Monday, November 19, 2018

பிரிட்டிஷாரை ஓடவிட்ட இளைஞன்.. கொரில்லா படையை வைத்து செய்த சூர சாகசம்.. யார் இந்த பிர்ஸா முண்டா!

சென்னை: தமிழகம் முழுக்க தற்போது பிர்ஸா முண்டா பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளார். இவரின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்க கூடிய ஒன்று.
இயக்குனர் பா.ரஞ்சித், பிர்ஸா முண்டாவின் வாழ்க்கையை படமாக எடுக்க போகிறார் என்று செய்தி வந்ததும் யார் இவர், யார் இவர் என்று எல்லோரும் தேட தொடங்கிவிட்டார்கள். அப்படி இணையத்தில் தேடிய பலருக்கு நிறைய கதைகள், நிறைய விவரங்கள் கிடைத்து இருக்கும்.
இந்த ஆதிவாசி புரட்சியாளனுக்கு பின் நிறைய சாகச வரலாறும், சோக கதையும் இருக்கிறது. 24 வயதில் இறந்து போன இவரின் மரணம் கூட இப்போது வரை சர்ச்சையாகத்தான் இருக்கிறது.
எங்கு பிறந்தார்

எங்கு பிறந்தார்

நவம்பர் 15ம் தேதிதான் பா. ரஞ்சித் இந்த படத்தை இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதே நாளில்தான் பிர்ஸா முண்டா 1875ல் பிறந்தார். குந்தி மாவட்டத்தில், தற்போது இருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அருகில் உலிஹாட்டு என்று கிராமத்தில் பிறந்தார் இவர். முண்டா என்ற ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர். அதே பகுதியில் நிறைய வேறு ஆதிவாசி குழுக்களும் இருந்தது.
மாற்றம்

மாற்றம்

ஆதிவாசி குழுவில் பிறந்த இவருக்கு தொடக்கத்தில் இருந்தே பெரிய அளவில் படிக்க வேண்டும் என்று ஆசை. இவர்களின் இனக்குழு பல்வேறு அரசியல் காரணங்களால் தொடர்ந்து இடம் மாறி இடம் மாறி கடைசியாக அதே மாநிலத்தில் உள்ள சால்கட் என்று காட்டுப்பகுதியில் குடியேறியது. அங்குதான் அவர் அதிக வருடம் வசித்தது.
கிறிஸ்துவம் எப்படி?

கிறிஸ்துவம் எப்படி?

இவரின் ஆசிரியர் ஜெய்பால் நாக்கின் அறிவுரையின் பேரில் இவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். பிர்ஸா முண்டா ஆசைப்பட்டபடி அப்போதுதான் படிக்க முடியும் என்று இவர் மதம் மாறினார். அதன்பின் ஜெர்மன் மிஷன் பள்ளியில் சேர்ந்து படிக்கவும் தொடங்கினார். ஆனால் இந்த மத மாற்ற விஷயம் இவருக்கு பெரிய உறுத்தலாகவே இருந்தது.
மதங்களை உணர்ந்தார்

மதங்களை உணர்ந்தார்

இவர் அந்த ஜெர்மன் பள்ளியில் படிக்க படிக்க, ஆங்கிலேயர்கள் மக்களை எப்படி எல்லாம் அடிமை படுத்துகிறார்கள் என்று தெரிந்து கொண்டார். இதில் மத மாற்றமும், நில உரிமையும் எப்படி எல்லாம் பெரிய பிரச்சனை செய்கிறது என்று தெரிந்து கொண்டார். இதனால் அந்த பள்ளியைவிட்டு வெளியேறினார். அதோடு கிறிஸ்துவ மதத்தை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்தார்.
தனி இனக்குழு

தனி இனக்குழு

இதையடுத்து ஆதிவாசி மக்களை உள்ளடக்கிய பிர்சாய்த் என்ற இனக்குழுவை உருவாக்கினார். இதில் பல ஆதிவாசி மக்கள் வந்து இணைந்தனர். கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பலர், அந்த மதத்தைவிட்டுவிட்டு இதற்கு மாறினார்கள். இதுதான் முதல் முதலாக ஆங்கிலேயர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை அளித்தது. பிர்ஸா முண்டா அப்போதுதான் குறிவைக்கப்பட்டார்.
சர்தார் படை

சர்தார் படை

ஆனால் மதம் மட்டுமே இவரின் போராட்டம் கிடையாது. தன்னை சுற்றி நடக்கும் அரசியல் மாற்றங்களை கவனித்து வந்த பிர்ஸா முண்டா, 1885களில் நடந்த சர்தார் மக்களின் போராட்டம் குறித்தும் தெரிந்து கொண்டார். அந்த மக்கள் ஆங்கிலேயே அரசுக்கு எதிராக போராடியது இவருக்கு உத்வேகத்தை கொடுத்தது. இதன் பின்தான் இவர் தன் ஆதிவாசி மக்களுக்காக போராட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ஜமீன்தாருக்கு எதிரான போராட்டம்

ஜமீன்தாருக்கு எதிரான போராட்டம்

ஆனால் ஆதிவாசி மக்கள் ஆங்கிலேயர்களால் மட்டும் அடிமைப்பட்டு கிடக்கவில்லை. அங்கிருந்த 50 ஜமீன்தார்கள் ஆயிரத்திற்கும் அதிகமான ஆதிவாசி கிராமங்களை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். போராட வேண்டும் என்றால் இவர்கள் எல்லோருக்கும் எதிராகத்தான் போராட வேண்டும் என்று முடிவெடுத்தார். ஆங்கிலேயர்கள், உயர் சாதியினர், ஜமீன்தார்கள் என்று பெரிய படைகளை எதிர்த்து எழுந்தார் அந்த சிறிய இளைஞன் பிர்ஸா முண்டா.
நிலமே அவரின் உரிமை

நிலமே அவரின் உரிமை

நிலமே எங்கள் உரிமை என்று காலாவில் வரும் பாடல் வரிதான் இவரின் அரசியல் கொள்கையும். ஆதிவாசி மக்கள் தங்கள் பூர்வீக நிலங்களை மீட்டு எடுக்க வேண்டும் என்றுதான் இவர் போராட தொடங்கினார். நிலப்பிரபுத்துவம், மக்கள் அடிமையாக இருப்பது என பல விஷயங்களுக்கு எதிராக தன் மக்களை திரட்டினார்.
வீர படை

வீர படை

எந்த அளவிற்கு திரட்டினார் என்றால், இவர் உருவாக்கிய கொரில்லா படையில் 1000க்கும் அதிகமான இளைஞர்கள் இருந்தனர். பாரம்பரிய ஆயுதங்களை தாங்கி இவர்கள் போராட தயாரானார்கள். இந்த படைக்கு ''உல்குலான்'' படை என்று பெயர். இதை பெரும் கலகம் விளைவிக்கும் படை என்று கூறலாம். கொரில்லா தாக்குதல் முறையை இவர்கள் கடைபிடித்தனர்.
கொரில்லா தாக்குதல்

