Friday, September 28, 2018

650 கன்னி பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த பெண்

உலக வரலாற்றில் கொடுங்கோலர்களுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. நமக்கு தெரிந்த்தவர்கள் எல்லாம் ஹிட்லர், இடியமின், முசோலினி, செங்கிஸ்க்கான் போன்ற சிலர் மட்டுமே. ஆனால் இவர்களை விடவும் அவர்களை விட அதிக கொடுமைகள் புரிந்த பல கொடுங்கோலர்களும் வரலாற்றில் இருக்கத்தான் செய்கின்றனர். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இதுபோன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். 


ராஜகுடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்களும் பல கொடுஞ்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பணம் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பது இப்பொழுது மட்டுமல்ல கடந்த காலத்திலும் இருந்திருக்கிறது. 650 இளம் பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த ஒரு அரக்க பெண்ணை பற்றித்தான் இந்த பதிவில் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். 

எலிசபெத் பத்தோரி 16 ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் ஹங்கேரியில் வாழ்ந்தவர்தான் இந்த எலிசபெத் பத்தோரி. கின்னஸ் புத்தகத்தின் படி இன்றுவரை உலகின் அதிக கொலை செய்த பெண் என்னும் பெயர் இவருக்குத்தான் உள்ளது. இவர் கிட்டத்தட்ட 650 பெண்களை கொலை செய்துள்ளதாக நம்பப்படுகிறது. ட்ராகுலா என்னும் கற்பனை கதாபாத்திரத்தை போல பெண்களின் இரத்தத்தில் குளித்தால் இளமையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கலாமென நினைத்து பெண்களை சித்திரவதை செய்து அதில் மகிழ்ச்சி அடைந்த அரக்கிதான் எலிசபெத் பத்தோரி . 

குழந்தை பருவம் 
குழந்தை பருவம் முதலே எலிசபெத் கொடூரமான காட்சிகளை பார்த்தபடியே வளர்ந்தார். அவரும் பல கொடூர சம்பவங்களில் ஈடுபட்டார். ஆனால் அதற்காக அவர் என்றும் தண்டிக்கப்பட்டதே இல்லை. மேலும் சிறுவயதிலேயே பல கொடுமைகளையும் அனுபவித்தார் எலிசபெத். ஒரு குதிரையின் வயிற்றை கிழித்து அதற்குள் ஒரு குற்றவாளியை வைத்து தைத்து குதிரையும், குற்றவாளியும் இறக்கும் வரை அந்த காட்சிகளை அனைவரும் பார்ப்பார்கள். இதுபோன்ற பல சம்பவங்கள் எலிசபெத்தின் குழந்தைப்பருவத்தில் நடந்தது. 13 வயதில் குழந்தை தன் காதலன் மூலம் 

13 வயதிலேயே 

குழந்தை பெற்றுக்கொண்ட எலிசபெத் 15 வயதை அடைவதற்கு முன்பே பெரேக் நடாஸ்டி என்னும் இளவரசனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். தன் மனைவியின் கடந்த காலத்தை அறிந்து கொண்ட பெரேக் அவரை கொடுமைப்படுத்தினார். மேலும் தன்னிடம் இருந்த கைதிகளையும் சித்திரவதை செய்தார். அவர்களின் விரல்களுக்கு இடையே காகிதத்தை வைத்து அதில் நெருப்புவைத்து அதை பார்த்து மகிழ்ச்சி அடையும் கொடூரனாக பேரெக் இருந்தான். 


கன்னி பெண்களின் இரத்தத்தில் குளியல் 

கொலைகள் செய்ய ஆர்மபித்த காலத்தில் எலிசபெத் தன்னிடம் சிக்கும் பெண்களை கடித்து அவர்களின் இரத்தத்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவருக்கு மிகவும் பிடித்த டிராகுலா கதாபாத்திரம்தான். கொலைகார வாழ்க்கை தொடங்கிய பின் கன்னி பெண்களை சித்திரவதை செய்து அதை கண்டு மகிழ்ச்சி அடையவும், அவர்களின் இரத்தத்தில் குளிக்கும் பழக்கத்தையும் கொண்டார் எலிசபெத். இதனால் தான் எப்பொழுதும் இளமையாக இருக்கலாம் என்று நம்பினார். இது உண்மையா என்ற சந்தேகம் பலருக்கும் இன்றும் இருக்கிறது.   

