Monday, November 5, 2012

மின்வெட்டுக்குத் தீர்வாகுமா சூரிய மின்சாரம்?


சூரிய மின்சாரம்...

சூரிய மின்சாரம்..rko .

மின்வெட்டுக்குத் தீர்வாகுமா சூரிய மின்சாரம்?


தாங்க முடியாத மின்வெட்டில் தவிக்கிறது தமிழகம். ஒரு நாளில் மின்சாரம் இருக்கும் நேரத்தைவிட, இல்லாத நேரமே அதிகம். பாதிப்பின் உச்சத் தில் மின் வாரிய அலுவலகங்களை தீயிட்டுக் கொளுத்தும் அளவுக்கு மக்களின் கோபம் கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? மின்சார உற்பத்தியை மேம்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகள், மக்களே மின் உற்பத்தி செய்து தேவையைப் பூர்த்தி செய்துகொள்வது என்று இரு தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. மின்சார விநியோகத்தில் ஏற்படும் மின் இழப்பைச் சரி செய்வது, பழுதடைந்த மின் நிலையங்களைச் சீரமைப்பது, புதிய மின் நிலையங்களை உருவாக்குவது, மரபுசாரா மின் உற்பத்தியை ஊக்குவிப்பது எனப் பல யோசனைகள் அலசப்படுகின்றன. இவற்றை எல்லாம் உடனடி யாக அரசங்கம் செய்ய வேண்டும்.

மக்களால் செய்யக் கூடியது என்ன?


நடைமுறையில் மின்வெட்டு பிரச்னையைச் சமாளிக்கப் பலரும் இன்வெர்ட்டர் மற்றும் யு.பி.எஸ். இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இவை மின்சாரத்தை உற்பத்தி செய்வது இல்லை. மின்சாரம் இருக்கும்போது சேமித்துவைத்து, இல்லாதபோது பயன்படுத்த உதவுபவை. இவற்றிலும் சேமிப்பதற்குத் தொடர்ச்சியாக சில மணி நேரம் மின்சாரம் வேண்டும். ஆகவே, இதுவும் பல இடங்களில் கை கொடுக்கவில்லை. வேறு என்னதான் வழி? காற்றாலை, சாண எரிவாயு, காய்கறிக் கழிவுகள் எனப் பல முன்மாதிரிகள் இருந்தாலும் இவை யாவும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்திலும் செலவிலும் இன்னும் வரவில்லை. அதனால், நடப்பில் உள்ளதும் மக்களுக்குச் சாத்தியமானதுமான மாற்றுவழி சூரிய சக்தி மின்சாரம் மட்டும்தான். 
இப்போது மாநிலம் முழுக்கப் பல மருத்துவமனை களிலும், கல்லூரிகளிலும், வீடுகளிலும் 'சோலார் பவர் பேனல்கள்’ தென்படுகின்றன.

என்ன செய்ய வேண்டும்?


நமக்குச் சூரிய மின்சாரம் புதிது அல்ல. தமிழகத்தின் பல்வேறு மலைக் கிராமங்களில் பல ஆண்டுகளாக சூரிய மின்சாரம் நடைமுறையில் இருக்கிறது.

பொதுவாக, ஒரு நடுத்தர வர்க்க வீட்டில் இருக்கும் மின் சாதனங்கள் நான்கு விளக்குகள், இரண்டு மின் விசிறிகள், ஒரு டி.வி., ஒரு கிரைண்டர், ஒரு மிக்ஸி, ஒரு மோட்டார். இவற்றைப் பயன்படுத்த சுமார் ஒரு கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதைச் சூரிய சக்தி மூலம் தயாரிக்க இரண்டு லட்ச ரூபாய் செலவாகும். இதில் 40 சதவிகிதம் பணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. அரசு நிறுவனமான தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, மாநிலம் முழுக்க சுமார் 90 தனியார் முகவர்களுக்குச் சூரிய மின் சக்திக் கட்டுமானத்தை அமைத்துத் தருவதற்கான அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது. இவர்களை அணுகினால் நேரடியாக நமது இருப்பிடத்துக்கே வந்து அமைத்துத் தருவார் கள். சூரிய மின்சாரம் தயாரிக்க, சூரிய ஒளியைக் கிரகித்து மின்சாரமாக மாற்றும் பேனல்கள் முக்கியம். இடம் இருந்தால் தனி இடங்களில் அமைக் கலாம். இல்லை எனில் வீடுகளின் மொட்டை மாடிகளில் அமைக்கலாம். 

