மெயின் அருவி பொங்குமாங்கடல்
குற்றாலத்தின் பிரதான அருவியான மெயின் அருவிதான், அதிக சுற்றுலா பயணிகளால் குளிக்குமிடம். தண்ணீர் நிரம்பி விழும் காலங்களில் மெயின் அருவி 5 கி.மீ. தொலைவில் இருக்கும் தென்காசியிலிருந்தே காணமுடியும். தொடர்ந்து பல மாதங்களுக்கு மழை இல்லாவிட்டாலும் மெயின் அருவியில் தண்ணீர் கொஞ்சமாவது விழுந்துக்கொண்டே இருக்கும். மற்ற அருவிகளில் அப்படியில்லை. தொடர்ச்சியாக ஒரு மாதம் மழை இல்லாவிட்டால், மெயின் அருவி தவிர மற்ற அனைத்து அருவிகளும் காய்ந்து வறண்டு காட்சியளிக்கும்.
மெயின் அருவியின் அழகே அந்த பொங்குமாங்கடல் தான். பொங்குமாங்கடல் இல்லையென்றால் மெயின் அருவி ஒரு காட்சிப்பொருளாகத்தான் இருந்திருக்கும். மலைப்பகுதியில் சிறிய மழை பெய்தாலே மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து, பேரிரைச்சலுடன் கொட்டும். அதிகமாக பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் பாதுகாப்பு வளைவை தாண்டி விழும். இதனால் தான் குளிக்க தடை விதிக்கப்படும்.
மெயின் அருவி, 288 அடி உயரம் கொண்டது. இந்த உயரத்திலிருந்து தண்ணீர் நேரடியாக கீழே விழுந்தால் யாரும் குளிக்க முடியாது. (சும்மாவே சீசன் காலத்தின் போது, இந்த மெயின் அருவியில் வாரத்திற்கு ஒரு நபராவது இறந்து போவதை நாம் செய்திகளில் பார்த்திருக்கிறோம்.)
19 மீட்டர் ஆழம் கொண்ட பொங்குமாங்கடல் கிட்டத்தட்ட அகலமான கிணறு மாதிரி தான் இருக்கும். மலைப்பகுதியில் இருந்து பாய்ந்து வரும் தண்ணீர், முதலில் பொங்குமாங்கடல் பள்ளத்தில் விழுந்து, அது நிரம்பி வழிந்த பின், நாம் குளிக்க ஏற்ற வகையில், மிதமான வேகத்தில் கீழே விழுகிறது. மேலும், மலைப்பகுதியிலிருந்து அடித்து கொண்டுவரப்படும் மரக்கிளைகள் ஆகியவற்றை இந்த பொங்குமாங்கடல் தான் தடுத்து நிறுத்துகிறது.
மெயின் அருவியில் குளிப்பவர்களுக்கு பல வகையில் இந்த பொங்குமாங்கடல் பாதுகாப்பு அளிக்கிறது. தண்ணீர் அழுத்தத்தில் இந்த பொங்குமாங்கடலின் ஆழம் அதிகரித்துக்கொண்டே போவதாகக் கூட கூறப்படுகிறது.
மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்