Tuesday, November 14, 2023

30000 பேர் ஒரே நாளில் இறந்த உலகின் கோரமான விபத்து... உயிர் பிழைத்த 2 பேர்... எப்படி தப்பித்தார்கள் தெரியுமா?

 30000 பேர் ஒரே நாளில் இறந்த உலகின் கோரமான விபத்து... உயிர் பிழைத்த 2 பேர்... எப்படி தப்பித்தார்கள் தெரியுமா? 

உலகத்தில் இதுவரை பல விபத்துகளில் கோடிக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இதில் பல விபத்துக்கள் மிகவும் வினோதமானதாகவும், நம்ப முடியதாகவும் இருந்தன. அப்படிப்பட்ட வினோதமான ஒரு விபத்துதான் மவுண்ட் பீலியில் நடந்த எரிமலை வெடிப்பு. மவுண்ட் பீலீ என்பது கரீபியன் தீவுகளில் உள்ள மார்டினிக் தீவில் அமைந்துள்ள ஒரு எரிமலை ஆகும். உலகிலேயே மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்திய எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். 



1902 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி அதிகாலையில், இந்த எரிமலை வெடிப்பு அதன் பாதையில் உள்ள அனைத்தையும் அழிக்கத் தொடங்கியது. 

இந்த மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஒரே நாளில் 30000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது. இந்த எரிமலை செயிண்ட்-பியர் நகரத்தை முற்றிலுமாக அழித்தது, இந்த மோசமான விபத்தில் இரண்டு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். 



செயிண்ட் பியர் "கரீபியனின் பாரிஸ்" என்று அழைக்கப்படும் செயின்ட் பியர் நகரம், மார்டினிக்கின் வடமேற்கு கடற்கரையில், பீலி மலையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1902 ஆம் ஆண்டில், இது ஒரு பிரபலாமான துறைமுக நகரமாக இருந்தது, சர்க்கரை மற்றும் ரம் இங்கிருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது, மேலும் இது மார்டினிக் கலாச்சார மையமாக கருதப்பட்டது. 


1851 ஆம் ஆண்டு முதல் மவுண்ட் பீலி செயலற்ற நிலையில் இருந்தது, அது வடக்கு மார்டினிக் பகுதியில் சாம்பல் மழையை வெளியிட்டது மற்றும் மலையேற்றத்தை விரும்பிய மலையேறுபவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. எரிமலை வெடிப்பின் தொடக்கம் பீலி எரிமலை உறக்கத்தில் இருந்து எழுந்ததற்கான முதல் அறிகுறி பூச்சிகளின் படையெடுப்பு அல்ல. 




இது ஏப்ரல் 1902 இல் நடுக்கம், கந்தக மேகங்கள் எரிமலையின் கீழே பாயும் மற்றும் எரிமலையின் கால்டெராவில் ஒரு ஏரியின் திடீர் தோற்றத்துடன் தொடங்கியது. 

முதல் சிறிய வெடிப்பு மே 2 அன்று ஏற்பட்டது, இந்த வெடிப்பு பறவைகள் மற்றும் மீன்களை கொன்றது. மக்கள் கிராமப்புறங்களை காலி செய்து, பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட செயின்ட் பியருக்குச் செல்லத் தொடங்கினர். இது நடக்கப்போகும் அசம்பாவிதத்தின் ஆரம்பப் புள்ளியாகவே இருந்தது. 


அழிவின் தொடக்கம் மே 5 அன்று முதல் இறப்புகள் நிகழத் தொடங்கின, இது சேறு மற்றும் நீர் நிறைந்த எரிமலைக் குழம்பை வெளிப்படுத்தியது, இந்த லஹார் சர்க்கரை பதப்படுத்தும் ஆலையை அழித்து கிட்டத்தட்ட இரண்டு டஜன் மக்களைக் கொன்றது. லஹார் தொடர்ந்தது, அதன் கழிவுகளை கடலில் கொட்டியது மற்றும் சுனாமியை ஏற்படுத்தியது, இது செயின்ட் பியரை வெள்ளத்தில் மூழ்கடித்தது. 