 
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப் பவர்கள் ஒன்று சேர்ந்து மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் செலவு குறையும். ஆனால், ஆரம்பச் செலவு அதிகம் என்பது இந்தத் தொழில்நுட்பம் மீது சொல்லப்படும் குறை.

''அப்படிப் பயப்படத் தேவையில்லை. ஒரு முறை இதற்கு முதலீடு செய்து விட் டால், 20 வருடங்களுக்குப் பிரச்னை இல்லை. நீண்ட நாள் நோக்கத்தில் இது லாபம்தான். இப்போது எங்கள் வீட்டின் மின் கட்டணம் கணிசமாகக் குறைந்து உள்ளது. தவிர, எங்கள் வீட்டில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கிறது'' என்கிறார் கோவையைச் சேர்ந்த வேலுமணி. 50 ஆயிரம் ரூபாய் செலவில் இவர் அமைத்திருப்பது மின் இணைப்புடன் கூடிய சூரிய மின் சக்தி அமைப்பு. மேலே சொன்ன 1.2 லட்ச ரூபாய் செலவில் அமைப்பது முழுவதுமாக சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரம். ஆனால், இதனுடன் ஒப்பிட்டால் செலவு குறைவு என்பதால் மின் இணைப்புடன் கூடிய சோலார் சிஸ்டத்தையே பலரும் தேர்ந்தெடுக்கின்றனர்.

மழைக் காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் செயல்படுமா? பலரும் கேட்கும் கேள்வி இது. ''நவீன தொழில்நுட்பப்படி சூரிய வெப்பத்தில் இருந்து அல்ல... வெளிச்சத்தில் இருந்துதான் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. ஆகவே, இரவு நேரத்தைத் தவிர பகல் முழுவதும் மின்சாரம் உற்பத்தி ஆகும்'' என்கிறார் கோவையில் சூரிய மின் சக்தி அமைப்பு முகமையை நடத்தும் சசிகுமார். ''ஒரு முறை சூரிய மின் சக்திக் கட்டமைப்பை அமைத்துவிட்டால் பராமரிப்புச் செலவு என்று எதுவும் இல்லை. சில வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரி மாற்றினால் போதும். இடையில் ஏதேனும் பழுது என்றால் சம்பந்தப்பட்ட முகவாண்மை நிறுவனமே வந்து சரிசெய்து தரும்.

சூரிய மின்சாரம் சரியான தீர்வா?


சூரிய சக்தி மின்சாரம்தான் இருப்பதிலேயே சாத்தியமானது என்று பலரும் கை காட்டி னாலும், சூரிய மின்சாரத்தை மட்டுமே முழுமை யான தீர்வாகக் கருதிவிட முடியாது. உதாரணமாக, இதை ஒரு தனி நபர் அமைக்கக் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் பணமும் சொந்த வீடு இட வசதியும் வேண்டும். மூன்று வேளை உணவுக்கே வழியற்ற ஏழை மக்கள் இவ்வளவு பணத்துக்கும் இடத்துக்கும் எங்கே செல்வார்கள்? ஆகையால், நடுத்தர வர்க்க மக்களுக்கும் உயர் வர்க்க மக்களுக்கும் இது ஒரு தீர்வைக் கொடுக்கலாம்.
சீனா சோலர் பவர் பிளான்ட் .rko ..

இதே நிலைமைதான் அரசாங்க அளவிலும். உலகிலேயே மிகப் பெரிய சூரிய மின்சார உற்பத்தி நிலையம் சீனாவில் இருந்தது. இதன் மொத்த மின் உற்பத்தித் திறன் 200 மெகா வாட். கடந்த ஆண்டு சீனாவைவிட பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை குஜராத்தில் அமைத்தார் நரேந்திர மோடி.

அதன் உற்பத்தித் திறன் 214 மெகா வாட். ஆனால், அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலைய உற்பத்தியுடன் ஒப்பிட்டால் இது சொற்பம்தான். ஆகையால், நாடு எதிர்கொள்ளும் மிகப் பெரிய அளவிலான மின் தட்டுப்பாட்டுக்கு முன் சூரிய மின்சார உற்பத்தி என்பது யானைப் பசிக்கு சோளப் பொரிதான். ஆனால், கோரமான பசியில் இருக்கும்போது, சோளப் பொரியை யாராலுமே அலட்சியப் படுத்த முடியாது !

Courtesy - Vikatan

No comments:

Post a Comment

welcome ur comment,