கொரில்லா தாக்குதல்

இவர்கள் தாக்காத அரசு அலுவலகங்கள் கிடையாது. ஆணவத்தில் எழும்பி நின்ற பல ஜமீன்தார் கோட்டைகளை இவர்கள் படை தகர்த்து இருக்கிறது. பல ஆங்கிலேயே போலீஸ் படைகளின் உயிர்களையும் பலி கேட்டு இருக்கிறது இந்த இளம் இளைஞர் படை.
போராட்டம் செய்தார்

போராட்டம் செய்தார்

இவர்கள் தாக்குதல் நடத்திய அதே சமயத்தில் அரசுக்கும் ஜமீன்தாருக்கும் எதிராக போராட்டமும் செய்தனர். 1894ல் தொடங்கி பல வருடம் இவர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஓரான், முண்டாசு, காரியாஸ் என்று பல இனக்குழுக்களை இணைத்து போராட்டம் நடத்தினார் பிர்ஸா முண்டா.
மிகப்பெரிய தாக்குதல்

மிகப்பெரிய தாக்குதல்

1987 ஆகஸ்ட் மாதம் இவரின் படை குந்தி பகுதியில் பெரிய தாக்குதல் நடத்தியது. 400 பேர் கொண்ட படை அங்கு நுழைந்த ஜமீன்தார் வீடுகளிலும், போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியது, இது பெரிய போர் போல நடந்தது. இதில் அங்கிருந்து பிரிட்டிஷ் படைகளை வீழ்த்தி பிர்ஸா முண்டா ஓடவிட்டார். அதன்பின் அந்த வருடம் முழுவதும் இப்படி நடத்திய தாக்குதலில் எல்லாம் பிரிட்டிஷ் படை பின்வாங்கியது. இதன் பின் கைது செய்யப்பட்ட இவர் 2 வருடம் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.,
மதம் பற்றி

மதம் பற்றி

இவர் எந்த அளவிற்கு நில சீர்திருத்தம், விடுதலை மீது நம்பிக்கை கொண்டாரோ, அதேபோல் மத சீர்திருத்தம் பற்றியும் பேசினார். இவர் கிறிஸ்துவத்தை எதிர்த்தாலும் இந்து மதத்தை எங்கும் ஆதரிக்கவில்லை. இவர் தாய்மதத்திற்கு திரும்ப வேண்டும், இந்து, கிறிஸ்துவம் இல்லாமல் இயற்கையை வழிபடும் ஒற்றை இயற்கை கடவுள் கொண்ட ஆதிவாசி மதத்திற்கு திரும்ப வேண்டும் என்றார். மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். மது குடிப்பதை, விலங்குகளை கடவுளுக்கு காணிக்கை அளிப்பதை எதிர்த்தார். மக்கள் மத்தியில் தலைவனாக மாறினார்.
மரணம் அடைந்தார்

மரணம் அடைந்தார்

இவர் செய்த புரட்சிகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் இவரை 1900 மார்ச் மாதம் கைது செய்தனர். ராஞ்சி ஜெயிலில் இவர் அடைக்கப்பட்டார். அதன்பின் இவர் 1900 ஜூன் 9ம் தேதி மரணம் அடைந்தார். இவர் மரணத்தில் இப்போதும் மர்மம் நிலவுகிறது. ஆங்கிலேயே அரசு இவர் காலரா வந்து இறந்தார் என்றது, ஆனால் அவரின் படையினர் இவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்கிறது. இதன் மர்மம் இன்னும் முடிவிற்கு வரவே இல்லை. இறந்த போது இவருக்கு 24 வயதுதான்.
கதைகள்

கதைகள்

இவர் அம்மாநில நாட்டுப்புற கவிதைகளில்,கதைகளில், பாடல்களில் இன்னும் ஹீரோவாக வழிபட படுகிறார். இவருக்காக கோவில்களும் கூட உள்ளது. இவரே தன்னை கடவுளின் தூதுவன் என்று ஒருமுறை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிவாசி மக்களுக்கு இப்போது இவர்தான் தெய்வம்.
 அரசு மரியாதை

அரசு மரியாதை

இவரை அம்மாநில அரசு தூக்கி வைத்து கொண்டாடுகிறது. பிர்ஸா முண்டா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி, பிர்ஸா முண்டா விவசாய பல்கலைக்கழகம், பிர்ஸா முண்டா ஸ்டேடியம், பிர்ஸா முண்டா விமான நிலையம், பிர்ஸா முண்டா ஜெயில் என்று நிறைய அரசு கட்டிடங்கள் இவர் பெயரில் திறக்கப்பட்டு இருக்கிறது. இத்தனை புகழ்கள் கொண்ட இவரின் வாழ்கை வரலாற்றைத்தான் பா.ரஞ்சித் படமாக எடுக்கிறார்.

Saturday, November 17, 2018

காட்டு_யானை

காட்டு_யானை....


காட்டு_யானை

காட்டு_யானை மகா புத்திசாலி. வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும். ஆனா, காட்டு யானைகள் சுயமா யோசிச்சு முடிவெடுக்குற, அபார அறிவு கொண்டது. சுயம்பு. அதோட புத்திசாலி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம். வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களை சுத்தி, 'மெக்கர்' ன்னு சொல்லப்படுற மின்சாரவேலி போட்டிருப்பாங்க. விசேஷ வீடுகள்ல போட்டிருக்குற சீரியல்லைட் சரங்கள், விட்டுவிட்டு எரியுமே... அந்த டெக்னாலஜி. இது சோலார்ல (சூரியஒளி மின்சார பேட்டரி) மட்டும்தான் அமைக்கப்படணும். 'கட் அவுட்' வெச்சு, சுழற்சி முறைல, 3 நொடிக்கு கரன்ட்சப்ளை இருக்கும், அடுத்த 5 நொடிக்கு சப்ளை வராது. லைன் சப்ளை வர்ற அந்த 3 நொடி மட்டும் மெல்லிசா, ஸ்ஸ்ஸ்... ன்னு ஒரு சத்தம்வரும். இதை தொட்டு கரன்ட் அடிச்சாக் கூட... பலமான மின்சார தாக்குதல் மட்டுமே இருக்கும். எந்த வனவிலங்குகளோட உயிருக்கும் ஆபத்து ஏற்படாது. இந்த சோலார் மெக்கர வாங்க சங்கடப் பட்டுட்டு, சில லூசுப்பயலுக... கிணத்து மோட்டருக்கு குடுக்குற த்ரீபேஸ் லைன்ல ஒயரசொருகி, நேரடியா கம்பி வேலிக்கு கனெக்க்ஷன குடுத்துடுவானுங்க. எவ்ளோ பெரிய யானையா இருந்தாலும், இருபதே செக்கன்ட்ல தட்டித் தூக்கிரும். அதை காப்பாத்த வர்ற யானைகளும் மாட்டி உயிரிழந்துடும்.(நானே பலமுறை மெக்கர் லைன தொட்டு, அடி வாங்கி இருக்கேன். அடி வாங்குன ஒரு ஒருமணி நேரத்துக்கு, கையத் தூக்க முடியாது. ஒருநாள் வனத்துறை அதிகாரி ஒருத்தரு, "அடிக்கடி, மெக்கரை தொட்டு ஷாக் வாங்கினா, மூளைக்கு போற நரம்பு மண்டலம் பாதிக்கும்" ன்னு, எச்சரிக்கை பண்ணாரு. அது இருக்குறவனுக்கு தானே பிரச்சன. நமக்கென்ன ?)