பெண்களை உறைய வைத்தல், நெருப்பு மூட்டுதல் 

கொடூரமான ஒருவனை திருமணம் செய்துகொண்ட பின் எலிசபெத் சித்திரவதை செய்வதில் பல புதிய முறைகளை அறிந்துகொண்டார். பெண்களை கூண்டில் அடைத்து அவர்களை பனிக்கட்டியில் வீசி அவர்கள் உறைந்து இறக்கும் வரை பார்த்து ரசித்தார். அதேபோல தன் பணிப்பெண்கள் கைகளில் நெருப்பு வைத்தல், அவர்களின் முகத்தில் நெருப்பு பந்தை எறிதல் போன்ற கொடூர செயல்களின் மூலம் எல்லையற்ற ஆனந்தம் அடைந்ததாக வரலாறு கூறுகிறது. 

தேனீக்களை வைத்து சித்திரவதை 

தன் கணவரின் அறிவுரைப்படி பெண்களின் மீது தேனை ஊற்றி அவர்களை தேனீக்கள் மற்றும் மற்ற பூச்சிகளை விட்டு கடிக்கவைத்தார். இரண்டு கொடூரர்களும் இணைந்து பல கொடுமைகளை செய்தனர். போர் முனையில் இருக்கும்போது கூட பேரெக் தவிர்ந்த தன் மனைவிக்கு எப்படி கொடுமை செய்வது என்று கடிதம் எழுதுவானாம் . 

நரமாமிசம் 

எலிசபெத் செய்த் கொடுமைகள் மற்றும் சித்திரவதைகளை முழுமையாக கூற இயலாது. ஏனெனில் அதில் அவ்வளவு கொடூரமும், வக்கிரமும் இருந்தது. அவரின் சித்தர்வதைகளில் முக்கியமான ஒன்று நரமாமிசம் தின்னும்படி கைதிகளை கொடுமை செய்தது. 

கணவரின் மறைவு 

தன் கணவரின் அறிவுரைகளையும் தாண்டி எலிசபெத் தானாகவே பல சித்திரவதை முறைகளை கண்டறிந்தார். அவற்றையெல்லாம் தன் பணிப்பெண்கள் மீது பரிசோதிப்பார். அவரின் பணியாட்கள் யாரும் கோட்டையிலிருந்து தம்பிக்காத வண்ணம் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. மேலும் இரவு நேரத்தில் அவர்கள் அனைவரும் கட்டிவைக்கப்படுவார்கள். 1604 ஆம் ஆண்டு கணவரின் மரணத்திற்கு பிறகு எலிசபெத் மிகவும் மோசமாக மாறினார். பெண்களை ஊசியை வைத்து குத்துவது, அவர்களின் மார்பங்களை வெட்டுவது போன்ற கொடுஞ்செயல்களில் ஈடுபட தொடங்கினார். 

பிளட் கவுன்டஸ் 

எலிசபெத் ' பிளட் கவுன்டஸ் ' என்ற புனைபெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். பெயருக்கேற்றாற்போல் எலிசபெத்திற்கு காமத்திலும் அதிக நாட்டம் இருந்தது. தன் காதலன், கணவன் மட்டுமின்றி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தார். படுக்கையில் ஆண்களை வெற்றிகொள்வதே பெருமை என்ற நினைப்பில் வாழ்ந்து வந்தார். 

சித்திரவதை தொடர்ச்சி 

தன் கணவர் இறந்த பல ஆண்டுகளுக்கு பின்னரும் எலிசபெத் தன் சித்ரவதைகளை தொடர்ந்தார். தன் அரண்மனைக்கு வேலைக்கு வரும் பெண்களை தொடர்ந்து சித்திரவதை செய்து கொன்றுகொண்டிருந்தார். இதனை அறிந்த ஊர்மக்கள் தங்கள் மகள்களை கோட்டைக்கு அனுப்புவதை நிறுத்தினர். மேலும் மக்கள் எலிசபெத்திற்கு எதிராக போராட்டம் செய்யவும் தொடங்கினர். தன்னை புகழ்ந்து பாடாத ஒரு புகழ்பெற்ற பாடகியை எலிசபெத் கோட்டைக்கு வரவைத்து கொன்றுவிட்டார். இந்த செய்து காட்டுத்தீ போல பரவியது. 

