தேனிலவுக்கு சென்று வரும் நண்டுகள்
கிறிஸ்மஸ் தீவு (Christmas island) என்பது இந்துச் சமுத்திரத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு குட்டித் தீவாகும். இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்பவர்களைத் தடுத்துவைப்பது இந்த கிறிஸ்மஸ் தீவில்தான் என்பதால் ஈழ தமிழர்களுக்கு இத்தீவு அறிமுகமாகியிருக்கும். சுமார் 135 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தீவின் சனத்தொகை 2000 இற்கும் குறைவு. மொத்த நிலப்பரப்பில் 88 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை கிறிஸ்மஸ் தீவு, தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தியுள்ளது. இத்தீவின் மிகப் பிரதானமான அம்சம் அங்குவாழும் ஒரு வகை கோடிக்கணக்கான சிவப்பு நண்டுகள்தான். இதனால் இன்று இத்தீவு சிறந்ததொரு சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது.
கிறிஸ்மஸ் தீவில் 45 கோடி சிவப்பு நண்டுகள் இருப்பதாகவும் அதிலும் 14 வேறுபட்ட இனங்கள் இருப்பதாகவும் அவுஸ்ரேலிய தேசியப் பூங்காப் பாதுகாப்பு மையம் மதிப்பிட்டு தகவல் வெளியிட்டுள்ளது. இவை தோற்றத்தில் சிவப்பு நிறத்தில் உள்ளதால் ஏனைய நண்டுகளை விடவும் மிக அழகாகக் காட்சியளிக்கின்றன. அழகுறக் காட்சியளித்தாலும் அவற்றின் உடலமைப்பு கொஞ்சம் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.
பொதுவாகவே நண்டுகளுக்கு தலை, கழுத்து எல்லாம் வட்ட வடிவிலான ஒரு உடல் பகுதியில்தான் இருக்கும். நண்டுகள் எப்போதும் இடம் வலமாகவே பயணிக்கும். ஆனால் அவற்றின் பார்வை முன்னோக்கி இருந்தாலும் 180 பாகையில் அவை தம் கண்களை சுழற்றிப் பார்க்கும்.
இத்தீவில் உள்ள சிவப்பு நண்டுகளை ஏனைய காலங்களில் பார்ப்பது அரிதாகவே இருக்கும். ஆனால் அக்டோபர் நவம்பர் மாதம் ஆகும் பொழுது கோடிக்கணக்கான நண்டுகள் திடீரென அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இருந்து கடற்கரையை நோக்கி வெளியேற ஆரம்பிக்கின்றன. இது ஒவ்வொரு வருடமும் தொடராக நடைபெற்று வரும் ஒரு விடயம். சிவப்பு நண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது இனப்பெருக்க காலத்தில் காடுகளில் இருந்து கடற்கரை நோக்கி புலம் பெயர்கின்றன. பாதைகள், நகரங்கள், வீடுகள், கட்டிடங்கள் என எல்லாப் பகுதிகளுடாகவும் இவை நுழைந்து கடற்கரைக்கு விரைகின்றன. இக்காலங்களில் எங்குபார்த்தாலும் சிவப்பு நண்டுகளைக் காணலாம். மிக அழகாக இவற்றின் பயணம் இருக்கும்.
இவற்றால் மனிதர்களுக்கு உயிர் தீங்குகள் ஒன்றும் ஏற்படுவதில்லை. என்றாலும் இவை ஒரேயடியாக மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குப் படையெடுப்பதால் போக்குவரத்து, விவசாயம் என்பன பாதிக்கப்படுகின்றன. வாகனங்களில் பயணிக்கும்போது இவை அதிகமாக இறப்புக்குள்ளாவதால் தேசிய புங்கா அமைப்பினர் சிவப்பு நண்டுகள் அதிகமாகப் பயணிக்கும் பகுதிகளில் வாகனங்கள் ஓட்டுவதை தடைசெய்கின்றது. சாரைசாரையாக சிவப்பு நண்டுகள் வெள்ளம்போல் வரும் காட்சியைப் பார்க்க இக்காலங்களில் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்கின்றனர்.
இவ்வாறு கடற் கரையைச் சென்றடையும் நண்டுகள் அங்கு 8 அல்லது 10 வாரங்கள் தங்குகின்றன. தமக்கான உணவையும் அங்கு அவை பெற்றுக்கொள்கின்றன. அத்தோடு ஆண் நண்டுகளும் பெண் நண்டுகளும் இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. அதன்பின் சில வாரங்களில் உருவாகும் முட்டைகளை பெண் நண்டுகள் அவற்றின் முன் கைகள் இரண்டையும் மேலே உயர்த்தியவாறு கடலை நோக்கி நின்றுகொண்டு தம்மை வந்து தாக்கும் அலைகளில் முட்டைகளை விட்டுவிடுகின்றன. அவை கடற்கரையில் உள்ள பாறைகளில் ஒட்டிக்கொண்டு சில நாட்களின் பின்னர் குஞ்சு நண்டுகள் வெளியேறுகின்றன
சிவப்பு நண்டுகளின் இணப் பெருக்கத்திற்கும் முட்டையிலிருந்து குஞ்சுகள் வருவதற்கும் ஏதுவான இடம் கடற்கரை என்பதையும் பொருத்தமான காலம் நவம்பர், டிசம்பர் காலங்கள் தான் என்பதையும் சரியாக அறிந்து அவை செயலாற்றுகின்றன.
முட்டை பொறிந்து குஞ்சு நண்டுகள் வெளியே வந்ததும் அவை செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஓரிறு நாட்களில் மீண்டும் குஞ்சுகளுடன் பெரிய நண்டுகளும் டிசம்பர் முடிவு ஜனவரி ஆரம்பப் பகுதிகளில் காட்டுப்பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும். இதற்கிடையில் ஆயிரக் கணக்கான நண்டுகள் மோட்டார் வாகனங்களில் நசுங்கியும் ஒரு வகை எறும்பு, மற்றும் பறவைகளுக்கு உணவாகியும் இறந்துவிடும். இவ் இறப்பானது சமநிலைத் தன்மையைப் பேணுகின்றது. ஒரு பரம்பரை இறந்து புதிய பரம்பரைக்கு இடமளிக்கும் அற்புத செயல் இங்கு நிகழ்கின்றது.
No comments:
Post a Comment
welcome ur comment,