இப்போ, இந்த மெக்கர் லைன... காட்டு யானைகள் எப்படி டீல்பண்ணும் தெரியுமா ? முன்காலை தூக்கி தயாரா மெக்கர் போடப்பட்டிருக்குற இரும்பு போஸ்ட்டுக்கு முன்னாடி நிக்கும். கரன்ட் சப்ளை இருக்குற அந்த 3 நொடி ஸ்ஸ்ஸ்... சத்தத்த விட்டுட்டு, அந்த சத்தம் நிக்கும்போது சப்ளை வராத அந்த 5 நொடிய மட்டும் கரெக்ட்டா பயன்படுத்தி, போஸ்ட்டை ஒரே மிதிமிதிச்சு தாண்டி போயிடும். இல்லேன்னா... காய்ஞ்ச மரங்களை தூக்கி மெக்கர் மேலபோட்டு ஒடைச்சு, ஏறிமிதிச்சு தாண்டி போயிடும். வனத்துறை பல டெக்னாலஜிகளை கையாண்டும் கூட, காட்டு யானைங்க கிட்ட ஒன்னும் செல்லுபடியாகல. தோண்டி வெக்குற அகழியவெல்லாம் சர்வ சாதாரணமா மூடிட்டு, தாண்டி வந்துடும். ஓரளவுக்கு கை கொடுக்குறது... வேலியோர தேனி வளர்ப்பு & சுரைமுள் வேலி மட்டும்தான்.

காட்டு யானைகளுக்கு தலைமை தாங்குறது, வயதான பெண் யானைதான். கூட்டத்துல இருக்குற, ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு வேலைகளை ஒதுக்கி குடுக்கும். ஆபத்துன்னு... சின்ன பொறி தட்டினாலும், குட்டிங்கள பூரா நடுவுலவிட்டு, அத்தனை பெண் யானைகளும் சுத்தி அரண்அமைச்சு நிக்கும். அதே போல அங்க இங்க ஓடுற குட்டிகளை, அடிச்சு மிரட்டி கூட்டத்துக்குள்ள கொண்டு வர வேண்டியது, கொஞ்சம் வளர்ந்த குட்டிகளோட வேலை (LKG பசங்கள கவனிக்கிற வேலைய, அஞ்சாம் கிளாஸ் பசங்களுக்கு குடுத்தா... நல்லா 'சட்டாம்புள்ள' வேல பாப்பாங்க. அது மாதிரி...). யானைகளோட 'டேஞ்சர் சூன்' 30 மீட்டர். மற்ற விலங்குகளோ, மனிதர்களோ அந்த எல்லைக்குள்ள வர்றத யானைகள் அனுமதிக்காது. உடனே ஏறிவந்து, "நெருங்கி வராத" ன்னு, மிகக் கடுமையான எச்சரிக்கை கொடுக்கும்.

மேலும் யானைகள், உணவு தேடலுக்காக ஒருநாளைக்கு 30 to 50 கி.மீ நடக்கும். அப்படி போகும்போது... வனப்பகுதிகளில் போடப்பட்டிருக்கும், வாகன போக்குவரத்துகள் இருக்கும் சாலைகள கடக்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போ, சடார்ன்னு எல்லாமுமா ஓடிப்போய் ரோட்டை கடந்துடாது. முதல்ல ஒரேஒரு ‘செக்யூரிட்டி’ கொம்பன் மட்டும் காட்டைவிட்டு வெளியவந்து, ரோட்டில் நின்னு தும்பிக்கைய தூக்கி சத்தம்போட்டு , வாகனங்களுக்கு எச்சரிக்கை செஞ்சு நிறுத்தும். ரெண்டு பக்கமும் வாகனங்கள் நின்னு, அமையானவுடன்... தன் கூட்டத்தை பார்த்து ஒருசத்தம் மூலமா, "வரலாம் வா..." ன்னு, சிக்னல் கொடுக்கும். அதுக்கு அப்புறம்தான் ஒன்னொன்னா வெளியவரும். நாமதான் வரிசைல போம்போது... தலைகள எண்ணினாக் கூட ரெண்டுமூணு பேர மறந்துடுவோம். ஆனா அது, ரோட்டை மட்டுமே ரெண்டு பக்கமும் பாத்துட்டு நிக்கும். ஆனா மிகச்சரியா... கடைசி யானை ரோட்டை தாண்டினதும், யோசிக்காம... சடார்னு அதுக்கு பின்னாடி போயிடும். அதே போல ஏதாவது ஒன்னு, வராம மிஸ்ஸானாலும் கூட, காட்டை பார்த்து சத்தம் குடுத்து, "ரெட் சிக்னல் விழப் போகுது. சீக்கிரமா வந்து தொல" ன்னு, அதட்டும். (எந்த மேத்த மெடிக்சை வெச்சு, கூட்டத்தோட எண்ணிக்கைய கணிக்குதுன்றது புரியாத புதிர்) இந்த ரெண்டு பொறுப்பும், 'செக்யூரிட்டி கார்ட்ஸ்' ன்னு சொல்லப்படுற, ஓரளவுக்கு வளர்ந்த ஆண் யானைகள்ட்ட கொடுக்கப் பட்டிருக்கும். (ஒரு கட்டத்துக்கு மேல... முதல் மஸ்து நேரத்துல, வளர்ந்த கொம்பன்கள், தலைமை யானைக்கு கட்டுப்படாம... அடாவடி செய்ய ஆரம்பிக்கும். அப்போ, இந்த ஆண் யானைகள் கூட்டத்தவிட்டு, விலக்கப்படும். ஆனாலும், பாசத்துக்கு ஏங்கி... கிட்டத்தட்ட 48 நாட்கள் கூட்டத்த விட்டுப் போகாது. கூட்டம் எங்கெல்லாம் போகுதோ... இதுவும் கொஞ்சதூர இடைவெளில, பின் தொடர்ந்து போகும். கூட்டத்தின் மேலான பாசம் வடிஞ்சு, ஒரு கட்டத்துக்கு மேல பிரிஞ்சு போயிடும். இதுதான், ஆக்ரோஷமா சுத்துற ஒற்றை கொம்பன்கள்).

(கொம்பனை பற்றிய ஒரு கொசுறு தகவல்...