இதில் பாம்புகளும் பூச்சிகளும் வந்தன. சிப்பாய்கள் பாம்புகளை சுடுவதன் மூலம் நகர மக்களைப் பாதுகாக்க முயன்றனர், ஆனால் அந்த பேரழிவிற்கு எதிராக அவர்களின் தோட்டாக்கள் பயனற்றதாக இருந்தது.


 

செயின்ட் பியரின் அழிவு இந்த பேரழிவு மே 8, 1902 அன்று காலை 8 மணியளவில் நடந்தது. மலையில் இருந்து சூடான வாயு மற்றும் எரிமலைக் குழம்பு, மணிக்கு நூறு மைல் வேகத்தில் அதன் பக்கங்களில் கீழே விழுந்தது. சில நிமிடங்களில், செயின்ட் பியர் அழிக்கப்பட்டது, இந்த நகரில் வசித்தவர்கள் மூச்சுத்திணறலாலும் மற்றும் எரிந்தும் இறந்தனர். தப்பி பிழைத்தவர்கள் ஒரே நாளில் 30000 பேர் கொல்லப்பட்ட இந்த பேரழிவில் இரண்டு நபர்கள் மட்டுமே தப்பி பிழைத்தனர். 



அவர்களில் ஒருவர் 25 வயதான லூயிஸ் அகஸ்டே சைபாரிஸ் ஒரு குற்றவாளி, பார் சண்டையின் போது தனது நண்பரை அவர் கண்ணாடியால் குத்தி காயப்படுத்தினார். எரிமலை வெடிப்புக்கு முந்தைய இரவில் லூயிஸ் சிறையிலிருந்து தப்பினார், ஆனால் அவர் மறுநாள் காலையில் மீண்டும் பிடிபட்டார். அதனால் அவர் பாதாள அறையில் அடைக்கப்பட்டார். அவர் அடைக்கப்பட்டிருந்த அறையில் காற்றோட்டம் குறைவாக இருந்ததால் அவர் உயிர் பிழைத்தார். அதன்பின் அவர் மிகவும் பிரபலம் ஆனார். 

இரண்டாவது உயிர் பிழைத்தவர் ஹவிவ்ரா டா இஃப்ரில் என்ற இளம் பெண். அவர் தனது சகோதரனுடன் விளையாடிய போது அவர் ஒரு சிறிய படகில் குகையை நோக்கி ஓடி தப்பினார். காற்றில் பரவிய வெப்பத்தால் அவர் சில தீக்காயங்களை சந்தித்தார். ஆனாலும் உயிர் தப்பினார்.


Source :- 

https://www.thevintagenews.com/2016/11/02/only-one-man-out-of-30000-people-survived-when-the-mount-pelee-volcano-erupted-in-1902/


Tuesday, June 6, 2023

இரஞ்சன்குடிக் கோட்டை - Ranjankudi Fort

 

இரஞ்சன்குடிக் கோட்டை - Ranjankudi Fort

இரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும்.

1751 ஆம் ஆண்டில் வாலிகொண்டா போரின் போது இரஞ்சன்குடி கோட்டையானது போர் மையமாக இருந்த்து. அப்பொழுது பிரஞ்ச் படைவீர்ர்களின் ஆதரவுடன் இருந்த சந்தா சாஹிப் என்பவரை பிரிட்டிஷ் படைவீரர்களின் ஆதரவோடு இருந்த முகமது அலி என்பவர் எதர்த்து வெற்றிபெற்றார். கோட்டையானது நீள்வட்டமாகவும், அரைகோள வடிவ கோட்டைகளுடனும், வலுவான வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ள மூன்று அரண்களால் சூழப்பட்டுள்ள இக்கோட்டை சுவர்கள் ஒழுங்காக வெட்டப்பட்ட கற்தொகுப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையில் அரசர்களுக்கு உரிய மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள் மற்றும் பேட்டை, மேல்பகுதி, கோட்டைய மேடு கீழ் பகுதியை இணைக்கும் ஒரு பாதை உள்ளது. தற்சமயம் இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தினால் இந்தக் கோட்டை பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.




