்று தோற்றனர்; சிலருக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது. அந்த ஓரளவு வெற்றியும் கூட ஆக்செலின் விஸ்வரூப வெற்றிக்கு முன் தூசாகத் தெரிந்தது. அதற்காக அவர்கள் நிறைய மெனக்கெடவும், மரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியும், அவை வளரும்போது துன்புறுத்தியும் வளர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஆக்செல் இதில் எதையும் பின்பற்றியதாய்த் தெரியவில்லை. சில கிளைகளுக்கு ஆதரவாய் (துன்புறுத்தாமல்) அருகில் கொம்பு நடுதல், சிறிது நாட்கள் பிணைத்துவைத்தல் போன்றவற்றைச் செய்தாலும், அவர் செய்த முறை அவருடனேயே மறைந்து போனது. ஆக்செல் எப்படி இவ்வாறு மரங்களை வளர்த்தார் என்ற ரகசியத்திற்கு இன்றுவரை யாருக்கும் விடை கிடைக்கவில்லை. ஒருமுறை ஆக்செலிடம் அவர் எவ்வாறு இப்படி மரங்களை வளர்த்தார் என்பதைக் கேட்டபோது, "நான் மரங்களிடம் பேசுவேன். நான் எப்படி சொல்கிறேனோ, அப்படித்தான் மரங்கள் வளரும்." என்பார். 

என் சகோதரனின் தளம்  இது அவரது பதிவு 

No comments:

Post a Comment

welcome ur comment,