ஒரு கொம்பன் உங்கள விரட்டி பிடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா...  நீங்க 'உசைன் போல்ட்' டாவே இருந்தாலும், தப்பிக்க முடியாது. உங்க வேகத்தை எட்டிப் பிடிக்க உங்களுக்கு 8 நொடிதேவை. ஆனா... யானை நாலே நொடில, உங்கள பிடிச்சிடும். அவ்ளோ பெரிய உருவம் உங்கள ஆக்ரோஷமா விரட்டுதுன்ற உணர்வே... உங்கள மிரட்டி, ஓடவிடாம செஞ்சுரும். அதனால, யானைங்க கிட்ட விளையாடாதீங்க. பெரும்பாலும் எல்லா யானைகளும் மனிதர்களை கொல்லாது. வெறும் மிரட்டல்தான். ஆனா... ஒற்றை தந்தத்துடனோ, தாறுமாறா வளர்ந்த தந்தத்தோடவோ, சூறை நாற்றத்துடன் சுத்துற யானையவோ கண்டா... தலை தெறிக்க ஓடிடுங்க. கொலைகார ராட்சஸன். ஆப்ரிக்காவின் 'பிளாக் மம்பா' பாம்பு பத்தி கேள்வி பட்டிருக்கீங்களா ? படுபயங்கர விஷம். முக்கால் டன் எடையுள்ள மாட்டை, கடிச்ச பத்தாவது நிமிஷம்... மாடு செத்து கீழ விழும். மற்ற பாம்புகள், தன்னை தொந்தரவு செய்றவங்கள மட்டுமே கடிக்கும். ஆனா இந்த 'பிளாக் மம்பா' இருக்கே... சைக்கோ வகை. விலங்குகளயும், மனிதர்களையும் தேடித்தேடி கடிக்கும். மேல சொன்ன யானைவகை, அந்த குணாதிசயங்கள கொண்டது.)

இத்தனை வேலைகளையும் தலைமை பெண்யானை துல்லியமா கண்காணிச்சுட்டே இருக்கும். இதுல எங்க தடங்கல் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட அந்த பொறுப்புல இருக்குற யானைக்கு அதட்டல் விடுக்கும். சிலநேரம் அடிவிழும். மேலும் யானைகளுக்கு புளிப்பு, உப்பு, மஞ்சள், சுண்ணாம்பு, எலும்புகளுக்கு தேவையான கால்ஸியம் சத்துக்கள் அவசியமானது. வளர்ப்பு யானைகளுக்கு அடிக்கடி உணவுல வெச்சு குடுப்பாங்க. ஆனா... காட்டு யானைகளுக்கு இயற்கைதான் வைத்தியன். புளிப்பு சத்துள்ள விளாம் பழங்கள், காட்டுப் புளி எங்க கிடைக்கும், சுண்ணாம்பு, உப்பு மண் எங்க கிடைக்கும், மஞ்சளுக்கு இணையான மூலிகை வேர்கள் எங்க கிடைக்கும், கால்ஸியத்துக்கு தேவையான நெல்லிக்காய் எங்க கிடைக்கும் ?  (சில தாவரங்களின் விதைகள், மரத்திலிருந்து நேரடியா பூமில விழுந்தா முளைக்காது. அந்த பழங்களை யானை சாப்பிட்டு, அந்த விதைகள்... யானையின் வயிற்றில் சுரக்கும் ஒருவித திரவத்தில் நொதிக்கப்பட்டு, சாணத்தின் வழியா வெளில வந்தால் மட்டுமே உயிர்ப்புடன் முளைக்கும்) கோடை காலத்துல, வழக்கமான நீரோடைகள், குட்டைகள் வற்றி வறண்டபிறகு... மான், காட்டெருமை போன்ற மற்ற விலங்குகள் நீருக்கு அலைமோதி இறக்க ஆரம்பிக்கும். தப்பிப் பிழைத்த விலங்குகள் மட்டும்... நீருக்காக யானைகளை பின்தொடரும். யானைகள் பெருசா அலட்டிக்காது. தலைமை யானை தன்கூட்டத்த கூட்டிட்டு, அதுவரைக்கும் போகாத ஒரு திசையில பயணிக்கும். அங்க போய்... ஒரு குறிப்பிட்ட மணல் பாங்கான இடத்துல, காலால உதைச்சு தோண்டும். மற்ற யானைகளையும் தோண்ட சொல்லும். நாலஞ்சு அடில, தண்ணீர் ஊற்று பெருக்கெடுக்கும். வேண்டிய மட்டும் குடிக்கும். இதுபோல தன்னோட வழித்தடங்கள்ல, பத்துக்கும் மேற்பட்ட ரகசிய இடங்கள வெச்சிருக்கும். இந்த ரகசியங்கள்... தலைமை பெண் யானைக்கு மட்டுமே தெரியும். அதோட மூதாதையர்கள் அதுக்கு சொல்லி குடுத்திருக்கும். எத்தனை காலங்கள் ஆனாலும் மறக்காது.

அதேபோல யானையின் பிரசவ காலங்களில், வயிற்றுப்புண் ஆற... பல கி.மீட்டர்கள் பயணித்து, ஒருவித விசேஷமான புற்கள், தாவரங்களை உண்ணும். இதுவும் தலைமுறை தலைமுறையா சொல்லி கொடுக்கப் பட்டிருக்கும். வயது முதிர்ச்சியின் காரணமா, ஒரு கட்டத்திற்கு மேல, தலைமை பதவியை... திறமையான இன்னொரு வயதும், அனுபவமும் முதிர்ந்த பெண்யானைக்கு மாற்றிக் கொடுத்துடும். தானை தலைவரை போல... தான் ஈன்ற குட்டிக்கு மட்டுமே கொடுக்கணும்னு நினைக்காது. திறமையுள்ள யானைக்கு மட்டுமே கொடுக்கும். அப்படி தலைமை மாறினால், முன்பு தலைமை பதவியில் இருந்த யானைகூட, புதிய தலைவிக்கு கட்டுப்பட்டே நடக்கும்.

ரொம்ப வயசான, நோய்வாய்ப்பட்ட, நடக்க முடியாத, இனி வாழ்வது கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட யானைகள்... தன் கூட்டத்திடம் பிரியாவிடை பெற்று பிரிந்து, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு போய், உணவு உண்ணாமல் இருந்து தற்கொலை செய்து கொள்ளும். பிரியும்போது... கூட்டத்தின் மொத்த யானைகளும் அந்த தற்கொலை செய்யப்போகும் யானையை சுற்றிநின்று அழும். ஆப்பிரிக்க யானை ஆராய்ச்சியாளர்கள், ஆப்ரிக்க கண்டம் முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட இடங்களில்... ஒவ்வொரு இடத்திலும்  ஆயிரக்கணக்கான யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டு பிடித்தார்கள். இது தற்கொலைதான் என்று உறுதியாக சொல்கிறார்கள். ஆப்பிரிக்காவின் சமவெளிக் காடுகள் போல் அல்லாமல், ஆசிய யானைகளின் வாழ்விடங்கள், பெரும்பாலும் மலைக் காடுகளை சார்ந்தே இருப்பதால்... காசிரங்கா, வியட்நாம் போன்ற ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே, இதுபோன்ற யானைகளின் எலும்புக் கூடுகளை கண்டார்கள்.

இந்தியாவில்... யானைகளுக்கான பாரம்பரிய வலசை பாதைன்றது 88 இருக்கு. (இப்போ பெரும்பாலும், அந்த பாதைகள் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கு). ஆறுமாச குட்டியா, அந்த வலசை பாதைல அதோட அம்மாகூட நடந்துபோன யானைகுட்டி,  70 வயசானாலும் மறக்காம நியாபகம் வெச்சிருக்கும். யானை என்னைக்குமே, அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படாது. அதேபோல தன்னோட பரம்பரை சொத்தை விட்டுக் கொடுக்காது. தன்னோட பரம்பரை சொத்தான வலசை பாதைகளை மீட்டெடுக்கவே, 'மனித - விலங்கு மோதல்' ன்ற, இவ்வளவு பெரிய போராட்டங்களை செய்யுது.