வரலாறு

இந்த கோட்டையை இரஞ்சன்குடி கோட்டை என்றும் நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். சிவன் மற்றும் அனுமன் கோவில்களின் பழைய வளாகங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. 1751-ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பு காட்சியாக இந்த கோட்டை அமைந்துள்ளது.

பிரஞ்சு படையானது சந்தா சாஹிப் என்பவருக்கும், பிரிட்டிஷ் படையானது முகமது அலி என்பவருக்கும் ஆதரவு அளித்தனர் அருகே அமைந்துள்ள கிராம்மான வாலிகொண்டாவிற்கு போரை அழைத்திருந்தாலும், அது கோட்டையில் போரிடப்பட்டது. தொடக்கத்தில் பிரெஞசு படை வெற்றி வாகை சூடியது. ஆனால் முடிவில் உள்ளுர் முஸ்லிம்கள் உதவியுடன் பிரிட்ஷ் படையானது வெற்றிவாகை சூடி போரை முடிவிற்கு கொண்டு வந்தது.






கட்டிடக் கலை

இந்தக் கோட்டையானது நீற்வட்டமாகவும் அரைகோள வடிவில் அமைந்துள்ளது. வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ள மூன்று அரண்களால் சூழப்பட்டுள்ள இக்கோட்டை ஒழுங்காக வெட்டப்பட்ட கற்தொகுப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. முக்கிய பாதுகாப்பு அரண், கோட்டையின் அடிப்பாகம் மண் சுவரினால் சூழப்பட்டுள்ளது. படிகளின் வழியாக பேட்டை எனப்படும் திறந்தவெளி போர்களத்திற்கு செல்லும் அமைப்பு இருந்தன. மேல் அடுக்கு கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது. இது பீரங்கி தளம் மற்றும் சிப்பாய்கள் உதவியுடன் பாதுகாப்பு கோபுரமாகவும் அமைந்திருந்தது. கோட்டையில் உள்ள சிறிய நீரமைப்பானது நவாபின் நீச்சல் குளுமாக இருந்த்து. கோட்டையில் ஒரு அரண்மனை, குடியிருப்பு பகுதிகள், சுரங்க அறைகள், பேட்டை மற்றும் கோட்டை மேடு பகுதிகளை இணைப்பதற்கான சுரங்கப்பாதை ஒன்றும் இருந்ததாக நம்பப்படுகிறது.

கோட்டையின் மையப்பகுதியில் அமைந்த ஒரு குழியானது ஆண் கைதிகளுக்கான சிறைச் சாலையாகவும், கோட்டையின் உள்ளே அமைந்த சிறிய அறைகளைக் கொண்ட சிறைச்சாலையானது பெண்களுக்கான சிறையாகவும் இருந்ததாக நம்பப்படுகிறது.






















கபிலர் குன்று - Kabilar Kundru

 

கபிலர் குன்று - Kabilar Kundru

கபிலர் குன்று என்பது கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடமாகும். இது தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது. நண்பரும் வள்ளலும் ஆன மன்னன் பாரியின் மறைவுக்கு பிறகு, பாரிமகளிர் அங்கவை சங்கவை என்பவர்களை திருக்கோவிலூர்பார்ப்பான் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஒரு குன்றில் வடக்கு பக்கம் அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார்.


திருக்கோவிலூரின் தென் பெண்ணையாற்றில் அமைந்துள்ள "கபிலர் குன்று" (கபிலக்கல்) என்னும் இடத்தில் கபிலர் உயிர்துறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். திருக்கோவிலூர் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீட்டரில் வீரட்டானேசுவரர் கோயிலின் அருகில் தென்பெண்ணையாற்றின் நடுவில் "கபிலர்குன்று" உள்ளது. கபிலர்குன்று என இன்று அழைக்கப்பட்டாலும் "கபிலக்கல்" என்றே இந்த இடத்தைக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.


