தினமும் 120 குழந்தைகளுக்கு தன் சொந்தச் செலவில் காலை உணவு அளித்து வரும் தமிழாசிரியர் இளமாறன்
‘‘இளமாறன் சார் ஸ்கூல்னு சொல்லியிருந்தா நேரா கொண்டுபோயி வுட்ருப்பனே... அவரோட அன்புக்கு ஈடே இல்ல. உங்களாண்ட பேரமெல்லாம் பேச மாட்டேன். 100 ரூபா கொடுங்க போதும்...’’ என்றார் அந்த ஆட்டோ டிரைவர். குறைந்தது ரூ.200 தூரத்தில் இருக்கும் இடம் அது!
இந்த ஆட்டோ ஓட்டுநர் என்றில்லை, வியாசர்பாடி, பெரம்பூர், கொடுங்கையூர், மூலக்கடை... என வட சென்னை ஏரியாவைச் சேர்ந்த ஆட்டோகாரர்கள் அனைவருமே இப்படித்தான் இளமாறன் சார் என்றால் அன்பு காட்டுகிறார்கள். மக்களோ தங்கள் இதயம் நிறைய நிறைய பிரியத்தை வழிய விடுகிறார்கள்!
மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் வீட்டில் தங்கிவிட்ட விருந்தாளிகளுக்கே சோறு போட முகம் சுளிக்கும் இக்காலத்தில் ஒரு மனிதர் தினமும் 120 குழந்தைகளுக்கு தன் சொந்தச் செலவில் காலை உணவு அளித்து வருகிறார் என்றால் நம்பமுடிகிறதா?
ஆச்சர்யத்துடன் காமராஜர் சாலையில் இருக்கும் சென்னை உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோம். காலையிலேயே பள்ளிச் சிறுவர்களுக்கு சூடான இட்லி, பொங்கலை கொடுத்துக் கொண்டிருந்தார் தமிழாசிரியரான இளமாறன். ‘‘இதெல்லாம் ஒரு செய்தினு என்னைத் தேடி வந்திருக்கீங்களே...’’ என்றபடி கூச்சத்துடன் பேச ஆரம்பித்தார் இளமாறன்.
‘‘ஒரு நாள் கிளாஸ் எடுத்துட்டு இருந்தேன். அப்ப ஒரு பொண்ணு வயித்த வலிக்குதுனு சொல்லி அழுதது. என்னனு பார்த்தா முதல்நாள் ராத்திரியும் சாப்பிடலை... காலைலயும் பட்டினினு தெரிஞ்சுது. காலை பிரேயர்லயும் குறைஞ்சது ஐந்து குழந்தைகளாவது பசி மயக்கத்துல சுருண்டு விழுந்தாங்க.
மனசு தாங்கலை. எங்க ஸ்கூல் தலைமையாசிரியர் யு.முனிராமையா சார் கிட்ட பேசினேன். என் செலவுல குழந்தைகளுக்கு காலை சாப்பாடு போடலாம்னு இருக்கேன்னு சொன்னேன். நெகிழ்ந்துபோனவரு, ‘அதிகம் செலவாகுமே... உன் சம்பளத்துல கட்டுப்படி ஆகுமா’னு அக்கறையா கேட்டார்.
‘முடியும் சார்... அனுமதி மட்டும் கொடுங்க’னு சொன்னேன். உடனே ஓகே சொல்லிட்டார். அவர் மட்டும் இல்லைனா இது சாத்தியமாகி இருக்காது...’’ என்று சொல்லும் இளமாறன், உதவும் எண்ணம் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது அவ்வளவு சுலபமில்லை என்கிறார். ‘‘வீட்ல செஞ்சு கொண்டு வர்றதா இல்ல ஹோட்டல்ல வாங்கறதானு நிறைய கேள்விகள் அடுக்கடுக்கா எழுந்தது. கூடவே சாப்பிட்டு சின்னப் பிரச்னை வந்தாலும் அது ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும்னு புரிஞ்சுது. இதையெல்லாம் எதிர்கொள்ளத் தயாரானேன்.
சாப்பிடவே முடியாத நிலைல யார் யார் இருக்காங்க... யாருக்கெல்லாம் மோசமான குடும்பச் சூழல் இருக்குனு ஒவ்வொரு வகுப்பா கணக்கெடுத்தோம். சில குழந்தைங்க அப்பா அம்மா இல்லாம ஹாஸ்டல்லயும் தெரு ஓரங்கள்லயும் வசிக்கறாங்க. ஒவ்வொருத்தர் கதையும் உங்க மனசை பிசையும். ‘இங்க வர்றதுக்கு முன்னாடி பிச்சை எடுத்துட்டு இருந்தேன் சார்’னு சொல்ற பெண்களும் இங்க இருக்காங்க.
இதையெல்லாம் கணக்குல எடுத்து 120 குழந்தைகளை தேர்வு செஞ்சோம். பக்கத்துல இருக்கிற அம்மா உணவகத்துல இருந்து காலை டிபனை வரவழைக்கிறோம்...’’ என்ற இளமாறன் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இதற்காக செலவு செய்கிறார். ‘‘எங்க வீட்டுக்கு இந்த விஷயம் தெரியாது.
நான் சொல்லலை. மனைவிக்கா விஷயம் தெரிஞ்சு கேட்டாங்க. பிள்ளைகளோட கதையை சொன்னேன். கலங்கிட்டாங்க. முழு ஆதரவும் இப்ப கொடுக்கறாங்க. சக ஆசிரியர்களும் அப்படித்தான். எல்லாருமா ஒண்ணு சேர்ந்து சிசிடிவி வாங்கி பாதுகாப்புக்காக பள்ளில பொருத்தியிருக்கோம். இப்ப ஒரு பையன் வெளிய போனாலும் உள்ள வந்தாலும் அவங்க பெற்றோர்களுக்கு தானா தகவல் போற மாதிரி ஒரு டிவைஸ் பொருத்தலாம்னு இருக்கோம்..’’
புன்னகைக்கும் இளமாறன் 20 வருடங்களாக தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். ஆசிரியராகப் பணிக்கு சேர்வதற்கு முன் சுயேச்சையாக கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். ‘‘எங்க இளமாறன் சாரைப் பத்தி நல்லா எழுதுங்க...’’ பேட்டி முடிந்து திரும்பிய எங்களிடம் வேண்டுகோள் வைத்தார் முதல் பத்தியில் வந்த அதே ஆட்டோ ஓட்டுநர்!