அதுங்கள நிம்மதியா வாழவிடுங்க....

Sunday, October 28, 2018

பறவைகள் பல விதம்

பறவைகள் பல விதம்

முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் "ஸெர் அமி" ஒரு  தூதுவர் அவசர தகவல் களை கொண்டு சேர்ப்பது அவர் வேலை  அவருக்கு பணியின்  போது ஒரு கண்ணும் காலும் பாதிக்கப் பட்டது ஒரு காலுக்கு பதில் கட்டை கால் பொறுத்தப் பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய அசகாய  பணிக்கு அவருக்கு ஹீரோ சர்வீஸ் மெடல் வழங்கி சிறப்பித்தார்கள். இடைவிடாது பறந்து பறந்து வேலை செய்பவர். ஆம்...அவர் ஒரு புறா. இறந்த பின் உடலை வாசிங்டன் மியூசியத்தில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறார்கள்.



இதே போல அமெரிக்காவில் துருக்கிய வல்லூரை எஞ்சினீயர் வேலைக்கு வைத்திருந்தார்கள். இவரோட வேலை நிலத்தடி  கேஸ் (எண்ணெய்) குழாயில் வெடிப்பை கண்டுபிடித்து அறிவிப்பது.

விசம் உள்ள பறவையும் இருக்கா? இருக்கு பப்புவா நியூகினியாவில் பாடும் பறவை பிட்டூய் (hooded pitohui)  இதன் சிறகுகள் மற்றும் தோல் விச தன்மையானது. அதற்கு எப்படி விச தன்மை என்று பார்த்தால் அது உட்கொள்ளும் ஒரு வகை வண்டினால் (Choresine Beetle) என்று கண்டறிந்தார்கள்.


ஒரு கோழியானது வருடத்திற்கு 200 - 300 முட்டைகள் போடும். வெள்ளை லகான் கோழி ஒன்று அதிக பட்சம் 371 முட்டைகள் போட்டு சாதனை செய்திருக்கிறது(1979).

கோழி முட்டையில் மஞ்சள் கரு பார்த்திருப்பீர்கள். அனேகமாக ஒன்று இருக்கும். அதில் அதிக பட்சமாக 9 மஞ்சள் கருக்கள் இருந்தன என்பது ஒரு சாதனை பதிவு.

மொரீசியஸ் தீவில் அதிக வயதான மரங்கள் (600 வருசங்கள்) இருந்தன அந்த வகையில் குறைந்த வயதான் மரங்கள் இல்லை ஏன் ? என்பதை பின்னர் கண்டு பிடித்தார்கள் "டோடோ " எனும் புதர் வாழ் பறவை இந்த மரத்தின் பழங்களை சாப்பிடுமாம். அவற்றின் எச்சங்களில் விழுந்த கொட்டைகள் மூலமாக மட்டுமே அந்த வகை மரம் முளைக்குமாம்.  16 ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு சென்ற மாலுமிகள் பயம் அறியாத இந்த பறவைகளை வேட்டயாடி அழித்தார்கள்.  இன்று அந்த பறவைகள் இல்லை மரங்கள் மட்டுமே சாட்சியாய்.


சுமார் 120 மிலியன் வருசங்களுக்கு முன்  வாழ்ந்து கொண்டிருந்த பறவை காக்கையை போல் இருக்குமாம். ஆங்கிலத்தில் "ஆர்கியோபேட்ரிக்ஸ்" (Archaeopteryx) ஜெர்மனி வார்த்தையில் இதற்கு "முதல் றெக்கை" எனப் பொருள் படுகிறது.

பறவைகளுக்கும் முதலைகளுக்கும் தொடர்பு இருக்கிறா? என்றால் இருக்கு. 200 மிலியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவை முதலைகள் அப்படிப் பட்ட ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தின் வழி தோன்றல் பறவை.  டினோசரஸ் எல்லாம் இப்படி தோன்றியவை. 65 மிலியன் வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட மாபெரும் அழிவில் எல்லாம் இறந்து போய் விட்டன. 

தண்ணீர் கலந்த  பாலை அன்னம் தனியாக பிரிக்கும் என்பதெல்லாம் கட்டுகதை.

மடகாஸ்கரில் 17 ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்த  "யானை பறவை" மனிதன் வேட்டை யாடி அழித்தொழித்து விட்டான். இதன் முட்டையின் எடை 27 பவுண்டுகள்.
முட்டைகளில் ஹம்மிங்க் (ரீங்கார)  பறவை யின் முட்டை தான் அளவில் சிறியது.  அப்ப பெரியது என்று எடுத்துக் கொண்டால் அது ஆஸ்ட் ரிச்(நெருப்பு கோழி) பறவையினது.  ஆஸ்ட்ரிச் முட்டையை  (தண்ணீரில்) வேக வைக்க 2 மணிகள் ஆகும்.

ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.

கடற்பறவை  அல்பெட் ராஸ்   அளவில் பெரியது இதன் இறக்கை நீளம் 12 அடிகள்.

இது நீண்ட காலம் வாழும் பறவை 70 வருடங்களுக்கும் மேலே. இது தன் வாழ் நாளில் பறக்கும் தூரத்தை சுருக்கமாகச் சொன்னால் பூமியில் இருந்து நிலவுக்கு 8 தடவை போய் வந்திடும் தூரம்.

 இரோஏசியன் கழுகு ஆந்தைகள் சலனமே இல்லாமல் றெக்கை விரித்து பறக்கும். றெக்கையின் நீளம் சுமார் ஐந்தரை அடிகள். இதன் காதுகள் பார்பதற்கு கொம்பு போல இருக்கும்.

பறவைகள் என்றாலே நம்மில் பலருக்கும் மரங்களும் சேர்ந்து ஞாபகத்திற்கு வரும். பறவைகள் என்றால் மரத்தில் வாழும் என்பது தன் காரணம். மரத்தில் வசிக்காத பறவை பபின் (Puffin) இவற்றை கோமாளி பறவை என்றும் சொல்லுவார்கள். இவைகள் மூக்கை மூக்கை உரசிக்கொள்ளும் அழகே தனிதான். வட பசிபிக் தீவு கூட்டம் அதில் நார்தர்ன் தீவின் வட கோடியில் வாழ்கின்றன. அந்த தீவில் மரங்களே இல்லை.இவைகள் முயல் போல குழிகளில் வாழ்கின்றன.
அமெரிக்காவில் "பாராகீத்" என்றழைக்கப்படும் பட்ஜெர் கிளி வகை பறவை ஒன்று  உலக கின்னஸ்  சாதனை புத்தகத்தில் 1995 ம் வருடத்தில் பதிவு பெற்றது.  என்ன சாதனை என்று பார்தோமானால் அதற்கு 1728 ஆங்கில வார்த்தைகள் தெரிந்து இருந்தது.  அது மட்டும் அல்ல அவனுக்கு கோர்வையாகவும் பேசத் தெரிந்திருந்தது.  ஐந்து வருடங்கள் வாழ்ந்த அந்த பறவை கின்னஸ் அங்கீகரித்த பின் இரண்டொரு மாதங்களில் இறந்து விட்டது.