கபிலர் குன்று அண்மைக் காலங்களில் "இடைச்சி குன்று" என்று அழைக்கப்பட்டது. இவ்விடம் தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரிக்கப்படுகிறது. கபிலர்குன்று என்பது தனித்த பாறையும் அதன்மேல் சிறுகோயில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டடமும் கொண்டது. கோயில் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகு ஊட்டப்பட்டு உள்ளது. கட்டட அமைப்பை கருத்தில் கொண்டு, கபிலர்குன்று 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டடபாணி எனத் தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் கடவுள் சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. பெண் உருவங்களின் முகம் பொலிவுடன் காணப்படுகின்றன. இப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் கருத இடம் உண்டு. அல்லது பாரி, கபிலர் உருவங்கள் என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை மெருகு ஊட்டப்பட்டு உள்ளதால் எக்காலத்தைச் சார்ந்தவை எனக் கணக்கிட முடியவில்லை.




பறம்புமலையில் வாழ்ந்த கபிலர் பார்ப்பனர்களிடம் பாரிமகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விட்டார் என இலக்கியங்கள் குறிப்பிடும்பொழுது திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில், "செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது" எனும் தொடர்கள் இடம்பெற்றுள்ளன.

சங்கப்பாடல் கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்தார் எனக் கூறும்போது, கல்வெட்டானது தீயில் இறங்கி உயிர் நீத்தார் என்கிறது.



இக்கல்வெட்டில் இராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் எனவும், மலையமான் குலத்திற்கு வீரட்டானேசுவரர் கோவில் குலதெய்வம் எனவும் அறிய முடிகிறது. அதுபோல் அக்கோயிலின் பெருமையைச் சொல்லும்பொழுது கோயிலின் அருகே உள்ள பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் கபிலர் உயிர்நீத்தார் எனவும் கூறுகிறது.



Sunday, January 29, 2023

பாலைவன வெட்டுக்கிளிகள் பற்றி பகீர் தகவல்கள்

பாலைவன வெட்டுக்கிளிகள் பற்றி  பகீர் தகவல்கள்


கொரோனா வைரஸ், வட இந்தியாவில் அதிகரிக்கும் வெப்பநிலை, ஆம்பன் புயல், எல்லையில் சீனாவுடனான போர் பதற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியா பாதிப்பிற்குள்ளாவது பாலைவன வெட்டுக்கிளிகளால் தான்.
இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவு வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் பற்றிய சில அதிர வைக்கும் தகவல்கள்;
வழக்கமாக தனிமையில் வாழும் பாலைவன வெட்டுக்கிளிகள், சுற்றுச்சூழல் சிக்கல்களால் பசுமை வெளிகள் குறையும் சமயத்தில் உணவின்றி தவிக்கும் பல வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்துவிடும்.

தனிமை நிலையில் வாழும் பூச்சி திடீரென கூடி வாழும் சிறிய வேட்டை விலங்குகள் போல மாறிவிடும். அதன் பின்னர் உலகிலேயே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் புலம்பெயர் பூச்சியாக உருவெடுக்கும்.
ஆப்பிரிக்கக் காடுகளிலும் பாலைவனங்களிலும் உற்பத்தியாகும் இந்த வெட்டுக்கிளிகள், கடலுக்கு மேலே 2,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தியுள்ளவை. ஆப்பிரிக்காவுக்கும் அரேபியத் தீபகற்பத்துக்கும் இடையே உள்ள செங்கடலை இடைவிடாமல் பறந்து, கடந்து ஆசியாவுக்குள் நுழைகின்றன. இவை ஏமன், ஈரான், சோமாலியா, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் வருகின்றன.
‘லோகஸ்ட்’ என்றழைக்கப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையில் 10 பில்லியன் அதாவது ஆயிரம் கோடி வெட்டுக்கிளிகள் வரை கூட இருக்கலாம். ஒருநாளைக்கு 150 முதல் 200 கிமீ வரை பறந்து செல்லும் திறன் கொண்டவை.

இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ஆயுட்காலம் சராசரியாக 6 மாதங்கள். ஆனால் காலநிலை, சுற்றுசூழல் நிலை ஆகியவற்றை பொறுத்து இது மாறுபடும். பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் மூன்று மாதங்களில் 20 மடங்காகவும், ஆறே மாதங்களில் 400 மடங்காகவும், ஒன்பது மாதங்களில் 8000 மடங்காக குறுகிய காலகட்டத்தில் இனப்பெருக்கம் செய்து பெரும் படையை உருவாக்கும் திறன் பெற்றது.
வெட்டுக்கிளி வகைகளிலேயே மோசமானது, இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகள். ஒருநாளைக்கு தனது எடைக்கு நிகரான எடையை உட்கொள்ளும். அதாவது 2 கிராம் உணவு உட்கொள்ளும்.இவை ஒருநாளைக்கு சராசரியாக 35,000 பேர் சாப்பிடக்கூடிய உணவை உட்கொண்டுவிடும். தோட்டப் பயிர்கள், பூக்கள், பழங்கள் என அனைத்தையும் தின்று தள்ளிவிடும்.
நம் வீட்டருகில் உள்ள சாதாரண வெட்டுக்கிளிகளைப் போல் அல்லாமல் இவை ஒரு சதுர கி.மீ.யில் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றல் பெற்றவை. ஒரு சதுர கி.மீட்டரில் 4 – 8 கோடி வெட்டுக்கிளிகள் கூட்டம் திரளாக இருக்கும்.

லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் தனியாக இருந்தால் பிரச்சினை இல்லை. கூட்டமாகச் சேர்ந்தால் சிக்கல்தான். நம்மூரில் உற்பத்தியாகும் ஈசல்களைப் போல இந்த வெட்டுக்கிளிகள் பெருகிவிடும்.
வெட்டுக்கிளிகள் கூட்டம் வீடுகளுக்குள் புகுந்துவிட்டால், வீட்டில் உள்ள மரப் பொருட்களையும் விட்டுவைக்காது. இந்த வெட்டுகிளிகளின் தாடைகள் சக்தி வாய்ந்தவை. இவை சாப்பிடும்போது எழும் சத்தத்தைத் தூரத்திலிருந்தே கேட்க முடியும் என்கிறார்கள் பூச்சியியல் வல்லுநர்கள்.
கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த முறைதான் இந்தியாவுக்குள் வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுத்துள்ளன. இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தாவிடில் விளை நிலங்கள் நாசமாகும். இதனால் உணவு பஞ்சம் ஏற்படும். உலகம் முழுவதும் சுமார் 90 நாடுகள் வெட்டுக்கிளி படையெடுப்பால் பாதிப்புக்குள்ளாகலாம் என்று ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது.

Wednesday, January 19, 2022

நத்தம் கணவாய் யுத்தம்

நத்தம் கணவாய் யுத்தம் 



சென்னை: ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வீரத்தாய் வேலுநாச்சியார், மாமன்னர்கள் மருது சகோதரர்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது மிகப் பெரும் அதிர்ச்சி. இதற்கு பதிலடியாக டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி. ஆகியோர் உருவங்களுடன் இடம்பெற வேண்டிய அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் சமகாலத்தில் நிகழ்ந்த ஒரு மாபெரும் வரலாற்றுச் சமர் இன்னமும் தமிழர்களிடம் சென்றடையாமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய படை தளபதிகளின் புத்தகங்களில் மட்டுமே புதைந்து போய் கிடக்கிறது.

தமிழர்கள் நடத்திய வீரஞ்செறிந்த நத்தம் கணவாய் யுத்தம் தமிழர்களிடம் சென்று சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது முன்னோர்களின் வீர வரலாறு ஆழப் பதிவாகும். தமிழக அரசின் பாடப் புத்தகங்களில் நத்தம் கணவாய் யுத்தம் சிலாகிக்கப்பட வேண்டும்.

970 ஆங்கிலேய படையை வெட்டி சாய்த்து குருதி வெள்ளத்தில் மிதக்க விட்ட நத்தம் கணவாய் யுத்தத்தின் வரலாறு:

இந்திய நிலத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வித்திட்டது கி.பி. 1757-ல் நடைபெற்ற பிளாசிப் போர்.. கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கும் வங்காளத்தில் சிராஜ் உத்தவ்லா படையினருக்கும் நடந்த இந்த மோதல் மூலமே வங்கத்தை கைப்பற்றி அதிகாரம் செலுத்தினர் ஆங்கிலேயர்கள். இப்படி ஒருவரலாறு நமது பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருக்கிறது.