மன்னருக்கு தெரிய வருதல் 

மக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து எலிசபெத்தின் கொலைகள் குறித்து ஹங்கேரியின் மன்னருக்கு தெரிய வந்தது. இருப்பினும் அவரின் பணபலத்தை நினைத்து அஞ்சிய அரசர் எலிசபெத்தை விசாரிக்க ஒருவரை அரசாங்கம் சார்பாக நியமித்தார். எலிசபெத் இப்பொழுது ஒரு விதவையாக இருப்பதால் இப்பொழுது அவருக்கு மரண தண்டனை வழங்கினால் அவரின் செல்வம் யாவும் அரசாங்கத்திற்கு வந்துவிடும், அதை வைத்து அரசாங்கத்தின் கடன்களை அடைந்துவிடலாம் என்று எண்ணினார்கள். துர்சோ பத்தோரி என்பவர் எலிசபெத்தை காப்பாற்ற எண்ணினார். அதன் விளைவாக எலிசபெத் விசாரணையிலிருந்து தப்பினார் ஆனால் அவரின் கூட்டாளிகள் மாட்டிக்கொண்டனர்.


எலிசபெத்தின் மறைவு 

1610 ல் துர்சோ எலிசபெத்திற்கு எதிரான ஆதாரங்களை திரட்ட தொடங்கினார். அவரின் கோட்டைக்குள் இருந்து பல அடையாளம் தெரியாத பிணங்கள் கண்டறியப்பட்டது. அதன்பின் விசாரணை வேகமாக தொடங்கியது. எலிசபெத் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, அதற்கு பதிலாக அவரின் கூட்டாளிகள் குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி சித்திரவதை செய்யப்பட்டனர். எலிசபெத்தின் குற்றங்கள் மறுக்கப்பட்டது. இறுதியாக எலிசபெத்திற்கு மரண தண்டனை வழங்காமல் ஸ்லோவாக்கியாவில் இருந்த அவரது குடும்ப அரண்மனையில் சிறைவைக்கப்பட்டார். அதன்பின் மூன்று ஆண்டுகள் மட்டுமே எலிசபெத் உயிர்வாழ்ந்தார். 1614ல் அவர் உயிர் பிரிந்தது. 

கோட்டை 

எலிசபெத் மொத்தம் எத்தனை பேரை கொன்றார் என்பது இன்றும் பலருக்கும் தெரியாத ஒன்று. அவர் வாழ்ந்த, மணம் முடித்த, மற்றும் சிறைவைக்கப்ட்டு இறந்த கோட்டை இன்றும் ஸ்லோவாக்கியாவில் இருக்கிறது. வரலாற்றின் மிகப்பெரிய தொடர் கொலைகாரியான எலிசபெத் பத்தோரியின் வாழ்க்கை அனைவரையும் மிரளவைக்கும் ஒன்றாகும்.

Thursday, September 27, 2018

தேனிலவுக்கு சென்று வரும் நண்டுகள்

தேனிலவுக்கு சென்று வரும் நண்டுகள்


கிறிஸ்மஸ் தீவு  (Christmas island)  என்பது இந்துச் சமுத்திரத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு குட்டித் தீவாகும். இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்பவர்களைத் தடுத்துவைப்பது இந்த கிறிஸ்மஸ் தீவில்தான் என்பதால் ஈழ தமிழர்களுக்கு  இத்தீவு அறிமுகமாகியிருக்கும். சுமார்  135 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட  இத்தீவின் சனத்தொகை 2000 இற்கும் குறைவு. மொத்த நிலப்பரப்பில் 88 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை கிறிஸ்மஸ் தீவு, தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தியுள்ளது. இத்தீவின் மிகப் பிரதானமான அம்சம் அங்குவாழும் ஒரு வகை கோடிக்கணக்கான சிவப்பு நண்டுகள்தான். இதனால் இன்று இத்தீவு சிறந்ததொரு சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது.

கிறிஸ்மஸ் தீவில் 45 கோடி சிவப்பு நண்டுகள் இருப்பதாகவும் அதிலும் 14 வேறுபட்ட இனங்கள் இருப்பதாகவும் அவுஸ்ரேலிய தேசியப் பூங்காப் பாதுகாப்பு மையம் மதிப்பிட்டு தகவல் வெளியிட்டுள்ளது. இவை தோற்றத்தில் சிவப்பு நிறத்தில் உள்ளதால் ஏனைய நண்டுகளை விடவும் மிக அழகாகக் காட்சியளிக்கின்றன. அழகுறக் காட்சியளித்தாலும் அவற்றின் உடலமைப்பு  கொஞ்சம் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.