தேனீ வழிகாட்டி (ஹனி கைட்) இது ஒரு ஆப்பிரிக்கப் பறவை.  ஆப்பிரிக்க மலை வாழ் மக்கள் இந்த பறவைக்கு புரியும் படியாக சப்தம் கொடுத்தபடியே சென்றால் அந்த பறவையும். பதில் குரல் கொடுத்த படியே  வழி காட்டி செல்லும்.  தேன் கூடு இருக்கும் இடத்தை காட்டும். தேன் அவர்களுக்கு அதில் இருக்கும் லார்வாக்கள் இந்த பறவைக்கு ( 50  - 50)

அழிந்து போன டோ டோ பறவையை பற்றிச் சொன்னேன்.  எதிரியே இல்லாத தீவில் அவைகள் இருந்தன. இவைகள் ராட்சச சைஸ் புறா என்றே சொல்ல வேண்டும் நன்று தின்று கொழுத்த அவைகள் பறப்பதை மறந்தும் போயின. அதனால் தான் தன்னை கொல்ல வருபவனை கூட அவற்றால் இனங்கான முடியாமல் மடிந்து போயின.

புறாக்களை பற்றி ஒரு சமாச்சாரம் நம்மூர் கிளி ஜோசியக் காரர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். ஆங்கில எழுத்துக்கள் 26 ஐயும் அவற்றால் இனங்கான முடியும் அது மட்டும் அல்ல நிறையபேர் இருக்கும் புகைப் படத்தில் குறிப்பிட்ட இருவரை இனங்காட்ட முடியும் .
தொடு திறையில் ஒரே மாதிரியான இரண்டு டிசைன்களை இனங்காட்டும்.(டிக் டோ).

 புத்தி கெட்ட மனிதர்களால் தீக்கு இறையான மதுரை கோவில் புறாக்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. So Sad.

பறவையால் மனிதனுக்கு வரும் நோயை தடுக்க முடியுமா ? என்று யோசித்தால் முடியும் என்று சொல்லலாம். ஆந்த்ராக்ஸ், காலரா நோய் தாக்கி இறந்த உடலை தின்று ஜீரணம் செய்து நோய் தொற்று பரவாமல் தடுத்து விடுகின்றன வல்லூறுகள்.

தென்கொரிய தலைவன் (Kim Jung Il) "கிம் ஜோங் இல்" தன் அப்பாவின் 80 வது வயசு கொண்டாட்டத்திற்கு 7 லட்சம் குருவிகளை (ஸ்பேரோ) கொன்றான் அந்த பறவைகளின் கழுத்து மென் சிறகுகள் தலை கீரிடத்தை அழங்கரிக்க பயன் படுத்தப் பட்டன என்பதும் இவ்வினிய உலகத்தின் மோசமான விலங்கினம் மனிதன் என்பதை மறுப்பதற்கும் இல்லை.

உலகில் சுமார் பத்தாயிரம் வகையான பறவையினங்கள் இருக்கு.

இருக்கும் பறவையினங்களில் சுமார் 20% நெடுந்தொலைவு பறக்கவல்லவை.

காக்கைகளை கண்டு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. தீங்கு செய்யும் மனிதர்களை அவைகள் ஞாபகம் வைத்துக் கொள்கின்றன மட்டுமல்ல அவைகள் கூட்டமாக தாக்க தயங்காதவை.  முன்னோர்கள் காக்கை வடிவில் வருவதாக நம்பிக்கை. காக்கைக்கு சோறு வைத்தபின்  சாப்பிடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.  வாடகை வீட்டு ஒன்றில் குடி இருந்த போது அலுவலகத்தில் இருந்து வழக்கமாக 1 மணிக்கு வீட்டிற்கு சாப்பிட வந்து விடுவேன். அந்த வீட்டில் அடுத்த அடுத்த அறைகளுக்கு கதவுகள் ஒரே நேர்கோட்டில் இருக்கும். எல்லா கதவுகளும் திறந்திருந்தால் வீதியில் இருந்து புழக்கடை தெரியும். சமையல் அறை கடைசியில் இருந்தது. வழக்கமாக ஒரு காகம் நான் சாப்பிட உட்கார்ந்ததும் "கரையும்." அதற்கு சோறு வைத்து விட்டுத் தான் சாப்பிடுவேன்.  இது ஒரு வருட காலம் தவறாமல் நடந்தது.

கர்ண பரம்பரை கதையான "சிபி சக்ரவர்த்தி கதை" பறவைகளை பற்றி பேசுகிறது. பருந்திடம் தப்பி வந்த புறா அவரிடம் அடைக்கலம் ஆனது. அதை காப்பாற்ற தன் தொடை சதையை ஈடாக கொடுத்தும் புறாவின் எடைக்கு சமமாக வில்லை புறா சொன்னது பெண் புறாவான என் பின்னே பல்லாண்டு வம்சம் இருக்கின்றதாலே அது ஈடாக வில்லை என்று தன்னையே தருவதாக சொல்லி சிரம் தாழ்த்தி பருந்திடம் மண்டியிட்ட மன்னனை வாழ்த்தி பறந்ததாம் பருந்து.

ஒரு வரலாறும்  உண்டு கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ ஒரு கூட்டத்தில் மைக்கை பிடித்து பேசும் போது அவர் தோளில் புறா ஒன்று பறந்து வந்து மணிக்கணக்காக உட்கார்திருந்தது.

சீன தலைவர் மாவோ "குருவிகளின் கூச்சல்" கூட்டங்களில் பேசுவதற்கு இடைஞ்சலாக இருக்கு என்று  அவற்றை கூட்டத்தோடு ஒழிக்க கட்டளை போட்டார்.  அதன் பின்னே என்ன நடந்தது என்று பார்த்தால் நாட்டில் "வெட்டு கிளிகள் " தொந்தரவு அதிகமாகி விட்டது.

பிளமிங்கோ பறவைகள், வேண்டாம் குளத்து நீரில் நிற்கும் கொக்குகளை பார்த்திருப்பீர்கள் அவைகள் ஒற்றை காலில் நிற்கும் ஏன் ? என்றால்  உடல் வெப்ப நிலையை சீராக்கி கொள்ள ஒற்றை காலை மடக்கி வைத்துக் கொள்கின்றன.  பார்க்கும் நாம் அவை "தவம் " செய்வதாக நினைச்சுகிறோம்.
உலகின் அதிக எடை அதிகமுள்ள பறவை ஆஸ்ட்ரிச் ,வேகமாக ஓடக்கூடியவை  அ.து மணிக்கு 70 கி.மீ ஓங்கி அடிச்சா ஒன்றரை டண் என்பது இவற்றிற்கு பொருந்தும் ஒரே உதையில் சிங்கத்தை சாய்த்து விடும்.  அது மட்டும் அல்ல ஆண் பறவை சிங்கத்தை போலவே கர்ஜிக்கக் கூடியவை.