சிராஜ் உத்தவ்லாபடிக்க <<இங்கே>> சுட்டவும்...




இதற்கு முன்னரே மிக மோசமான பேரழிவை தமிழர் நிலத்தில் கிழக்கிந்திய படைகள் சந்தித்திருக்கின்றன. அவைகள் எல்லாம் நமது வரலாற்று பாடப் புத்தகங்களில் இடம்பெறாமல் போய்விட்டது. ஆற்காடு நவாப்புக்கா வரி வசூலிக்கும் உரிமையை பெற்ற கிழக்கிந்திய படை தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாளையக்காரர்களுடன் மோதியது.


அப்படியான மோதலில் கி.பி. 1755-ல் கட்டாலங்குளத்து மன்னர் வீரன் அழகுமுத்துகோனும் அவரது 200 தளபதிகளும் பீரங்கிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தனர். அப்படி வீரன் அழகுமுத்துகோனை வீழ்த்திவிட்டு திருச்சிக்கு திரும்புவதற்காக கர்னல் ஹரான் தலைமையிலான படை மதுரையில் முகாமிட்டிருந்தது. அப்போது ஹரானுக்கு கிடைத்த உளவுத் தகவல்.. நீங்கள் கோவில்குடியில் கள்ளர் சமூகத்தினரின் குலதெய்வ சிலைகளை கொள்ளையடித்திருக்கிறீர்கள். இப்போது நத்தம் கணவாய் பகுதியில் உங்களைத் தாக்குவதற்கு கள்ளர் சமூகத்தினர் காத்திருக்கின்றனர் என்பதுதான் அந்த தகவல்.


மதுரையை ஆண்ட மியான் என்பவரை தேடியது ஹரான் படை. அப்போது மியான் தப்பி ஓடி தலைமறைவானர். அவர் மதுரை அருகே உள்ள கோவில்குடியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைக்க ஹரானும் அவரது படை தளபதியுமான கான்சாகிப் யூசுப் கானும் ( மருதநாயகம்) கோவில்குடி கோவிலில் சோதனையிட்டு பார்க்கின்றனர். ஒன்றும் கிடைக்கவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் கோவில் கதவுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. கோவில் சிலைகளை ஹரான் கொள்ளையடிக்கிறார். அதனால்தான் கள்ளர் சமூகத்தினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

ஹரான் தன்னுடைய வரலாற்று பதிவு நூலில் Kallans என்றே எழுதி வைத்திருக்கிரார். இதனால் கர்னல் ஹரான் தமது ஆயிரக்கணக்கான படையினரை குழு குழுவாக பிரித்து நத்தம் கணவாய் பகுதியை கடந்து நத்தம் நகரை சென்றடையலாம் என வியூகம் வகுத்தார். அப்படியே ஹரானின் ஆங்கிலேய படையும் ஜமால் சாகிப் தலைமையில் நத்தம் கணவாய்க்குள் நுழைந்தது. அன்றைய நாள் கி.பி. 1755 மே 28.

அந்த மலைக்காடுகள் முழுவதும் கள்ளர் சமூகத்தின் பெரும் படையினர் மறைந்திருந்து ஹரான் படையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். முதல் அணியாக கேப்டன் லின் தலைமையில் ஒரு படை சென்றது. அவர்கள் தாக்குதல்களை எதிர்கொள்ளாமல் நத்தம் நகரை அடைந்துவிட்டனர். இதனால் ஹரான் நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார்.

ஆம் கர்னல் ஹெரான் எதிர்பார்த்தபடி எந்த ஒரு தாக்குதலும் கள்ளர்கள் தரப்பில் இருந்து நடத்தப்படவில்லை.

ஆனால் கணவாயின் இருபக்கமும் பதுங்கி இருந்த கள்ளர் சேனையோ பாய காத்துக் கொண்டிருந்தது. 2-வது அணியாக கேப்டன் போலியர் தலைமையிலான படை புறப்பட்டது.