 பொதுவாகவே நண்டுகளுக்கு தலை, கழுத்து எல்லாம் வட்ட வடிவிலான ஒரு உடல் பகுதியில்தான் இருக்கும். நண்டுகள் எப்போதும் இடம் வலமாகவே பயணிக்கும். ஆனால் அவற்றின் பார்வை முன்னோக்கி இருந்தாலும் 180 பாகையில் அவை தம் கண்களை சுழற்றிப் பார்க்கும்.

இத்தீவில் உள்ள சிவப்பு நண்டுகளை ஏனைய காலங்களில் பார்ப்பது அரிதாகவே இருக்கும். ஆனால் அக்டோபர் நவம்பர் மாதம் ஆகும் பொழுது கோடிக்கணக்கான நண்டுகள் திடீரென அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இருந்து கடற்கரையை நோக்கி வெளியேற ஆரம்பிக்கின்றன. இது ஒவ்வொரு வருடமும் தொடராக நடைபெற்று வரும் ஒரு விடயம். சிவப்பு நண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது இனப்பெருக்க காலத்தில் காடுகளில் இருந்து கடற்கரை நோக்கி புலம் பெயர்கின்றன.  பாதைகள், நகரங்கள், வீடுகள், கட்டிடங்கள் என எல்லாப் பகுதிகளுடாகவும் இவை நுழைந்து கடற்கரைக்கு விரைகின்றன. இக்காலங்களில் எங்குபார்த்தாலும் சிவப்பு நண்டுகளைக் காணலாம். மிக அழகாக இவற்றின் பயணம் இருக்கும்.

இவற்றால் மனிதர்களுக்கு உயிர் தீங்குகள் ஒன்றும் ஏற்படுவதில்லை. என்றாலும் இவை ஒரேயடியாக மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குப் படையெடுப்பதால் போக்குவரத்து, விவசாயம் என்பன பாதிக்கப்படுகின்றன. வாகனங்களில் பயணிக்கும்போது இவை அதிகமாக இறப்புக்குள்ளாவதால் தேசிய புங்கா அமைப்பினர் சிவப்பு நண்டுகள் அதிகமாகப் பயணிக்கும் பகுதிகளில் வாகனங்கள் ஓட்டுவதை தடைசெய்கின்றது.  சாரைசாரையாக சிவப்பு நண்டுகள் வெள்ளம்போல் வரும் காட்சியைப் பார்க்க இக்காலங்களில் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாகச் செல்கின்றனர்.

இவ்வாறு கடற் கரையைச் சென்றடையும் நண்டுகள் அங்கு 8 அல்லது 10 வாரங்கள் தங்குகின்றன. தமக்கான உணவையும் அங்கு அவை பெற்றுக்கொள்கின்றன. அத்தோடு ஆண் நண்டுகளும் பெண் நண்டுகளும் இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. அதன்பின் சில வாரங்களில் உருவாகும் முட்டைகளை பெண் நண்டுகள் அவற்றின் முன் கைகள் இரண்டையும் மேலே உயர்த்தியவாறு கடலை நோக்கி நின்றுகொண்டு தம்மை வந்து தாக்கும் அலைகளில் முட்டைகளை விட்டுவிடுகின்றன. அவை கடற்கரையில் உள்ள பாறைகளில் ஒட்டிக்கொண்டு சில நாட்களின் பின்னர் குஞ்சு நண்டுகள் வெளியேறுகின்றன

சிவப்பு நண்டுகளின் இணப் பெருக்கத்திற்கும் முட்டையிலிருந்து குஞ்சுகள் வருவதற்கும் ஏதுவான இடம் கடற்கரை என்பதையும் பொருத்தமான காலம் நவம்பர், டிசம்பர் காலங்கள் தான் என்பதையும் சரியாக அறிந்து அவை செயலாற்றுகின்றன.

முட்டை பொறிந்து குஞ்சு நண்டுகள் வெளியே வந்ததும் அவை செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஓரிறு நாட்களில் மீண்டும் குஞ்சுகளுடன் பெரிய நண்டுகளும் டிசம்பர் முடிவு ஜனவரி ஆரம்பப் பகுதிகளில் காட்டுப்பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும். இதற்கிடையில் ஆயிரக் கணக்கான நண்டுகள்  மோட்டார் வாகனங்களில் நசுங்கியும் ஒரு வகை எறும்பு, மற்றும் பறவைகளுக்கு உணவாகியும் இறந்துவிடும். இவ் இறப்பானது சமநிலைத் தன்மையைப் பேணுகின்றது. ஒரு பரம்பரை இறந்து புதிய பரம்பரைக்கு இடமளிக்கும் அற்புத செயல் இங்கு நிகழ்கின்றது.