இவற்றிற்கு பற்கள் இல்லை என்பதால் சிறு சிறு கூழாங்கற்களை விழுங்கி விடும் அப்போது தான் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும். பாம்பு பல்லி என எவற்றை கண்டாலும் விழுங்கி விடும். பெரிய கண்களால் 3.5 கி.மீ தூரத்தில் இருப்பதை பார்த்துவிடும். இவற்றின் கண்ணின் கருவிழி மனிதனுக்கு ஒத்து போகிறது.  இரு ஆண்பறவைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் வெற்றி பெற்ற பறவைக்கு தோற்ற பறவையின் குடும்பம் குட்டிகள் அதற்கு அடிமை.  சுமார் 50 முதல் 70 வருடங்கள் வாழக்கூடியவை. 

பறவைகளின் முட்டை ஏன் ஒரே மாதிரி இல்லை?

பெரும்பாழும் "வெள்ளை லகான் கோழிகள்" செயற்கை கருவூட்டல் மூலமாகவே உருவாக்கப் படுகின்றன  இவற்றின் முட்டைகள் (ஓவல்) நீள் வட்ட வடிவில் ஒரு பக்கம் கூர்மையாக இருக்கின்றன.  மனிதன் உண்பதற்காகவே வளர்க்கப் படும் பறவை இது.   இதே போலவே மற்ற பறவைகளின் முட்டை இருக்குமா? என்றால் இல்லை. ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு விதமான முட்டைகளை இடுகின்றன.

இங்கு இன்னொன்றை சொல்லி விடுகிறேன் ஆரம்ப காலங்களில் செயற்கை கருவூட்டல் செய்வது முட்டைகளை சாப்பிடுவதற்காக அல்ல. சண்டை கோழிகளை உருவாக்குவதற்காக மட்டுமே இருந்தது.

சின்ன பறவை சிறியது பெரிய பறவை பெரியதாக முட்டை இடும். அதிலென்ன என்று நீங்கள் கேட்கலாம். வெவ்வேறு நிறம் அவைகள் உண்ணும் உணவை பொருத்து அவற்றிற்கு நிறங்கள் அமைந்திருக்கலாம். அது அதனது ஜீனை பொறுத்தது என்று எளிதில் சொல்லி விடலாம்.
மலை சிகரங்களின் பொந்துகளில்  வசிக்கும் பறவைகளின் முட்டை எளிதில் உருண்டு போகாதபடி சமச்சீர் எடையோடு இருக்கின்றன.
வேட்டை திறன் பெற்ற  கழுகுகள் , பெரிய ஆந்தைகள் (Brown hawk-owls) முட்டைகள் உருண்டை வடிவம்.


நீண்ட தொலைவு பறக்கும் பறவைகளின் முட்டைகள் வடி வத்திற்கும் பறக்காத (கிவி, ஆஸ்ட் ரிச்) பறைகளின் முட்டைகளும் பெருமளவு வித்தியாசப் படுகின்றன.  அதே போல குஞ்சு பொரிக்கும் காலமும் வித்தியாசப் படுகின்றன.

குயில் தன் முட்டையை காக்கை கூட்டில் வைத்து தந்திரமாக அடை காத்து விடுகிறது.

பறவைகள் முட்டையை ஒரே போக்கில் வைத்து அடை காப்பது இல்லை ஒரு நாளில் 2 - 3 முறைகள் முட்டைகளை உருட்டி அடை காக்கின்றன.
ஆஸ்ட் ரிச், கோழி, வாத்து,கடற் பறவை இவைகள் முட்டையில் இருந்து குஞ்சு பொறித்த பின் ஓரளவு வளர்ந்திருக்கும் அதாவது....தாய் இல்லாமல் உணவு தேடி பிழைத்துக் கொள்ளும். ஆந்தை, மரங்கொத்தி, சிறிய பாடும் பறவைகள் இவைகள் முழு வளர்ச்சி அடைய தாயின் அரவணைப்பு தேவைப் படும்.

பறவைகளும் அவற்றின் ஞாபக சக்தியும்

சென்ற பதிவில் #KR  ஒரு கருத்தை முன் வைத்தார் குயில், முட்டையை அடைகாக்காமல் காகத்தின் கூட்டில் போட்டு விடுவது தெரியாத முட்டாளா காக்கை இருக்கே ? என்று மனிதர்களை, அவர்களின் செயல்களையும் கூட ஞாபக வைத்து  அடையாளம் கண்டு கொள்கின்றன, அப்படியாயின் இந்த முட்டை மாறுபாட்டை அவைகளால் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாதே என்ற கேள்வி எழுகிறது.   அடை காத்து பிறந்த பின் குயில் குஞ்சானது அதனோடு இருக்கும் காக்கைகளை போலவே சப்தமிட்டு நடிக்கிறதா? தெரியவில்லை.   தாய் குயில் ஒரு கட்டத்தில் அதை தன்னோடு கூட்டி சென்று விடுகிறது என நினைக்கிறேன்.

காக்கைகளின் புத்திசாலி தனத்தை அது கட்டும் கூட்டில் பயன்படுத்தும் பொருட்களை( டூல் ) பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.

மனிதர்களில் உணவு பழகக்கம் அசைவம் / சைவம் ( ?! ) போல காக்கைகள் இருக்கவும் வாய்ப்பு உண்டு.

நியூசிலாந்தின் கியா (கிளி) பறவைகளிடம் ஒரு ஆராய்சி செய்தார்கள் முடிவில் இவைகள் கிப்பன், ஆந்த்ரபோட் குரங்குகளை காட்டிலும் புத்தி சாலியானவை என்று நிரூபமானது.  நியூசிலாந்து வாசிகள் ஒரு காலத்தில் இவைகளை சுட்டு தள்ளினார்கள் காரணம் என்ன வென்றால் இவைகள் ஆட்டுகளை (ஷீப்) கொன்று விடுகின்றன ஆனால் உண்மை என்னவென்றால் இவைகள் "சைவ" பட்ஷிணிகள்.

பறவைகள் ஞாபக சக்தி ஆச்சர்யம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. வலசை பறவைகள் நாடு விட்டு நாடு கடல் கடந்தும் வருவதை பார்க்கிறோம் எதற்காக வருகின்றன என்பதில் முக்கிய காரணம் இனப் பெருக்கத்திற்காக என்று சொல்லலாம்.  அப்படி கண்டம்  விட்டு கண்டம் வந்த பறவைகள் இங்கே குஞ்சு பொரித்து அவைகள் வளர்ந்த பின் தம் தாய் நாட்டிற்கு திரும்பி விடுகின்றன.  இப்படி வலசை வரும் பறவைகள் வருடா வருடம் எப்படி ஒரே பகுதி களுக்கு திரும்ப வருகின்றன "கூகிள்  மேப்" போல அவைகள் இடங்களை பாதைகளை தக்குனூண்டு மூளையில் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றன.   குறிப்பிட்ட பருவத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு அவற்றின் வருகை தொடர் கதையாகிறது.  தாய் பறவையில் இருந்து குஞ்சுகளுக்கு என ஞாபகங்கள் கடத்தப் படுகின்றன.

மனிதன் என்ன செய்கிறான் அவைகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து அழித்து விடுகிறான் தாம் பிறந்து வளர்ந்த இடத்தை காண ஆவலுடன் வந்த பறவை காணாமல் போன வரண்ட குளங்களை கண்டு ஜெர்க்காகிப் பின் வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.  ஒரு கட்டத்தில் அவைகள் திரும்ப வராமல் கூட போகலாம்.