3-வது அணிக்கு கேப்டன் ஸ்மித் தலைமை தாங்கினார். இதே பாதையில் கள்ளர் சேனை மரங்களை வெட்டி பாதையை சுருக்கிக் கொண்டே வருகிறது.. புதைகுழிகளையும் வெட்டி வைக்கிறது.



ஆங்கிலேய படை ஒவ்வொன்றையும் 2 மைல்கள் தொலைவு முன்னேறவிட்டு பின்னால் வந்த படையை வழிமறித்து தாக்குகின்றனர். உடனே ஆங்கிலேயப் படை தாக்குதல் நடத்துகிறது.

கள்ளர் சேனை காடுகளுக்குள் பதுங்கி இருந்து மீண்டும் நிலைகுலைய வைக்கும் பெருந்தாக்குதலை நடத்துகிறது.

தமிழர் நிலத்தின் ஆகப் பெரும் ஆயுதங்களான வளரி, வில், 18 அடி ஈட்டி என அத்தனையையும் அன்று கள்ளர்களால் பயன்படுத்தப்பட்டன. இதை குறிப்பிடும் ஹரான், கள்ளர்கள் ராக்கெட்டுகளையும் பயன்படுத்தியதாக பதிவும் செய்து வைத்திருக்கிறார்.



ஆங்கிலேய படை மீதான இந்த உக்கிரமான தாக்குதல் ஈரக்குலையை நடுநடுங்க வைக்கும் வகையிலானது என்பதை ஹரான் தாம் எழுதிய வரலாற்று நூலிலேயே பதிவு செய்திருக்கிறார்.

கள்ளர் சேனையின் நோக்கமான கோவில்குடி குலதெய்வ சிலைகள் ஹெரானின் படையிடம் இருந்து மீட்கப்பட்டன. ஆனாலும் பல மணிநேரம் இந்த யுத்தம் நீடித்தது. 1000 பேருடன் கணவாயை கடக்க முயன்றவர்களில் 970 பேர் வீழ்த்தப்பட்டு அந்த கணவாய் பகுதியே ரத்த வெள்ளமாகிப் போனது சரித்திரம்.



தம்மிடம் வெறும் 30 பேர்தான் எஞ்சியிருந்ததாகவும் ஹரான் எழுதி வைத்திருக்கிறார். இதனை அன்றைய ஆங்கிலேய தளபதிகள் தங்களது வரலாற்று நூல்களில் பதைபதைப்புடன் மறக்காமல் பதிவு செய்திருக்கின்றனர்.

பின்னாளில் இந்த கொள்ளை சம்பவம், படை இழப்பு ஆகியவற்றுக்காக ஹரான் மீது விசாரணையும் நடத்தப்பட்டது வரலாறு. ஹரான் படை தளபதியான கான்சாகிப் யூசுப்கான் (மருதநாயகம்) மதுரையில் இருந்தார். இந்த கான்சாகிப்தான் கோவில்குடி கள்ளர் குலதெய்வ கோவில் கதவுகளை தீ வைத்து எரித்தவர். பின்னர் மதுரையின் ஆளுநராக பொறுப்பேற்ற போது நத்தம் கணவாய் யுத்தத்துக்கு பழிவாங்க 500 கள்ளர்களை மதுரையில் தூக்கிலிட்டார். இந்த வரலாற்றையும் ஆங்கிலேயர்களும் கான்சாகிப் யூசுப் கான் வரலாற்றை எழுதியவர்களும் பதிவு செய்துள்ளனர்.

இந்திய நிலத்தில் ஆங்கிலேயப் படை எதிர்கொண்ட முதலாவது பேரிழப்பு நத்தம் கணவாய் யுத்தம்தான். இதற்குப் பின்னர்தான் பிளாசிப் போர் நடந்தது. இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது இத்தகைய வரலாறுகளை நாம் நினைவு கூறுவது கடமையும் கூட. அதனால்தான் இந்த வரலாறு தமிழ்நாட்டு அரசின் பாடப்புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.