மனித குழந்தை கற்றுக் கொள்ளும் காலத்தை விட பறவை குஞ்சுகள் அவற்றின் தாய் பறவையிடம் வெகு சீக்கிரமாக வாழக் கற்றுக் கொள்கின்றன.  அந்த வகையில் மனித குழந்தை முட்டாள் தான்.


இரண்டு குயில்கள் சப்த மிட்டு கொண்டிருந்தன நீண்ட நேரமாக என்னவென்று போய்ப் பார்த்தால் தாய் பறவை குஞ்சிற்கு கற்றுக் கொடுத்து கொண்டிருந்தது.  கிளி,மைனா, சிட்டுகள் மற்ற பாடும் பறவைகளும் இப்படியாக   சங்கீதத்தை தம் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுத்து விடுகின்றன.

பறவைகள்,விலங்குகள் சப்தமிடாத பகுதியில் மனிதனை வாழச் சொன்னால் அந்த கூட்டம் ஜோம்பீஸ் ஆக மாறிப் போய்விடும்.


சென்ற பகுதியில் சொல்லியிருந்தேன் பறவைகள் முட்டைகளை நிலையாக ஒரே மாதிரி வைத்து அடை காப்பதில்லை முட்டைகளை திருப்பி திருப்பி வைத்து அடை காப்பதாக இவற்றை எப்படி கற்றுக் கொண்டன சந்ததிகளுக்கு கடத்துகின்றன? அவற்றின் ஜீன் களில் எழுதப் பட்டிருக்கலாம்.


பறவை மனிதன் சலீம் அலி

சலீம் அலி (1896-1987)


இந்தியாவின்  பறவை மனிதன் என்று அழைக்கப் பட்ட பெருமைக்கு உரியவர் சலீம் அலி. ஆதாரப் பூர்வமான் பறவைகளின் புள்ளி விவரத்தை பதிவு செய்த முதல் பறவையியல் விஞ்ஞானி இவர்.

சித்தப்பா அம்ருதீன் கொடுத்த துப்பாக்கியால் ("ஏர் கன்") ஒரு குருவியை சுடுகிறான் பத்து வயது சிறுவன் சலீம்  அடி பட்டு விழுந்த பறவையின் கழுத்து ஏன் மஞ்சளாக  இருக்கிறது என்று கேட்க அவர் அதை பற்றி தெரியவில்லை என்று சொல்லி W.S. மில்லார்டிடம் அழைத்து சென்று அறிமுகப் படுத்தினார். சிறுவனின் ஆர்வத்தை கண்டு வியந்த அவர் பாம்பே நேச்சுரல் கிஸ்டரி சொஸைட்டியின் (BNHS) ஹானரரி செக்ரட்டரி.

பின்னாளில் உயர் கல்வியில் விலங்கியல் பாடத்தை படித்து அதே சொஸைட்டியில் வருபவர்களுக்கு ஆர்வமுடன் பறவைகளை பற்றி விளக்கி சொல்லும் வேலை (அப்போது வயது 20) நிதி பற்றா குறையை காரணம் காட்டி அந்த வேலையும் பறி போனது.

கால சூழல் அவரை கிக்கிம் கிராமத்துக்கு விரட்டியது திருமணமான சலீம் பறவைகள் நிறைந்த அந்த கிராமத்தில் பெரும்பாலான நேரத்தை பறவை ஆராச்சியிலே செலவிட்டார்.  பறவை ஆய்வுக்காக பல இடங்களுக்கும் பயணமானார்.  துக்கணாங்குருவியை பற்றிய ஆய்வு கட்டுரை (1930) அவரை பறவை யியல் நிபுணராக்கியது.

இந்தியா சுதந்திர பெற்றதன் பின்பு, 100 ஆண்டு பழமை பெற்ற BNHSநிதி  நெருக்கடி காரணமாக மூடப்படும் சூழல் ஏற்பட்டது.  நேருவிடம் நிதி உதவி கேட்டு பெற்று மூடப்படுவதில்இருந்து  காப்பாற்றினார்.

1941 ல் "இந்திய பறவைகள்" [The Book of Indian Birds] என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அப் புத்தகம் நன்றாக விற்பனையும் ஆனது. பின்னாளில் டிலான் ரிப்ளே என்பவருடன் இணைந்து 10 வால்யூம்கள் கொண்ட புத்தகம் [Handbook of the Birds of India and Pakistan 1948 ] இந்திய பாகிஸ்தான் வாழிடப் பறவைகள் பெரிய அளவில் பேசப்பட்ட புத்தகம். இது  பறவைகள் பற்றிய விரிவான தகவல் புத்தகம்.  வீழ்ந்த குருவி  [ “The Fall of Sparrow”]  பறவைகளுடனான நேசத்தை பற்றி பேசும் புத்தகம்.

சலீம் அலி பறவை ஆராய்சியாளர் மட்டுமல்ல இயற்கையின் பாது காவலர். அவருக்கு கிடைத்த இண்டர்நேசனல் பரிசுத் தொகை (Golden Ark) 5 லட்சத்தை பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டிக்கு வழங்கினார்.  இந்திய அரசு அவருக்கு பத்மபூசன் விருது (1983)கொடுத்து பெருமைப் படுத்தியது.

அவர் ஆரம்பித்த பறவை ஆய்வு நிறுவனம்  SACON Salim Ali National Parkஇந்தியாவின் பல பகுதிகளில் செயல் பட்டு வருகின்றன [Port Blair, Mayabunder, (Andaman and Nicobar Islands); Singtam (Sikkim); Bharatpur (Rajasthan); Hyderabad (Andhra Pradesh); Upper Bhavani (The Nilgiris); Kukkal (Kodaikannal in TN) and Silent Valley National Park (Kerala)]

91ஆவது வயதில், பறவை நேசனின் உயிர் இவ்வுலகில் இருந்து  பறந்து விட்டது.


* * * * * * * * * * * * * * *  * *

இந்தியா சுமார் 1200 வகையான பறவை இனங்களின் தாயகமாக இருக்கின்றது. இது உலக அளவில் 12 % என்று சொல்லலாம். வட கிழக்கு இந்தியாவில் (சீன எல்லை)




கண்டறியப் பட்ட பாடும் பறவையான  ஜூத்ரா   சலீமலி ( "Himalayan Forest Thrush Zoothera salimalii")  2016 ல் பறவை இனங்களில் ஒன்றாக சேர்க்கப் பட்டது. 97 வகையான பறவையினங்கள் அழிவின் நிலையில் இருப்பதாகவும், அதில் 17 வகையான பறவை இனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனவாம். இன்னும் பாதுகாக்கப் படவேண்டியவைகளின் பட்டியல் நீள் கிறது.

தற்போது இந்திய சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கும் 2.0  திரைபடத்தின் பிரதான கதாபாத்திரமான பக்‌ஷி ராஜான் சலீம் அலியின் பாத்திர படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது

பறவைகள் பல விதம் அதை  பற்றி அறிந்து கொள்ளுவோம்  வாருங்கள் இங்கே  <கிளிக்> செய்யுங்கள்  


பறவைகள் பல விதம்